செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

வாசிப்பனுபவம் - இரா. அரவிந்த் - பணம் என்னும் மந்திரம்


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட மீண்டும் மேகாலயா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

தம்மால் வெல்ல முடியும் என்று நம்பிக்கை கொள்பவர்கள் தாம் வெற்றிகளைக் குவிக்கிறார்கள் - வெர்ஜில்.

 

******


 

அன்பின் நண்பர்களுக்கு, இந்த நாளில் நண்பர் அரவிந்த் அவர்களின் வாசிப்பனுபவம் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  வாருங்கள் அவரது வாசிப்பனுபவத்தினை வாசிக்கலாம்! - வெங்கட் நாகராஜ், புது தில்லி.

 

******



 

பணம் என்னும் மந்திரம்: பணத்தை நம்மை நோக்கி ஈர்க்கும் மந்திர யுக்திகள்:

 

தாம் ஒருங்கிணைந்து பயணிக்கும் ஆற்றலை மானுடம் பெற்றது, தம் உழைப்பின் மதிப்பை அளக்கும் பொதுவான கருவிகளைக் கண்டறிந்ததன் மூலமே ஆகும். 

 

அத்தகைய பொதுக் கருவியான பணத்தை ஈட்ட இளமையில் கல்வி, நடு வயதில் தகுதிக்கேற்ற வேலை, இறுதியில் ஓய்வு என்ற சுழற்சியில் வாழ நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். 

 

மின்னல் வேகத்தில் மாறும் இவ்வுலகில், ஒவ்வொரு நொடியும் தம்மைப் புதுப்பிக்கப் பாடுபடும் நாம் ஈட்டிய பணம், அதை உணரும் முன்பே செலவுகளாகக் கரைந்தும் விடுவதுண்டு. 

 

முன்னேறிய மருத்துவ வசதிகளால் சராசரி ஆயுள் அதிகரிக்கும் இந்நாட்களில், பணி ஓய்வுக்குப் பின்னும் இருபது ஆண்டுகள் வரை வாழும் சூழல், பெரும் சேமிப்பின் அவசியத்தை உணர்த்துகிறது. 

 

இந்நிலையில், பணம் குறித்த அடிப்படைகளையும், ஈட்டிய பணத்தால் நம் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் உக்திகளையும் விளக்குவதே, பொருளாதார ஆலோசகர், திரு 'ஆனந்த் ஸ்ரீநிவாசன்' அவர்களின் 'பணம் என்னும் மந்திரம்' நூல். 

 

ஆசிரியரின் முந்தைய நூலான 'சாதாரண பங்கு அசாதாரண லாபம்' பெரும் வரவேற்பைப் பெற்றபோதிலும், அதில் சொல்லப்பட்ட பல கருத்துகளைப் புரிந்துகொள்ளும் சிரமம் பல இளைஞர்களால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பணம் குறித்த அடிப்படைகள், பொருளியல் பயில்வோருக்கு இணையாகச் சாதாரண மக்களுக்கும் எளிதில் சென்று சேரும் நோக்கத்தோடு எழுதப்பட்டதே இந்நூல். 

 

தம் சகோதரிகளின் குழந்தைகளான வகிஷாவும் சாஸ்வத்தும், நம் அனைவர் மனதிலும் பணம் குறித்தும், முதலீடு குறித்தும் எழும் கேள்விகளைக் கேட்பது போலவும், அதற்கு ஆசிரியர் பதில் அளிப்பது போலவும்  வடிவமைக்கப்பட்ட இந்நூல், வாசிப்பை மிகவும் எளிமையானதாகவும், ஆர்வமூட்டுவதாகவும் மாற்றியிருக்கிறது. 

 

'மனம் தரும் பணம்', 'Rich Dad Poor Dad' போன்ற உலகப் புகழ் பெற்ற நூல்களுக்கிடையே, இன்றைய இந்திய சூழலுக்கேற்ப ஈட்டிய சிறு பணத்தையும் வருங்காலத்தில் பெரும் விருட்சமாக வளரச்செய்யும் வழிவகைகள் விளக்கப்பட்டிருப்பதே நூலின் தலையாய அம்சம். 

 

குழந்தைகளும் ஆர்வத்துடன் புரிந்துகொள்ளும் வகையில், பணம் குறித்த எளிய விளக்கத்தோடு தொடங்கும் இந்நூல், பண்டமாற்று வணிக காலம் தொட்டு, இன்றைய காகிதப் பணம் வரையிலான சுவாரசிய  வரலாற்றை சுருக்கமாக விளக்குகிறது. 

 

விலைவாசி உயர்வால் பணவீக்கம் என்னும் சொல்லாடலைக் கேள்விப்படும் நமக்கு, பணவீக்கம் குறித்த அடிப்படைகள், பணவீக்கத்தால் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் ஏற்படும் சாதகபாதகங்கள், பணச்சுருக்கம் ஏன் தவிர்க்கப்படுகிறது, பணச்சுருக்கத்தின் நீண்ட நாள் தீய விளைவுகள் உள்ளிட்ட அனைத்தும் வேலைவாய்ப்புச் சந்தையோடு சேர்த்து விளக்கப்பட்டுள்ளது. 

 

நாம் சாப்பிடுவதற்குக் கூட கடன் வழங்கும் செயலிகள் நிறைந்த இச்சூழலில், நம் உண்மையான சொத்து மதிப்பை உணரும் முறை, கடன்களின் வெவ்வேறு வகைகள், கடன்களை வளர்ச்சிக்காக உபயோகிக்கும் முறைகள், தவிர்க்க வேண்டிய கடன் வகைகள் அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன. 

