அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட ஜெய் ஆஞ்சநேயா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
BE GOOD TO PEOPLE; YOU WILL BE REMEMBERED
MORE FOR YOUR KINDNESS THAN ANY LEVEL OF SUCCESS YOU COULD POSSIBLY ATTAIN.
******
மேகாலயா மாநிலம் குறித்து ஏற்கனவே நான் எனது ஏழு சகோதரிகள் தொடரில் எழுதி இருக்கிறேன். பிறகு நண்பர் சுப்ரமணியன் அவர்கள் மேகங்களின் ஆலயம் மேகாலயா என்ற தலைப்பில் ஒரு தொடரை எழுதியதும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். ஒரே இடத்திற்கு பயணம் என்றாலும் ஒவ்வொருவரும் செல்லும்போது கிடைக்கும் அனுபவங்கள், அந்த அனுபவங்களை விவரிக்கும் விதம் என நிறையவே மாறுபாடுகள் இருக்கும். மேகாலயா மாநிலத்திற்கு நான் சென்று வந்ததற்கும் நண்பர் சுப்ரமணியன் அவர்கள் சென்று வந்ததிற்கும் இடைவெளி சில ஆண்டுகள். நாங்கள் பார்த்த இடங்களில் சில ஒன்றாக இருந்தாலும், நண்பர் பார்த்த இடங்களில் சில நான் பார்க்காதவை. வித்தியாசங்கள் இருப்பதால் இங்கே இரண்டையுமே பகிர்ந்து கொண்டேன். தற்போது மீண்டும் மேகாலயா குறித்த ஒரு தொடரை உங்களுடன் பகிர்ந்து கொள்ள, தில்லி சகோதரி திருமதி நிர்மலா ரங்கராஜன் வருகிறார். சில பதிவுகளாக அவருடைய மேகாலயா பயண அனுபவங்கள் நம் பக்கத்தில் வெளிவரும். அந்த வரிசையில் மீண்டும் மேகாலயா தொடரின் முதல் பகுதி இந்த நாளின் வெளியீடாக… வாருங்கள் திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்கள் வார்த்தைகளில் அவர்களது அனுபவங்களை படித்து ரசிக்கலாம். - வெங்கட் நாகராஜ், புது தில்லி.
******
மீண்டும் மேகாலயா - பகுதி ஒன்று - நிர்மலா ரங்கராஜன்
நண்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கம் 🙏
மேகாலயா பயண அனுபவங்களை தங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதன் மூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன் திரு வெங்கட் சார் அவர்களும் திரு சுப்ரமணியம் சார் அவர்களும் மேகாலயா பற்றி நிறையவே எழுதியுள்ளனர். எனவே அந்த மாநிலத்தை பற்றி அதிகம் எழுதாமல், சென்று வந்த அனுபவங்களை மட்டும் நான் பகிர்ந்து கொள்கிறேன் 👍
மேகங்களின் இருப்பிடமான மேகாலயா செல்ல (நான்) விரும்பியதற்கு முக்கிய காரணம் chசிரபுஞ்சி. ஏன் என்று பிறகு பார்ப்போம்.
இந்த பயணத்தில் நண்பர்கள் கூட்டம் அனைவருமாக சேர்ந்து போக முடியாமல் போனது கொஞ்சம் வருத்தமாக தான் இருந்தது. சூழ்நிலை சரியாக அமையவில்லை. நாங்கள் மூன்று குடும்பம் மட்டும் 9 பேர் கொண்ட குழுவாக சென்றோம்.
போகலாம் என்று முடிவான பிறகு ஒரு சுப தினத்தில் என்று இல்லாமல் அரசாங்கம் அளித்த சலுகை தினத்தில் (விடுமுறை ) செல்ல முன்பதிவு செய்தாகி விட்டது.
