புதன், 9 பிப்ரவரி, 2022

மால்குடி டேஸ்…. - மலையாள சினிமா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட முகநூல் இற்றைகள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நாம் நமது தேவைகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறோமே தவிர, நமது திறன்களைப் பற்றி ஒரு போதும் சிந்திப்பதில்லை - மாவீரன் நெப்போலியன்.

 

******



 

மால்குடி டேஸ் என்று படித்தவுடனேயே உங்களுக்கு திரு ஆர் கே நாராயண் அவர்களின் பிரபலமான புத்தகமும் அதில் வரும் கதாபாத்திரங்களும் நினைவுக்கு வரலாம். முந்தைய தலைமுறையினர் பலரும் படித்து ரசித்த ஒரு புத்தகம் மால்குடி டேஸ். புத்தகமாக படிக்காது போனாலும் தொலைக்காட்சிகளில் தொடராக பார்த்து ரசித்தவர்களும் ஏராளம். என்னைப் போன்று இரண்டையும் செய்தவர்களும் கணக்கிலடங்காதவர்கள். என்றைக்கும் ரசிக்க முடியும் ஒரு சிறந்த ஆக்கம் இந்த மால்குடி டேஸ்.. சரி இன்றைக்கு நாம் பார்க்கப் போவது பற்றி சொல்லி விடுகிறேன் - இதுவும் மால்குடி டேஸ் பற்றியதுதான் ஆனால் புத்தகம் அல்ல

 

பொதுவாக சினிமா பார்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை. பத்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இருக்கும் காணொளிகள் பார்க்க அலுப்பு தட்டி விடுகிறது. அதனால் பெரும்பாலும் சின்னச் சின்ன விளம்பரங்கள், குறும்படங்கள், தகவல் கோப்புகள் போன்றவற்றையே தேடித்தேடி பார்ப்பது வழக்கம். அப்படி பார்க்கும் போது ஒன்றரை இரண்டு மணி நேரம் கூட காணொளிகள் பார்ப்பதுண்டு. இரண்டு மணி நேரம் சினிமா பார்ப்பதற்கு பொறுமை இல்லாத நான் அதே இரண்டு மணி நேரம் கிடைத்தால் பல விஷயங்களைச் சொல்லும்  பல காணொளிகளை பார்த்து விடுவேன். ஒரு சில நாட்கள் இதிலிருந்து விட்டு விலகுவதும் உண்டு. 

 

சமீபத்தில் ஒரு மலையாள சினிமா குறித்த அறிமுகம் பார்த்து யூட்யூபில் அந்த சினிமா இருக்கிறதா என தேடிப் பார்க்கும்போது வேறு ஒரு மலையாளப் படத்திற்கான சுட்டி பார்த்தேன். அந்த படம் குறித்து, அதில் காண்பித்து இருக்கும் இடம் குறித்து நிறைய நேர்மறை விமர்சனங்கள் இருக்க, "தேடிய படம் இல்லாவிட்டால் என்ன? கிடைத்த படத்தை பார்க்கலாம்" என பார்க்கத் தொடங்கினேன். அப்படி பார்த்த படம் தான் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த மால்குடி டேஸ் எனும் திரைப்படம். கதாபாத்திரங்கள் அதிக அளவில் இல்லாமல் சிலரைக் கொண்டு படம் முழுவதும் நகர்த்தி விடுவதில் மலையாள சினிமா கலைஞர்கள் வல்லவர்கள். இந்தத் திரைப்படத்திலும் கூட அப்படித்தான்.

 

God's own country என பெருமையாகச் சொல்லிக் கொள்ளும் கேரளாவின் இடுக்கி பகுதியில் உள்ள ஒரு மலை பிரதேசத்தில் இருக்கும் boarding school. அங்கே படிக்கும் அதீனா மற்றும் மிலன் ஆகிய இரு சிறுவர்கள். அதீனாவுக்கு அம்மா மட்டும், மிலனுக்கோ அப்பா மட்டும்! இருவரும் சந்திக்கும் முதல் சந்திப்பே மிக அழகாய் காட்சிப்படுத்தியிருக்கிறார். இருவருக்கும் பெரிதாக நட்பு வட்டம் இல்லை - வேறு ஒருவருடனும் நட்பு பாராட்டாத அதீனாவும் மிலனும்  நட்பு கொள்கிறார்கள். ஒரே வகுப்பு, பள்ளி முடிந்த பின்னும் எப்போதும் ஒன்றாக இருக்கிறார்கள்.

