வெள்ளி, 24 செப்டம்பர், 2021

ஓசியில் வேர்க்கடலை தருகிறார்களோ - தமிழகப் பயணம் - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


இன்பம், துன்பம் ஆகிய இரண்டையும் கடக்கும் வரை சாதனையைத் தொடருங்கள்; இறுதியில் உண்மை மட்டுமே நிலைத்து நிற்கும் - ரமண மகரிஷி.


******


இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழகம் நோக்கி ஒரு பயணம் - சில வேலைகள் முடிக்க வேண்டும் என்பதோடு தில்லி நண்பரின் (ரங்கராஜன் - நிர்மலா ரங்கராஜன் - இந்த வலைப்பூவில் இவர்கள் சில பதிவுகளும் எழுதி இருக்கிறார்கள் என்பது உங்கள் நினைவிலிருக்கலாம்!) சஷ்டியப்தபூர்த்தி திருவிழாவும் நடக்க இருந்ததால், அதே சமயத்தில் வந்து விடலாம் என முன்கூட்டியே திட்டமிட்டு விமானத்தில் சென்னை வழியே திருச்சி வரை முன்பதிவு செய்து விட்டேன். இப்போதெல்லாம் ஒரு மாதத்திற்கு முன்பாக முன்பதிவு செய்தால் திருச்சி வரை வருவதற்கே 4500/-க்குள் பயணச் சீட்டு கிடைத்துவிடுகிறது என்பது ஒரு சௌகரியம் - கடைசி நேரத்தில் முன்பதிவு செய்தால் சென்னை வரை வருவதற்கே 7500/- வரை ஆகிவிடுகிறது - திருச்சி வரை விமானத்தில் வந்தால் சுமார் 10000/- வரை ஆகிறது. சொல்லி இருக்கும் கட்டணம் - ஒரு வழிக்கு! காலை 03.00 மணிக்குப் புறப்பட்டு 09.20-க்கு திருச்சி விமான நிலையம் வந்து விடலாம் எனும்படியாக முன்பதிவு செய்து வைத்திருந்தேன்.  பயணத்திற்கு சில நாட்கள் முன்னர் ஒரு குறுஞ்செய்தி வந்தது - இண்டிகோ நிர்வாகத்திலிருந்து! 

நிர்வாகக் காரணங்களுக்காக உங்கள் முன்பதிவு ரத்து செய்து, வேறு விமானத்தில் முன்பதிவு செய்திருக்கிறோம் என்பது தான் அந்த குறுஞ்செய்தி. அதுவும் தொல்லை கொடுக்கும் மாற்றம் - தில்லியிலிருந்து காலை 06.00 மணிக்குப் புறப்பட்டு சென்னை விமான நிலையத்திற்கு 08.50 மணிக்கு வந்து சேர்ந்து மாலை வரை அங்கேயே காத்திருந்து 05.00 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் விமானத்தில் திருச்சிக்கு 06.20க்கு வரும்படி மாற்றி இருந்தார்கள். தேவையில்லை எனில் நீங்கள் வேறு விமானத்திற்கு கட்டணம் இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம் எனும் வசதி இருந்ததால், சென்னை வழி வராமல் ஹைதை வழி வரும்படி மாற்றிக் கொண்டேன் - இடைப்பட்ட தங்கும் நேரம் குறைவானது என்பதால்!  காலை 11.30 மணிக்கு தில்லியிலிருந்து புறப்பட்டு இரவு 07.00 மணிக்கு திருச்சி வந்து சேரும்படியான விமானத்திற்கு மாற்றம் செய்து கொண்டேன்.  


