சனி, 5 மார்ச், 2022

காஃபி வித் கிட்டு - 143 - TULIP பூக்கள் - தென்னிந்தியாவிலும் பனிப்பொழிவு - தொடர் பதிவு - பசலை - உயிரோவியம் - கூச்சம் - நிலவு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பகுதி இரண்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எத்தனையோ மேதைகளை உருவாக்கி பெருமையுடன் உயர்ந்து நிற்கும் பள்ளிக்கூடம், வாக்குச் சாவடியான பின்பு, ஒரு உத்தமனைக் கூட உருவாக்க முடியாமல் உடைந்து போகிறது :(

 

******

 

இந்த வாரத்தின் நிழற்படம் - TULIP பூக்கள் :



 

ஜனவரி கடைசி, ஃபிப்ரவரி மாதம்  TULIP பூக்களுக்கான காலமாக தலைநகரில் இருக்கிறது.  பல சாலை சந்திப்புகள், பூங்காக்கள் என பல இடங்களில் இந்த பூக்கள் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கின்றன.  சில பூங்காக்களுக்குச் சென்றாலும் பெரிதாக படம் எடுக்கவில்லை.  சாலை சந்திப்புகளிலும் நின்று படம் எடுக்கத் தோன்றவில்லை.  சென்ற சில வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் மதிய நேரம் நண்பர்கள் சிலர் குடும்பத்துடன் டால்கட்டோரா பூங்காவில் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம்.  அதிக குளிரும் இல்லாமல் அதிக வெய்யிலும் இல்லாமல் இருக்கும் இந்த நாட்கள் இப்படியான சந்திப்புகளுக்குச் சிறந்தது.  அப்படி ஒரு ஞாயிற்றுக் கிழமை பூங்கா சென்ற போது எடுத்த ஒர் நிழற்படம் மேலே!

  

******

 

இந்த வாரத்தின் தகவல் - தென்னகத்திலும் பனிப் பொழிவு :


 

இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதை உங்களில் பலரும் அறிந்திருக்கலாம்.   ஆனால் தென்னிந்தியாவிலும் ஒரு இடத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்ற தகவலை நீங்கள் அறிந்ததுண்டா?  தென்னகத்தில் ஜீரோ டிகிரிக்கும் கீழே தட்பவெப்பம் இருக்கும் ஒரு இடம் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்களா?  விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் லம்பாசிங்கி (LAMBASINGI) எனும் இடம் தென்னகத்தின் கஷ்மீர் என்று அறியப்படுகிறது என்று ஒரு தகவலை இந்தத் தளத்தில் படித்தேன்.   அழகான இடம் என்று தெரிகிறது.  இந்த இடத்தினை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா?  வாய்ப்பு கிடைத்தால் சென்று வரலாம் என்று தோன்றுகிறது! இந்த இடத்தின் அருகாமையில் அருவி, காஃபித் தோட்டங்கள் போன்றவையும் உண்டு என்பது கூடுதல் தகவல்.  இரண்டு மூன்று நாட்கள் சுற்றுலாவாக இந்தப் பகுதிக்குச் சென்று வரலாம்!

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி: ஒன்றிலிருந்து பன்னிரெண்டு வரை [தொடர் பதிவு]

 

2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - ஒன்றிலிருந்து பன்னிரெண்டு வரை [தொடர் பதிவு]

 

வலையுலகில் நிறைய தொடர் பதிவுகள் வெளிவந்து கொண்டிருந்த நாட்கள் உங்களில் நினைவில் இருக்கலாம். தொடர் பதிவுகளை எழுத அழைப்பு வந்தாலே பயம் வந்த நாட்கள் கூட உண்டு! ஹாஹா…  2012-ஆம் ஆண்டில் இதே நாளில் இப்படி ஒரு தொடர் பதிவு எழுதி வெளியிட்டு இருந்தேன். அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  



 

