செவ்வாய், 1 மார்ச், 2022

கேதார் தால், உத்திராகண்ட் - மலையேற்றம் - பயணம் - ப்ரேம் Bபிஷ்ட் - பகுதி ஒன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஓடுறவனுக்கு பல வழி துரத்துறவனுக்கு ஒரே வழி தான் அவன் பின்னால் தான் ஓடி ஆகணும்! எனவே துரத்துபவனாக இருக்காதே; ஓடுபவனாக இரு!

 

******

 

சென்ற சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கேதார் தால் பகுதி குறித்தும், நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களது அனுபவங்கள் குறித்தும் சொல்லி இருந்தேன்.  இந்தப் பதிவு வழி உத்திராகண்ட் மாநிலத்திலுள்ள கேதார் தால் பகுதிக்குச் சென்ற வந்த போது கிடைத்த அனுபவங்களை அவர் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்!  என்னது அவருக்கு தமிழ் தெரியுமா? என்று கேட்பவர்களுக்கு, அவர் தனது எண்ணங்களைச் சொல்ல அவரது எண்ணங்களையும் அனுபவங்களையும் என் வார்த்தைகளில் கொண்டு வந்திருக்கிறேன்.  நண்பர் ப்ரேம் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி - ஓவர் டு ப்ரேம் ஜி!

 

******



 

மலைகளின் அழகு, குறிப்பாக இமயமலைச் சிகரங்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களை எப்போதும் ஈர்க்கும் ஒரு விஷயம். இமயமலையின் பல சிகரங்களை தன்னகத்தே கொண்ட உத்தரகாண்ட் மாநிலம்  "கடவுளின் பூமி அல்லது தேவ பூமி" என்றும் அழைக்கப்படுகிறது.  அதிலும் குறிப்பாக சாகசப் பயணங்கள் மற்றும் மலையேற்றம் செய்பவர்களுக்கு, இந்தப் பிரதேசம் பல மனதைக் கவரும் இடங்களை வழங்குவதோடு சொர்க்க பூமியாகத் திகழ்கிறது.

 

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகிய நானும் (ப்ரேம் பிஷ்ட்) நண்பர்கள் ஜஸ்பால் சிங் ராவத் மற்றும் ராஜேஷ் லகேரா ஆகிய மூன்று பேருமாக, Gகர்வால் பிரதேசத்தில் இமயமலையின் கங்கோத்ரி பகுதியில் அமைந்துள்ள கேதார் தால் (Kedar Tal) எனும் இடத்தினை (இந்த இடம் சிவனின் ஏரி என்றும் அழைக்கப்படுகிறது) எங்கள் பயண இலக்காக தேர்ந்தெடுத்து, சில வருடங்கள் முன்னர் பயணித்தோம்.      இந்த இடம், கடல் மட்டத்திலிருந்து 16,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.  இது உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மிக அழகான ஏரிகளில் ஒன்றாகும்.  தலைசாகர், மேரு, பிருகுபந்த் மற்றும் ஜோகின் போன்ற உயரமான சிகரங்களால் சூழப்பட்ட இந்த ஏரிக்கு இதே சிகரங்களில் இருந்து உருகும் பனி பிரதான நீர் ஆதாரமாக இருக்கிறது. 

 

மேகமூட்டம் இல்லாத ஒரு தெளிவான நாளில், ஏரியின் மீது ஏரியைச் சூழ்ந்திருக்கும் நான்கு சிகரங்களின் பிரதிபலிப்பை காண முடியும், அந்தக் காட்சி, மலையேற்றத்தில் ஆர்வமுள்ள நபர்களுக்கு கண்கவர் காட்சியை வழங்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.  கேதார் தால் நோக்கிய இந்த மலையேற்றம் கங்கோத்ரியில் இருந்து தொடங்குகிறது, இந்த கண்கவர் ஏரியைப் பார்க்க விரும்பினால் சுமார் 18 கி.மீ. மலையேற்றம் செய்ய வேண்டியிருக்கும்.  இந்த நேரத்தில் ஒரு விஷயத்தினை இங்கே தெளிவுபடுத்திவிடுவது நல்லது. இந்த பாதை "கேதார் கங்கா" நதியின் பக்கத்தில் செல்லக் கூடியது.  முழுவதும் செங்குத்தான மற்றும் கடுமையான பாதை கொண்டது., எனவே, மலையேற்ற அனுபவம் அவசியம் தேவை.   வாழ்க்கையில் முதல் முறையாக மலையேற்றம் செய்பவர்கள் இங்கே செல்வது நல்லதல்ல.  

