புதன், 23 மார்ச், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி ஏழு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. நேற்றைய பதிவினை படிக்காதவர்கள் இந்தச் சுட்டி வழி படிக்கலாமே! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எந்த உறவிலும் நம்பிக்கை என்பது ஒட்டுதலல்ல பிணைதல். எனவே நம்மை நேசிக்கும் நபர் நம் கைகளை பற்றிக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்காமல் நாம் அவர்கள் கைகளை பற்றிக் கொள்வோம். 

 

******

 

யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே

பகுதி மூன்று இங்கேபகுதி நான்கு இங்கே

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

 

யாரிவள்! பகுதி ஏழு


 

குழந்தைகள் எப்போதும் தான் பார்க்கும் காட்சிகளை வைத்தும், மனிதர்களை படித்தும் தான் வளர்கிறார்கள். தான் எப்படி இருக்க வேண்டும்! யாரைப் போல் இருக்க வேண்டும்! போன்ற திட்டமிடல்கள் அப்போதே துவங்கி விடும். ஒரு சில விஷயங்கள் எத்தனை வருடங்களானாலும் பாசிப்பிடித்ததைப் போல் மனதின் ஆழத்தில் படிந்து போயிருக்கும்! அதனால் அவர்கள் வளரும் சூழல் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது!

 

சுட்டிப்பெண் கோவையில் அரசுக் குடியிருப்பில் அந்தக் குட்டி வீட்டில் அப்பா, அம்மா மற்றும் தம்பியோடு மிகுந்த மகிழ்ச்சியோடு வளர்ந்து வந்தாள். வசதிகள் எதுவும் அவளுக்குத் தேவைப்படவில்லை! கிடைக்கும் இடத்தில் சுருண்டு கொண்டு தூங்கியதும், இருப்பதை வைத்து அம்மா செய்து தந்த சுவையான உணவும் கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த உணர்வுக்கு ஈடாகாது! 

 

அக்கம் பக்கத்தவர்கள் எல்லாம் எந்தவித வேறுபாடும் இன்றி ஒற்றுமையோடும் அதேசமயம்  உரிமையோடும் பழகி வந்தார்கள். ஒருவருக்கொருவர் உறவு முறை சொல்லி அழைத்துக் கொள்வதும் உணவுகளை பகிர்ந்து கொள்வதும், சேர்ந்து சினிமாவுக்கு, பொருட்காட்சிக்கு, கோவிலுக்கு எனச் செல்வதும், பக்கத்து வீட்டு குழந்தையைக் கூட கண்டிக்கும் உரிமையோடு இருந்த சூழலில் தான் அவளும், அவள் தம்பியும் வளர்ந்தார்கள்.

 

குட்டிப்பொண்ணுக்கு தான் வேடிக்கை பார்ப்பது மிகவும் பிடித்த விஷயமாக சொல்லியிருந்தேனே! எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக  அவள் உண்டு அவள் வேலையுண்டு என்று மனிதர்களைப் படித்துக் கொண்டிருப்பாள்! நல்லவற்றை மனதில் சேகரித்துக் கொள்வாள்! 

 

எதிர்வீட்டு அத்தை எப்போதும் தான் செய்யும் எந்தவொரு வேலையிலும் சுத்தம், சுகாதாரம் மற்றும் நேர்த்தியை கடைபிடிப்பார்! அந்த விஷயம் இவளைக் கவர்ந்தது!  அவரிடமிருந்து நிறைய விஷயங்களை இவளும் தெரிந்து கொண்டாள்! பொறுமையாக சொல்லியும் தருவார்!

 

அந்த அத்தை சிறிது பெரிதென  வயர்கூடைகள் நிறைய  பின்னுவார்! வாசல் தோரணம் செய்வார்! நடுவில் சோப்பு வைத்து பூக்கூடை பின்னுவார். தொலைக்காட்சியில் காண்பிக்கும் தலை அலங்காரங்களை இவளுக்கு செய்து விட்டு அழகு பார்ப்பார். சில நேரங்களில் அவர்கள் வீட்டு கட்டிலுக்கு அடியில் தான் இவள் இருப்பாள்...🙂

 

இப்படியிருக்க ஒருநாள் காலை நேரம் பள்ளிக்குத் தயாராகும் வேளையில் எதிர்வீட்டு அத்தை தலை பின்னி விட்டால் தான் ஸ்கூலுக்கு போவேன் என்று இவள் அடம்பிடிக்க ஆரம்பித்தாள்...🙂 அம்மா பின்னி விட்டாலும் அந்த அத்தை பின்னி விட்டால் தான் ஆச்சு என்று சொல்லி அழவே அம்மாவிடம் முதுகில் ரெண்டு அடியும் வாங்கிக் கொண்டாள்! 

