அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
விடியும் வரை தெரிவதில்லை கண்டது கனவு என்று… வாழ்க்கையும் அப்படிதான். முடியும் வரை தெரிவதில்லை வாழ்வது எப்படி என்று!
******
கேதார் தால் மலையேற்றம் குறித்து, நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களது அனுபவங்களின் முதல் பதிவு நீங்கள் படித்து ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதோ இந்த நாளில் தொடரின் இரண்டாம் பகுதி! அவரது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளித்த நண்பர் ப்ரேம் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி - ஓவர் டு ப்ரேம் ஜி!
******
இரண்டாம் நாள் பயணம் (நடாலா - கங்கோத்ரி - 98 கிலோ மீட்டர்):
சென்ற பகுதியில் குறிப்பிட்டு இருந்தது போல எங்கள் பயணத்தின் முதல் நாள் இரவு நடாலா என்ற இடத்தில் தங்கிக் கொண்டோம். அடுத்த நாள், இரவு நடாலாவிலிருந்து 98 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கங்கோத்ரியில் தங்குவது என்று முடிவு செய்திருந்தோம். எனவே, நாங்கள் எங்கள் வழக்கமான நேரத்தில் நடாலாவிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். நடாலா கிராமம் சாலையோரத்தில் உள்ள ஒரு அழகான குக்கிராமம். கிராமத்தின் அருகிலேயே பாகீரதி ஆறு கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. காலையில் அந்த இடத்தையும் அதன் சுற்றுப்புறத்தையும் ரசித்ததோடு சில நிழற்படங்களும் எடுத்துக் கொண்டோம். நடாலாவில் காலை உணவை முடித்துக் கொண்டு, சுமார் 9.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டோம். மலைகளின் இயற்கை எழில் கொஞ்சும் பசுமையான காடுகள், புல்வெளிகள், ஓடைகள் மற்றும் வழியில் எதிர்கொள்ளும் அழகான குக்கிராமங்கள் என பார்க்கும் காட்சிகள் அனைத்தும், எங்களை வசீகரித்துக்கொண்டே இருந்தன.
சுமார் 11.30 மணியளவில், கங்னானி என்ற இடத்தில் அமைந்திருக்கும் வெந்நீர் ஊற்று பகுதிக்கு வந்து சேர்ந்தோம். வெந்நீர் ஊற்று என்பதால் அங்கேயே குளிப்பதற்கு முடிவு செய்து, வாகனத்திலிருந்து இறங்கினோம். அரை மணி நேரம் அங்கேயே களைப்பு தீரக் குளித்து புத்துணர்வு பெற்றோம். நண்பகலில், நாங்கள் கங்னானியிலிருந்து மலைச் சிகரத்தில் மேல்நோக்கிய பயணத்தைத் தொடங்கினோம், வழியெங்கும் மனதைக் கவரும் விதமான காட்சிகள் கொண்ட பாதையில் பயணித்தது மனதுக்கு பூரண மகிழ்ச்சியை அளித்தது. தொடர்ந்து பயணித்து சுமார் 01.00 மணியளவில் ஜாலா எனும் அழகிய கிராமத்தினை வந்தடைந்தோம். அந்த கிராமத்திலேயே எங்களுடைய மதிய உணவை முடித்துக் கொண்டு மதியம் 01.30 மணியளவில் அங்கிருந்து கங்கோத்ரி நோக்கி புறப்பட்டோம் .
கங்கோத்ரி செல்லும் வழியில், ஹர்சில் என்ற பெயர் கொண்ட அழகான, அமைதியான குக்கிராமம் மற்றும் ஒரு கன்டோன்மென்ட் பகுதி உண்டு. இந்தப் பகுதிகளை இப்போதைக்கு தவிர்த்து எங்கள் பயணத்தினை முடித்து திரும்பும்போது பார்த்துக் கொள்ளலாம் என முன்னேறி இருந்தோம். ஒன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு மதியம் 3.00 மணியளவில் நாங்கள் கங்கோத்ரியைச் சென்று அடைந்தோம். கங்கோத்ரி பகுதியில் நாங்கள் தங்குவதற்கு உண்டான தங்குமிடத்தை வாடகைக்கு எடுத்துக் கொண்டதோடு வரவிருக்கும் செங்குத்தான மற்றும் சவால்களைக் கொண்ட மலையேற்றத்தினைக் கருத்தில் கொண்டு, அந்தப் பாதையை நன்கு அறிந்த ஒரு நேபாள வழிகாட்டி/சுமைதூக்கி நபரையும் எங்களுடன் பயணிக்க பணியமர்த்தினோம். அடுத்த நாளின் மலையேற்றத்திற்கு எங்களை பழக்கப்படுத்திக்கொள்ள கங்கோத்ரியின் எதிர்புறத்தில் உள்ள மலையின் மேல்நோக்கி ஒரு பொழுது போக்காக அந்த மாலையில் நடந்தோம். அடுத்த நாள் கேதார் தால் செல்லும் மலையேற்றப் பாதையும் அதுவாகவே இருந்தது. நடைபழகிய பிறகு மாலையில் புகழ்பெற்ற கங்கோத்ரி நகரில் அமைந்திருக்கும் கோவிலுக்குச் சென்று தரிசனம் கண்டு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியை வேண்டினோம். அதன் பிறகு, தங்கும் அறைக்குச் சென்று ஓய்வெடுத்துக் கொண்டோம் - அடுத்த நாள் மலையேற்றத்திற்கு இந்த ஓய்வு மிகவும் அவசியமாகவே இருந்தது!