 

இந்த அற்புதமான ஏரியைக் காண நாங்கள் முடிவு செய்து அங்கே பயணித்த போது கிடைத்த அனுபவங்களை இந்தப் பதிவுகள் வழி உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எங்களுக்கு மகிழ்ச்சி.  வாருங்கள் எங்கள் பயணம் எப்படி இருந்தது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம். 

 

நாள் ஒன்று (நோய்டா - நடாலா - 395 கிலோ மீட்டர்):

 

நானும் நண்பர் ராஜேஷ் லகேராவும், மோகன் நகர்-மோடி நகர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்க வேண்டி, நாங்கள் இருக்கும் தில்லியின் வெளிப்புறப் பகுதியான நாய்டா (NEW OKHLA INDUSTRIAL DEVELOPMENT AREA - NOIDA) விலிருந்து எங்கள் காரில் அதிகாலை 04.45 மணிக்கு, கங்கோத்ரி நோக்கிய எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.  காலை 08.45 மணிக்கு ரூர்கியைச் சென்று அடைந்தோம்.  ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சண்டிகர் சென்று இருந்த எங்கள் மூன்றாவது தோழரான ஜஸ்பால் சிங் ராவத், அங்கே இருந்து புறப்பட்டு ரூர்கி நகரத்தில் எங்களுடன் சேர்ந்து கொள்வதாக ஏற்பாடு .  அவர் காலை 09.15 மணிக்கு ரூர்கியில் எங்களுடன் சேர்ந்து கொண்டார். நேரத்தை வீணடிக்காமல், நாங்கள் ஹரித்வார் / ரிஷிகேஷ் நோக்கிய பயணத்தினை தொடர்ந்தோம்.   

 

இருப்பினும், ஹரித்வார்/ரிஷிகேஷ் பகுதிகளில் இருந்த போக்குவரத்து நெரிசல் எங்களுக்குக் கவலையளிப்பதாக இருந்தது.  ஏனெனில் போக்குவரத்து நெரிசல் காரணமாக மிகவும் பயனுள்ள இரண்டு மணி நேரத்தினை நாங்கள் இழந்திருந்தோம்.  ரிஷிகேஷைக் கடந்து நரேந்திர நகர் நோக்கி மலையேற்றம் தொடங்கியவுடன், அப்பகுதியின் சுற்றுப்புறங்கள் பார்ப்பதற்கு இனிமையாக இருந்தது.   நாங்கள் மதிய உணவுக்காக டேஹ்ரி Gகர்வால் பகுதியில் இருக்கும் நாகனி என்ற இடத்தில் மதியம் 01.00 மணிக்கு எங்கள் வாகனத்தினை நிறுத்தினோம்.  மதிய உணவிற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு சுமார் 02.45 மணிக்கு நாங்கள் சம்பாவை அடைந்து, எங்கள் அடுத்த இடமான உத்தரகாசியை நோக்கி வாகனத்தினை திரும்பினோம்.   

 

நாங்கள் உத்தரகாசியை சென்றடைந்த போது மாலை 06.15 மணி! ஆனால் உத்தரகாசி நெரிசலாக இருந்தது என்பதால்  உத்தரகாசியில் இருந்து மேலும் 2 கி.மீ. தொலைவில் உள்ள நட்டாலாவில் இரவு தங்க முடிவு செய்தோம். அந்த இடத்திலிருந்து கங்கோத்ரி சென்றடைய  98 கி.மீ பயணிக்க வேண்டும்.  எப்படி பயணித்தோம், அடுத்த நாள் என்ன அனுபவங்கள் கிடைத்தது என்பதை எல்லாம் அடுத்த பகுதியில் சொல்கிறேன். 


நட்புடன்

 

ப்ரேம் Bபிஷ்ட்

 

******

 

நண்பர் ப்ரேம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம்.  பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

26 கருத்துகள்:

  1. இன்றைய வாசகம் வித்தியாசமாக இருக்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஒன்பது மணி நேரத்துக்கும் மேலான பிரயாணம்.  இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம்.  சொல்லப்போனால் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.  

