திங்கள், 27 செப்டம்பர், 2021

வாசிப்பனுபவம் - உலக சுற்றுலா தினம் - இரா. அரவிந்த் - ஏழு சகோதரிகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட புகைப்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


பிறப்பு முதல் இறப்பு வரையிலான அழுத்தமான பயணத்தில், வாய்ப்பு கிடைக்கும்போது சிற்சில சுகமான பயணங்களை அனுபவித்து மேற்கொள்ளுங்கள். நாள்கள் கழிந்தாலும், பயண நினைவுகள் நிகழ்காலத்தை அழகாக்கும்.


******





அன்பின் நண்பர்களுக்கு, இன்றைய நாள் (27 செப்டம்பர்) உலக சுற்றுலா தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளுக்கான சிறப்புப் பதிவாக நண்பர் அரவிந்த் அவர்கள் பதிவு எழுதி அனுப்பவா என்று கேட்டு, எழுதித் தந்த பதிவு தான் இன்றைக்கு! இந்த நாளில் நண்பர் அரவிந்த் அவர்களின் வாசிப்பனுபவம் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாருங்கள் அவரது வாசிப்பனுபவத்தினை வாசிக்கலாம்! - வெங்கட் நாகராஜ், புது தில்லி.


******


ஏழு சகோதரிகள் - பல்சுவை பயணமும் பல்வகை பரவசங்களும்


விஞ்ஞானமும் மருத்துவமும்  வளர வளர, நம்மை அச்சுறுத்தும் புது புது நோய்கள் கண்டறியப்படுவதும், அவற்றால் நித்தமும் எதன் மீதும் அச்சம் வருவதும் இயல்பாகிவிட்டது.  


அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக நம் பாரம்பரிய மருத்துவம் குறிப்பிடுவது செறிமானக் கோளாறுகளே என்பதும், “பசித்துப் புசி” என்பதே நிரந்தர ஆரோக்கியத்திற்கான திறவுகோல் என்பதும் நாம் உணர்ந்ததே.  


பசித்து உண்ணும் வழக்கம், எப்படி இளைய தலைமுறையினர் ஒதுக்கும் ரசத்தையும் அதிரசம் ஆக்குமோ, அதுபோல நம் வாழ்வை முழுமையானதாக இனிதானதாக, அர்த்தப்பூர்வமானதாக ஆக்குவது நாம் செய்யும் ஆக்கப்பூர்வமான பயணங்களே. 


அப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான சுய பயண அனுபவமே, திரு வெங்கட் நாகராஜ் அவர்கள் எழுதிய 'ஏழு சகோதரிகள்' என நான்கு பாகங்களாக வெளிவந்த நூல் தொகுப்பு. 


வாழ்வின் அழுத்தத்திலிருந்து ஒரு சிறு விடுதலை என நாம் செய்யும் பயணங்கள் வெறும் புகைப்படங்களாகவே எஞ்ச, ஆசிரியரோ, அவற்றைத் தன் அறிதல்களோடு பயனுள்ள நூல்களாக மாற்றியிருக்கிறார். 


பொதுவாக, தாங்கள் பயணித்த இடங்களைப் பெருமையாகப் பட்டியலிடும் மக்களிடையே, தாம் இந்தியாவில் பயணிக்காத இடங்களை சிறு பட்டியலாகக் காட்டுவதிலிருந்து பயணத்தின் மீதான ஆசிரியரின் தாகம் விளங்குகிறது. 


அதிலும், பெரும்பாலோர் செல்லத் தயங்கும் 'ஏழு சகோதரிகள்' என நாம் குறிப்பிடும் வடகிழக்கு மாநிலங்களுக்குப் பதினைந்து நாட்கள் தெளிவாகத் திட்டமிட்டுச் செய்த இப்பயண அனுபவங்கள், படிக்கப் படிக்க பிரம்மாண்டமே. 


