வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

தமிழகப் பயணம் - பயணத்தின் முடிவு - விமானப் பயணம்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட இரயில் பயண ஸ்வாரஸ்யங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

மன நிறைவு என்பது இயற்கையாகவே நம்மிடம் உள்ள செல்வம். ஆடம்பரம் என்பது நாமே தேடிக்கொள்ளும் வறுமை - சாக்ரடீஸ்.

 

******

 

செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வந்தது பற்றி இதுவரை வெளியிட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே. 

 

ஓசியில் வேர்க்கடலை தருகிறார்களோ

 

Gகுரு Bபாயின் தங்கச் சங்கிலி

 

சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு - ஜன் ஷதாப்தியில்

 

மீன் செத்தா கருவாடு

 

பொண்ணு மாப்பிள்ளை லேட் எண்ட்ரி

 

தரங்கம்பாடி எனும் Tranquebar

 

திருக்கடையூர் கோவில்

 

திருக்கடையூர் - கல்யாண விசேஷங்கள்

 

பயணங்கள் முடிவதில்லை

 

பயண ஸ்வாரஸ்யங்கள்

 

பிரம்மா கோவில் - வங்கிகளில் தமிழாக்கம்

 

இரயில் பயண ஸ்வாரஸ்யங்கள்

 

செப்டம்பர் மாதத்தில் தமிழகம் வந்திருந்தது குறித்து பதிவுகள் எழுதினாலும், இடையிடையே நிறைய இடைவெளி! ஒரு சேர பதிவுகள் வெளியிட முடியாத சூழல்.  ஒரு வழியாக இந்தப் பதிவுடன் தமிழகப் பயணம் குறித்த பதிவுகளை முடித்துக் கொள்ள இருக்கிறேன்.  தொடர்ந்து பதிவுகள் எழுத விஷயங்கள் இருந்தாலும், ஏனோ சின்னச் சின்னதாய் தடைகள், வேலைகள் என்றே இருக்கின்றது.  ஜனவரி (2022) மாதத்தில் பத்து நாட்கள் தொடர்ந்து பதிவிடவில்லை.  பொதுவாக சமீப வருடங்களில் இவ்வளவு நீண்ட இடைவெளி விட்டதில்லை!  சரி எல்லாம் நல்லதற்கே என்று எடுத்துக் கொள்வோம்!  என்னுடைய பதிவுகளிலிருந்து உங்களுக்கும் கொஞ்சம் விடுதலை கிடைத்ததே!   சரி திருச்சியிலிருந்து சென்னை வரை இரயிலில் வந்த போது கிடைத்த அனுபவங்களை சென்ற பகுதியில் எழுதி இருந்தேன்.  இந்தப் பகுதியில் சென்னை விமான நிலையத்தில் கிடைத்த அனுபவங்களையும், தில்லி வரும் வரை நடந்த நிகழ்வுகளையும் பார்க்கலாம்.  

 

வெளிநாட்டு பயணி - எத்தனை கிலோ?

 

சென்னை விமான நிலையத்தில் காத்திருக்கும் வேளையில்...... இரண்டு பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள். 

 

"மொத்தம் 38 கிலோ எடுத்துட்டுப் போகலாம்.... என் கிட்ட கேட்டு இருக்கலாம்ல..... வெள்ளைப்பூண்டு, வெங்காயம்னு மசாலாவுக்குத் தேவையானதெல்லாம் வாங்கி எடுத்துட்டுப் போயிருக்கலாம்.... அதெல்லாம் அங்க கிடைக்காதே..... மசாலா இல்லாம எப்படி நான் வெஜ் சாப்பிட முடியும்......"

 

****

 

காத்திருப்பதின் கஷ்டம்: 




 

காத்திருப்பது போன்ற கடினமான விஷயம் ஒன்றும் இல்லை என்று சொல்வார்கள்.... நானும் காத்திருந்தேன்..... எப்படா 06.50 ஆகும்.... விமானம் எப்படா புறப்படும்..... என. 

