வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

மீண்டும் மேகாலயா - பயணத் தொடர் - பகுதி மூன்று - நிர்மலா ரங்கராஜன்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட மீண்டும் மேகாலயா - பகுதி இரண்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

YOUR CALM MIND IS THE ULTIMATE WEAPON AGAINST ALL YOUR CHALLENGES. ALWAYS STAY CALM AND RELAXED.

 

******

 

மீண்டும் மேகாலயா தொடரின் மூன்றாம் பகுதி இந்த நாளின் வெளியீடாக…  வாருங்கள் திருமதி நிர்மலா ரங்கராஜன் அவர்கள் வார்த்தைகளில் அவர்களது அனுபவங்களை படித்து ரசிக்கலாம்  - வெங்கட் நாகராஜ், புது தில்லி. 

 

******

 

மீண்டும் மேகாலயா - பகுதி மூன்று - நிர்மலா ரங்கராஜன் 



எங்கள் பயணத்தில் இதுவரை உடன் வந்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  அடுத்து நாம் பார்க்கப் போவது, Mawkdok Dynpep Valley எனும் இடம்.  அங்கே வந்து சேர்ந்து, இறங்கும் போது இங்கே என்ன இருக்கிறது என்று நினைத்தோம். இறங்கி சுற்றி பார்வையை சுழல விட்ட போது தான் தெரிந்தது எவ்வளவு அற்புதமான இடம் அது! மலைகளை மடித்து மடித்து வைத்து பச்சை வண்ணம் தீட்டியது போல!

 

மலைகளில் உச்சியில் தெரியும் மரங்கள் சிறு சிறு செடிகளாக அந்த மரங்களையே தொட்டுக் கொண்டு செல்வது போல சூரியன்



 

அடடா! என்ன இயற்கையின் படைப்பு! வெப்பத்தை உமிழ்ந்து நம்மையெல்லாம் வெறுப்படைய செய்யும் இந்த சூரியன் அங்கே மட்டும் நம்மை ரசிக்க வைப்பதை என்னவென்று சொல்வது?!

 

அதுவும் மேகங்களில் ஒளிந்து விளையாடும் அழகு பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது. முடியுமா? அடுத்த இடம் நோக்கி நகர வேண்டுமே.



 

Nohkalikai செல்ல புறப்பட்டோம். செல்லும் வழியில் Wahkaba falls பார்த்தோம். அதை அவ்வளவு எளிதில் பார்க்க முடியவில்லை. தூரத்தில் வரும் வழியில் வண்டியில் இருந்த படியே பார்த்தோம், அது ஒரு நூல் இழை போல நீண்டு காணப்பட்டது. அருவியை நின்று பார்ப்பதற்கு உரிய  இடத்தை அடைந்த பிறகு அங்கே புகை மண்டலமாக மேக மூட்டம். மேகம் விலகும் வரை காத்திருந்து பிறகு அருவியை பார்த்து ரசித்து, வழக்கம் போல் புகைப்படங்கள் எடுத்து கொண்டு புறப்பட்டு Nohkalikai வந்து சேர்ந்தோம்.



 

என்ன ஒரு ஆர்ப்பரிப்பு!

 

கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அருவியின் ஆர்பரிப்பில் மெய்மறந்து நின்ற எங்களை வயிற்றின் ஆர்பரிப்பு மதிய உணவு நேரத்தை நினைவுறுத்தியது. அருகிலேயே இருந்த NOHKALIKAI உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு அங்கே இருக்கும் சிறுசிறு கடைகளில் சில மசாலா பொருட்கள் வாங்கினோம். 



 

அங்கே வியாபாரம் செய்த ஒரு வயதான பெண்மணியை எங்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்களின் கபடமற்ற பேச்சும் செயலும்.... ஏதோ ஒரு ஈர்ப்பு.

 

ஹிந்தி புரியவில்லை, ஆங்கிலம் பேசுகிறார்கள்.

 

அந்த அம்மாவிடமே நாங்கள் நிறைய பொருட்கள் வாங்கினோம். அவர்களின் மகிழ்ச்சி எங்களுக்கு நிறைவாக இருந்தது.