 

அந்தப் பள்ளியின் பின்னே இருக்கும் காட்டுப்பகுதியில், காலில் குண்டடிபட்டு இருக்கும் ஒரு மனிதரை காண்கிறாள் அதீனா. காவல் துறையிலிருந்து தப்பித்துக் கொண்டு இருக்கும் ஒரு சூழ்நிலைக் கைதியாக அந்த கதாப்பாத்திரம் (அனூப் குமார்). அதீனாவும் மிலனும் அவருக்கு அவ்வப்போது தண்ணீரும் உணவும் கொண்டு தருகிறார்கள் -  மற்றவர்களுக்கு தெரியாத படி! குழந்தைகளுக்கு அவர் மீது பாசமும் வளர்கிறது. அந்த நபரின் கதை என்ன, அவரை ஏன் காவல்துறை துரத்துகிறது போன்ற விஷயங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்பவர்களுக்கு சொல்கிறார்கள். அழகான வாழ்க்கை வாழ்ந்த அந்த நபர் ஒரு ஓவியர், உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட சம்பவங்களை பார்க்கப் பார்க்க மனதில் நமக்கும் வலி. 

 

இதற்கிடையே, ஒரு சமயம் பள்ளியில் விடுமுறை. குழந்தைகள்  எல்லோரையும் பெற்றோரிடம் ஒப்படைக்க பேருந்துகளில் அழைத்துச் செல்லும் சமயத்தில், அதீனாவும், மிலனும் மட்டும் தவறுதலாக உள்ளேயே தங்கிவிட பள்ளியில் உள்ளே வைத்து பூட்டி விடுகிறார்கள். பாதுகாப்பிற்கு இருந்த இருவரும் வெளியே சுற்றச் சென்றுவிட குழந்தைகள் உள்ளே தவிக்கிறார்கள். எவ்வளவு கதறினாலும் அவர்களை காப்பாற்ற யாரும் இல்லை. மலையடிவாரத்தில் அனைத்து குழந்தைகளும் அவரவர் பெற்றோரிடத்தில் சேர இந்த இரு குழந்தைகளுக்கான காத்திருக்கும் அப்பா அம்மாவிற்கு அதிர்ச்சி. பேருந்தில் குழந்தைகள் ஏறிக்கொண்டதை உறுதி செய்யும் ஆசிரியர், அவர்கள் இருவரும் இறங்கும்போது இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

 

பிறகு என்ன நடந்தது? குழந்தைகள் தப்பித்தார்களா? காவல் துறையினர் தேடும் நபர் என்னவானார், போன்ற பல விஷயங்களை படம் பார்த்து நீங்களும் தெரிந்து கொள்ளலாம். அற்புதமான படம். கேரளாவின் இடுக்கி பகுதியை மிக அழகாக படம்பிடித்து காண்பித்திருக்கிறார்கள். கூடவே படம் சொல்லும் விஷயமும் சிறப்பான ஒன்று. எதார்த்தம் சொல்லும் படம். படம் மிகவும் பிடித்திருந்தது என்று சொன்னாலும் ஒரே ஒரு விஷயம் மட்டும் எனக்கு பிடிக்கவில்லை - அது என்ன என்றால் படத்தில் ஒரு கதாபாத்திரத்தை தமிழராக காண்பித்திருப்பது..  வேற்று மாநிலத்தவரை இப்படிக் காண்பிப்பது நமது தமிழ்  சினிமாக்களிலும் உண்டு என்றாலும் இப்படிச் செய்வது தவறுதான். நல்ல சினிமா எடுக்கும்போது இப்படிக் காண்பித்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றே தோன்றுகிறது. 

 

முழுக்கதையையும் இங்கேயே சொல்லிவிட்டால் உங்களுக்கு என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது? அதனால் நீங்களே பார்த்து ரசிக்கலாமே. யூட்யூபில் இந்த படம் இருக்கிறது மால்குடி டேஸ் மலையாளம் என்று தேடிப்பார்த்து, படத்தினை பார்த்து ரசிக்கலாமே.

 

*****

 

இந்நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

20 கருத்துகள்:

  1. முகநூலிலும் படித்தேன்.  நீங்கள் ஒரு முழு படம் பார்த்தது ஆச்சர்யம்.  கதை சுவாரஸ்யமாக இருக்கிறது.  நேரம் கிடைக்கும்போது பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கே ஆச்சரியமாகவே இருக்கிறது ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. முடிந்தபோது பாருங்கள் தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. முகநூலிலும் படிச்சேன். இந்தப் படம் பார்க்கணும்னு எண்ணம் இருக்கு. இயன்றபோது பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நாட்கள் முன்னர் முகநூலில் வெளியிட்டதுதான் கீதாம்மா. முடிந்தபோது பாருங்கள். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. அட! வெங்கட்ஜி படம் பாத்தீங்களா...