 

ஒருவழியாக அந்த வீட்டு அக்கா, அண்ணாவை பள்ளிக்கு அனுப்பி விட்ட பின் இவளுக்கு அத்தை இறுக்கமாகவும், பிசிறு இல்லாதவாறும் பின்னி விட்டார்! மனதுக்கு திருப்தி ஏற்படவே அதன் பின்பே பள்ளிக்குக் கிளம்பினாள்..🙂 இப்படியும் சில நாட்கள்..🙂

 

இன்னும் என்னவெல்லாம் செய்தாளோ இந்தப் பெண்..🙂 அடுத்த பகுதியில் சொல்கிறேனே!

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

18 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. குழந்தைப் பருவம் கவலைகள் அற்ற பருவம்.... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. அதேசமயம் உரிமையோடும் பழகி வந்தார்கள். ஒருவருக்கொருவர் உறவு முறை சொல்லி அழைத்துக் கொள்வதும் உணவுகளை பகிர்ந்து கொள்வதும், சேர்ந்து சினிமாவுக்கு, பொருட்காட்சிக்கு, கோவிலுக்கு எனச் செல்வதும், பக்கத்து வீட்டு குழந்தையைக் கூட கண்டிக்கும் உரிமையோடு இருந்த சூழலில் தான் அவளும், அவள் தம்பியும் வளர்ந்தார்கள்.//

  யெஸ் யெஸ் ஆதி. எங்கள் ஊரிலும் உறவு சொல்லித்தான் அழைப்பது. இப்போதும் கூட நான் அவர்களை அப்படித்தான் சொல்வது அது போல என் ஊரிலுள்ள உற்றத் தோழியின் குழந்தைகள் என்னைப் பெரியம்மா என்று அல்லது அத்தை என்று அழைப்பது வழக்கம்.

  ஆமாம் உரிமையுடன் கண்டிப்பார்கள். அப்போதெல்லாம் நீ யாரு என் வீட்டுக் குழந்தையைக் கண்டிக்க என்று சொன்னதே கிடையாது. அதுவும் என் பாட்டியும், மாமாவும் ஊருக்கே உபதேசம் செய்பவரள் மாமா ஆசிரியர். காலையில் 6 மணிக்கு மேலும் திண்ணையில் பசங்க தூங்கிக் கொண்டிருந்தால் எழுப்பி விட்டுவிடுவார். யாரும் எதுவும் சொன்னது இல்லை. இப்போதெல்லாம் வீட்டிற்குள்ளேயே அத்தை மாமா, சித்தப்பா பெரியப்பா பெரியம்மாக்கள் கூடத் திருத்தினால் அது தப்பாகிவிடுகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உரிமையுடன் பழகிய அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் இப்போதெல்லாம் அரிதுதான். உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 3. ஹாஹாஅ நீங்கள் எதிர்வீட்டில் செய்தது போல எங்கள் வீட்டில் வளர்ந்த ஊர்க் குழந்தைகளும் உண்டு.

  இனிய பருவம் தான் இல்லையா.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழந்தைப்பருவம் இனிமையானதுதான். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. // ஒரு சில விஷயங்கள் எத்தனை வருடங்களானாலும் பாசிப்பிடித்ததைப் போல் மனதின் ஆழத்தில் படிந்து போயிருக்கும்!.. //

  உண்மை.. உண்மை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 6. மிக எஉமையான நினைவலைகள்.
  நன்றாக சொல்லி வருகிறீர்கள் ஆதி.
  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு வழி பகிர்ந்துகொண்ட நினைவலைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 7. பொன்னான காலங்கள் தொடருட்டும்........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வரும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி ராமசாமி ஜி.

   நீக்கு
 8. உங்களுக்கு அத்தை எனக்கு அக்கா பின்னினால்தான் சரிவரும் அக்கா கைக்குழந்தையுடன் இருவீடு தள்ளி தனிக்குடித்தனம் நான் காலையில் அம்மாவிடம் திட்டுவாங்கிய படியே ஓடிவிடுவேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....