நண்பரின் வழிகாட்டுதலின் படி மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் இருக்கும் Travel Agency (Clara tours and travels)ல் தொடர்பு கொண்டு Mr. Brandon என்பவருடன் பேசி பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்தாயிற்று.
அதன் பிறகு பல நிபந்தனைகளுக்கு உட்பட்ட கொரோனா டெஸ்ட் எடுத்தோம். அதுதான் முதன் முதலில் எடுத்த கொரோனா டெஸ்ட். Test report நமக்கு சாதகமாக வரவேண்டும் என்று, நினைவில் இருந்த அத்தனை கடவுளையும் வேண்டிக் கொண்டு, மனதில் திக்திக் சத்தத்தோடு காத்திருந்தோம்.
கடவுள் கைவிட வில்லை 👍
பயணத்திற்கு தயாராகி விமான நிலையம் வந்து சேர்ந்தோம். குறிப்பிட்டிருந்த நேரத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விமானம் புறப்பட்டது.
கௌஹாத்தி விமான நிலையம் வந்து சேர்ந்தாயிற்று. அங்கே எங்களுக்கு ஒரு சோதனை காத்திருப்பது தெரியாமல், ஆஹா வந்து விட்டோம் என்று மனதில் துள்ளலுடன் விமானம் விட்டு இறங்கினோம்.
எங்கள் குழுவில் ஒரு ஜோடி வேறு விமானத்தில் வந்து எங்களுக்கு முன்பாகவே அங்கே காத்திருந்தனர். காத்திருந்த சோதனை இதுதானோ என்று நினைக்க வேண்டாம்😅
இங்கே டெல்லியில் நாம் எடுத்துக் கொண்ட Corona test report ஐ அங்கே மறுபரிசோதனை செய்த பிறகே நம்மை விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதிப்பார்கள். அப்படி பரிசோதனை செய்த போது எங்கள் நால்வரின் report ல் Code number முழுவதும் தராமல் பிற்பாதி எண்கள் மட்டுமே பதிவாகி இருந்தது. அதை அங்கே இருந்த அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வில்லை. இதனால் எங்களுக்கு தாமதமானதோடு இல்லாமல் தேவையற்ற மன உளைச்சலுக்கு ஆளானது சிறு சங்கடத்தை ஏற்படுத்தியது. (இதுதாங்க அந்த சோதனை). ஒரு வழியாக எல்லாம் சரியாகி வெளியே வந்தோம்.
Mr.Clara ஏற்பாடு செய்திருந்த ஓட்டுநரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். அவர் வாகனத்துடன் காத்திருப்பதாக கூறவும் வாகனம் இருக்கும் இடத்தை நோக்கி நகர்ந்தோம். அதற்குள் அவரே எங்களை எதிர் கொண்டு அழைத்து சென்றார். (ஓட்டுநர் பெயர் Gகோபி, இனி அவரை அப்படியே அழைப்போம்).
வாகனம் Shillong செல்ல புறப்பட்டது. மனதில் உற்சாகமும் புறப்பட்டது. வழியெங்கும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும், சில்லென்ற இளந்தென்றல் காற்றும் ஆஹா.... அனுபவித்தே உணர கூடிய இன்பம் அது.
வரும் வழியில் Gகோபி மேகாலயா பற்றி ஒரு முன்னுரை கொடுத்தார். மலைகள் மற்றும் அங்கே வசிக்கும் மக்கள் அவர்களின் தொழில் மற்றும் விவசாயம் பற்றி சொல்லி வந்தவர் அங்கே வசிக்கும் மக்களின் திருமண முறைகள் பற்றியும் கூறினார். நண்பர்களின் சில பல கலாட்டா பேச்சுகளும் இடையிடையே... இப்படி வாகனத்துக்கு உள்ளே செவிக்கு விருந்து, வாகனத்துக்கு வெளியே கண்களுக்கு விருந்து என்று நகர்ந்து கொண்டிருந்த எங்கள் பயணம் வயிற்றுக்கு விருந்து கொடுக்க ஓர் இடத்தில் நின்றது. அந்த இடம் என்ன, அங்கே என்ன அனுபவம் கிடைத்தது என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். பயணத்தில் தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே…
நட்புடன்
நிர்மலா ரங்கராஜன்
புது தில்லி.
