வியாழன், 17 பிப்ரவரி, 2022

மீண்டும் மேகாலயா - பயணத் தொடர் - பகுதி இரண்டு - நிர்மலா ரங்கராஜன்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட மீண்டும் மேகாலயா - பகுதி ஒன்று பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

பழுக்கக் காய்ச்சிய இரும்பு தான் பட்டை ஆகிறது; பட்டுத் தேறிய மனம் தான் பக்குவப் படுகிறது. 

 

******

 

மீண்டும் மேகாலயா தொடரின் இரண்டாம் பகுதி இந்த நாளின் வெளியீடாக…  வாருங்கள் திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்கள் வார்த்தைகளில் அவர்களது அனுபவங்களை படித்து ரசிக்கலாம்  - வெங்கட் நாகராஜ், புது தில்லி. 

 

******

 

மீண்டும் மேகாலயா - பகுதி இரண்டு - நிர்மலா ரங்கராஜன் 

 

எங்கள் பயணம் வயிற்றுக்கு விருந்து கொடுக்க  ஓர் இடத்தில் நின்றது.  அந்த இடம் என்ன, அங்கே என்ன அனுபவம் கிடைத்தது என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன் என்று சென்ற பகுதியை முடித்திருந்தேன்.  எந்த இடத்தில் நின்றோம் என்பதை இந்தப் பகுதியில் தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள். 

 

நாங்கள் நின்ற இடம் ஹோட்டல் ஜீவா. நாங்கள் புறப்படும் முன்பு எங்கள் நண்பர் 'ஹோட்டல் ஆரஞ்சு ரூட்' பற்றிய தனது அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து இருந்தார். நாங்களும் அங்கே சென்று உணவருந்த நினைத்தோம். ஆனால் அன்று விடுமுறை தினம் என்பதால் Orange root மூடி இருந்தது. எனவே ஜீவா விற்கு வந்தோம். இதுவும்  மிக நல்ல ஹோட்டலாகவே இருந்தது. புதிதாக கட்டப்பட்டது என்பதால் மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது. அங்கே அவரவர்களுக்கு தேவையான சிற்றுண்டி சாப்பிட்டு (நான் பழச்சாறு) அங்கிருந்து புறப்பட்டு Umiam Lake வந்தடைந்தோம். எவ்வளவு பிரமாண்டமான ஏரி!.



 

அழகும் ஆச்சரியமும் ஒரே இடத்தில் உமியம் ஏரியாக பார்க்க முடிந்தது. பயணத்தின் முதல் இடம் பார்த்து ரசித்து நிறைய புகைப்படங்கள் எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு ஷில்லாங்கின் பிரசித்தி பெற்ற வியாபார ஸ்தலமான போலீஸ் பஜார் வந்தோம்.  வரிசையாக இரு பக்கமும் நிறைய கடைகள். 

 

அழகழகான மூங்கில் பொருட்கள் மற்றும் குளிர்கால உடைகள் என்று ஏராளமான பொருட்கள். கடைகளில் பொம்மையை ஒத்த பெண்கள் சிரித்த முகத்துடன் நம்மை வரவேற்று மிகவும் பொறுமையுடன் நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறுகிறார்கள். அதிகமாக பயன்படுத்தும் மொழி ஆங்கிலம் தான். கால்கள் வலிக்கும் வரை அங்கே சுற்றி விட்டு ஒரு வழியாக வண்டிக்கு வந்தோம். போலீஸ் பஜாரில் இருந்து மிக அருகிலேயே தங்கும் விடுதி இருந்ததால் நேராக BONNIE GUEST HOUSE வந்து சேர்ந்தோம். (இதுவே நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்ய பட்டிருந்த இடம்).

 

அங்கே அலுவலகத்தில் பதிவு வேலைகளை முடித்து கொண்டு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து சேர்ந்தோம். அங்கேயே இரவு உணவை முடித்துக் கொண்டு சிறிது நேரம் சம்பாஷனைக்கு பிறகு ஓய்வெடுத்தோம்.

 

இரவு உணவும் காலை சிற்றுண்டியும் தங்கும் இடத்திலேயே ஏற்பாடு செய்து தருவதாகவும் மதிய உணவு மட்டும் நாம் செல்லும் இடத்தில் பார்த்து கொள்ள வேண்டும் என்பதும் உடன்பாடு. பயணம் முழுவதும் அப்படியே..

 

2வது நாள் காலை சிற்றுண்டி முடித்து கொண்டு அங்கிருந்து Cherrapunjee பயணம் தொடங்கியது. அன்று பார்க்க வேண்டிய இடங்கள் என்ன என்பதை பற்றி முன்பே நம்மிடம் ஒரு பட்டியல் கொடுத்து விடுவார்கள். அதன்படி Cherrapunjee செல்லும் வழியில் முதலில் சென்ற இடம் ELEPHANT FALLS. 



 

அங்கே சென்றதும் நுழைவு சீட்டு வாங்கி கொண்டு உள்ளே சென்றோம். அங்கே சிறியதும் பெரிதுமாக மூன்று அருவிகள். மிக மிக அருகிலேயே அருவியை பார்க்கும் போது நாம் சிறு பிள்ளைகள் போல் மாறி விடுகிறோம். சந்து பொந்துகள் எல்லாம் கூட அங்கே அழகாக தெரிகிறது. நம்மை கவர்ந்த இடங்களில் எல்லாம் நின்று ஆங்காங்கே புகைப்படங்கள். கீழே இறங்கி பின் மேலே ஏறி, சிறிதும் களைப்பே இல்லாமல் நேரம் போவதே தெரியாமல்...  பிறகு அடுத்த இடம் போக வேண்டும் என்று மெதுவாக அங்கிருந்து புறப்பட்டோம்.