தீநுண்மி காலத்திற்குப் பிறகு நிறைய மாற்றங்கள் - முன்பெல்லாம் Web Check-in என்பது கட்டாயமில்லை. தற்போது விமானம் புறப்படுவதற்கு முன் 48 மணி நேரத்திற்குள் கட்டாயம் Web Check-in செய்து கொள்ள வேண்டும். முன்பே சில தேர்ந்தெடுக்கப்பட்ட இருக்கைகளுக்கு கட்டணம் கட்ட வேண்டியிருக்கும். தற்போது பெரும்பாலான இருக்கைகளுக்கு விமானத்திற்கான கட்டணம் தவிர தனியாக கட்டணம் கட்ட வேண்டியிருக்கும்.  நான் முன்பதிவு செய்யும் சமயத்தில் 150/- ரூபாய்க்கு ஜன்னல் ஓர இருக்கையைத் தேர்வு செய்து, பணமும் முன்கூட்டியே கட்டி இருந்தேன்.  ஆனால் மாற்றம் செய்யப்பட்ட பிறகு, அதே எண் கொண்ட இருக்கையை, இந்த விமானத்தில் வேறு யாரோ தேர்ந்தெடுத்து இருக்க, மேலும் 250 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று வர, மேற்கொண்டு பணம் கட்ட வேண்டியிருந்தது.  என்ன ஒரே ஒரு வசதி - அதிக அளவு Leg Space கொண்ட, Emergency Exit அருகே இடம் கிடைத்தது.  என்னைப் போல உயரமானவர்களுக்கு இப்படியான இடம் கிடைத்தால் வசதி!  நிம்மதியாக காலை நீட்டி உட்கார்ந்து கொள்ளலாம்.  

புறப்பட வேண்டிய நாளும் வந்தது.  அதே நாளில் நண்பர் பத்மநாபனும் சென்னை செல்வதால், முடிந்தால் விமான நிலையத்தில் சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தேன்.  அவரது விமானம் 09.45 மணிக்கு! எனக்கு 11.30 மணிக்கு! இருந்தாலும் வீட்டிலிருந்து 08.00 மணிக்கே, ஊபரில் மகிழ்வுந்தினை ஏற்பாடு செய்து கொண்டு புறப்பட்டு விட்டேன்.  விமான நிலையம் வரை எந்த பிரச்சனையும் இல்லை.  ஓட்டுனரிடம் சில்லறை இல்லை என்பதால், அரை மனதோடு Google Pay மூலம் 220/- பெற்றுக் கொண்டார்.  விமான நிலைய வாசலில் ஏதோ திருவிழா மாதிரி கூட்டம் - நுழைவு வாயிலில் நீண்டதொரு அனகோண்டா பாம்பு மாதிரி வளைந்து வளைந்து பெரிய வரிசை.  ஹிந்தியில் ஒரு வாசகம் சொல்வார்கள் - ஓசில யாரோ வேர்க்கடலை கொடுத்தால் இருக்கும் கூட்டத்தைப் போல என்று! அது போல அன்றைக்கு யாரோ விமான நிலையத்தில் இலவசமாக பயணச் சீட்டு தருவது போல கூட்டம்! ஒரு வழியாக Boarding Pass மற்றும் அடையாள அட்டையைக் காண்பித்து உள்ளே நுழைந்தேன்.  