மெதுவான விடியல், மூங்கிலால் பிணைந்த வாழ்வு, முதுகில் குழந்தைகளைக் கட்டிக்கொண்டு கடை நடத்தும் மகளிர், உணவுக்காக ஒரு மணி நேரம் காக்கவைக்கும் உணவகங்கள் எனத் தொடங்கி வடகிழக்கிற்கே உரிய அதிசயங்கள் ஏராளம். 


ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம், கவரி எருது உள்ளிட்ட பல்வகை விலங்கினங்கள், தாவரங்கள் மற்றும் பல்வகை பூக்களை நேரில் கண்டு மகிழ்வதோடு, காசிரங்கா வனப் பயணம், நீர்மஹல், கொல்கொத்தா ஆலமரம் மற்றும் அருங்காட்சியகங்கள் போன்ற  அரிய அனுபவங்களும் கொட்டிக் கிடக்கின்றன. 


மோங்கி ரைசும் யோங்க்சா சட்னியும் ஏற்படுத்தும் பக்க விளைவுகள், பகோடாவிற்கான இராணுவ வீரர்களின் விளக்கம், புகைப்படம் எடுக்கையில் விலங்குகள் மற்றும் குழந்தைகளின் எண்ண ஓட்டங்கள் எனப் பல நகைச்சுவைகள் வாசிப்பைத் தொய்வின்றி சுவாரசியமாக்குகின்றன. 


நகைச்சுவைகளுக்கிடையே வரும் கொஹிமா நள்ளிரவு அலறல்கள், ஜீப்பை துரத்திய யானை, கருப்புக் கண்ணாடி ரகசியம், கொளுத்தப்படும் எரியும் மலை முன் ஓட்டம் போன்ற பல திகில் அனுபவங்கள் மெய்சிலிர்க்கச் செய்வதோடு பல எச்சரிக்கைகளையும் அளிப்பவை. 


Meitei, கோம், காசி உள்ளிட்ட  பல்வேறு இனங்கள், வைணவம், புத்தம், கிறித்தவம், இஸ்லாம் உட்பட்ட பல்வேறு மதங்கள் இணைந்த ஒரு மாபெறும் மக்களாட்சியையும் அதை பேணுவதில் உள்ள எண்ணற்ற சிக்கல்களையும் இப்பயணம் மூலம் அறிகிறோம். 


இயற்கை எழிலை புகைப்படங்களோடு ரசிப்பதோடு நில்லாமல், அவற்றோடு தொடர்புடைய கண்ணீரால் உருவான உமியம் ஏரி, தன் குழந்தையின் மாமிசத்தையே உண்டு துக்கத்தால் தற்கொலை செய்ததால் பெயர் பெற்ற ஒரு மாபெரும் அருவி, அம்மனின் சாபத்தால் அவர் கோயில் பக்கமே தலை காட்ட அஞ்சும் ஒரு அரச பரம்பறை போன்ற எண்ணற்ற  புராணக் கதைகளால் பல்வகை உணர்வுகள் வாசகர் மனதில் தோன்றுவது உறுதி. 


வண்டி ஒலிப்பானால்  கடவுளுக்கு நன்றி செலுத்துதல், உருளைகளைச் சுழற்றிப் ப்ரார்த்தனை செய்தல், மீன் துண்டை எடுத்தால் சைவம் என சொல்லுதல் போன்ற விசித்திரமான பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் அறிந்து வியக்கலாம். 


தெய்வ நம்பிக்கை இல்லாதோரும் வணங்கவேண்டிய, 'உங்களுடைய நாளைக்காக, எங்களுடைய இன்றை இழந்திருக்கிறோம்' என்ற மணிப்பூர் வாசகத்தின் உருவங்களான இராணுவ வீரர்கள் மற்றும் சேலா-நூரா சகோதரிகள் போன்ற அப்பகுதி  மக்களின் ஒப்பற்றத் தியாகங்களைச் சீன மற்றும் வங்க எல்லைகளில் கண்கூடாகக் காணலாம் என்பதையும் அறிய முடிகிறது.