 

சேமிப்பின் வெவ்வேறு வழிகளான வைப்புநிதி, பணப் பத்திரங்கள், சொத்துக்கள், உலோகங்கள், பங்கு முதலீடு உள்ளிட்ட அனைத்தையும் செய்யும் வழிவகைகளும், அவற்றின்  சாதக பாதகங்களும், சேமிப்பிற்கும் காப்பீட்டிற்கும் உள்ள வேறுபாடுகளும்  தெளிவாக்கப்பட்டுள்ளன. 

 

அரசின் வெவ்வேறு பொருளாதாரக் கொள்கைகளின் விளைவுகள், மைய வங்கிகளின் வட்டிவிகித மாற்றங்களுக்கு ஏற்பத் தங்கத்தின் விலையிலும், வைப்புநிதி விகிதங்களிலும், பத்திரங்களின் மதிப்பிலும், பங்குச்சந்தையிலும் ஏற்படும் தாக்கங்கள், அவற்றிற்கேற்ப நம் முதலீட்டு முறையை வடிவமைக்கும் முறைகள் அனைத்தும் தெளிவாக்கப்பட்டுள்ளன. 


வருமானத்திலிருந்து நாம் செய்யும் முதல் செலவு சேமிப்பாகவே இருக்கவேண்டும் என்ற உயரிய கருத்தை விதைப்பதோடு, நாம் ஈட்டிய செல்வம், பல்வகை வருமானங்களாக உறுமாறி நம் எதிர்கால பாதுகாப்பை உறுதி செய்யும் மந்திர சக்தியை விளக்கும் இந்நூலைப் பின்வரும் சுட்டியில் வாங்கி வாசிக்கலாம். 


பணம் எனும் மந்திரம் (Tamil Edition) eBook : Srinivasan, Anand : Amazon.in: Kindle Store


 

இதன் அடுத்தபடியாக, பணவீக்கத்தை வெல்லவல்ல புத்திசாலித்தனமான பங்கு முதலீடு குறித்த அடிப்படைகளை விளக்கும் ஆசிரியரின் 'சாதாரண பங்கு அசாதாரண லாபம்' என்னும் நூலையும் பின்வரும் சுட்டியில் வாங்கி வாசிக்கலாம். 

 

Amazon.in: Anand Srinivasan - Kindle eBooks

 

'பணக்காரன் நேரத்தில் முதலீடு செய்கிறான், ஏழை பணத்தில் முதலீடு செய்கிறான்' என்பது வாரன் பஃபெட் அவர்களின் புகழ் பெற்ற கூற்று. 

 

இதற்கேற்ப, விலை மதிப்பற்ற நம் நேரத்தை, நம் மதிப்பை உயர்த்தும் உரமாகவும், அடுத்த தலைமுறையினருக்கான வரமாகவும் மாற்றுவோம். 

 

நட்புடன்,

 

இரா. அரவிந்த்

 

******

 

இந்த நாளின் வாசிப்பனுபவம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

13 கருத்துகள்:

  1. மாதாமாதம் உனது வருமானத்தில் 20 சதவிகிதம் சேமிப்பில் போடவேண்டும் என்று என் அப்பா சொல்வார்.  முடிந்தவரை அதை கடைப்பிடித்து வந்தேன்.

    நல்லதொரு பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தந்தையின் அறிவுறை அணைவருக்கும் மிகவும் பயனளிக்கவல்லதுஸ்ரீராம் சார்.
      அதை பகிர்ந்ததோடு நூல் அறிமுகம் குறித்த தங்கள் பின்னோட்டத்திற்கும் உளமார்ந்த நன்றிகள் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார்.
      இயலும்போது தரவிறக்கம் செய்து வாசியுங்கள்.

      நீக்கு
  3. வாசகம் அருமை.
    மின் புத்தகம் விமர்சனம் அருமையாக செய்து இருக்கிறார்.
    சேமிப்பின் அவசியம் எல்லோருக்கும் தெரிவது நல்லது.

    பதிலளிநீக்கு
  4. விரிவான அலசல் அசத்தல் விமர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்ரி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  5. அரவிந்த் நல்ல கருத்துகளுடனான புத்தகம்

    உங்கள் அறிமுக விமர்சனமும் அந்தக் கருத்துகளை எடுத்து முன்வைத்துச் சொன்னது அருமை.

    என் மகனுக்கு நான் அறிந்த படித்த பொருளாதாரத்தைச் சொல்வதுண்டு. சொல்லியதுண்டு. க்ரெடிட் கார்ட் தேய்க்காதே. ஒரு பொருள் வாங்க நினைத்தால் தேவையாக இருந்தால் மட்டும் வாங்கு. அப்படி மிகவும் தேவையான பொருள் என்றாலும் ஈஎம் ஐ யில் வாங்கக் கூடாது. அதற்கான பணத்தைச் சேமித்துக் கொண்டு வாங்கு. ப்ளானிங்க் மிகவும் முக்கியம் என்று சொல்வதுண்டு. //கடன்களை வளர்ச்சிக்காக உபயோகிக்கும் முறைகள், தவிர்க்க வேண்டிய கடன் வகைகள் // இதே...எதற்கு வாங்கக் கூடாது என்பதும் சொல்வதுண்டு. சொல்லியதுண்டு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் மகனை சரியாக வழிகாட்டியது அறிந்து மிக்க மகிழ்ச்சி மேடம்.
      தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா மேடம்

      நீக்கு
    2. தங்களின் விரிவான கருத்துறைக்கு மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு
  6. வாசகமும் விமர்சனமும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி மேடம்.
    தங்களின் வருகைக்கு உளமார்ந்த நன்றி கோமதி அரசு மேடம்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல விமர்சனம்! சிறப்பான கருத்துக்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்ரி மனோ சாமிநாதன் மேடம்

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....