திங்கள், 7 பிப்ரவரி, 2022

குடும்ப மரம் - கர்மா எனும் தொடர் - ஆதி வெங்கட்

  

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வெற்றிக்கு எந்த குறுக்கு வழியும் கிடையாது. நாம் தான் நடந்து நடந்து பாதை போட வேண்டும் - டிஸ்ரேலி.

 

******



ஆலம் விழுதுகள் வளர்ந்ததும் தாய் மரத்தை தாங்குவது பற்றி வாசித்திருப்போம். இப்போதைய விழுதுகளான நம் தலைமுறை தாய் மரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறோம்!  நமக்கே தெரியாத போது நமக்கு பின்பு வரும் தலைமுறைகளுக்கும் தெரியப்படுத்த வேண்டிய சூழலும் உருவாகிறது. இதுவே சரியான நேரம்! கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து போய் விட்டதால் குறுகிய வட்டத்துக்குள்ளேயே வாழப் பழகிவிட்டோம். நம் மூதாதையர்கள் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரிந்திருக்கிறது!!!

 

சில மாதங்களாக யூட்டியூபில் நான் பார்த்து வந்த வெப் சீரிஸ் தான் எனக்கு இந்த எண்ணத்தை உருவாக்கியது என்று சொல்லலாம். பாம்பே சாணக்யா அவர்களின் இயக்கத்தில் உருவான 'கர்மா' என்ற இந்த தொடரில் 1930 இலிருந்து தற்சமயம் வரையுள்ள தலைமுறைகளை கண்டுபிடிப்பதும், அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி தெரிந்து கொள்வதும் தான் கதை.

அதன் பின்பு தான் என் அப்பாவும் சில வருடங்களுக்கு முன்பு பேப்பரில் இப்படியொரு மரத்தை போட்டு வைத்ததும் நினைவுக்கு வந்தது. அப்பா எப்போதுமே கிரேட் தான் என்று நினைத்துக் கொண்டே அன்றே இதற்கான வேலைகளை துவக்கி விட்டோம். 

 

விளையாட்டு போல ஆரம்பித்த இந்த வேலையில் விவரங்களை நான் சொல்லச் சொல்ல, மகள் அதை கணினியில் பதிவு செய்தாள். அவளுக்கும் இதில் மிகுந்த ஆர்வம் இருந்தது தான் ஆச்சரியம்! யார் யார் எந்தெந்த தலைமுறை என்று அவளுக்கு அத்துப்படியாக தெரிந்து போனது! இது தானே இந்த மரத்தை உருவாக்குவதன் நோக்கம்!

 

சரி! குடும்ப மரம் என்றால் யாரிலிருந்து துவக்குவது? திருமணமான பின் பெண்களுக்கு புகுந்த வீடு தானே குடும்பம்! அப்போது அதில் தான் உருவாக்கணுமா? இன்னொரு வீட்டுக்கு சென்றவர்கள் இந்த மரத்தில் இடம்பெறுவார்களா? என்று பல கேள்விகள் எழலாம்!

 

நான் மூன்று மரங்களை உருவாக்கியிருக்கிறேன். அம்மா வழி! அப்பா வழி! புகுந்த வீட்டு வழி! எனக்குத் தெரிந்த என் பிறந்த வீட்டு இரு வழி தாத்தா பாட்டிகளிலிருந்தும், என் கணவரின் தாத்தா பாட்டியிலிருந்தும் துவக்கியிருக்கிறேன்.  என் அம்மா வழி பாட்டிக்கு 9 குழந்தைகள்! என் கணவரின் பாட்டிக்கு 8 குழந்தைகள்!  ஆக! ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் அவர்கள் பெற்ற குழந்தைகள் அனைவரும் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள். பின்பு அவர்களின் குழந்தைகள் அதையடுத்து அவர்களின் குழந்தைகளாக அனைவரும் இந்த மரத்தில் உள்ளனர்.

 

இப்படியாக அம்மா வழியில் ஆறு தலைமுறைகளும், அப்பா வழியில் நான்கு தலைமுறைகளும், புகுந்த வீட்டு வழியில் ஐந்து தலைமுறைகளும் கண்டறிந்துள்ளேன். பெரும்பாலும் எனக்குத் தெரிந்த தகவல்களும், சிலவற்றை உறவினர்களிடத்தில் கேட்டும் தெரிந்து கொண்டது இதை உருவாக்குவதற்கு பெரிதும் உதவின.