1977-ஆம் வருடம் - எனக்கு அப்ப 6 வயது.  அப்பாவும் அம்மாவும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் நடத்தும் துவக்கப்பள்ளியில் என்னை முதலாம் வகுப்பில் சேர்த்து விட்டார்கள் அதே பள்ளியில் எனது அக்காவும் படித்ததால்! முதல் வகுப்பில் எனக்கு வகுப்பு ஆசிரியர் திருமதி நாமகிரி.  அவர்களுக்கு குழந்தைகள் இல்லாத குறையே தெரியாமல் எங்களையே குழந்தைகளாகப் பாவித்தவர்.  பாதி நாட்கள் எனது வகுப்பில் இருந்து அழுதபடியே ஓடி அக்காவின் வகுப்புக்குச் சென்றுவிடுவேன்.  அவளும் ஒவ்வொருமுறையும் எனது வகுப்பில் அலுக்காமல் கொண்டு வந்து விடுவாள்.  இப்படி ஓடிப்போவது குறைந்தது ஒரு மாதமாவது நடந்திருக்கும் என அக்கா சொல்வாள்! 

 

பிறகு ஒரு பிடிப்பு வந்து என் வகுப்பிலேயே அமர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.  ஒவ்வொரு நாளும் காலையில் அம்மா கொடுக்கும் மதிய உணவினை [சாம்பார் சாதம், தயிர் சாதம் என்று தினமும் ஏதாவது ஒன்று] ஒரு அலுமினிய தூக்கிலும், பாடப் புத்தகங்களை ஒரு அலுமினிய பெட்டியிலும் எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பி ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் என்.எல்.சி. துவக்கப்பள்ளி, வட்டம்-18 செல்வேன்.  முதல் ஐந்து வகுப்புகளில் ரொம்ப சமத்து நான்.[அதற்குப் பிறகு தான் வால் முளைத்ததோ!]  எந்த விஷமமும் செய்ய மாட்டேன் என அம்மா இப்போதும் கூட சொல்வார்கள்…  ரொம்ப பொறுமைசாலி எனச் சொல்லி, அதுவும் இரண்டாம் வகுப்பு படித்தபோது பள்ளி ஆண்டு விழாவில் கல் பொறுக்கிப் போடும் ஒரு விளையாட்டில் பொறுமையாக பொறுக்கியும் மூன்றாம் பரிசாக, ஆரஞ்சு வண்ணத்தில் ஒரு பிளாஸ்டிக் கிண்ணம் [அதை பிச்சைக்காரன் கிண்ணம் என மற்றவர்கள் சொன்னது வேறு விஷயம்] பரிசாகக் கிடைத்ததை  அடிக்கடிச் சொல்வார்கள்.  [பல வருடம் அந்தக் கிண்ணத்தை  அம்மா வைத்திருந்தார்கள்]

 

முழு பதிவினையும் மேலே கொடுத்திருக்கும் சுட்டி வழி படித்து ரசிக்கலாம்! 

 

******

 

இந்த வாரத்தின் வலைப்பூ அறிமுகம் - அந்தமான் தமிழ் நெஞ்சன் :

 

இந்த வாரம் கம்பராமயணம் குறித்து தேடிய போது இந்த வலைப்பூவை பார்க்க நேர்ந்தது.  சில பதிவுகளை படித்த போது அந்தமான் தீவில் துறைமுகப் பணியில் பொறியாளரான என் தமிழ் இலக்கிய தாகத்தின் வடிகால் தான் இந்த வலைப்பூ என்ற அவரது அறிமுகம் பார்க்க நேர்ந்தது.  ஆஹா அந்தமான் வாசி என்றதுமே மனதில் எனது அந்தமான் பயணம் நினைவுக்கு வந்தது.  தமிழ் மீது பற்றுக் கொண்ட இந்த மனிதர் எழுதிய பதிவுகள் ரசனைக்குரியதாக இருக்கிறது.  அப்படி ஒரு பதிவு பசலை குறித்த பதிவு - இலக்கியலிருந்து பசலை குறித்து சில எடுத்துக்காட்டுகளை எடுத்துக் காட்டியிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி என்கிற இந்த வலைப்பதிவாளர்.  கையும் ஓடலை காலும் ஓடலை = பசலை என்ற தலைப்பிட்ட பதிவை கீழே உள்ள சுட்டி வழி படித்து ரசிக்கலாம்!