 

இரயில் பயணம் போல இங்கே வேடிக்கை பார்ப்பது சிரமம். ஒரே ட்ராமா தான்..... பயணிப்பவர் தரை லோக்கலாக இருந்தாலும், ஏனோ இன்டர்னேஷனல் லெவல்ல படம் காண்பிப்பார்கள்...... அதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்....

 

****

 

சிற்பங்கள்: 



 

சென்னை விமான நிலையத்தில் ஆங்காங்கே சிற்பங்கள் - மரத்திலும், வெண்கலத்திலும் - வைத்திருக்கிறார்கள்.  எல்லாமே பார்ப்பதற்கு அழகானவை.  நிறைய அலங்காரங்கள் - அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொரு பயணத்திலும் பார்த்தாலும் பொதுவாக படம் எடுத்ததில்லை.  இந்த முறை சில படங்களை எடுத்தேன்.  பொதுவாக சங்கு சக்கரம் கதை என ஆயுதங்களுடன் காட்சி அளிப்பது விஷ்ணு தானே..... ஆனால் இதழோரம் இருக்கும் கோரைப் பற்கள் பார்க்கும்போது கொஞ்சம் சந்தேகம் வந்தது...... முகநூலில் எழுதியபோது துளசி டீச்சர் ஜெய விஜயர்களில் ஒருவரின் சிலை என்றார்.  டீச்சர் சொன்னா சரியாத்தான் இருக்கும்! 



 

மரப் பெட்டி மேலே நின்ற கோலத்தில் தொந்தி கணபதி.....

 

****

 

விமானத்தில்:

 

ஒரு வழியாக விமானத்தில் அமர்ந்து கொண்டு புறப்பட, எந்தவித பரபரப்பும் இல்லாமல் தில்லி வந்து சேர்ந்தேன். இரண்டரை மணி நேரத்திற்கும் மேலான பயணத்தில் நிறைய நேரம் கண்களை மூடியபடி அமர்ந்து கொண்டே வந்தேன்.  முடிந்தவரை ஓய்வெடுத்துக் கொண்டால் நல்லது! அடுத்த நாள் அலுவலகத்திற்கும் செல்ல வேண்டுமே!  தவிர ஏதாவது யோசித்துக் கொண்டிருக்காமல், உறங்க முடிந்தால் நல்லது தானே! 

 

ஓட்டுனரின் லீலை:

 

தில்லி வந்து, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தால் ஊபர்/ஓலா செயலியில், வீடு செல்ல 800 ரூபாய் காண்பித்தது! இரவு நேர கட்டணங்கள் போன்றவை சேர்த்து!  தில்லி காவல்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் Pre-paid Taxi கேட்ட போது 350 ரூபாய்! சரி என அதிலேயே கட்டணம் கட்டி நின்று கொண்டிருக்கும் வண்டியில் ஏற, ஓட்டுனர் வேறு ஒரு பயணியையும் என்னிடம் கேட்காமலேயே ஏற்றிக் கொண்டார்.  ஓட்டுனரிடம் இப்படி ஏன் செய்கிறீர்கள்? எனக் கேட்க, சிறு தொலைவு தான் இவர் வருவார், வழியில் இறக்கி விட்டு விடுவேன், போகிற வழி தானே, நானும் கொஞ்சம் சம்பாதித்துக் கொள்கிறேனே! என்றார்.  அது சரி தான், ஆனாலும் என்னிடம் கேட்காமல் நீங்கள் இப்படிச் செய்வது சரியல்ல என்று சொல்ல முணுமுணுத்துக் கொண்டே, உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், வேண்டுமானால்  இவரை இங்கேயே இறக்கி விட்டுவிடுகிறேன் என்று சொல்லும் போது இரண்டு கிலோமீட்டர் வந்திருந்தது வண்டி! இனிமேலாவது இந்த மாதிரியெல்லாம் நடந்து கொள்ளாதீர்கள் என்று சொல்ல, வாயே திறக்காமல் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து, என் வீட்டின் கீழே விட்டார்!  அதுவரை அந்த இரண்டாம் பயணி இறங்கவே இல்லை! புது தில்லி இரயில் நிலையம் வரை சென்று இறங்கிக் கொள்வாராம்!  என்னவோ மனிதர்கள்.  அப்படி அவர் வருவதால் எனக்கு ஒன்றும் கஷ்டம் இல்லை - ஆனாலும் என்னிடம் சொல்லாமல் இப்படி ஒரு பயணியை அழைத்து வருவதும், அவரிடமும் பணம் வாங்கிக் கொள்வதும் சரியல்லவே.  

