வியாழன், 24 மார்ச், 2022

கதம்பம் - குட்டி தேவதை - கஸ்டர்ட் ஹல்வா - கேக் - மகளிர் தினம்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எந்த நிலையிலும் மனதை அமைதியாக வைத்திருக்கப் பழகுவோம். அமைதியை விட நல்லதொரு ஆயுதமும் இல்லை; ஆயுதமும் இல்லை!

 

******

 

குட்டி தேவதை - 19 ஃபிப்ரவரி 2022


 

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி விட்டு வீடு திரும்பும் வழியில் கடையில் சில பொருட்களை வாங்கிச் செல்லலாம் என நின்று கொண்டிருந்தேன்.

 

பை வேணும்! பை வேணும்! என்ற குரல் ஒலிக்க..

 

யார் கேட்கிறா! என்று நினைத்தவாறு குனிந்து பார்த்தேன்.

 

குட்டி தேவதை ஒன்று தன் புன்னகையால் என்னை வசீகரீத்தாள்! கைகளில் குட்டி குட்டியாக இரண்டு Dairy milk சாக்லேட்களை வைத்திருந்தாள்!

 

இந்த சாக்லேட்டை தூக்கிட்டு போறதுக்கு தான் பை கேட்கிறியா! என்றேன்.

 

ஆமாம்! என்கிறாள்..:))

 

ரொம்ப வெயிட்டா இருக்கா! என்றேன்.

 

ம்ம்ம்..என்று நெளிந்து கொண்டே இப்படி அப்படியுமாக டான்ஸ் ஆடிய படி சொன்னாள்...🙂

 

சரி! உங்க பேர் என்ன! என்றேன்.

 

சொல்லக் கூடாது! என்று சிரித்து மழுப்பிய படியே நகர்ந்தாள்..🙂

 

இன்றைய நாளை இனிமையாக்க இந்த தேவதை என் முன் தோன்றியிருக்கிறாள்.

 

******

 

கஸ்டர்ட் அல்வா - 25 ஃபிப்ரவரி:


 

ஃப்ரீசர்ல போட்டு வைத்திருந்த ஐயிட்டங்கள் சிலவற்றை பார்த்த போது இந்த கஸ்டர்ட் பவுடர் கண்ணில் பட்டது! எதுக்காக வாங்கினேன் என்று தெரியலை...🙂 ஏதோ ஒரு ரெசிபிக்காக வாங்கினேனா அல்லது கிடைக்கும் போது வாங்கிப்போம் என்று வாங்கியதா நினைவில்லை! 

 

இங்கு திருவரங்கத்தில் இந்த மாதிரி பொருட்கள் எல்லா இடத்திலும் கிடைப்பதில்லை! பெரிய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸில் மட்டும் தான் கிடைக்கும்! அப்படி அங்கு சென்ற போது வாங்கி வந்திருக்கலாம்! காலி செய்து விடுவோம் என்று எண்ணி இணையத்தில் தேடியதில் கஸ்டர்ட் அல்வா ரெசிபி கிடைத்தது!

 

டெல்லியில் வசித்த போது கூட கஸ்டர்ட் பவுடர் வாங்கியிருக்கிறேன். ஆனால் அப்போது அதை வைத்து ஃப்ரூட் கஸ்டர்டும், சில நேரங்களில் பாயசத்திலும் சேர்த்திருக்கிறேன். ஆனால் இந்த ரெசிபி சற்று வேறுபட்டும் சுவையாகவும் இருந்தது! நிறமும், ஃப்ளேவரும் தனியாக சேர்க்கத் தேவையில்லை என்பது சிறப்பு!

 

செய்முறை:

 

கஸ்டர்ட் பவுடர் - 1/2 கப்

சர்க்கரை - 1 கப்

தண்ணீர் - 1 கப்

நெய் - 2 டீஸ்பூன்

உலர் பருப்புகள் - தேவைக்கேற்ப

 

கஸ்டர்ட் பவுடர், சர்க்கரை, தண்ணீர் மூன்றையும் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்துக் கொண்டு கிளறணும்! கொதிக்கும் போது நெய் சேர்த்து தட்டில் கொட்டி உலர் பருப்புகளால் அலங்கரிக்கலாம்! நிமிடங்களில் தயாராகி விடும்!

 

******

 

தேநீர் நேர கேக் - 5 மார்ச் 2022: 


 

இணையத்தில் நேற்று இந்த ரெசிபியைப் பார்த்ததும் செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. சட்டுனு பண்ணிடலாம். நல்ல சாஃப்டாகவும் வந்தது!

 

செய்முறை:

 

சர்க்கரை, தயிர், பால், எண்ணெய் - தலா 1/2 கப்

ரவை - 1 கப்

பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்

எசென்ஸ் - 1/2 டீஸ்பூன்

 

எல்லாவற்றையும் நன்கு கலந்து கொண்டு 30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

 

******

 

மகளிர் தினம் - 8 மார்ச் 2022: 


 

பெண் எனும் அதிசயம்!

பிரபஞ்சத்தை உயிர்ப்புடன் 

கொண்டு செல்பவள்!

அன்புக்கும் பாசத்துக்கும்

மட்டுமே கட்டுப்பட்டவள்!

 

சீண்டினால் சீற்றத்துடன்

புலியாகப் பாய்வாள்!

தன்னம்பிக்கைத் தீயில்

புடம் போட்ட தங்கமாய்

மெருகேறி மிளிர்வாள்!