 

கையும் ஓடலை காலும் ஓடலை = பசலை

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த ஓவியம் - உயிரோவியம் :




 

Biswaal. the artist என்ற ஒரு ஓவியக் கலைஞரின் முகநூல் பக்கத்தை அவ்வப்போது பார்ப்பதுண்டு (நன்றி தோழி ஸ்ரீமதி ரவி).  சில ஓவியங்கள் உயிரோட்டத்துடன் இருப்பதைப் பார்க்கும்போதே அவரின் திறமை வியக்க வைக்கும். சமீபத்தில் பார்த்து ரசித்த அவர் வரைந்த ஓவியம் இரண்டு மேலே! எத்தனை சிறப்பாக வரைந்திருக்கிறார் பாருங்களேன். 

 

******

 

இந்த வாரத்தின் ரசித்த நகைச்சுவை - கூச்சமா இருக்கு :



*****

 

இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம் - நிலவு

 

நிலவு யாருக்குத் தான் பிடிக்காது! இந்த நிலவும் உங்களுக்குப் பிடிக்கலாம்! நான் பார்த்து ரசித்த இந்த நிழற்படத்தினை நீங்களும் பாருங்களேன். 


 

*****

 

இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

48 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மதுரைத்தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  2. சிறு வயதிலும் அந்த உயரமும், முகமும் காட்டிக் கொடுக்கிறதே... 

    ஓவியங்கள் இரண்டுமே டாப்.  இரண்டாவது ரொம்ப... 

    புகைப்படம் :  நிலவுக்கு ரயில் விட்டது மாதிரி இருக்கிறது!   

    சி தி சி எப்பவுமே சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. விசாகப்பட்டினம் அருகே உள்ள தென்னாட்டுக் காஷ்மீர் பற்றிய தகவல் புதிது. இப்போத் தான் தெரியும். அது சரி, நம்ம ஊட்டியெல்லாம் இந்தக் கணக்கில் வராதா? அங்கேயும் டிசம்பர்/ஜனவரி மாதங்களில் உறைநிலைக்குக் கீழே போனது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊட்டியில் பனிப்பொழிவு இருப்பதில்லை. இந்தத் தென்னாட்டு கஷ்மீர் தகவல் எனக்கும் புதியதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
    2. அப்படீங்கறீங்க?????????? !!!!!!!!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    3. ஸ்னோ ஃபால் இல்லையே....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதாம்மா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பல தளங்களில் ரோபோ தொல்லை தான்.... :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  5. பூவின் மொட்டு அழகு
    லம்பாசிங்கி புதிய தகவல்
    ஆறு வயது படம் சூப்பர்
    ஓவியங்கள் மிகவும் அழகாக இருக்கிறது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. இன்றைய பதிவு அழகு.. ஓவியங்களும் நிலவுக்குச் செல்லும் ரயிலும் அருமை..

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் பதிவு வழி பகிர்ந்த தகவல்களும் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. //தென்னகத்தின் கஷ்மீர்”//
    அருமையாக இருக்கே! நம் பிள்ளைகளிடம் சொல்லலாம்.
    சிறு வயது படம் , சிறு வயது பள்ளி
    பருவ நினைவுகள் அருமை. நிலவு படம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தென்னகத்தின் கஷ்மீர் குறித்த தகவல் பலனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி தான் கோமதிம்மா.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. அந்தமான் வாசி நகைச்சுவையாக எழுதி இருக்கிறார். பசலை திருக்குறள் பகிர்வு நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பூ அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. அனைத்து தகவல்களும் மிக சிறப்பு ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  10. அனைத்தும் அருமை. உங்கள் பள்ளி நாள்கள் என் பள்ளி நாள்களை நினைவுபடுத்தின. தென்னகத்துக் காஷ்மீர் என்பதை இப்போதுதான் அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்கள் நினைவலைகளை மீட்டு எடுக்க உதவியதில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. சிறு வயது படம் மற்றும் நினைவுகள் அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. ஓவியம் அருமை. நிலாப் படம் கவர்கிறது. தென்னகத்தின் கஷ்மீர் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. அனைத்தும் அருமை...

