புதன், 23 பிப்ரவரி, 2022

நிழற்பட நினைவுகள் - அப்பாவின் பை - ஆதி வெங்கட்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

தேவையற்ற பொருட்களை நீ வாங்கி கொண்டே இருந்தால். விரைவில் தேவையான பொருட்களை விற்க நேரிடும் - வாரன் பஃபெட்.

 

******

 

நிழற்பட நினைவுகள்!




 

1997ல் பத்தாம் வகுப்பு முடிந்ததும் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர  அப்ளிகேஷனில் ஒட்டுவதற்காக எடுத்த புகைப்படம்! அப்போது தான் அம்மாவுக்கு புற்றுநோய் என அறியப்பட்ட நேரம். அம்மா மருத்துவமனையில் இருக்க அப்பா தான் ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றார். அப்போது என் வயது பதினைந்து!

 

கோண வகிடாக இருந்த தலைமுடி கல்லூரி சமயத்தில் விழுப்புரத்திற்கு உறவினர் கல்யாணத்திற்கு சென்ற போது நேர் வகிடாக மாற்றப்பட்டது! திருமணத்திற்கு பிறகு வகிட்டில் குங்குமம் வைப்பதற்காக! 

 

20 வயதிலேயே திருமணம் ஆனாலும் எங்கு குங்குமம் தந்தாலும் மோதிர விரலால் எடுத்து அழகாக வகிட்டிலேயே வைத்துக் கொள்வேன்..🙂 இப்போது தான் வகிட்டில் துவங்கி நெற்றி வரை வைத்து பின்பு கண்ணாடியை பார்த்து சரி செய்து கொள்கிறேன்...🙂

 

தூக்கி வாரிய தலைமுடியுடன் இருந்த நான், 'ஏன் இவ்வளவு தூக்கி வாரியிருக்க! வழிச்சு தான் வாரிக்கோயேன்!' என்ற என் மாமியார் சொல்லை மறுப்பேதும் தெரிவிக்காமல் ஏற்றுக் கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி வார ஆரம்பித்தேன்..🙂

 

சின்ன பெண்ணாக இருந்த போதே மூக்கும் குத்திக் கொண்டாச்சு..🙂 அதுவும் இரண்டு தடவை..🙂 ஐந்தாம் வகுப்பில் முதல் முறையாக! ஒரு வாரத்திலேயே  வளையலில் மாட்டிக் கொண்டு மூக்கிலேயே மூக்குத்தி உடைந்து போக , அழுது கொண்டு வீட்டிற்கு வந்தேன். அதன் பிறகு நான் ஒத்துக் கொள்ளவே இல்லை..🙂 விதி வலியது!! பத்தாம் வகுப்பில் மீண்டும் குத்தப்பட்டது..🙂

 

இப்படி இத்தனை வருடங்களில் என் உடலிலும், மனதிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன! நிறைய அனுபவங்களும் கிடைத்து விட்டன! வீட்டை ஒழுங்கு செய்த போது கிடைத்த நிழற்படம் என்னை பின்னோக்கி பயணிக்கச் செய்து அதோடு சில நினைவுகளையும் இழுத்து வந்தது!

 

*****

 

அப்பாவின் பை!:


 

சில வருடங்களாக முக்கியமான அடையாள அட்டைகள், புகைப்படங்கள் என்று சில பொருட்களை பத்திரமாக ஓரிடத்தில் வைக்க உபயோகித்த பை. இப்போது கிழிந்து விட்டது. அதிலிருந்த பொருட்களை வேறொரு பைக்கு மாற்றும் போது அப்பாவைப் பற்றிய நினைவுகளும் அந்தப் பையுடன் தொற்றிக் கொண்டது!

 

அப்பா எப்போதும் இது போன்ற பையுடன் இருப்பார். அலுவலகத்துக்கு, வெளியில் நண்பர்கள், உறவினர்களைப் பார்க்கச் செல்லும் போது என்று எங்கு போனாலும் கையிடுக்கில் இடுக்கிக் கொண்டோ அல்லது கையில் பிடித்துக் கொண்டோ செல்வது தான் அவரோட வழக்கம்!

 

அந்தப் பையில் தன்னுடைய மூக்கு கண்ணாடி, பேனா, முக்கியமான பேப்பர்கள், கொஞ்சமாக பணம், பேருந்தில் செல்ல, தேநீர்க் குடிக்க  சில்லறைக் காசுகள், அலுவலக டேபிள் டிராயரின் சாவி என்று அனைத்தும் இடம் பிடித்திருக்கும். அப்பாவுக்கு பர்ஸ் வைத்துக் கொள்ளும் வழக்கமில்லை! சட்டைப் பையில் கூட பேனா, சிகரெட்டுகள் இவை தான் இருக்கும்! 

