வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

கதம்பம் - Bப்ரெட் ஹல்வா - அன்பர் தினம் - தற்கொலை - விழுதுகள்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட மயிலங்கி மங்கையின் மரகதப்பெட்டி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

தேவையற்ற பொருட்களை நீ வாங்கி கொண்டே இருந்தால். விரைவில் தேவையான பொருட்களை விற்க நேரிடும் - வாரன் பஃபெட்.

 

******

 

Bப்ரெட் ஹல்வா



 

வாங்கிய ரொட்டித் துண்டங்களில் நான்கு மீதமிருந்தது. அதை வைத்து ஏதாவது செய்து பார்க்கலாமே! திருமணமான புதிதில்  'அவர்' எனக்காக டெல்லி ஆந்திரா பவனில் வாங்கித் தந்த 'டபுள் கா மீட்டா' செய்யலாம் என நினைத்து இணையத்தில் தேடிய போது அந்த ரெசிபி கிடைத்தது! 

 

இந்த நான்கு துண்டங்களுக்காக சர்க்கரை சிரப்பெல்லாம் வைக்கணுமா! சரி! இன்னொரு நாள்  பண்ணிக்கலாம்! என்று அந்த எண்ணத்தை விட்டுட்டு ப்ரெட்டை அல்வாவாக்கி விட்டேன்...🙂 

 

செய்முறை:

 

ப்ரெட் துண்டங்களை நெய்யில் வறுத்துக் கொண்டு, அதனுடன் தேவையான அளவு பால் சேர்க்கவும். ப்ரெட் துண்டங்கள் பாலை ஈர்த்துக் கொண்டு மசியத் துவங்கியதும் இனிப்புக்கு தகுந்தாற் போல் சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கரைந்து கொதிக்கத் துவங்கும் சமயம் நெய் சேர்க்கவும். இதில் ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை போன்றவற்றை சேர்ப்பது நம் விருப்பம். இந்தக் கலவையை சுருளக் கிளறி இறக்கவும். பத்தே நிமிடங்களில் சுவையான ப்ரெட் அல்வா தயார்.

 

பின் குறிப்பு - இந்த ரெசிபியை அளவெல்லாம் வைத்து பண்ணலை.  கண் திட்டத்தில் செய்தது தான்!

 

******

 

அன்பர் தினம் - 14 ஃபிப்ரவரி:

 

அன்பின் வெளிப்பாடு!

கடற்கரையிலும் திரையரங்கிலும்

கரங்கள் கோர்த்து

வலம் வந்து

அன்பை வெளிப்படுத்தும்

இந்நாளில்!

அக்னி சாட்சியாய்

கரங்கள் கோர்த்து

வலம் வந்ததால்

அன்பை பொக்கிஷமாய்

பத்திரப்படுத்துகிறோம்!

என்னை நீயும்

உன்னை நானும் 

வலம் வந்து

அன்பு சூழ் உலகை

அழகாக்குகிறோம்!

 

******

 

தற்கொலை: 


காலையில் இன்றைய நாளிதழைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு செய்தி கண்ணில் பட்டு திடுக்கிடச் செய்தது! பதினோராம் வகுப்பு மாணவி ஒருவர் ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார் என அந்தச் செய்தி இருந்தது! 

 

பரீட்சைக்கு படிக்காமல் போனதால் மதிப்பெண் குறைவாக எடுத்திருக்கிறார் அந்த மாணவி. அவரை ஆசிரியர் கடுமையாக திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதற்கு பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது தெரியவில்லை!

 

பொதுவாகவே இந்நாளைய டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு சிறு தோல்வியை தாங்கும் சக்தி கூட இருப்பதில்லை என்றே சொல்லலாம்! இந்தச் செய்தியை படித்தவுடன் சிறுபிராயத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் தான் நினைவுக்கு வந்தது. மகளிடம் அந்த சம்பவத்தைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்.

 

அப்போது கணக்கு பரீட்சையில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்திருந்ததால் என்னுடைய விடைத்தாளை என் சீருடையின் பின்புறம் பின் செய்து விட்டு பள்ளியில் உள்ள எல்லா வகுப்பறையிலும் என் மதிப்பெண்களை காண்பித்து வரச் சொன்னார் அந்த ஆசிரியர்! அழுது கொண்டே நானும் என் மதிப்பெண்களை எல்லாரிடமும் காண்பித்து விட்டு வந்தேன்!

 

இந்த சம்பவம் அன்றைய நாளோடு முடிந்து விட்டது! இதற்காக என் பெற்றோர் அந்த ஆசிரியரிடம் சண்டைக்கும் போகவில்லை! நானும் எந்த ஆர்பாட்டமும் செய்யவில்லை! அடுத்த பரீட்சையில் நான் தான் வகுப்பில் முதல் மதிப்பெண்!