எங்கள் பயணத்தின் மூன்றாம் நாள் அன்று காலை சுமார் 7.30 மணியளவில், நாங்கள் எங்கள் காலை உணவை முடித்துக் கொண்டு கேதார் தால் மலையேற்றத்திற்கான தொடக்கப் புள்ளியான கங்கோத்ரியிலிருந்து புறப்பட்டோம். மூன்றாம் நாள் பயணம், மலையேற்றம் எப்படி இருந்தது என்பதை அடுத்த பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ந்து மலையேற்றத்தில் எங்களுடன் வருவதற்கு வேண்டுகிறேன்.
ப்ரேம் Bபிஷ்ட்
******
நண்பர் ப்ரேம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம். பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
த்ரில்லான ஒரு அனுபவம் வரும் சமயம் தொடரும் போட்டாச்சு!! தொடர்வோம். வழிகாட்டி அமர்த்திக்கொள்வதெல்லாம் புதிய செய்தி. அவர்களுக்கெல்லாம் எவ்வளவு கொடுக்க வேண்டி இருக்கும்? (என்னவோ இவன் அங்கு போறா மாதிரியே கேட்கிரானே, ன்று நினைக்க வேண்டாம்... சும்மா தெரிந்து கொள்ள!!)
பதிலளிநீக்குசெல்லும் இடத்தினைப் பொறுத்து கட்டணம் இருக்கும். ஒரு நாளைக்கு எவ்வளவு என்றோ மொத்த பயணத்திற்கு இவ்வளவு என்றோ பேசிக் கொள்ளலாம் ஶ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வழிகாட்டி இல்லாமல் போக முடியாது ஶ்ரீராம். மலைப்பாதையில் வழி தவறிவிட்டால்?அதோடு மலை ஏற்றத்தின்போது அவங்க வெகு எளிதாகச் சுமையைத் தூக்கிக் கொண்டு நடப்பார்கள். நம்மால் முடியாது. கயிலைப் பயணத்தின்போதும் பரிக்ரமா செல்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு வழிகாட்டி, ஒரு குதிரைக்காரர்/சுமை தூக்க ஒருத்தர் எனத் தேவைப்படும். வழிகாட்டி நம்மை மலை ஏற வேண்டிய இடங்களில் குதிரையிலிருந்து இறக்கிக் கையைப் பிடித்து அழைத்துச் செல்வார். சுமைதூக்கி சாமான்களைத் தூக்கிக் கொண்டு நம்முடன் வருவார். குதிரைக்காரர் குதிரையை அந்தப் பாதையில் குதிரைகள் இறங்கும்/ஏறும் இடத்திற்குச் சென்று அடுத்துச் செல்ல வேண்டிய இடத்துக்கு வெகு விரைவில் கொண்டு போய்விடுவார். நாம் அங்கே போய்ச் சேர்ந்து கொள்ளலாம். பின்னர் குதிரையில் பயணம்/நடை எனமாற்றி மாற்றி வரும்.
நீக்குஇப்போதெல்லாம் எவ்வளவோ மாறி இருக்கும். நாங்க போய்விட்டு வந்து பதினாறு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டன.
நீக்குநீர்வீழ்ச்சி என்றாலே மனம் கொண்டாட்டம் தான்...
பதிலளிநீக்குஆமாம் தனபாலன். பார்த்த உடன் பரவசம் அடைந்து விடும் இடம்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பயண அனுபவம் அருமை சுவாரஸ்யமாக செல்கிறது ஜி
பதிலளிநீக்குபயண அனுபவம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வித்தியாசமான அனுபவம். ரசித்துக்கொண்டே வருகிறேன்.
பதிலளிநீக்குதொடர்ந்து ரசிப்பதில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபடங்களே சொல்கிறது இடங்கள் எத்தனை அழகுஎன்று. அந்த ஹொக்கேனக்கல் போல இருப்பது சூர்யகுண்ட்..கங்கோத்ரி பகுடி என்று தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குஹர்சில் அருகே அருவி எல்லாம் அழகு. thrilling and enjoyable trip!!
கங்கோத்ரி போக வேண்டும் என்று நினைத்ததுண்டு. சில வருடங்களுக்கு முன். ஆனால் அப்போது கேதார் தால் தெரியவில்லை. பின்னர் அது மலையேற்றப்பகுதி என்று தெரிந்தது. அழகான இடம். அட பரவாயில்லையே வழிகாட்டி இருப்பது நல்ல விஷயம் தான்.
அருமையான பயணம். ரசித்துத் தொடர்கிறேன். குறித்தும் கொண்டிருக்கிறேன். உங்கள் நண்பருக்கு நன்றி சொல்லிவிடுங்கள். கூடவே உங்களுக்கும் நன்றி ஜி. இங்கு மொழிபெயர்த்து தருவதற்கு
கீதா
பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் குறித்த தங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மிகவும் அருமையான பயணம். சுவாரசியமாகவும் இருக்கிறது. அடுத்து மலையேற்றம் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளும் ஆவல். தொடர்கிறேன்
பதிலளிநீக்குதுளசிதரன்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி.
நீக்குஅழகிய இடங்கள். மனதுக்கு இதம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.
நீக்குபரவச பயணம் ...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அனுப்ரேம் ஜி.
நீக்குகங்கோத்ரி,யமுனோத்ரி போக நினைச்சும் போக முடியலை. இனி நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது.:)
பதிலளிநீக்கு