 

அங்கிருந்து அடுத்து Sohrah வில் இருக்கும் MAWSMAI CAVE. செல்லும் வழியில் ஏழு சகோதரிகள் அருவி (Seven Sisters falls) என்று ஒரு இடம். அங்கே ஏழு அருவிகள் மிகவும் ஆர்ப்பாட்டமாக இருக்குமாம். நாங்கள் சென்ற சமயம் ஓரிரு அருவிகளில் மட்டுமே தண்ணீர் கொட்டியது. அதுவும் மிகவும் குறைவாகவே. அங்கே சில நிமிடங்கள் மட்டுமே பார்த்து விட்டு பயணத்தை தொடர்ந்தோம். 

 

MAWSMAI CAVE வந்தாச்சு. இந்த குகைக்குள் சென்று மறுபுறம் வருவதற்குள் ஏகப்பட்ட போராட்டங்கள். சில இடங்களில் இந்த இடத்தில் நம் உருவம் நுழையுமா என்று கூட சந்தேகம் வந்தது. சில இடங்களில் விழுந்து எழுந்து ... மறக்க முடியாத அனுபவம் அது. குகைக்குள் ஆங்காங்கே இயற்கையாக உருவாகிய பலவிதமான உருவங்கள்.  தெய்வ உருவம் , மலர் வடிவம் விலங்குகள் உருவம் இப்படி பல வடிவங்கள். ஆங்காங்கே மின்விளக்கு இருந்தது. எல்லாம் பார்த்து ரசித்து  ஒருவழியாக வெளியே வந்தோம். வரும் வழியில் சில வினோதமான மரங்களும் கனிகளும் பார்த்தோம். அந்த கனிகள் குரங்கு அல்லது பறவைகளின் உணவாக இருக்கும் போல. அதற்கான அடையாளங்கள் இருந்தன.


வெளியில் சின்னதாக வணிக வளாகம் இருந்தது. ஆனால் பொருட்கள் வாங்க யோசிக்கும் படியாக இருந்தது அதன் விலையும். எனவே எதுவும் வாங்கவில்லை. நேரத்தில் கிளம்பினால் தான் எந்த சிரமமும் இன்றி தங்குமிடம் செல்லலாம் என்று Gகோபி கூறியதை ஆமோதித்து புறப்பட்டோம்.   நாங்கள் சென்று தங்கிய இடம் என்ன? அதன் பிறகு கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  பயணத்தில் தொடர்ந்து வாருங்கள் நண்பர்களே

 

நட்புடன்

 

நிர்மலா ரங்கராஜன்

புது தில்லி.

 

*****

 

இந்நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பயணத்தில் தொடர்ந்து வரும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வருகிறேன்....

    பதிலளிநீக்கு
  3. பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. பயணத்தில் தொடர்ந்து வருவதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. பள்ளத்தாக்கு நீர்வீழ்ச்சி என அழகிய இடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  6. MAWSMAI CAVE சென்று வந்தது மறக்க முடியாத அனுபவம் வெங்கட் ஜி். மேகாலயாவை மீண்டும் சுற்றி பார்பது போல் இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது நினைவலைகளை இந்தப் பதிவு மீட்டு எடுத்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பள்ளத்தாக்கு ஓ மை என்று சொல்ல வைக்கிறது. அருவிகள் செம அழகு!!! Wahkaba falls இது விழும் அந்த வடிவம் ஆஹா!!! எவ்வளவு பெரிய மலைகள் பிரம்மாண்டம்!!

    Nohkalikai - யாரோ இடுக்கிலிருந்து பக்கெட் பக்கெட்டாகத் தண்ணீரை கொட்டுவது போன்று!!!!! நீங்கள் சொல்லியிருக்கும் ஆர்பரிப்பு சத்தம் என் கற்பனையில் கேட்கிறது! அருவிகள் விழும் சத்தம் ரொம்பப் பிடிக்கும்!

    இதன் பெயரிலேயே உணவகமா!!

    அந்த மூதாட்டி கவர்கிறார்.

    தொடர்கிறேன்

    கீதா


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. அழகான இடங்கள் மேகாலாய தொடரை உங்களின் வரிகளிலும் ரசித்துத் தொடர்ந்து வாசிக்கிறேன். தொடர்கிறேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....