வியாழன், 10 பிப்ரவரி, 2022

நான் பிரமீளாடா… - பேய் - (மூட) நம்பிக்கை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட மால்குடி டேஸ் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உன்னை விட உனது பிரச்சனைகள் பற்றி உன்னை படைத்தவனுக்கே நன்றாகத் தெரியும்; அவன் மீது முழு நம்பிக்கை வை; அவன் உன்னைக் காப்பான்.

 

******



படம்: இணையத்திலிருந்து...
 

"ஒழுங்கு மரியாதையா சொல்லு!!! நீ யாரு? உன் பேர் என்ன? எதுக்காக இந்த தேகத்துக்கு உள்ள வந்திருக்க? வெளில போக போறியா இல்லையா?" 

 

பத்துக்கு பத்து அறையில் இருந்த மா காளி விக்கிரகத்துக்கு முன்னால் அமர்ந்து கொண்டு, 

 

"ஓம் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணே காளிகே

க்ரீம் க்ரீம் க்ரீம் ஹும் ஹும் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா"

 

என்று இருபத்தி ஏழு முறை மா காளியின் மூலமந்திரத்தை ஜபித்த பூஜாரி தன் எதிரே உக்கிரமாக அமர்ந்திருந்த பெண்மணியிடம் மேலே உள்ள கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அந்தப் பெண்மணியின் கணவர் அறையில் ஒரு ஓரமாக கைகளைக் கூப்பியபடி உட்கார்ந்திருந்தார். தன்னுடன் இத்தனை வருடங்கள் குடும்பம் நடத்தி இரண்டு மகன்களையும் பெற்றுத்தந்த ஆசை மனைவி, சில மாதங்களாக ஏதோ பித்து பிடித்தது போல் நடந்துகொண்ட பிறகு, பல வித வைத்தியம் பார்த்தும் சரியாகாது போக யாரோ நண்பர் சொன்னார் என்று இந்த பூஜாரியிடம் மனைவியை அழைத்து வந்து இருந்தார். 

 

கவலையே படாதீங்க எவ்வளவு கொடுமையான பேயாக இருந்தாலும் நம்ம பூஜாரி அந்தப் பேயை ஒரு வழி செய்து ஓடி விடுவார் என்று நண்பர் கொடுத்த தைரியத்தில் மனைவியை அங்கே அழைத்து வந்திருந்தார் அந்த நபர். சில மாதங்களாகவே அவரது மனைவி ஏதேதோ பேசுவதும் அவ்வப்போது சிரிப்பதும் தலை முடியை விரித்துப் போட்டுக்கொண்டு ஆங்காரமாக கத்துவதும் தரையில் தட்டுவதும் என செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் பயமுறுத்துவதாக இருந்தன. பல மருத்துவர்களை பார்த்து மருந்துகளை எடுத்துக் கொண்டாலும் அவரது மனைவிக்கு உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

 

”2100 ரூபாய் இருந்தால் போதும் பூசாரியிடம் சென்று பூஜை செய்து உன் மனைவி மீது பிடித்திருக்கும் பேயை ஓட்டி விடலாம் என்று நண்பர் சொல்ல, தில்லியில் உள்ள ஜனக்புரி பகுதியில் உள்ள பூஜாரியின் வீட்டில் உள்ள பூஜை அறைக்கு மனைவியை அழைத்து வந்து பிரச்சனையை சொல்ல, பூஜாரி கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். 

 

நான் ப்ரமீளாடா…  இவளோட உடம்புக்குள்ள இருக்க ஆத்மா எனக்கு வேணும்.  அது இல்லாம நான் இங்கேயிருந்து போக மாட்டேன்! உன்னோட மந்திரத்தால என்னை கட்டிப் போடாத! என்னை விடு! இவ உயிரை எடுக்க விடு!

 

எதுக்காக இந்த ஆத்மா உனக்கு வேணும்?  உன்னை யாரு ஏவி விட்டா சொல்லு?

 

என்னை ஏவி விட்டது ஊர்மிளா…  மூணு வருஷமா இவ உடம்புல தான் இருக்கேன்! இந்த ஆத்மா இல்லாம என்னால போக முடியாது! என்னைக் கட்டாத! என்னை விடு!

 

உன் கட்ட நான் விலக்க மாட்டேன்! ஒழுங்கா இவளை விட்டு போ! என்று ஓங்காரக் குரலில் பூஜாரி சொல்லியபடியே அந்தப் பெண்மணி மீது குங்குமத்தை ஊதிவிட, அவர் மயக்கமானார்! 