 

பார் போற்றும் பெண்ணை

கொண்டாடும் இந்நாளில் 

தான், மங்கையிவளும் 

தன் மணாளனை 

முதன்முதலாய் பார்த்தாள்!

 

பெண்ணிவளைக் காணவே தலைநகரிலிருந்து 

தலைவனும் வந்திருந்தான்! 

பந்தம் ஏற்படுத்திக் கொள்ள

சம்மதம் சொன்னான்!

 

வருடங்களோ இருபது

மனதின் நினைவுகளோ 

இன்னும் புத்தம் புதிதாக!

பூவையும் புன்னகையுடன்

புத்துணர்வு கொண்டாள்!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

24 கருத்துகள்:

  1. ஜனநாயகக்கடமை?  உள்ளாட்சித் தேர்தலா?

    அனைத்தையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளாட்சித் தேர்தல்தான் ஸ்ரீராம் முகநூலில் அன்றே எழுதியது இங்கே கதம்பமாக ...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  2. கஸ்டர்ட் ஹல்வா நானும் செய்திருக்கிறேன். கேக்கை எத்தனை டிகிரி ஃபாரன்ஹீட்டில் பேக் பண்ணி வேண்டும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கேக்கை எத்தனை டிகிரி ஃபாரன்ஹீட்டில் பேக் பண்ணி வேண்டும்?//

      எனக்குத் தெரியாதும்மா..:))

      என்னிடம் அடுப்பில் வைக்கும் கடாய் அவன் தான் இருக்கிறது..:)

      நீக்கு
    2. பானுக்கா ரெசிப்பி செண்டிகிரேட் எவ்வளவுன்னு பார்த்து (பொதுவா 180-200 C ) இருக்கும்...ஸோ கிட்டத்தட்ட டபுள் f அதாவது 350-392/400

      என்னதான் நீங்க டெம்ப்பரேச்சர் வைத்தாலும் கொஞ்சம் கண் வைத்துக் கொள்ள வேண்டும். டெம்ப் வைத்திருக்கோம் ஆட்டோ ஆஃப் என்று வேறு வேலை கவனிக்கப் போனால் சில சமயம் கூடுதல் ப்ரௌன் ஆக வாய்ப்புண்டு. டெக்சர் மாறிவிடும். எனவே மணம் வரும் போதிலிருந்து கவனமாக இருந்துவிட்டால் நல்லது. இது அடுப்பு ஓவனுக்கும் பொருந்தும். ஆனால் அதற்காகக் குறிப்பிட்ட நேரம் பாதி கூட ஆகாத நிலையில் திறந்து பார்க்கக் கூடாது. நடுவில் பிளக்கும் அல்லது பள்ளமாகும்.

      கீதா

      கீதா

      நீக்கு
    3. தங்களின் வருகைக்கும் பானும்மாவின் கேள்விக்கான பதிலுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. அனைத்தும் நன்று.
    கவிதை மேலும் சிறப்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. கதம்பம் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  5. அன்புள்ள ஆதி, கவிதையை ரசித்து படித்தேன். ரெசிபியும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி காயத்ரி சந்திரசேகர். கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. கதம்பம் மிக அருமை.

    வருடங்களோ இருபது

    மனதின் நினைவுகளோ

    இன்னும் புத்தம் புதிதாக!

    பூவையும் புன்னகையுடன்

    புத்துணர்வு கொண்டாள்!//

    கவிதை மிக அருமை.

    புத்துணர்வோடு என்றும் இருங்கள்.
    வாழ்த்துக்கள் ஆதி வெங்கட். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. வாவ்! ஆதி கஸ்டர்ட் ஹல்வா!!!! செமையா இருக்கு. கஸ்டர் பௌடர் ஆபத்பாந்தவன் என்பேன் நான். டக்கென்று செய்துவிட.

    ரவா கேக்கும் செம. பார்க்கப் போனால் மைதாவில் செய்யும் கேக்கும் நன்றாக வரும் என்றாலும் ரவா கேக் டெக்சர் நன்றாக இருக்கும் அது போல கோதுமை மாவு வைத்துச் செய்யும் கேக்குகளில் கொஞ்சம் ரவை சேர்த்தால் டெக்சர் நன்றாக இருக்கும். மைதா கேக்கிற்கும் கூட சேர்த்துச் செஞ்சா நல்லாருக்கும்.

    சமீபகாலமாகத்தான் பேக்கிங்க் பக்கமே போகவில்லை. இப்படி ஆசையைக் கிளப்புறீங்களே!!

    டீ கேக், ஹல்வா ஃபோட்டோ செமையா இருக்கு ஃபுட் ஃபோட்டோகிராஃபி!! இன்னும் கற்பனைல ட்ரை பண்ணுங்க மாஸ்டர் ஆகிடுவீங்க ஆதி! அதான் ஃபுட் ஃபோட்டோகிராஃபில!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி. தொடர்ந்து கருத்துக்களை வழங்கி ஊக்கமளிக்கும் உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. ஆதி கவிஞி!! வரிகளில் கூடவே கேப்பில் உங்கள் நிகழ்வையும் சொல்லிவிட்டீங்களே! ரசித்தேன்.

    எல்லாமே அருமை

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை வரிகள் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  9. கஸ்டர்ட் அல்வா செய்து பார்க்கிறேன். கவிதை நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்தது அறிந்து மகிழ்ச்சி ராமலக்ஷ்மி. தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. மகளிர் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....