அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட மீண்டும் மேகாலயா - பகுதி நான்கு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நீ எவ்வளவு அறிவாளியாக இருந்தாலும் சரி, சிலவற்றிற்கு நீ காத்துதான் இருக்க வேண்டும் - வாரன் பஃபெட்.
******
மீண்டும் மேகாலயா தொடரின் ஐந்தாம் பகுதி இந்த நாளின் வெளியீடாக… வாருங்கள் திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்கள் வார்த்தைகளில் அவர்களது அனுபவங்களை படித்து ரசிக்கலாம் - வெங்கட் நாகராஜ், புது தில்லி.
******
மீண்டும் மேகாலயா - பகுதி ஐந்து - நிர்மலா ரங்கராஜன்
Jingmaham Living Root Bridge பகுதியில் இருந்த போது, அங்கிருந்து மேலே ஒரு Echo Point இருப்பதாக சொல்லவே சரி, சென்று பார்க்கலாம் என்று மேலே ஏறினோம். படிகள் நீண்டு கொண்டே செல்லவே சிலர் முடியாது என்று திரும்பி விட்டனர். நாங்கள் மூன்று பேர் மட்டுமே மேற்கொண்டு நடந்தோம். நீண்ட நேரத்திற்கு பிறகு சமதளம் வந்தது. அது வாகனங்கள் நிறுத்தும் இடம். அங்கே விசாரிக்க அவர்கள் இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாக சொல்லவே அவர்களிடமே ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுத்து கொண்டு சென்றோம்.
சிரமப்பட்டு வந்தது வீணாக வில்லை என்று நினைக்கும் படியாக அந்த இடம் அவ்வளவு அழகாக இருந்தது. நீண்டு பின் விரிந்த மூங்கில் பாலம். அங்கிருந்து பார்த்தால் அழகிய மலைகள். அங்கே 19 அருவிகள் ஓரிடத்தில் சங்கமித்து ஆறாக ஓடும் இடம் என்று கூறினர். நாங்கள் சென்ற சமயம் தண்ணீர் இல்லை. ஆற்றின் சுவடு மட்டுமே தெரிந்தது. அந்த இடத்தில் நின்று கொண்டு உரக்க கத்தினால் எதிரொலிக்கும் என்றனர். நண்பர் முயற்சி செய்தார். பிறகு குழந்தைகளும் முயற்சி செய்தனர்.
அங்கிருந்து எங்கள் வாகனம் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கே நிறைய சின்ன சின்னதாய் கடைகள் இருந்தன. எல்லா கடைகளிலும் பிரியாணி இலை (Bay leaf), கிராம்பு போன்ற பொருட்களே அதிகம் காணப்பட்டது. அந்த மரங்கள் அங்கே அதிக அளவில் உள்ளன. தரையில் எங்கும் பாய் விரித்தது போல பிரியாணி இலைகள் கொட்டி கிடந்தன.
இவற்றை எல்லாம் பார்த்து கொண்டே வந்த எங்களை ஈர்த்தது அன்னாசி பழங்களே. எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது. என்ன இனிமை! நமக்கு இங்கே கிடைக்கும் அன்னாசி பழங்களை சாப்பிட்டால் நாவிலிருந்து தொண்டை வரை ஏதோ ஒரு கரகரப்பு மற்றும் புளிப்பு சுவை இருக்கும். ஆனால் அங்கே சாப்பிட்ட பழங்களில் துளிகூட அப்படி இல்லை. அன்னாசி பழம் சாப்பிடுவதற்காகவே மீண்டும் மேகாலயா போக வேண்டும் என்று எனது கணவர் அடிக்கடி சொல்வதுண்டு. (Shillong ல் இருந்து டெல்லி திரும்பும் போது மறக்காமல் அன்னாசிப் பழங்கள் வாங்கி வந்தோம்.)
பழங்கள் சாப்பிட்டுக்கொண்டே எங்கள் பயணத்தை இனிமையாக தொடர்ந்தோம் ஆசியாவின் மிகவும் தூய்மையான கிராமமான Mawlynnong Village ஐ நோக்கி. வழியில் Balancing Rock ஒரு பார்வை. சிரிது நேரத்திலேயே Mawlynnong Village சென்று சேர்ந்தோம். இவ்வளவு தூய்மையாக எப்படி பராமரிக்கிறார்கள்!? அங்கே இருக்கும் தாவரங்களின் இலைகளில் கூட மண் தூசு என்று படிந்திருக்க வில்லை. நாங்கள் சென்றது ஏப்ரல் மாதம் என்பதால் அப்போது பூ பூக்கும் பருவம் இல்லை. இருந்த போதிலும் ஆங்காங்கே அழகழகான மலர்கள். பாதை ஓரங்களில் அன்னாசி பழச் செடிகள் தானாக வளர்ந்துள்ளன. எங்கு பார்த்தாலும் எதை பார்த்தாலும் அழகு.