 

இந்த மரத்தை உருவாக்கும் போது நிறைய விஷயங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது! நியூமராலஜி, தமிழ்ப் பெயர், மாடலான பெயர் என்ற எந்த குழப்பமும் இல்லை நம் முன்னோர்களிடத்தில்! தாத்தா, பாட்டி பெயர்களைத் தான் மாற்றி மாற்றி பேரன் பேத்திகளுக்கு வைத்துள்ளனர். அதே போன்று பெண்களுக்கான சம உரிமை இல்லாத அந்த காலத்திலும் தன்னுடைய அப்பா, அம்மாவின் பெயரை தன் குழந்தைகளுக்கு வைக்க முடிந்திருக்கிறது என் அம்மா வழி பாட்டியால்!

 

சரி! இந்த மரத்தை இன்னும் விரிவாக்க முடியுமா என்றால் நிச்சயமாக! முன்னோர்களைப் பற்றி உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் பதிவு செய்து கொண்டே வாருங்கள். அதே போல் வருங்கால தலைமுறையையும் சேர்த்துக் கொண்டே வரலாம். அதே போல் நம் தாத்தா பாட்டியின் உடன்பிறந்தவர்கள், அவர்கள் வழியில் வந்தவர்கள் என்றும் சேர்க்கலாம். பிறந்த தேதி, திருமண நாள், இறந்த நாள் என்று இந்தத் தகவல்களையும் திரட்டி சேர்க்கலாம். 

 

இது போன்ற மரங்களை உருவாக்குவதன் மூலம் நிச்சயமாக நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் முடியும்! வருங்காலத் தலைமுறைக்கும் சொல்லவும் முடியும்! தாத்தா பாட்டிகளின் ஏதோ ஒரு குணத்தையோ, முக அமைப்பையோ கொண்டிருக்கும் நாம் அவர்களின் நற்பண்புகள் கொண்ட வாழ்க்கை முறையையும் பின்பற்றுவோம்! 

 

என்ன! நீங்களும் உங்கள் தலைமுறையைத் தேடுகிறீர்களா?

 

*****

 

இந்நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

30 கருத்துகள்:

  1. எங்கள் வீட்டில் கேஜிஜி பல வருடங்களுக்கு முன்னரே இதைத் துவக்கி அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறார்.  S1 A3என்பது போல ஒவ்வொருவருக்கும் அடையாளமும் கொடுத்திருந்தார். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியதுதான் இது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கே ஜி ஜி அவர்கள் செய்துவரும் விஷயங்கள் அனைத்தும் சிறப்பு. பதிவு குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. என் கணவர் என் மாமனாரின் 100 வது பிறந்த நாள் விழாவில் குடும்ப மரம் வெளியிட்டார்கள்.
    அதற்கு உழைப்பு, பொருமை மிக அவசியம். உறவினர்கள் அனைவருடன் தொடர்பிலிருந்து நிறைய சேகரித்தார்கள். அது போல எங்கள் பக்கமும் செய்யவேண்டும் என்று சேகரித்து கொண்டு இருந்தார்கள், முழுமை அடைய வில்லை.

    நீங்கள் இரண்டு பக்கமும் குடும்ப மரத்தை தயார் செய்து விட்டது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    மகளுக்கு நம் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைஅவரையும் தெரிய வைத்து இருப்பது மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்.

    ////தாத்தா, பாட்டி பெயர்களைத் தான் மாற்றி மாற்றி பேரன் பேத்திகளுக்கு வைத்துள்ளனர்.//

    எங்கள் குடும்பத்திலும் அப்படித்தான் பெயர் வைப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களவர் தயாரித்த குடும்ப மரம் குறித்த தகவல்கள் சிறப்பு கோமதிம்மா. வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மூதாதையர் குறித்த தகவல்கள் தெரிந்திருப்பது அவசியமான ஒன்று. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  3. மரத்தை விரிவாக்க வாழ்த்துக்கள் ஆதி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. தங்களது முயற்சிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

    நான் எனது மூதாதையர்கள் ஆறு தலைமுறைகளின் பெயர்கள் தெரிந்து வைத்துள்ளேன்... நடப்பில் மூன்று தலைமுறைகள் ஆக மொத்தம் ஒன்பது தலைமுறைகள் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி. ஒன்பது தலைமுறைகளின் பெயர்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் சிறப்பு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. என் மாமா இந்தக் குடும்ப மரத்தைச் பராமரித்து வருகிறார். சமீபத்தில் எனது மாமா பிள்ளை எங்கள் அம்மா வழி கொள்ளுத் தாத்தா பாட்டியிலிருந்து ஆரம்பித்து தனது தந்தை (என் மாமா), அவரது சகோதர சகோதரிகளின் போட்டோக்களைப் போட்டிருக்கிறார். அந்த காலத்து மனிதர்கள் என்று பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஒவ்வொருவரும் எத்தனை எளிமையாக எந்த விதப் பூச்சும் இல்லாமல் இருக்கிறார்கள்!