 

இது போன்று கல்லூரி நாட்களிலும் சில சம்பவங்கள் மனதை மிகவும் வருத்தியது! கல்லூரிப் படிப்பை விட்டுடலாமா என்று பல முறை நினைத்ததுண்டு! ஆனாலும் எல்லாவற்றையும் கடந்து தான் வந்தேன்! அதைப் பற்றியெல்லாம்  'கல்லூரி நாட்கள்' தொடரில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

 

தோல்விகள், அவமானங்கள், திட்டுக்கள் என்று எல்லாவற்றையும் கடந்து வந்ததால் தான் இங்கே எழுதிக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையுமே ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டால் பக்குவமடைய உதவிகரமாக அமையும் என்பது என் எண்ணம்! எதுவும் நிரந்தரமானது அல்ல! அந்த நிமிடத்தில் ஏற்படும் மனக் குழப்பமே விபரீத முடிவுகளை எடுக்க வைக்கிறது! எல்லாவற்றையும் கடந்து உயிரோடு இருப்பது தானே மனுஷ லட்சணம்!

 

******

 

கோமதி பாட்டியின் விழுதுகள்: 

 

வாட்ஸப் என்றாலே பலதரப்பட்ட குழுமங்களும், அதில் அள்ள அள்ள குறையாத Forward மெசேஜ்களும் என மனதில் பதிந்து போனதால் அதில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதே இல்லை..🙂 சட்டென ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள மட்டும் தான் அதை உபயோகித்து வருகிறேன். ஆனால்!!!

 

நேற்றைய பொழுது வாட்ஸப்போடு எனக்கு ஏற்பட்ட பிணைப்பு போல் என்றும் நிகழ்ந்ததில்லை! வீட்டை சுத்தம் செய்த போது கிடைத்த பொக்கிஷமாக அப்பா அம்மாவின் திருமண நிகழ்வை நினைவூட்டும் புகைப்படங்கள்! கறுப்பு வெள்ளையில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை விட சற்றே பெரிதாக இருந்த புகைப்படங்கள் அவை!

 

அவற்றை புகைப்படமெடுத்து உறவுகளிடம் பகிர்ந்து கொண்டதில் அவர்கள் அனைவருக்கும் மனம் கொள்ளா மகிழ்ச்சி! அப்படி உரையாட ஆரம்பித்து அது ஒரு குழுமத்தை உருவாக்கவும் வித்திட்டது!

 

சமீபத்தில் எங்கள் குடும்ப மரம் உருவாக்கினதைப் பற்றி இங்கு பகிர்ந்து கொண்டிருந்தது நினைவிருக்கலாம். அதற்கு மற்றுமொரு வடிவமாக இந்த வாட்ஸப் குழுமம் உருவாகியுள்ளது. அந்த மரத்திலுள்ள கிளைகளை இங்கு ஒன்றாக சேர்த்துக் கொண்டேன்.

 

குழுமம் துவங்கியதுமே அதைப் பற்றி ஒரு அழகான கவிதை என் மாமிக்கு தோன்றிட அதை அங்கு பகிர்ந்து கொண்டார்! அடுத்து என் பாட்டியைப் பற்றி மாமன் மகளுக்கு தோன்றிய வரிகளை அவள் எழுதிட, அவரவரிடத்தில் உள்ள புகைப்படங்கள் இங்கு பகிரப்பட, அதைப் பற்றிய உரையாடல்கள் என  இப்படி தனித்திறமைகளும், சந்தோஷங்களும், நினைவுகளும் மட்டுமே பகிர்ந்து கொள்ள ஒரு அழகான குழுமம் உருவானது.

 

இந்தக் குழுமத்தை தொடர்ந்து நல்லவிதமாக செயல்பட்டு பெரியவர்களிடத்தில் இளைய தலைமுறை கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களும், இளையோரிடம் பெரியவர்கள் கண்டு வியப்படைய வேண்டிய விஷயங்களுமாக இனிதே செயல்பட வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

 

உறவுகளை நேரில் சந்தித்தால் தான் என்றில்லை! இப்படியான குழுமங்கள் மூலமாகவும் ஆரோக்கியமான உறவை பலப்படுத்திக் கொள்ளலாம்! 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

  1. அன்பர் தின கவிதை உட்பட அனைத்தும் நன்று.  ப்ரெட்டில் நிறத்துக்கு நிறமி சேர்த்தீர்களோ..  குடும்பக்குழும கொண்டாட்டங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருமை. இதை எல்லாமும் முகநூலிலும் படிச்சிருக்கேன். பகிர்வுக்கு நன்றி. இம்மாதிரிக் குழுமங்கள் எங்கள் உறவுகளிடையேயும் ஏற்படுத்திக் கொண்டு வாட்சப் மூலம் தொடர்பில் இருக்கோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த கருத்துரை கண்டு மகிழ்ச்சி. இங்கேயும் முகநூலிலும் படித்தமைக்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. ப்ரெட் ஹல்வா பார்க்கவே ஆசையாக இருக்கிறது.