 

ஒரு வழியாக பயணமும் முடிந்தது! பயணம் குறித்த பதிவுகளும் முடிந்தது.  வேறு சில பயணங்கள் சென்று வந்தாலும் அது குறித்து இப்போதைக்கு பதிவுகள் வெளியிட முடியுமா எனத் தெரியவில்லை.  முடிந்த போது எழுதுகிறேன்.  

 

பயணம் குறித்த பதிவுகள் இடைவெளி விட்டு வெளியிடுவது எனக்கும் பிடிக்காத ஒன்று தான். இருந்தாலும் வேறு வழியின்றி இடைவெளி வந்துவிட்டது.  முடிந்த போது வேறு பதிவுகள் தொடர்ந்து வெளிவரும்.  பதிவுகள் குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.   நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

30 கருத்துகள்:

  1. ஜெயவிஜயர்கள்...   ஓஹோ...  ஜெயவிஜயா என்று பாடக சகோதரர்கள் இருக்கிறார்கள் தெரியுமோ...   'திருமதுரை தென்மதுரை சிறந்து நிற்கும் தேன்மதுரை' என்று ஒரு பாட்டு உடனடியாக நினைவுக்கு வருகிறது.

    நானும் ஊபர்  ஓலா பற்றி எழுதி வைத்திருந்தது ரொம்ப நாட்களாய் டிராப்டில் தூங்குகிறது.  வெளியிட்டு விட வேண்டியதுதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெய விஜயா என்ற பாடகர்கள் - கேள்விப்பட்டதில்லை ஸ்ரீராம்.

      உங்களுடைய ஓலா ஊபர் அனுபவங்கள் பதிவினை படிக்கக் காத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. உங்கள் பயண அனுபவங்களைப் படித்து ரசித்தேன்.

    வாழ்க்கையில் வித வித மனிதர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதம் விதமாய் மனிதர்கள்....

      பயண அனுபவங்களை நீங்களும் படித்து ரசித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. பயண அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. அன்பின் வெங்கட்,
    என்றும் நலமுடன் வாழ்க.
    பாவம் ஊரை விட்டு வந்தால்
    சிரமமாகத் தான் இருக்கும். அதுவும் டாக்சி டிரைவர் இது போலச் செய்தால்
    கோபம் வராமல் இருக்குமா.
    சென்னையிலேயே இதை அனுபவித்தோம். இரண்டு வருடங்களுக்கு முன்.

    இவர்கள் மாற மாட்டார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மாதிரி மனிதர்களை அவ்வப்போது சந்திக்க வேண்டி தான் இருக்கிறது. முடிந்தவரை சமாளிக்கலாம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  5. '''

    பயணம் குறித்த பதிவுகள் இடைவெளி விட்டு வெளியிடுவது எனக்கும் பிடிக்காத ஒன்று தான். இருந்தாலும் வேறு வழியின்றி இடைவெளி வந்துவிட்டது. முடிந்த போது வேறு பதிவுகள் தொடர்ந்து வெளிவரும். பதிவுகள் குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நாளை வேறு ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…''