    அந்தக் காலத்தில் பெரியப்பா சித்தப்பா அத்தை என்று அத்தனை உறவினர்கள். இந்தக் கால குழந்தைகள் கூடப் பிறந்தவர்கள் என்று ஒரே ஒரு உறவினைக் கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்பது வருத்தமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊடாடாத நட்பும் கெடும் என்பதுபோல, போக வர இருந்தால்தான் உறவினர்களையே தெரியும், அவங்க அவங்க குணாதிசயங்களையும் புரிந்துகொண்டு இவங்க இப்படித்தான் என்பது புரியும். அதுக்கெல்லாம் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது எனக்கு. கஸின்களையே எனக்குத் தெரியாது. பலரது பெயரோ இல்லை அவங்க மனைவி/ஹஸ்பண்ட் பெயரோ தெரியாது. என் மனைவிதான் எனக்கு அவங்களை அறிமுகப்படுத்துவாங்க (இதோ..அவர்தான் உங்க பெரியம்மா பெண், அவ ஹஸ்பண்டோட வர்றாங்க. போய் ஹலோ சொல்லுங்க என்று... அவங்களுக்கெல்லாம் ஓரளவு என் மனைவியைத்தான் தெரியும்.

      நீக்கு
    2. குடும்ப மரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் அந்தக்கால நிழற்படங்களையும் சேமிப்பது சிறப்பான விஷயம். எங்கள் குடும்ப மரத்திலும் பிறந்த நாள், திருமண நாள் போன்ற தகவல்களை சேகரிக்க நினைத்திருக்கிறோம். தங்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ரஞ்சனிம்மா.

      நீக்கு
    3. நெருங்கிய உறவாக இருந்தாலும் அவர்களது வீட்டினர் பெயர் எனக்கும் தெரியாது. ஒரு சிலரை பார்த்ததே இல்லை. இப்படியெல்லாம் இருப்பது எனக்கும் வருத்தம் தான் நெல்லைத் தமிழன். கொஞ்சம் கொஞ்சமாக விட்டு விலகிய வாழ்க்கையே இப்போது இருக்கிறது. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

      நீக்கு
  7. நல்ல விஷயம் ஆதி! இன்னும் வளரட்டும்! கிளைகள் பரப்பட்டும்!

    எங்கள் வீட்டில் குடும்பமரம் நட்டு ரொம்ப வருடங்கள் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாகிறது...