    பசப்புறுதல் / பசப்புறுபருவரல் எனும் அதிகாரம் உண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகத் தகவல்கள் சிறப்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. உங்கள் சிரிய வயது படம் அருமை வெங்கட் ஜி.பள்ளி நிகழ்வுகளும் மற்றும் அனைத்து பதிவுகளும் சுவாரிசியமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  15. வாசகம் மிகவும் வித்தியாசமான சிந்தனையுடன்!! அருமை. ரசித்தேன்.

    ஹையோ வெங்கட்ஜி! நான் விசாகப்பட்டினம் சென்ற போது என்னெல்லாம் பார்க்கலாம் என்று நான் வழக்கம் போல் லிஸ்ட் போட்டு (இன்னும் பதிவு எழுதவே இல்லை!!!!! எழுதத் தொடங்கி பதிவு அப்படியே உள்ளது தொடராமல்...படங்களும் நிறைய உள்ளன..) அதில் இந்த லம்பாசிங்கி லிஸ்டில் இருந்தது ஆனால் போக நினைத்து போகமுடியாமல் என்றும் சொல்லியிருக்கிறேன்...பதிவு வெளியிடவே இல்லை!! நாங்கள் சென்றது மே மாதம் எனவே இங்கும் செல்லலாம் என்று நினைத்து...அதன் பின் அங்கு குளிர்காலத்தில் குளிர் அதிகம் இருக்கும் என்று தெரிந்ததால் குளிர்காலத்தில் போக ஆசைப்பட்டு அதுவும் நிறைவேறவில்லை. இப்போது நீங்கள் இங்கு சொல்லியிருப்பதைப் பார்த்ததும் மீண்டும் நினைவுக்கு வந்துவிட்டது...குளிரிலும் போக வேண்டும் கோடையிலும் போக வேண்டும் என்று ஒரு ஆசை - ஆசையை அடக்கு கீதா என்று சொல்லிக் கொண்டே ...ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லம்பாசிங்கி செல்ல வேண்டும் என்ற உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள் கீதா ஜி. பதிவு/வாசகம் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. நீங்கள் சொல்லியிருக்கும் தளத்திற்கும் சென்று பார்க்கிறேன்.

    லம்பாசிங்கியின் இப்போதைய வெதர் இங்கு பங்களூர் போல இருக்கிறது.

    புதிய வலைத்தளத்தைக் குறித்துக் கொண்டுள்ளேன் ஜி. நேரம் தான் சிரமமாக இருக்கிறது.

    ஓவியம் மிக மிக அருமை

    6 வயது வெங்கட்ஜி வெரி க்யூட்!! ஜாடை நன்றாகத் தெரிகிறது. பதிவையும் வாசிக்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது தளங்களை பாருங்கள் கீதா ஜி.

      நேரப் பற்றாக்குறை - உண்மை தான். சூழல் இங்கேயும் சரியில்லை. விரைவில் சரியாகும் எனத் தோன்றவில்லை.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  17. பூ, உங்களின் சிறு வயது நினைவுகள், உயிர் ஓவியங்கள் எல்லாமே சிறப்பாக உள்ளது.

    தென்னகத்தின் காஷ்மீர்? அதிசயம் ஆச்சரியம். இதுவரை கேள்விப்பட்டதில்லை இந்த இடத்தினைப் பற்றி.