    ஆமாம் ஆர் கே அவர்களின் மால்குடி டேய்ஸ் மறக்கமுடியாத ஒன்று.

    கதை நன்றாக இருக்கிறது. இதே போன்று தமிழில் வந்ததோ என்று யோசிக்க வைக்கிறது.

    எந்தப் படமானாலும் பிற மாநிலத்தவரை மோசமாகக் காட்டுவது ஏற்க முடியாத ஒன்று.

    நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன் ஜி. இடுக்குப் பகுதிக்காகவும் பார்க்கலாம் அழகான பிரதேசம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா..... ஆமாம் கீதா ஜி படம் பார்த்தேன். நீங்களும் இயன்றபோது பாருங்கள். உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. தாங்கள் விமர்சித்திருக்கும் மலையாள படம் கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறது. எங்கள் வீட்டில் என் குழந்தைகள் பார்த்திருப்பார்கள் என நினைக்கிறேன். நான் இதுவரை பார்க்கவில்லை. கதை நன்றாக உள்ளது. நேரம் கிடைக்கும் போது பார்க்க வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. சில வருடங்கள் முன்னர் வந்ததால் நீங்களும் கேள்விப்பட்டு இருக்கலாம். நேரம் கிடைக்கும்போது பாருங்களேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. அன்பின் வெங்கட்,
    நலமுடன் இருங்கள்.

    அடேடே. நீங்கள் ஒரு இடத்தில் இருந்து
    படம் பார்த்தது மிக அதிசயம்:)
    ஆனால் அருமையான விமர்சனம் கொடுத்து
    இருக்கிறீர்கள்.

    மிக சுவாரஸ்யமாக இருக்கிறது. படம் நன்றாக
    இருக்கும் போலத் தெரிகிறது.
    கேரளாக்காரர்களுக்குத் தமிழன் என்றால்
    கொஞ்சம் இதுதான்.

    நாம் வட இந்தியர்களைச் சொல்வது போல.:))

    படம் பார்க்க வைத்துவிட்டீர்கள்.
    பார்க்கக் காத்திருக்கிறேன்.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒரு இடத்தில் பொறுமையாக அமர்ந்து படம் பார்த்தது அதிசயம்தான் வல்லிம்மா. அடுத்த மாநிலத்தவரை இப்படி கிண்டல் செய்யும்படி அமைக்கும் காட்சிகள் யார் செய்தாலும் சரியல்ல. இந்தப் படம் முடிந்தபோது நீங்களும் பாருங்களேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது.

    மால்குடி டேஸ் புத்தகமாகவும் படமாகவும் பார்த்து ரசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பாருங்கள் மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. மாகுடி டேய்ஸ் படம் பார்த்திருக்கிறேன். பாலக்காட்டில் இருந்த போது வந்த படம். நல்ல படம். பிடித்திருந்தது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த திரைப்படத்தினை நீங்கள் பார்த்திருப்பது அறிந்து மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சார்.
    நான் ஆங்கில இலக்கியம் படிக்கும்போது முதலில் படித்த நாவல் இந்த ஆர். கே. நாராயனன் அவர்களின் புதினம்.
    சுவாரசியமாக இருந்தது.
    மால்குடி டேய்ஸ் திரைப்படம் விரைவில் பார்க்கிறேன்.
    திரு பரிவை சே. குமார் அவர்களின் "சேர நாட்டு திரைப்படங்கள்" என்னும் நூல் கிண்டிலில் இருக்கிறது.
    அதில் 28 மளையாளப் படங்களை அறிமுகம் செய்துள்ளார்.
    அவற்றுள் பல படங்கள் சிறப்பானவை.
    அந்நூலிலிருந்தும் நீங்கள் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அரவிந்த். நண்பர் குமார் அவர்களின் இந்த மின்னூலை நானும் தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். படிக்க வேண்டும். அவரது வலைப்பூவிலும் நிறைய மலையாள திரைப்படங்களின் அறிமுகங்கள் உண்டு. வலைப்பூவில் வெளியிட்டபோது படித்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டும் விமர்சனம்.
    நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் கிடைக்கும்போது இந்த திரைப்படத்தினை பார்த்து ரசிக்கலாம் கோமதிம்மா. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....