 

அடுத்து சென்ற இடம் ARWAH LUMSHYNNA CAVE. செல்லும் வழியில் ஒரு தேயிலை தோட்டம் ஆனால் பார்க்க முடியவில்லை. Arwah Cave, கொஞ்சம் தூரம் நடந்து செல்ல வேண்டும். ஆனால் நடந்து சென்ற சிரமமே தெரியவில்லை. நடக்கும் போதே " இளங்காத்து வீசுதே....

 

இசை போல பேசுதே....." சூர்யாவின் பிதாமகன் படப் பாடல் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருந்தது.  அங்கே பறவைகளின் சப்தமும், மூலிகை மற்றும் மலர்களின் நறுமணமும் நம்மை மயங்க வைக்கிறது. அதுவும் தாழம்பூக்கள் ஆங்காங்கே பூத்து அதன் நறுமணம் எங்களை மெய்மறக்க செய்தது.  

 

Arwah cave வந்து சேர்ந்தாயிற்று. முதலில் குகைக்குள் உள்ளே செல்ல சற்று பயமாகவே இருந்தது. அங்கே நம் ஊரை சேர்ந்த ஒரு Security officer சந்தித்தோம். அவர் உள்ளே சென்று பார்த்து வாருங்கள் நன்றாக இருக்கும் என்று எங்களுக்கு ஊக்கம் கொடுத்தார். சரி என்று உள்ளே சென்றோம். இருட்டு பாதை ஆங்காங்கே ஈரம், நடக்கும் போது சில இடங்களில் வழுக்கியது. முன்னேறி செல்ல செல்ல ஆர்வம் அதிகமாகியது. பாதையும் சில இடங்களில் சற்று சீராக இருந்ததால்  பாதியில் திரும்பி விடலாம் என்று நினைத்த நாங்கள் பின் இறுதி வரைக்குமே சென்று வந்தோம். 

 

அதற்குப் பிறகு பார்த்த இடங்கள் என்ன, அந்த இடங்களில் எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன போன்றவற்றை தொடரின் அடுத்த பகுதியில் சொல்கிறேனே. பயணத்தில் தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே

 

நட்புடன்

 

நிர்மலா ரங்கராஜன்

புது தில்லி.

 

*****

 

இந்நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

12 கருத்துகள்:

  1. வர்ணனைகள் அருமை. தாழம்பூ வாசம் வந்தால் பாம்பு வருமோ என்று எனக்கு தோன்றும்!! தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தாழம்பூ வாசம் - பாம்புக்கு பிடித்தது என்று நானும் கேட்டதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. அழகிய புகைப்படங்கள் தொடர்ந்து வருகிறோம்....
    விபரணங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. வாசகமும் அணுபவ வர்ணனைகளும் மிக அருமை.
    உமியம் ஏரி, யானை அருவி பற்றி படிக்கையில் அது தொடர்பான வெங்கட் சார் சொன்ன தேவதையிந் கண்ணீர் கதை, காளிந்தி கதை உள்ளிட்டவை நினைவில் வருகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது மேலான எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த்.

      நீக்கு
  4. உமியம் ஏரி, எலிஃபென்ட் அருவி, ஆர்வா குகை பற்றி சொன்னது நன்றாக இருக்கிறது. ஆமாம் அருவியைப் பார்த்தால் நாம் சிறுவர்களாகிவிடுவோம்தான்.

    வெங்கட்ஜியின் பதிவில் சில நினைவுக்கு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர்நிலைகள், மலைகள் என இயற்கையின் கொடையைப் பார்த்து விட்டால் மனதுக்குள் மகிழ்ச்சி கொப்பளித்து வெளியே வந்து விடுகிறது இல்லையா கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அட! அங்கும் தாழம்பூ இருக்கா? தாழம்பூ புதருக்குள் பாம்புகள் இருக்கும். எங்கள் ஊரில் முன்பு ஆற்றங்கரையில் தாழம்பு இருக்கும். பறித்துக் கொண்டு வந்தாலும் உள்ளே செக் செய்துவிட்டுத்தான் இதழைப் பிரித்து தலையில் வைத்துப் பின்னிவிடுவார்கள் எங்கள் வீட்டில். முகர்ந்து பார்க்க அனுமதிக்க மாட்டார்கள் பூ நடுவில். இதழ்களைப் பிரித்து முகரலாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாழம்பூ முன்பெல்லாம் பூப்பின்னல் கட்டி அழகு பார்க்கும்போது கண்டிப்பாக இருக்கும். இப்போதெல்லாம் பூப்பின்னல் யாரும் போட்டுக் கொள்வதாக தெரியவில்லை. என் பெரியம்மா பலருக்கும் இந்தப் பூப் பின்னல் பின்னி விட்டு இருக்கிறார். வீட்டில் சில படங்கள் கூட உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. அருமையாக விவரித்துக் கொண்டே செல்லும் பயணம்... தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து வரும் விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்து இருப்பதில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....