 

அப்பா இரு வேளை மட்டுமே  உணவு எடுத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டவர். காலை 8:30 மணி போல குழம்பு, ரசம், காய் மற்றும் மோருடன் சாப்பிட்டு விடுவார். அதே போன்று இரவு 7:30 மணிக்கெல்லாம் இரவு உணவை எடுத்துக் கொண்டு விடுவார். இடையில் காஃபி, தேநீர் போன்றவை தான். அதனால் அவருக்கு லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்லும் வழக்கம் இல்லை!

 

இப்படியாக அப்பாவின் வாசனையோடு இருந்த அப்பாவின் பையை நினைத்துக் கொண்டு இன்றைய நாள் சென்று கொண்டிருக்கிறது. என்னைப் போல் அப்பாவின் பித்துப் பிடித்த மகள்களுக்கு அப்பா என்பவர் தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

  1. இனிமையான நினைவுகள். என் அப்பாவின் Bag - அவர் ஆபீஸ் எடுத்துச் செல்லும் Bag பற்றி எனக்கும் நினைவுகள் உண்டு! இப்போதும் எங்காவது யாராவது ஜிப்பை சர்ரென சத்தத்துடன் திறந்தாள் எனக்கு உடனே பஜ்ஜி, வடை வாசனை வரும்! என் அப்பா ஆபிசிலிருந்து வந்ததும் இந்த சத்தத்தைத் தொடர்ந்து வீடு முழுவதும் பரவும் மணம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சத்தத்தைத் தொடர்ந்து வீடு முழுவதும் பரவும் மணம்.... ஆஹா.... படிக்கும் போதே எங்களுக்கும் அந்த வாசனை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இவ்வகையான பசுமையான நினைவுகள் வரும்போது மனம் சற்று கனக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நினைவுகள் மனம் கனக்கச் செய்பவை தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. //நிழற்படம் என்னை பின்னோக்கி பயணிக்கச் செய்து அதோடு சில நினைவுகளையும் இழுத்து வந்தது!//

    நினைவுகள் அருமை.

    நான் மகள் பிறந்தபின் மூக்கு குத்தி கொண்டேன். (மாமியார் விருப்பத்தை ஏற்று)

    அப்பாவின் நினைவுகள் மனதை நெகிழ செய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. இனிமையான நினைவுகள்... அப்பாவை தான் வாழும் வரை நினைப்பது மகள்(கள்) மட்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவை நினைக்கும் மகள்கள் - பொதுவாக உண்மை தான் தனபாலன். விதிவிலக்கான ஆண்களும் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அப்பாவின் நினைவுகள் இனிமை பெண்குழந்தைகளிடம் என்றும் இருக்கும் நினைவுகள்.
    எங்கள் அப்பா கோவிலுக்கு போகும்போது பாவித்த ஓலை பர்ஸ் ஒன்று என்னிடம் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவின் ஓலை பர்ஸ் - ஆஹா... மகிழ்ச்சி. சிறப்பான விஷயம் தான் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. ஆதி நல்ல நினைவுகள்.

    எனக்கும் இப்படி சில விஷயங்கள் பல நினைவுகளைக் கொண்டுவரும் ஆனால் கூடவே சில மனதைக் கஷ்டப்படுத்தும். அதாவது இழப்புகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கஷ்டப்படுத்தும் நினைவுகளும் உண்டு தான் கீதா ஜி. தவிர்க்க முடியாதவையும் கூட.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. ஹாஹா! நான் மூக்குக் குத்திக்கொண்ட வரலாற்றை ஆதியின் இந்த முகநூல் பதிவில் பதிந்திருந்த நினைவு. மூக்குக் குத்திக் கொள்வதில் கூடச் சரித்திரம் படைச்சிருக்கேன். சுகமான நினைவுகள். முகநூலில் அநேகமாக எல்லாவற்றையும் பார்த்து/படித்தும் விடுவேன். இன்னிக்கு எங்கே போனாலும் ரோபோ வந்து மூக்கை நீட்டுகிறது. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலிலும் இங்கேயும் உங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. அப்பாவின் பை, தம்பிகளின் பைகள், வீட்டுக்காரரின் பர்ஸ் என்று நினைவுகளை நீள வைத்து விட்டது உங்கள் பதிவு.
    ஆதி.
    மகள்களுக்கு அப்பாக்கள் மிக முக்கியம்.
    அதே போலக் கணவரும் இருக்க வேண்டும் என்ற

    கற்பனையும் இருக்கும். அருமையான பதிவு.
    சட்டைப் பையில் சிகரெட் பாக்கெட்.!!!!!

    நல்ல பதிவுக்கு நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்கள் நினைவுகளையும் மீட்டெடுத்தது அறிந்து மகிழ்ச்சி வல்லிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....