    தொடர்கிறேன்.  மலையேற்றம் தெரியாதவர்கள் இங்கு செல்ல வேண்டாம் என்கிற குறிப்பு சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒன்பது மணி நேரத்துக்கும் மேலான பிரயாணம் - கொஞ்சம் அதிகம் தான். பெரும்பாலான மலைப் பிரதேசங்கள் தில்லியிலிருந்து அதிக தொலைவு தான் ஸ்ரீராம். மணாலி செல்ல சுமார் 14 மணி நேரப் பயணம் - தில்லியிலிருந்து.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மலையேற்றம் மிகக் கடினமானது. அதுவும்
    இந்த மாதிரி கடின சீதோஷ்ண நிலையில்
    கனமான பாக் பாக்குகளை சுமந்து ஏறு வது மிகச் சிரமம்
    ஆயிற்றே!!
    தங்கள் நண்பரின் பயணம் எங்களுக்கெல்லாம் கண்களுக்கு
    விருந்து.

    மலையேற்றத்தில் டேலைட் எவ்வளவு அவசியம் என்பதை
    அருமையாக விளக்கி ஆரம்பிக்கிறார்.

    அன்பு வெங்கட், உங்கள் தமிழ் மொழிப் பெயற்சியும்
    அருமை மா.
    கேதார் தால் பிம்பமும் ஷிவராத்திரி அன்று
    கிடைப்பதும் ஒரு ப்ளஸ் பாயிண்ட் . நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலையேற்றம் கடினமானது தான் வல்லிம்மா. சில இடங்கள் மிகவும் கடினமானவை. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  5. முதல்நாள் அனுபவம் நல்ல சுவாரஸ்யமாக இருந்தது தொடர்ந்து வருகிறேன் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பயணத்தில் தொடர்ந்து வர வேண்டுகிறேன் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. பயணத்தில் தொடர்ந்து வர வேண்டுகிறேன் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வாசகம் சொல்லும் கருத்து சிந்திக்க வைத்தது. வித்தியாசமாக இருக்கிறது.

    வெங்கட்ஜி செம எஃபோர்ட் போட்டிருக்கீங்க நண்பர் சொல்வதை தமிழில் இங்கு தருவதற்கு மிக்க நன்றி ஜி.

    மனதை ஈர்க்கும் இடம். தொடர் சுவாரசியமாகத் தொடங்கியுள்ளது. நண்பரின் அனுபவங்களின் வழி நானும் மனதில் பயணித்துக் கொள்கிறேன். ட்ரெக்கிங்க் அனுபவங்கள் உண்டு என்றாலும் இந்த ட்ரெக்கிங்க் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்று தோன்றுகிறது. எப்படி என்பதையும் தெரிந்து கொள்ளும் ஆவல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. கொஞ்சம் கடினமான ட்ரெக் தான். என்னாலும் செல்ல இயலுமா என்ற எண்ணம் வருகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மிக அருமையான கேதார் தல் மலையேற்றம்.

    //உருகும் பனி பிரதான நீர் ஆதாரமாக இருக்கிறது. //

    நாங்கள் கேதார் நாத போன போது உருகும் பனியை எடுத்து வந்து கொடுத்தார்கள், அதை தலையில் வைத்து கொண்டு பக்தியாக வணங்கினார்கள்.

    கங்கோத்ரி பயணத்தை படிக்க ஆவல்.
    நன்றாக சொல்லி இருக்கிறார். நீங்கள் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த உங்கள் எண்ணங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த கோமதிம்மா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. பயணத்தில் தொடர்ந்து வர வேண்டுகிறேன் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. படம் அற்புதமாக இருக்கிறது. இன்றைய மஹாசிவராத்திரி அன்று கைலாய தரிசனம் கிடைத்தது போன்று உள்ளது. கேதார் தால் கங்கோத்ரி பகுதியில் சிவனின் ஏரி! அற்புதம். ரசித்து வாசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. கங்கோத்ரியிலிருந்து 19 கிமி தூர கோமுக் பயணம் குறித்து அறிமுகம் செய்திருந்திருந்தீர்கள்.
    கேதார்தால் பற்றி இன்று அறிந்துகொண்டோம்.
    மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
  12. மலையேற்றம் மிகவும் சிரமமாளது. தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  13. அற்புத இடம் ....காண ஆவலுடன் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....