    நிறைய எழுதுங்கள்.
    காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தபோது பகிர்ந்து கொள்கிறேன் வல்லிம்மா. ஹரித்வார் பயணம் குறித்து எழுத வேண்டும். நேரம் கிடைக்கும்போது எழுதுவேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. பயணிப்பவர் தரை லோக்கலாக இருந்தாலும், ஏனோ இன்டர்னேஷனல் லெவல்ல படம் காண்பிப்பார்கள்......யதார்த்தம்..அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. மாமியின் இழப்பு உங்களை மிகவும் வாட்டுகிறது என்று தோணுகிறது. சீராக வந்த பதிவுகளில் ஓர் நீண்ட முடக்கம். பின்னர் துடங்கியாலும் பழைய சீரான ஓட்டம் இல்லை. எப்போதும் போல் உற்சாகமாக பதிவு எழுதப் பாருங்கள். துள்ளும் உற்சாகமே உங்கள் பதிவுகளின் சிறப்பம்சம்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா. வழமையான பதிவுகள் விரைவில்....

      நீக்கு
  8. அனுபவங்கள் ரசிக்க வைத்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன அனுபவங்களை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  9. பயண அனுபவங்கள் ரசனைதான். ஃப்ளைட்டில் சில சமயம்தான் அனுபவங்கள் கிடைக்கும்.

    இப்படி நம்மைக் கேட்காமல் ஏற்றுவது சரியல்லதான்....

    நேரம் கிடைக்கும் போது தொடருங்கள் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  10. பெருமாள் சன்னதியில் வாசலில் இரண்டு பக்கமும் நிற்பவர்கள் ஜெய விஜயர்கள்.
    சிவன் கோயிலில் அவர்கள் பெயர் துவாரபாலகர்கள்
    பயண அனுபவங்கள் தொடர்ந்து எழுதுங்கள். பதிவு தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெய விஜயர்கள் மற்றும் துவாரபாலகர்கள் குறித்த மேலதிக தகவலுக்கு நன்றி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. வணக்கம் சார்.
    சாக்ரடீஸ். அவர்களின் வாசகம் மிக அருமை.
    ஓட்டுனர்கள் சம்பாரிப்பதில் குறியாக இருப்பதோடு சரி. தெளிவாக சேமித்து வைத்தால் அவர்கள் வாழ்வும் குடும்பமும் மேன்படும் என்பதே பலரின் என்னமாக இருக்கிறது. அங்கு பெரும்பாலோர் மிகப்பெரும் தவறு செய்கிறார்கள்.
    மஹாபாரதத்தில், பீமன் துரியோதனன் இருவரையும் ஜெயவிஜயர்கள்...  வடிவமாக சொல்வதுண்டு.
    மற்ற அணைத்து பகுதிகளும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வாசகம் உங்களுக்கு பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி அரவிந்த். பதிவு குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  12. டாக்சி ஒட்டுனர் நியாயம் இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றார். புகார் செய்தால் அவர் வேலை போய்விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  13. விமான நிலையத்தில் சிலைகள் வைப்பது நல்ல செயல்.
    உங்கள் பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Achu.... உங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி. தொடர்ந்து வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  14. சென்னை விமான நிலையத்தில் இருக்கும் சிலைகள் வெகு அழகு. Arrival terminalல் நடராஜர் சிற்பத்தை சென்ற வருடம் படம் எடுத்தேன்.
    விமான நிலையத்தில் சீன் கொஞ்சம் அதிகம்தான். யாரும் தமிழ் புத்தகம் கையில் வைத்திருக்க மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடராஜர் சிலை சில மாதங்களாகவே இருக்கிறது. நான் படம் எடுத்ததாக நினைவில்லை.

      தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி பானும்மா.

      நீக்கு
  15. டாக்சி ஓட்டுனரின் செயல் சரியானதல்ல .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் அவரிடம் அவர் செய்வது சரியல்ல என்று சொன்னேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....