திங்கள், 28 பிப்ரவரி, 2022

வாசிப்பனுபவம் - ஜில்லுனு ஒரு காதல் - சஹானா கோவிந்த்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கேதார் தால் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஒருவன் இன்று நிழலில் உட்கர்த்திருக்கிறான் என்றால், சில காலங்களுக்கு முன் யாரோ வைத்த மரத்தினால்தான்.

 

******


 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஜூன் மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் சக பதிவர் அப்பாவி தங்மகணி எனும் சஹானா கோவிந்த் அவர்கள் எழுதிய ஜில்லுனு ஒரு காதல் எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

விலை: ரூபாய் 205/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

ஜில்லுனு ஒரு காதல் (Tamil Edition) eBook : கோவிந்த், சஹானா: Amazon.in: Kindle Store

 

******* 

 

ஜூன்மாத வாசிப்புப் போட்டியில் (சஹானா இணைய இதழ் நடத்திய) இருந்த பதினைந்து நூல்களில் எனது இரண்டாவது வாசிப்பு - இணைய இதழ் ஆசிரியர் சஹானா கோவிந்த் அவர்கள் எழுதிய ஜில்லுனு ஒரு காதல் நாவல் தான்.  முன்பே படித்திருந்தாலும், மீண்டும் ஒரு முறை படித்தேன் - இந்த வாசிப்பனுபவத்தினை எழுதுவதற்காக.  படித்த நூல்களில் சில விஷயங்கள் மட்டுமே நினைவில் இருக்கிறது.  சில வருடங்கள் முன்னர் படித்த நூல்களில் கூட ஏதாவது சில விஷயங்கள் மட்டுமே நினைவில் இருப்பது இயல்பு தானே.  இந்த நூலும் படிக்க ஆரம்பித்த பிறகு ஏற்கனவே படித்து இருக்கிறோமே என்று நினைத்தேன்.  முடிவு நினைவில் இல்லை.  அதனால் மீண்டும் வாசித்தேன்! 

 

சரி இன்றைய வாசிப்பனுபவத்திற்கு வரலாம். ஜில்லுனு ஒரு காதல் - இவரது பல நாவல்கள்/கதைகளுக்காக ஒரு பிரபல பாடல் வரிகளையோ அல்லது சினிமாவின்  தலைப்பையோ தான் வைக்கிறார் - ஒரு வேளை வியாபார யுக்தியாக இருக்கலாம்! தனது மின்னூலுக்கான வரவேற்பு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இப்படி வைப்பதாகத் தெரிகிறது.  நல்ல யுக்தி தான்.  வாசிப்பு குறைந்து விட்ட இந்தக் காலத்தில் வாசிப்பவர்களை இப்படியெல்லாம் செய்து தான் வாசிப்பு வைபவத்திற்குள் இழுத்து வர வேண்டியிருக்கிறது இல்லையா.  அதனால் தவறில்லை.  பிரபல சினிமா தலைப்பில் இருக்கும் இந்த நாவலும், அந்த சினிமா போலவே காதலையே பிரதானமாகச் சொல்கிறது.  கூடவே நட்பையும்.  நட்பு, காதல் இந்த இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு செல்கிறது கதையின் ஓட்டத்தில்!  நட்பு தனது நட்பில் இருப்பவருக்கு எந்த வித கஷ்டமும் யாராலும் வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க, காதல் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று முயல்கிறது.  நட்புக்கும் காதலுக்குமான போட்டி - கடைசியில் ஜெயித்தது காதலா, நட்பா? 

 

கதைக்களன் - இந்தியா மற்றும் கனடா!  கனடா பார்க்காதவர்களுக்காக, சில கனடா நாட்டு காட்சிகளை, சூழல்களை நமக்கும் தெரிவிக்கிறது இந்த நாவல்.  அதற்காக நூலாசிரியருக்கு பாராட்டுகள் மற்றும் நன்றி.  சதீஷ், மீரா இருவரும் நண்பர்கள் - அவர்களது பெற்றோர்களைப் போலவே.  இருவரும் கனடாவில் மேற்படிப்பு படிப்பதற்காகச் செல்கிறார்கள்.  அங்கே முதல் நாளிலேயே ஸ்டீவ் எனும் சக மாணவனைச் சந்திக்கிறார்கள்.  முதல் சந்திப்பே மீரா - ஸ்டீவ் ஆகியோருக்கான மோதலுடன் ஆரம்பிக்கிறது!  இத்தாலியன் என்று அறிமுகம் செய்து கொண்டவனுக்கு தமிழ் தெரியாது என்ற எண்ணத்தில் மீரா ஸ்டீவை கிண்டல் செய்ய, பிறகு அவன் தமிழில் பேச என மோதலில் ஆரம்பிக்கும் அந்த உறவு காதலில் முடிகிறது.  ஸ்டீவ் தவிர அவனது தோழி மது!  கதையின் பெரும்பாலான பக்கங்களில் மீரா, சதீஷ், ஸ்டீவ் மற்றும் மது - ஆகியோர் மட்டுமே பயணிக்கிறார்கள்.  