Indigo Counter-க்குச் சென்று, நீண்ட வரிசையில் நின்று Check-In Luggage கொடுத்த பிறகு பாதுகாப்புச் சோதனைக்கான வரிசையில் சேர்ந்தேன்.  அங்கேயும் மிக நீண்ட வரிசை.  Belt, Shoe என அனைத்தையும் உருவி Tray-இல் போட்டு ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும்! Belt போடாததால் பலர் தங்கள் கால்சராய் எங்கே கீழே விழுந்து விடுமோ என பயத்துடன் அதை ஒரு கையில் பிடித்தவாறே நடந்தார்கள் - பார்க்கவே பயமாக இருந்தது - கழன்று விட்டால் சர்வ தரிசனம் தான்!  அதுவும் Low Waist Pant அணிந்தவர்களின் நிலை சொல்ல முடியாதது - அவர்களை விட அதிகமாக பயந்தது, அவர்களுக்கு பின்னே நின்றவர்கள் தான் - என்னையும் சேர்த்து! சில பல சாகசங்களுக்குப் பிறகு ஒரு வழியாக எல்லா சோதனைகளையும் கடந்து உள்ளே நுழைந்தால், என் விமானத்திற்கான நுழைவாயில் 54 என்று தெரிந்தது. விமான நிலையத்திற்குள் சுமார் 15 நிமிட நடையில் 54-ஆம் எண் நுழைவாயில் அருகே சென்றடைந்தேன்.  08.45 மணிக்கு விமான நிலைய வாயிலுக்கு வந்தவன் 54-ஆம் எண் நுழைவாயில் அருகே வரும்போது நேரம் 10.15! கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கிறது - சாதாரணமாக இவ்வளவு நேரம் ஆகாது. 

நான் வந்து சேர்வதற்குள் பத்மநாபன் அண்ணாச்சி விமானத்தில் ஏறி முப்பத்தி ஐந்தாயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்தார் - என்னதான் அண்ணாச்சி என்றும் இருபத்தி எட்டு இடை கொண்ட, எடை குறைவானவர் என்றாலும் அவராக பறந்திருக்க முடியாது - அவர் அமர்ந்திருந்த விமானம் தான் பறந்தது! அரை மணி நேரத்திற்கும் மேல் நுழைவாயில் அருகே இருந்த சாய்வுப் படுக்கையில் படுத்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  

பக்கத்து இருக்கையில் இன்னுமொரு இளைஞர் - தலைமுடி வெட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்தால், ராணுவத்திலோ அல்லது ஏதாவது ஒரு துணை ராணுவப் படையிலோ பணிபுரிபவராக இருக்க வேண்டும் - தலையை கரண்டி வைத்திருந்தார்!  தனியாக பேசிக் கொண்டிருந்தார் - ”அடிடா, அடிடா…  அவனை போடுறா! வேண்டாம் வேண்டாம் அவன் டேமேஜ்ட்…  அவனை விடு! இவனைப் போடு!” என்று சப்தமாக பேசிக் கொண்டிருந்தார்.  இணையத்தில் நண்பர் யாருடனோ சேர்ந்து ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறார்!  ஏதோ ஒரு ஆளை போட முடியாத காரணத்தால் தன்னைத் தானே திட்டிக் கொண்டார் - “முட்டாள், முட்டாள், சுலபமா போட்டுட வேண்டியது! வாய்ப்பை விட்டுட்டியேடா! சே! போச்சு, இந்த Game போச்சு! அவ்வளவு தான்!”.  இதற்கு இடையே சப்தமாக வீட்டு விஷயங்களையும் அலைபேசி வழியே பேசிக் கொண்டிருக்கிறார்.  பொது இடங்களில் இப்படி சப்தமாக பேசுவது சரியல்ல என்று எப்படி அந்த இளைஞருக்குச் சொல்ல முடியும்.


காத்திருந்து, காத்திருந்து காலங்கள் போகுதடி என மனதுக்குள் பாடிக் கொண்டிருந்த எனக்கு, இண்டிகோ பெண் ஊழியரின் கொஞ்சும் குரல் கேட்டது - ஹைதை புறப்படத் தயாராக இருக்கும் நபர்களுக்கான அழைப்பு அது!  விமானத்தில் என்ன நடந்தது? அங்கே கிடைத்த அனுபவம் என்ன?  போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  பதிவு குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்
வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


26 கருத்துகள்:

 1. விமான நிலையத்தில் இருந்த கூட்டம் அசர வைத்திருக்கும்.  இங்கே கூட இப்போது சென்னை சாலை நெரிசல் அபப்டிதான் இருக்கிறது.  முன்னர் சாதாரண காலத்தில் இருந்ததைவிட இன்னும் நெரிசலோ என்று  கூட்டம். 