வலி மிகுந்த பிரசவம் எப்படிக் குழந்தை பிறந்தவுடன் சுகமான அனுபவம் ஆகிறதோ, அதுபோல, சவாலான இப்பயணம் சுகமாக மாறி பயனளிக்கக் கையாள வேண்டிய அனைத்து முன் எச்சரிக்கைகளும் நிறைந்த கையேடு இந்நூல்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். 


வடகிழக்கு மாநிலங்களின் முக்கிய இடங்களைக் காண உரிய மாதங்கள் எவை? எவற்றைப் பார்க்க "ILP" சிறப்பு அனுமதி வாங்கவேண்டும்? எவற்றிற்காக ஆட்சியர் அனுமதி தேவை? எவற்றிற்காக ராணுவ அனுமதி தேவை? அரசாங்க ஊழியர் அல்லாதோர் சில இடங்களில் வாங்க வேண்டியச் சிறப்பு அனுமதி முறைமைகள் என அனைத்து தகவல்களும் நிறைந்தது இந்நூல் தொகுப்பு. 


பாதுகாப்புப் பிரச்சனைகள் மிகுந்த இம்மாநிலங்களில், புகைப்படம் எடுக்கக் கூடாத இடங்கள், தங்கும் இடங்களைத் தேர்ந்தெடுக்கையில் நினைவில் கொள்ளவேண்டியவை, சைவ  உணவு வேண்டுவோருக்கான பரிந்துரைகள், உறைபனியில் இயற்கை எழிலை அனுபவிக்கச் செய்யவேண்டியவை எனப் பல   முன்னெச்சரிக்கைத் தகவல்கள் நிறைந்தவை இந்நூல்கள். 


உலகின் வலிமையான ஆயுதமான அன்பால் நாடெங்கும் மனிதர்களைச் சம்பாதித்தல், குழுவாகப் பயணிக்கையில் செலவுகளைக் கையாளும் வழிமுறைகள் மற்றும் செலவு விவரங்கள் போன்ற நூலாசிரியரின் தகவல்கள் நம் ஒவ்வொரு பயணத்தின் போதும் நாம் பின்பற்ற நிச்சயமாக உதவும்.


இந்நூல் தொகுப்பில் காட்டப்பட்டுள்ள  அனைத்து இடங்களுக்கும் செல்ல இயலாதோர், அஸ்ஸாம், மேகாலயா மாநிலங்களுக்கு மட்டும்  ஒரு சிறு குடும்பப் பயணத்தை வடிவமைத்துக்கொள்ளலாம். 


இவ்வாறு வடகிழக்குப் பயணத்திற்குத் தேவையான அனைத்தும் நிறைந்த இந்நூல் தொகுப்பை பின்வரும் சுட்டியில் வாங்கி பயனடைவதோடு, மிஸ்ஸோரம் மாநிலத்திற்கும் விரைவில் ஆசிரியர் சென்று அவ்வனுபவங்கள், ஐந்தாம் பாகமாக வெளியாக வாழ்த்தலாம். 

புத்தகங்களின் சுட்டி


Venkat Nagaraj: Kindle Store


மேகாலயா மாநிலத்தின் தனிச்சிறப்புகளான தூய்மையான கிராமம், வேர்ப்பாலம், போன்றவை பற்றி அறிய திரு ஆர். சுப்ரமணியன் அவர்களின் 'மேகங்களின் ஆலயம் மேகாலயா' நூலை பின்வரும் சுட்டியில் வாசிக்கலாம். 