இந்த ரசனைக்கு இடையே ஒரு மரப்பாலம் மேல் நோக்கி செல்ல, சரி அங்கேயும் போய் பார்த்து விடலாம் என்று அதில் ஏறினோம் (காசு கொடுத்து தான்). அங்கிருந்து பங்களாதேஷ் எல்லை தெரிந்தது, வெகு தொலைவில் அதுவும் தெளிவாக தெரியவில்லை.
கீழே இறங்கி மேற்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். பார்த்து ரசித்து கொண்டே கிராமத்தின் ஒரு எல்லைக்கு வந்தாச்சு. அங்கே அழகிய கமுகு தோட்டம். மற்றும் நிறைய பழங்காலத்து மரங்கள், அதில் குயில் மற்றும் ஏதேதோ பெயர் தெரியாத பறவைகளின் இனிமையான ஓசைகள். சற்று நேரம் அமைதியாக அந்த சப்தங்களை ஒலிப்பதிவு செய்து கொண்டு திரும்பினோம். கிராமத்தின் தூய்மையும் அழகும் நம்மை களைப்பின்றி நடக்க வைத்தது. அந்த நடையின் பலன் ஆரோக்கியமான பசி. எங்காவது சாப்பிடலாம் என்று தேடினோம். ஒரு சிறிய உணவகம். மொத்தமே 15 அல்லது அதிக பட்சமாக 20 பேர் சாப்பிட முடியும் அவ்வளவுதான். அங்கே நாம் சென்ற பிறகு சற்று நேரம் காத்திருக்க வேண்டும் என்றனர். காத்திருக்கும் நேரம் வரை சுற்றி இருக்கும் இடங்களில் சுற்றி திரிந்தோம். மரங்கள் செடிகள் பூக்கள் மரங்களில் உள்ள காய் கனி என்று புகைப்படங்கள் எடுத்தோம்.
சாப்பிட அழைத்தனர் உள்ளேயே காத்திருந்த நண்பர்கள். விறகு அடுப்பில் சமையல். சாதம், பருப்பு, ஒரு பொறியல் பச்சை மிளகாய் சட்னி. என்ன ருசியாக இருந்தது! உணவருந்தி முடித்து Dawki நோக்கி பயணம் தொடர்ந்தது. கிராமத்தில் மேலே ஏறி பங்களாதேஷ் எல்லையை பார்த்ததாக Gகோபியிடம் கூறினோம். நாம் இப்போது அங்கே தான் போய் கொண்டு இருக்கிறோம் என்றார். செல்லும் வழியில் ஒரு சில அருவிகள், மற்றும் Umngot River பார்த்து சென்றோம். மேலும் எங்கே பயணித்தோம், கிடைத்த அனுபவங்கள் என்ன போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன். பயணத்தில் தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே…
நட்புடன்
நிர்மலா ரங்கராஜன்
புது தில்லி.
*****
இந்நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகிய இடங்கள் என தெரிகிறது.
பதிலளிநீக்குஅழகான இடங்கள் தான் ஸ்ரீராம். முடிந்த போது அங்கே சென்று வாருங்கள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்னாசி சுவையுடன் பயணமும் இனிமை...
பதிலளிநீக்குஅன்னாசி போலவே பயணமும் இனிமை தான் தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
விவரங்கள் அருமை தொடர்கிறேன்...
பதிலளிநீக்குபதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஓய்வெடுக்கும் குடில் மிகவும் அழகாக உள்ளது.
பதிலளிநீக்குஅழகான குடில் தான். அந்தப் பகுதி முழுவதுமே அழகு தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குஅண்ணாசி பற்றி நீங்களும் உங்கள் அனுபவங்களைச் சொல்லியாச்சு அங்கு செல்பவர்கள் எல்லொருமே இது பற்றிச் சொல்லிவிடுகிறார்கள் அப்படி என்றால் அதன் சுவை தெரிகிறது.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லும் இடங்கள் (பெயர் வாயில் நுழையவில்லை!!!!) எல்லாம் செல்லத் தூண்டுகின்றது
அழகான இடங்களை ஃபோட்டோஸ் எடுத்திருக்கீங்கன்னு தெரிகிறது முடிந்தால் ஓரிரண்டு போடுங்களேன்.
குடில் அருமை. தொடர்கிறே ந்
கீதா
அங்கே கிடைக்கும் அன்னாசி மிகவும் சுவையானது தான் கீதா ஜி.
நீக்குஇடங்களின் பெயர்கள் - குழப்பம் தான் நமக்கு! ஹாஹா... பல வார்த்தைகள் நாம் படிப்பதற்கும் சொல்வதற்கும் வித்தியாசம் நிறையவே உண்டு.
குறைவான படங்களே எடுத்திருக்கிறார்கள். பல படங்களில் குடும்பத்தினரும் நண்பர்களும் இருப்பதால் இங்கே பகிர்ந்து கொள்ளவில்லை கீதா ஜி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
நல்ல விவரணம்.
பதிலளிநீக்குதுளசிதரன்
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அழகிய இடங்கள் எப்பொழுதுமே கண்ணுக்கும் மனதுக்கும் விருந்து.
பதிலளிநீக்குஅழகான இடங்கள் ரசிக்கத்தக்கவையும் கூட மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.