    தெரிந்து வைத்துக் கொள்வதில் நல்லதே. என் அப்பாவின் அம்மா வழி குடும்பமரம் போட்டா தலை சுத்தும்...என்னன்னா தாத்தாவும் பாட்டியுமே கசிஸ்ன். இரண்டு குடும்பத்துக்குள்ளயும் ஒன்றிற்குள் ஒன்று கல்யாணம் அவங்க குழந்தைகளும் உறவுக்குள்ளேயே என்று சித்தி ஒருவருக்கு அத்தை. இது யார் என்ன உறவு என்று கேட்டால்.....இவரோட அம்மாவோட தம்பியோட என்று...ஒட ஓட் ஓட ந்னு ஓட விட்டுரும் !! ஹாஹாஹாஹ...பெரிய ஃபேமிலி வேற...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிய குடும்பங்களில் குடும்ப மரம் தயாரிப்பது கொஞ்சம் கடினம் தான். ஆனாலும் முயற்சி செய்தால் இந்தப் பணியை சிறப்பாக செய்து விட முடியும் கீதா ஜி. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  9. ஆனால் இப்போது உறவுகள் முன்பு போல இல்லை ஆதி. நான் வளர்ந்தது பெரிய கூட்டுக் குடும்பத்தில். அது பொற்காலம். எனக்கு எல்லாப் பெரியவர்களோடும் தொடர்பு இருக்கிறது. ஆனால் இனி அப்ப்டி இருக்குமா என்றால் இருக்காது பெரும்பாலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறவுகள் முன்பு போல இல்லை என்பது நிதர்சனம் கீதா ஜி. என்னுடைய Cousins குடும்பம் பற்றிய தகவல் என்னிடம் இல்லை. பலர் தொடர்பில் இல்லை. தொடர்பு கொள்ள முயற்சித்தாலும் அதனை சிலர் விரும்புவதும் இல்லை என்பதே நிஜம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. ஊடாடாத நட்பும் கெடும் என்பதுபோல, போக வர இருந்தால்தான் உறவினர்களையே தெரியும், அவங்க அவங்க குணாதிசயங்களையும் புரிந்துகொண்டு இவங்க இப்படித்தான் என்பது புரியும். அதுக்கெல்லாம் வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது எனக்கு. கஸின்களையே எனக்குத் தெரியாது. பலரது பெயரோ இல்லை அவங்க மனைவி/ஹஸ்பண்ட் பெயரோ தெரியாது. என் மனைவிதான் எனக்கு அவங்களை அறிமுகப்படுத்துவாங்க (இதோ..அவர்தான் உங்க பெரியம்மா பெண், அவ ஹஸ்பண்டோட வர்றாங்க. போய் ஹலோ சொல்லுங்க என்று... அவங்களுக்கெல்லாம் ஓரளவு என் மனைவியைத்தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கும் பல உறவினர்களின் பெயர் தெரியாது. நெருங்கிய பலரின் வீட்டினர் அறிமுகமே இல்லை. இப்படி இருப்பது சரியல்ல என்று பலமுறை தோன்றினாலும் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறது. வீட்டு விசேஷங்களுக்கு கூட செல்வது குறைந்து விட்டது. முன்பெல்லாம் திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஒருவரை ஒருவர் சந்திப்பது வழக்கம். இப்போது அதுவுமில்லை. நான் சில உறவினர்களை சந்தித்ததே இல்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது. தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது நல்ல நினைவாற்றல் வளமாக இருக்க நல்ல பயிற்சி இந்த உறவு குடும்ப மரங்களை சேகரித்து வளர்ப்பது. உறவுகளின் வகைகளை, அவர்களின் பெயர்களை சேகரித்து நம் இளைய தலைமுறைக்கு பரப்பும் தங்கள் செயலுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு குறித்த தங்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. இது ஒரு போற்றத்தக்கவேண்டிய முயற்சி. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  13. முகநூலிலும் படிச்சேன். கர்மா தொடர் பல வருடங்கள் முன்னர் ராஜ் டிவியில் "விஸ்வரூபம்" என்னும் பெயரில் வந்து திடீரெனப் பாதியில் நின்னுடுத்து. இங்கே யூ ட்யூப் மூலம் நானும் பார்த்து வருகிறேன். இப்போ 2,3 மாதங்களாகப் பார்க்கலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜ் டிவியில் முன்னர் தொடராக வந்ததுதான் கீதாம்மா. பாதியில் நின்றுவிட்டது. தற்போது யூடியூபில் வருகிறது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  14. மிக அதிசயமான நிகழ்வு ஆதி.

    அமாவசையன்று நான் என் முன்னோர்கள் அனைவரௌயும் பெயர் சொல்லி வணங்குவது
    வழக்கம்.
    நிறைய நாட்கள் பிரிந்திருக்கும் தூர உறவுகள் கூட நினைவுக்கு
    வர ஆரம்பித்தார்கள்.
    ஊரைவிட்டு விலகி வேறு தேசம் சென்றவர்களையும்
    பளிச்சென்று நினைவுக்கு வந்தது.
    இன்று பார்த்தால் நீங்கள் இந்தப் பதிவை இட்டிருக்கிறீர்கள்
    மஹா பொறுமையுடன் செய்ய வேண்டிய

    விஷயம்.
    ரோஷ்ணி ஆர்வம் எடுத்துக் கொண்டிருப்பது மிக முக்கியம்.

    பல குணாதிசயங்கள், குண நலம்கள் எல்லாமே
    ருவருக்கொருவர் ஒத்திருப்பதைக்
    காண முடியும்.
    தங்கள் சுவாரஸ்யம் வளர்ந்து
    நலம் பெறட்டும். எதிர்கால சந்ததிகளுக்கு
    உபயோகமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வல்லிம்மா. மகளுக்கும் இதில் ஆர்வம் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம் தான். சேகரிக்கும் தகவல்கள் வரும் சந்ததியினருக்கு பலனுள்ளதாக இருந்தால் நல்லது தான்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....