  பொது இடங்களில் இப்படி சத்தமாக பேசுவதோ, விளையாடுவதோ..   பார்க்க/கேட்க சகிக்காது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூட்டம் அசர வைத்தது தான் ஸ்ரீராம். முன்பை விட அதிகரித்து விட்டதோ என எனக்கும் ஒரு சந்தேகம்.

   பொது இடங்களில் சத்தமாக பேசுவது சரியல்ல தான் - ஆனாலும் பலர் புரிந்து கொள்வதே இல்லை ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பயண அனுபவங்களை சொன்னவிதம் சூப்பர் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயண அனுபவங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. உள்ளூரிலே இருந்தும் இந்த மாதிரி பயணங்களின்போதுதான் பத்மநாபன் அண்ணாச்சியைச் சந்திக்கும் வாய்ப்பா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலும் தினம் சந்தித்து விட்டாலும், பயணங்களின் போது சந்திப்பது தனி மகிழ்ச்சி தரும் விஷயம் அல்லவா நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பயண அணுபவங்கள் சுவாரசியம் சார்.
  விமான விதிகளில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்த செய்திகள் பலருக்கும் பயனளிக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயண அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். சில விதிகளில் மாற்றங்கள் வந்திருக்கிறது. சிலருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சியே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. விமானச் சேவைகளில் இப்ப நிறைய மாற்றம் இருக்கு போல. என் உறவினர் ஒருவரும் புலம்பித் தள்ளினார் இப்படித்தான் முன்பதிவு செய்திருந்தும் மாற்றச் சொல்லி வந்த மெசேஜ் குறித்து.

  திருவிழாக் கூட்டம் போல இருக்கிறதே விமான நிலையக் கூட்டம்!

  பப்பு அண்ணாச்சி உங்க ஆஃபீஸ் இல்லையா அப்ப? வேறு டிப்பார்ட்மென்டோ? அண்ணாச்சிய ரொம்ப விசாரித்ததாகச் சொல்லுங்க ஜி. அவர் பதிவு வாசித்து ரொம்ப நாளாகிவிட்டது. நாரோயில் தமிழும் தான்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாற்றங்கள் மட்டுமே மாறாதது என்பதை மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு விஷயம் நமக்கு உணர்த்திக் கொண்டே தான் இருக்கிறது கீதாஜி. திருவிழாக் கூட்டம் தான்.

   பத்மநாபன் அண்ணாச்சி இப்போது எனது அலுவலகத்தில் தான். தினம் ஒரு முறையேனும் சந்தித்து விட்டாலும், இப்படி பயணத்தில் அல்லது வெளி இடங்களில் சந்திப்பது இன்னும் அதிக மகிழ்ச்சியைத் தரும் விஷயம் அல்லவா கீதாஜி.

   பத்மநாபன் அண்ணாச்சி எழுதிய, யவனராணியைத் தேடி என்ற தலைப்பில் ஜூலை மாதத்தில் மூன்று பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன். நீங்கள் வாசிக்கா விட்டால் வாசிக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. பயண அனுபவம் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. அனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. பயண அனுபவம் குறித்த பதிவும் அருமை. விமான சேவை குறித்த மாற்றங்களை நல்ல நகைச்சுவையுடன் பகிர்ந்திருந்தாலும், பயனுள்ளதாக இருக்கிறது. கொரோனா பயம் மக்களிடையே முற்றிலும் அகன்று விட்டதற்கு விமான நிலைய கூட்டமே சாட்சி. டெல்லி விமான நிலையம் அழகாக உள்ளது.