 

ஸ்டீவ் - மீரா காதல் என்ன ஆனது? நண்பன் சதீஷ், மீராவை எப்படியெல்லாம் கவனித்துக் கொள்கிறான், மீரா-சதீஷ் இடையே இருக்கும் ஆழ்ந்த நட்பு பற்றிய தெளிவில்லாத ஸ்டீவ் கொள்ளும் கோபம், சதீஷ் - ஸ்டீவ் மோதல்கள், அதனால் மீரா அடையும் வேதனை என பல விஷயங்களைச் சொல்லிச் செல்கிறார் கதாசிரியர்.  காதல், நட்பு பற்றிய வரிகள், ஒவ்வொரு பகுதியின் தொடக்கத்திலும் தந்திருப்பது சிறப்பு.  ஒவ்வொரு பகுதியும் சிறப்பாக எடுத்துச் செல்வதோடு, முடிக்கும் போது அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பினையும் வாசிப்பவருக்குக் கொடுத்தபடியே இருக்கிறார்.  சற்றே அதிக பக்கங்கள் கொண்ட மின்னூலாக இருந்தாலும், தொடர்ந்து வாசித்து முடிக்கும்படியே எழுதி இருக்கிறார்.  அதற்காக பாராட்டுகள்.  

 

நூலில் ஆங்காங்கே இருக்கும் எழுத்துப் பிழைகள் - மீண்டும் ஒரு முறை திரும்பப் படித்து, திருத்தம் செய்து வெளியிடலாம் - அமேசான் கிண்டிலில் அந்த வசதி இருப்பதை நூலாசிரியர் பயன்படுத்திக் கொள்வது நல்லது - இனிமேல் படிக்கப் போகும் வாசகர்களுக்கு எழுத்துப் பிழை இல்லாமல் நாவலை வாசிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமே! ஸ்டீவ் - மீரா காதல் என்ன ஆனது?  இரு வேறு சூழல்களில், இரு வேறு நாடுகளிலிருந்து பின்புலம் கொண்ட அவர்கள் காதலை பெற்றோர்கள் ஒப்புக் கொண்டார்களா?  காதலில் ஊடல் உண்டா இல்லையா போன்ற பல விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள நூலாசிரியரின் இந்த மின்னூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாமே! வாசிக்கப் போகும் உங்களுக்கு வாழ்த்துகள்.  மின்னூலை வெளியிட்ட நூலாசிரியருக்குப் பாராட்டுகள். 

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

24 கருத்துகள்:

  1. நல்லதொரு அறிமுகம்.  அப்பாவி இது மாதிரி உணர்வுகளுடன் கூடிய கதைகளை எழுதி முன்னர் படித்திருக்கிறேன்.  நீங்கள் ரமணி சந்திரன் ரசிகையா என்றும் அவர் பிளாக்கில் அப்போது கேள்வி கேட்டிருந்தேன்!  கிண்டியில் பிழை திருத்தி வெளியிடும் வசதி இப்போது தரப்பட்டிருக்கிறதா? பரவாயில்லையே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவிட்ட புத்தகத்தில் பிழை திருத்தும் வசதி கிண்டிலில் இருக்கிறது ஸ்ரீராம். பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. நூலை மீண்டும் எழுத்துப்பிழை திருத்தம் செய்ய முடியுமா ?

    அழகான விமர்சனம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளியிட்ட நூலில் எழுத்துப் பிழை திருத்தம் செய்ய முடியும் கில்லர்ஜி.

      வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மிக்க நன்றி எனது நூலின் உங்கள் வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு 💐

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.

      நீக்கு
  4. கதை விவரிப்பு விமர்சனம் தங்களுக்குக் கை வந்த கலை..
    அழகு.. அருமை..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நூலை வாசிக்கத் தூண்டும் மதிப்புரை. சிறப்பு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. அருமையானதொரு விமர்சனம்! விரைவில் படித்துப்பார்க்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா. முடிந்த போது வாசித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. நல்ல விமர்சனம் வெங்கட்ஜி. ஆமாம் அவங்க எழுதுவதற்கான தலைப்புகள் படத்தலைப்புகள் அல்லது பாடல்கள் தலைப்புகளாக இருப்பதும் கவனித்திருக்கிறேன். காதல் கதை தலைப்புகளாக இருப்பதும்..

    சஹானா இணைய இதழ் வாசிப்பதுண்டு. சில சமயம் கருத்து பகிர்வதும் உண்டு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வாசகம் அருமை.
    கதை விமர்சனம் அருமை.

    சஹானா கோவிந்துக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த வாசகமும் வாசிப்பனுபவமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. நல்லதோர் அறிமுகம் நூலாசிரியருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  12. அருமையான நாவல் சார்.
    நானும் படித்திருக்கிறேன்.
    சுவாரசியமாக செல்லும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....