    வாசகம் சிந்தனையைத் தூண்டிய வாசகம். பூப்படம் அழகு. துலிப் பூ எங்கள் வீட்டிலும் இருந்தது.

    நகைச்சுவையை ரசித்தேன்.

    நிலவு!! படம் வியக்க வைக்கிறது! ஃபோட்டோ டெக்னிக் செய்திருப்பார்களோ?

    அனைத்தும் ரசித்தேன் வெங்கட்ஜி

    துளசிதரன்



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நிலவு படம் - ஃபோட்டோ டெக்னிக் - இருக்கலாம்! ரசனை சிறப்பாக இருந்ததால் பகிர்ந்து கொண்டேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  18. ஒவியங்கள் வெகு அழகு! என்ன ஒரு கைவண்ணம்!!

    சிரிப்புத் திருடன் சிங்காரவேலன் - சிரித்துவிட்டேன்!!

    நிலவு வாவ்!! எப்படி இப்படி? சில ஆங்கிள் பார்த்து கையில் தாஜ்மஹல், மும்பை கேட் வே ஆஃப் இந்தியா இருப்பது போல் என்றெல்லாம் எடுப்பதுண்டுதான் ஆனால் இது வித்தியாசமாக...ஃபோட்டோ ஷாப் யூஸ் பண்ணியிருப்பாங்க போல...ஆனால் மிகவும் ரசித்தேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியங்கள், சி.தி.சி. மற்றும் நிலவு படம் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. நிலவு - ஃபோட்டோ ஷாப் வேலையாக இருந்தாலும் ரசனையாக செய்திருக்கிறார்கள் என்பதால் பகிர்ந்தேன் கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  19. நிலவு புகைப்படம் மிகவும் யோசிக்க வைத்தது எப்படி இப்படி செய்திருப்பார்கள் என்று.!! நல்ல ரசனையும் புகைப்பட டெக் கும் செம

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  20. முதல் பார்வை நிலவுக்குத் தான்.
    எத்தனை அற்புதமான புகைப்படம். நிலவுக்குப் போவோம்!!!
    லம்பாசிங்கி அற்ப்தப் பதிவு அங்கே சென்று பார்த்தேன்.

    வெயிலுகந்த ஆந்திரப் பிரதேசத்தில் இப்படி ஒரு மலைப் பிரதேசமா.
    மிக அதிசயமாக இருக்கிறது.நன்றி மா.
    இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலவு படம் சேர்க்கும்போதே உங்களுக்குப் பிடிக்கும் என நினைத்துக் கொண்டேன் வல்லிம்மா.

      பதிவு குறித்த கருத்துரை கண்டு மகிழ்ச்சி. லம்பாசிங்கி - நல்ல இடமாகத் தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  21. சிரிப்புத் திருடன் சிங்காரவேலு சூப்பர்ப்.

    உங்களது புகைப்படமும் பள்ளி நினைவுகளும்
    அற்புதம். நல்ல சிறப்புத் திறமை கொண்ட
    பையனாகத் தெரிகிறது. வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சி.தி.சி. உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      பதிவு வழி பகிர்ந்த செய்திகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  22. திரு பிஸ்வால், அவர்களின் ஓவியங்கள் மிக மிக அருமைமா.
    உயிரோவியம் என்று இதைச் சொல்வதில்
    தவறே இல்லை. அறிமுகத்துக்கு மிக நன்றி மா.

    அனைத்து எழுத்துக்கும் விவரங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  23. சிறு வயது நினைவுகள் எப்பொழுதும் இனிமை. தென்னகத்தில் காஷ்மீர் இருப்பது மகிழ்ச்சி. ஓவியங்கள் உயிரோட்டமாக, மிக அழகு. முதல் இருப்பது விசிறி சாமியார் அழைக்கப்படும் யோகி ராம்சுரத் குமார் அவர்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி காயத்ரி சந்திரசேகர் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....