    ஆம் இன்றைய இளைய தலைமுறைகளின் மனப்போக்கு கஷ்டம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்ரெட் ஹல்வா - சாப்பிடலாம் கில்லர்ஜி.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அன்பின் ஆதி, முதலில் வாய்க்கு ருசி(பிரெட் ஆல்வா)...பின் மனதிற்கு ருசியாய் அழகான கவிதை! தற்கொலைகள் பெருகி வருவது வருத்தமே. "great city is a great solitude " என்பார்கள். குழம்பிடும், கவலைகள் மிகும் பொழுதுகளில் நல்ல நண்பர்கள் கிடைத்தால் போதும். அனைத்தும் சரியாகும். பெற்றோரும் பிள்ளைகளுக்கு கஷ்டங்கள் தெரியவே வளர்க்க வேண்டும்.தாங்கள் வாழ்ந்த வாழ்வைப் பற்றி பேசிடவும் வேண்டும். நம் பிள்ளைகளுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி அவர்கள் பேச்சினை கேட்க வேண்டும். நல்லதொரு பதிவிற்கு நன்றி ஆதி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி காயத்ரி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  5. தற்கொலை ஒரு நொடி பைத்தியக்கார எண்ணம்... ஆனால் புரிதல் வேண்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நொடி பைத்தியக்காரத் தனம் - உண்மை தான் தனபாலன். பிறகு வேதனை படப்போவது அவர்கள் குடும்பத்தினர் என்பதை யோசிப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. முதலில் வாசகம் அருமை உண்மை...

    ஆதி, உங்கள் ஸ்கர்ட்டில் குத்தியது போல எனக்குப் பல முறை நடந்திருக்கிறது ஆனால் வேறு விதத்தில். படிப்பில் குறிப்பாகக் கணக்கில் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப வீக்.

    தற்கொலை மிக மிக கோழைத்தனமான முடிவு. இப்போதைய குழந்தைகளின் மனது ரொம்ப வீக்காக இருக்கிறது என்றே தோன்றுகிறது. பெற்றோரின் கவனம் மிகத் தேவை.
    ஒன்று நம் காலம் வேறு இப்போதைய காலம் வேறு. சூழலும் வேறு.

    ப்ரெட் ஹல்வா வாவ் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. யம்மி!!!! இங்க கொஞ்சம் தள்ளி விடுங்க...
    ஒரு சின்ன டிப்ஸ். அடுத்த முறை செய்யும் போது அல்லது செய்ய நேர்ந்தால் கொஞ்சம் மில்க் பௌடர் அல்லது பாக் கோவா சேர்த்துச் செஞ்சு பாருங்க. அதுக்கு ஏற்றாற் போல ஜீனி/வெல்லம்

    அன்பர் தினம் கவிதை நல்லாருக்கு

    வாட்சப் குடும்பக் குழுமம்...நல்ல விஷயம். நல்ல விஷயங்களுக்காக வாட்சப் உதவுகிறதுதான். நானும் வாட்சப்பில் ஏதேனும் யாருக்கேனும் சொல்ல வேண்டும், அல்லது விசாரிக்க வேண்டும் என்றால் மட்டும்தான் பயன்படுத்துகிறேன். ஏதேனும் என் அலைவரிசியில் இருப்பவர் என்றால் நான் ரசிப்பதை பகிர்வதுண்டு.

    எல்லாம் ரசித்தேன் ஆதி.

    கீதா






    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த விரிவான கருத்துரைக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
    2. மிக சமீபத்தில் தான் மூன்றாம் வகுப்புப் படிக்கையில் ஆசிரியர் என்னைப் படுத்தியதையும் அறையில் தனியாக வைத்துப் பூட்டியதையும் குறிப்பிட்டிருந்தேன். ஆதி எழுதி இருந்ததைப் படிக்கையில் இந்த நினைவுகள் தான் வந்தன. இப்போதும் தி/கீதா சொல்லி இருப்பதைப் பார்த்தால் அப்போதெல்லாம் பெரும்பாலான ஆசிரியப் பெருமக்கள் இப்படி இருந்திருப்பாங்க போல! :(

      நீக்கு
    3. இப்படியும் சில ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்தார்கள். நல்ல ஆசிரியர்களுக்கு மத்தியில் இப்படியும் சிலர். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதாம்மா.

      நீக்கு
  7. சுவைக்கு இனிப்பு.நல்லதோர் கவிதை .

    தற்கொலை செய்தி அந்த நேரத்தில் ஏற்படும் மனத்தாக்கம் விபரீத முடிவை தருகிறது.

    எங்கள் குடும்பக் குழுமம் வாட்சப்பில் தொடர்பில் இருக்கிறது. மாதம் ஓரிரு தடவை ஆன்லைன் சந்திப்புக்களும் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  8. அருமை. ஃபேஸ்புக்கிலும் வாசித்தவை. சமீபத்திய கஸ்டர்ட் அல்வா செய்முறையும் நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கேயும் முகநூலிலும் வாசித்து ரசித்தமைக்கு மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....