மேகங்களின் ஆலயம் மேகாலயா (Tamil Edition) eBook : Subramanian, R, Nagaraj, Venkat


இம்மாநிலங்களின் மற்றொரு சிறப்பான பல்வகை அசைவ உணவுகளையும், விதவிதமான நாட்டுச்சரக்குகளை ரகசியமாகச் சுவைத்த அனுபவங்களையும் வாசிக்க திரு ஆம்ஸ்ட்ராங் பிரவின் அவர்களின் 'YATHRIGAN: Samaniyan's journey into Assam - Meghalaya - Nagaland (Travel Series' நூலை பின்வரும் சுட்டியில் வாசித்து மகிழலாம்.

YATHRIGAN: Samaniyan's journey into Assam - Meghalaya - Nagaland (Travel Series Book 1) (Tamil Edition)


உலகம் முழுவதையும் நிபந்தனை இன்றி நேசிப்போம், தொற்று அகன்று அனைத்து இடங்களுக்கும் பயணிக்க உலகம் விரைவில் தன் இதயக் கதவுகளைத் திறக்கும். 


நட்புடன்,

இரா. அரவிந்த்


******


இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


20 கருத்துகள்:

  1. ஓ..  உலக சுற்றுலா தினமா இன்று...  பொருத்தமான பதிவு.  சுவாரஸ்யமான புத்தகம் பற்றி சுவையான பகிர்வு.  நன்றி அரவிந்/வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களிந் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. இன்றைய வாசகம் அருமை.
    உலக சுற்றுலா தினத்திற்கு வாசகம் பொருத்தம்.
    //பயண நினைவுகள் நிகழ்காலத்தை அழகாக்கும்.//

    அருமை.
    உங்கள் புத்தகத்தை வெகு அழகாய் விமர்சனம் செய்து இருக்கிறார் அரவிந்த அவர்கள்.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் விமர்சனமும் தங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி மேடம்.
      தங்களிந் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதி அரசு மேடம்.

      நீக்கு
  3. நூல்களை தரவிறக்கம் செய்து கொள்கிறேன்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல்களை தரவிறக்கம் செய்து படிப்பது மிக்க மகிழ்ச்சி.
      தங்களிந் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐய்யா.

      நீக்கு
  4. ஓ இன்று சுற்றுலா தினம் இல்லையா!!!

    நல்ல விமர்சனம் அரவிந்த்! வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களிந் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா மேடம்.
      உலக சுற்றுளா தினத்தை கொண்டாடுங்கள்.

      நீக்கு
  5. வாசகம் நிஜம் தான். சின்ன சின்ன பயணங்களாவது மேற்கொள்ளலாம்.

    தற்போது எங்கும் செல்ல முடியாத நிலை. விரைவில் இந்த நிலை மாறவேண்டும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலை மாற வேண்டும் என்பதே அனைவருடைய ஆசையும் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. விமர்சனம் அருமை நண்பரே...
    ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்‌

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களிந் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி KILLERGEE சார்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களிந் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.

      நீக்கு
  8. மிக சிறப்பு ...வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களிந் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நன்பரே.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவும் அருமை. இன்று உலக சுற்றுலா தினத்திற்கு பொருத்தமான பதிவாக உங்களுடைய ஏழுசகோதரிகள் என்ற பயண அனுபவ கட்டுரையை சகோதரர் திரு.அரவிந்த் அழகாக விமர்சித்துள்ளார். தெளிவான நடையுடன் சுவாரஸ்யமாக அவர் ஒவ்வொன்றாக கூறிய விதம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். தங்கள் பயண அனுபவத்தை மின்னூலாக தந்த உங்களுக்கும்,அதை அழகாக விமர்சித்த சகோதரர் திரு. அரவிந்த் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களிந் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி Kamala Hariharan மேடம்.

      நீக்கு
  10. திரு அரவிந்தனுக்கு வாழ்த்துகள். இன்று பயண நாளா. ?
    பயணங்கள் தொடரட்டும்.,
    ஏழு சகோதரிகள் பதிவில் வந்த போது படித்த நினைவு.

    உங்கள் மின்னூல் புத்தகத்துக்கு வாழ்த்துகள்.
    அழகாக விமரிசித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களிந் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....