 

கவலையோடு அமர்ந்து கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் கணவரிடம் பூஜாரி சொன்னார் -கவலைப்படாதீங்க! உங்க மனைவியைப் பிடித்திருக்கும் ஆவியை நான் கட்டிவிட்டேன். அந்த ஆவியால உங்க மனைவிக்கு ஒரு பிரச்சனையும் வராது! அப்படியே ஏதாவது பிரச்சனை வந்தா, எனக்கு உடனே ஃபோன் பண்ணுங்க! நான் இங்கேயிருந்தே பூஜை செய்து அந்த ஆவியை அடக்கறேன்!  சீக்கிரமாகவே உங்க மனைவி பூரண குணமடைந்து விடுவார்!

 

பூஜை முடிந்து சில நாட்கள் ஆகிவிட்டன.  அவ்வப்போது அந்த நபரின் மனைவி ஏதோ பிரச்சனைகளில் மூழ்க, பூஜாரியை அலைபேசியில் அழைப்பதும், அவர் மந்திரிப்பதும் தொடர்ந்தது!  ஆனாலும் ப்ரமீளா இன்னும் விட்டு விலகியபாடில்லை!  2100/- ரூபாய் கொடுத்தது தான் மிச்சம்.  அதிகமாக பிரச்சனைகள் உண்டாக அந்தப் பெண்மணி இப்போது மருத்துவமனையில்!  

 

நிச்சயம் பூஜாரி தன் மனைவியை குணப்படுத்திவிடுவார் என நம்பி, கடன் வாங்கி பூஜாரிக்கு 2100 ரூபாய் கொடுத்த அந்த மனிதர் இப்போது மருத்துவமனை செலவுக்கு என்ன செய்வது என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.  யாராவது பணம் கொடுக்க மாட்டாங்களா? என்று கவலையுடன் கேட்கும் அந்த நபருக்கு என்ன பதில் சொல்ல?

 

பின்குறிப்பு:  தனது பிரச்சனையை என்னிடம் சொன்னது ஒரு உழைப்பாளி.  மாலை நேரங்களில் அவரது ஆட்டோவில் தான் நான் பயணிப்பது வழக்கம்.  என்ன சொல்லி அவரைத் தேற்றுவது என எனக்கும் புரியவில்லை ! 

 

*****

 

இந்நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

20 கருத்துகள்:

  1. ஓவர் ஸ்ட்ரெஸ்ஸினால் உண்டாகும் மனக்குழப்ப நோய்!  என் நெருங்கிய உறவில் கூட ஒருவருக்கு இருந்திருக்கிறது.  சரியான சிகிச்சை அளித்தால் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிவிடும்.  பாவம் அந்த உழைப்பாளி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனக்குழப்பம் நோய்..... அப்படித்தான் எனக்கும் தோன்றியது. அந்த உழைப்பாளியின் நிலமை கடினம் தான் ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. மூட நம்பிக்கை எனும் பேய் விரட்டுவது அவரவர் கையில் (மனதில்) உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேய் விரட்டுவது அவரவர் கையில்/மனதில் - உண்மை தான் தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. இவ்வாறான நிலையை வைத்துக்கொண்டு பலர் சம்பாதித்துவிடுகின்றனர். வேதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணம் சம்பாதிப்பதற்கு இதையும் ஒரு வழியாக பயன்படுத்தும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேதனையான நிதர்சனம் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. எளியவர்களுக்கு இந்த மாதிரிப் பிரச்சனைகள் வருவது மனதைப் பாதிக்கிறது. பாவம் அவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரது நிலை வேதனையானது தான் நெல்லைத் தமிழன். அவர் சொல்லும்போதே அவரை எப்படி, என்ன சொல்லி தேற்றுவது என்பது எனக்குப் புரியவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. இன்று பல ஊர்களில் இதுதான் நடக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கேயும் இப்படி நடக்கத்தான் செய்கிறது கில்லர்ஜி. எல்லா ஊர்களிலும் ஏமாற்றுபவர்களும், ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செகிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. வெங்கட்ஜி அட! இதை வைத்து நீங்கள் ஒரு அழகான அமானுஷ்ய த்ரில்லர் கதையை எழுதியிருக்கலாமெ. உங்களால் கண்டிப்பாக முடியும்.

    இப்படிப் பலரும் ஏமாறுகிறார்கள் ஜி. இது கண்டிப்பாக ஒரு வித மன நோய். சரியான மருத்துவரைப் பார்த்து கரெக்ட்டான மருத்துவ சிகிச்சை அளித்தால் கண்டிப்பாக அப்பெண்மணி குணமாகிவிடுவார். உங்களிடம் சொன்ன அந்த உழைப்பாளி பாவம். ஏற்கனவே நிறைய செலவழித்திருக்கிறார். இவரது பிரச்சனையைத் தீர்க்க தனியாருக்குச் சென்றால் இன்னும் செலவாகும். அரசு மருத்துவமனையில் இப்பிரச்சனையைப் புரிந்துகொண்டு அவரது பாவப்பட்ட நிலையையும் புரிந்து கொள்ளும் மருத்துவர் இருந்தால் அங்கு சிகிச்சை பெறலாம்.