*****
இந்நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
ஒரே இடம் மாறுபட்ட கருத்துகள், அனுபவங்கள். மெல்லிய நகைச்சுவையுடன் ஆரம்பித்திருக்கும் தொடரை படிக்கக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்குசகோதரி நிர்மலா ரங்கராஜன் அவர்களின் பயணத் தொடரின் ஆரம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மகிழ்வுடன் தொடர்கிறேன்...
பதிலளிநீக்குதொடர்ந்து வாசிக்கப் போகும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி தனபாலன்.
நீக்குஆமாம் ஒரே இடம் என்றாலும் ஒவ்வொருவரின் அனுபவமும் அதுவும் வெவ்வேறு சமயங்களில் சென்றிருப்பதால் அனுபவங்களும் வேறு வகையில் இருக்கும்தான். அதே போன்று ஒவ்வொருவரு சொல்லும் விதமும்.
பதிலளிநீக்குநல்லாருக்கு உங்கள் எழுத்து நடை!! வெங்கட்ஜியின் நட்பு வட்டமும் அவரைப் போன்றே எல்லாரும் நல்லா எழுதுவீங்க போல!!! நல்ல நட்பு வட்டம்!
கீதா
பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். நேற்று கூட ஒரு நண்பரிடம் பேசும்போது அவரை எழுதச் சொல்லிக் கேட்டேன். அவரிடம் நிறைய தகவல்கள் உண்டு - சிறந்த பயணி அவர்! முடிந்தால் அவரிடம் அவரது அனுபவங்களை எழுதச் சொல்லி இருக்கிறேன் கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
முன்னாடியே உங்கள் எழுத்து அறிந்ததுதான்..இது பயணக் குறிப்பாச்சே இதுவும் அழகா எழுதறீங்க.
பதிலளிநீக்கு//இப்படி வாகனத்துக்கு உள்ளே செவிக்கு விருந்து, வாகனத்துக்கு வெளியே கண்களுக்கு விருந்து என்று நகர்ந்து கொண்டிருந்த எங்கள் பயணம் வயிற்றுக்கு விருந்து கொடுக்க ஓர் இடத்தில் நின்றது. //
ஹாஹாஹா ரசித்தேன்.
அங்கே வசிக்கும் மக்களின் திருமண முறைகள் பற்றியும் கூறினார். //
முடிந்தால் இதைப் பற்றியும் எழுதுங்கள்... கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே என்றுதான்!!!!!
தொடர்கிறேன் உங்களின் அனுபவ சுவாரசியங்களை அறிய
கீதா
பதிவு வழி சொன்ன விஷயங்களை நீங்களும் ரசிக்க முடிந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நானும் தொடர்ந்து வருகிறேன்...
பதிலளிநீக்குதொடர்ந்து பதிவுகளை ரசிக்க வேண்டுகிறேன் கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
தொடக்கம் நன்றாக உள்ளது. எழுத்து நடை நன்றாக உள்ளது. மீண்டும் பயணக் கட்டுரைகள் துவங்கியதில் மகிழ்ச்சி. அதுவே உங்கள் தளத்தின் சிறப்பு அம்சம்.
பதிலளிநீக்குJayakumar
மீண்டும் பயணக் கட்டுரைகள் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நாங்களும் உங்கள் பயண அனுபவங்களை அறிந்து கொள்கிறோம்.
பதிலளிநீக்குதொடர்ந்து வாசிப்பதோடு சகோதரி நிர்மலா ரங்கராஜன் அவர்களை ஆதரிக்க வேண்டுகிறேன் மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.