  சஷ்டியப்தபூர்த்தி விழா கண்ட தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்ந்த படங்களும் பிற செய்திகளும் நன்றாக, படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. மேற்கொண்டு விமானத்தில் பயணம் குறித்த அனுபவங்களை தங்கள் சொல் நயத்தில் அறியவும் ஆவலாக இருக்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   கொரோனா பயம் மக்களிடையே முற்றிலும் அகன்று விட்டது - உண்மை. பலரும் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டதாகத் தோன்றுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. பேருந்து நிலையங்களில் இருக்கும் ஆனால் விமான நிலையத்தில் இவ்வளவு கூட்டமா? ஆச்சரியமாக இருக்கிறது. ரயில் நிலையங்களில் கூட பதிவு செய்யப்பட்ட டிக்கெட் இருந்தால் தான் உள்ளே விடுவதாக அறிந்தேன். அதனால் கூட்டம் அதிகம் இல்லை என்றும் கேள்விப்பட்டேன். இப்போது எப்படியோ தெரியவில்லை.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூட்டம் அதிகமாகவே இருக்கிறது துளசிதரன் ஜி. இரயில் நிலையங்களிலும் அத்தனை சோதனை இல்லை - திருவரங்கம் இரயில் நிலையத்தில் சோதனை செய்ய ஒருவருமே இல்லை - சமீபத்தில் பார்த்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. வெளிநாட்டுப் பயணத்தின் போது கூடுமானவரை ஜன்னலோர இருக்கை கிடைத்து விடக் கூடாது என வேண்டிக் கொள்வோம்..காரணம் எழுந்து வர ஒருவரை எழுப்ப வேண்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜன்னல் ஓர இருக்கை - சில சமயங்களில் கடினம்! குறிப்பாக நீங்கள் சொல்லும் காரணம் ரமணி ஜி.

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. கூட்டம் நெரிகிறதே! கொரோனா என்ன! எந்தவிதமான நோயும் பரவும் போல! நாம் தான் கவனமாக இருக்கணும். விமானப் பயணங்களில் இப்படியான மாற்றங்கள் எல்லா விமானச் சேவைகளிலும் செய்கின்றனர். எங்களுக்கும் இப்படி நடந்திருக்கு. ஆனால் நாங்கள் நேரமும் கிளம்பும் ஊரும் ஒத்து வராததால் பயணத்தையே நிறுத்தினோம். ஏதோ கொஞ்சம் பிடித்துக் கொண்டு தான் பணம் திரும்பக் கிடைத்தது. என்ன செய்ய முடியும்! :( தனியார் விமான சேவை! கேள்வி கேட்க முடியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கூட்டம் நெரிகிறதே - ஆமாம் கீதாம்மா. நிறைய கூட்டம். பயணத்தை நிறுத்த முடியாத சூழல் எனக்கு - அதனால் மாறுதல்களுடன் பயணித்தேன்.

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. வாசகம் நன்றாக இருக்கிறது.

  விமானபயண அனுபவம் அருமை.

  இப்போது எங்கும் கூட்டம்தான். கொரோனா பயம் போய் விட்டது. முககவசம் அணிந்து இருக்கிறார்கள்,
  அதுவே பெரிய விஷயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   கூட்டம் அதிகம் தான். பலருக்கும் கொரோனா பயம் இல்லை தான்.

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. மிகச் சுவையான பயண அனுபவம்.
  ஊருக்குத் திட்டமிட்ட நேரத்தில் கிளம்ப முடியாவிட்டால் வரும் அவஸ்தை
  மிகுதி.

  இவ்வளவு கூட்டமா இருக்கும் விமான நிலையத்தில்.

  இவ்வளவு நபர்களும் பறந்து கொண்டே இருக்கிறார்களா!!!

  அதிசயமாக இருக்கிறது.
  உங்கள் வழியே அறிமுகமான பத்மனாபன்
  எங்களுக்கும் தோழர் ஆகிவிட்டார்.:)

  சஷ்டி அப்த பூர்த்தி தம்பதிகளுக்கு இனிய வாழ்த்துகள்.

  அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி வல்லிம்மா. அடுத்த பகுதி விரைவில்!

   தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....