    மனது கஷ்டமாக இருக்கிறது. மனநலம் குறித்து நிறைய விழிப்புணர்வு மக்களிடையே தேவைப்படுகிறது. ஆனால் அது இல்லை என்பது மனதிற்கு மிகவும் வருத்தமான விஷயம். பலருக்கும் மன நலம் குறித்து சட்டென அறிந்துகொள்ள முடியவில்லை.

    முடிந்தால் இதை அப்படியே தொடர்ந்து முடிவை (கொஞ்சம் கூகுளில் ஆராய வேண்டும் மருத்துவம் பற்றி எழுத ) மருத்துவர் எப்படிக் குணப்படுத்துகிறார் என்று நீங்கள் ஒரு நெடுங்கதை எழுதலாம் ஜி. அஃப்கோர்ஸ் உங்களுக்கு நேரம் இருந்தால்!! உங்களால் எழுத முடியும். ஆனால் நேரம் வேண்டும் தான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு அமானுஷ்ய திரில்லர் கதையாக எழுதி இருக்கலாம் என்ற உங்களது கருத்துரை கண்டு மனம் மகிழ்ந்தது கீதா ஜி. தொடர்ந்து நீங்கள் தரும் ஊக்கம் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி. வரவர பதிவுகள் எழுதுவதற்கு நேரம் சரியாக அமைவதில்லை. ஆனாலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

      நீக்கு
  7. இன்றைய வாசகம் மிக அருமை.
    படைத்தவனுக்கு நங்கு தெரியும் தான், அவன் நம்மை வழி நடத்துவான்.

    மனக்குழப்பத்திற்கு காரணம் அறிந்து அதை சரி செய்யாவிட்டால் இப்படி கைபொருளை அன்பு துணையை இழக்க நேரிடும். எளியவர்களை வலியவர்கள் நன்றாக ஏமாற்றி பிழைக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வாசகம் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. சில எளியவர்களை வலியவர்கள் நன்றாக ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பது உண்மைதான். நம்மால் அதை தடுக்கவும் முடிவதில்லை என்பதும் வேதனையான உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவு மனதை கஸ்டப்படுத்தியது. ஒரு நோய்க்கு அது இன்னதென்று புரியாத நிலையில் பல வித வைத்தியங்கள் செய்வதில் உள்ள சிரமங்களை நானும் கண்டுள்ளேன். அதிலும் அவர் பணத்தட்டுப்பாட்டில் இருப்பவர். அவர் மனைவி நன்கு குணம் பெற வேண்டுமென நான் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். நம் பிரார்த்தனைகளுக்கு பலன் நிச்சயமாக இருக்கும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. இன்றைய பதிவு மற்றும் வாசகம் குறித்த தங்களது கருத்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி. கதை மாந்தரின் மனைவி விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்பதை நம் அனைவரின் எண்ணமும் கூட. நல்லது நடக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. வாசகம் அருமை

    இது மனச் சிக்கல் தான். சரியாக அறிந்து சிகிச்சை கொடுத்தால் சரியாகிவிடும் ஆனால் மருத்துவரின் ஆலோசனைகளைப் புரிந்துகொள்ளும் மக்களாக இருக்க வேண்டும். படித்தவர்களுக்கே உளச்சிக்கல் பற்றி புரிந்து கொள்ள சிரமம் எனும் போது இப்படியான எளிய மக்கள் பாவம். மூடநம்பிக்கைகளைச் சார்ந்திருக்கிறார்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான மருத்துவ உதவி கிடைத்தால் நலம் பெற முடியும் என்பதை அந்த கதைமாந்தரால் புரிந்து கொள்ள முடியவில்லை. விரைவில் அவரது மனைவி குணம் பெற வேண்டும் என்பதை எனது பிரார்த்தனையும் துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. இந்தக் காலத்திலும் பேயோட்டுவதை நம்பும் மனிதர்கள் அய்யோ ...பாவம் .
    அவர் செலவழித்த பணம் தகுந்த வைத்தியங்கள் இருக்கும்போது ஏமாந்து போய்விட்டார்கள் என்ற பரிதாயம்தான் வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விஷயங்களை நாம் மாற்ற முடிவதில்லை. பணம் இல்லாமல் அவர் கஷ்டப்படும்போது உதவுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....