செவ்வாய், 15 மார்ச், 2022

கேதார் தால், உத்திராகண்ட் - மலையேற்றம் - பயணம் - ப்ரேம் Bபிஷ்ட் - பகுதி ஐந்து

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உங்கள் கோபமும் உங்கள் மௌனமும் உங்களை பாதிக்காது…  ஆனால் உங்களை பிடித்தவர்களை பாதிக்கும் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.

 

******

 

கேதார் தால் மலையேற்றம் குறித்து, நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களது அனுபவங்களின் முதல், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பகுதிகளை நீங்கள் படித்து ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதோ இந்த நாளில் தொடரின் ஐந்தாம் பகுதி! அவரது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளித்த நண்பர் ப்ரேம் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி - ஓவர் டு ப்ரேம் ஜி!

 

******

 

ஐந்தாம்  நாள் - கேதார் கரக் - கேதார் தால் - Bபோஜ் கரக் (15 கிலோ மீட்டர்) - மலையேற்றம்



 

பயணத்தில் எங்களது நான்காம் நாள் மாலையில் மேகமூட்டமாக இருந்தது.  இரவில், லேசான மழையும் பெய்தது. அது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. மழை பெய்தால் பாதை இன்னும் கடினமாக மாறிவிடும் என்பது எங்களுக்குக் கொஞ்சம்  கவலை அளித்தது.  எனவே நாங்கள் அதிகாலை 5.00 மணிக்கே எழுந்தோம்.  அப்போதும் ஓரளவு மேகமூட்டமாக இருந்தது.  எனவே முடிந்தவரை சீக்கிரம் கேதார் தாலுக்கு சென்று விடவேண்டும் என்று முடிவு செய்தோம்.  அன்றைய மாலைக்குள் எங்கள் முந்தைய நாள் தங்கிய இடமான கேதார் கரக்கிற்கு பதிலாக Bபோஜ் கரக் வரை ஒரே நாளில் 15 கிலோ மீட்டர் மலைப்பயணம் மேற்கொண்டு முகாம் அமைக்க வேண்டும் என்று உறுதி எடுத்தோம். கொஞ்சம் சிரமமான இலக்கு தான் என்றாலும், மழை பெரியதாக இருக்கும் பட்சத்தில்  Bபோஜ் கரக் வரையான பாதை சேறும் சகதியுமாக ஆவதோடு அதிக அளவில் வழுக்கவும் செய்யும் என்பதால் இந்த முடிவு.  கூடவே வழியில் இருக்கும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகமாகி விடும் என்பதால் அவற்றைக் கடப்பது மிகவும் கடினமாகி விடும். 



 

எனவே நாங்கள் உடனடியாக சாப்பிடக்கூடிய பொருட்கள் மற்றும் மழைக்கான உடைகளை ஒரு பையில் வைத்துக் கொண்டு காலை 6.00 மணிக்கு கேதார் தால் நோக்கிய மலையேற்றத்தினை தொடங்கினோம்.  இந்த மூன்று நாட்களில் செய்த மலையேற்றத்தினை விட இந்த நாளின் மலையேற்றம் எல்லாவற்றிலும் மிகவும் கடினமாக இருந்தது. பாதை முழுவதும் பசுமை இல்லாத வறண்ட பாதை.  கூடவே பாறைகளும் தளர்வானவை என்பதுடன் பனிபடர்ந்து இருந்தது.  அந்தப் பாதையின் வழியே நாங்கள் தொடர்ந்து மலையேற்றத்தினை மேற்கொண்டோம். உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க போதுமான தண்ணீர் பாட்டில்கள் எங்கள் பையில் வைத்திருந்தோம். நாங்கள் மேலேறிக்கொண்டே சென்றபோது, வலிமையான தலசாகரின் பின்னணியில், எங்களுக்கு ஸ்வாசிப்பதில் இருந்த கஷ்டமும் அதனால் ஏற்பட்ட தாக்கத்தினையும் உணர முடிந்தது. பொறுமையாகவே மலையேற்றத்தில் தொடர்ந்து ஈடுபாடுடன் சென்று கொண்டிருந்தோம். 



 

ஒன்றன் பின் ஒன்றாக பல செங்குத்தான முகடுகளைக் கடப்பது எங்களை சோர்வை அளித்தது.  ஆனாலும் கேதார் தால் ஏரியைக் காணும் ஆர்வத்தில் நாங்கள் தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருந்தோம்.  இறுதியாக, காலை 9.30 மணியளவில் கடைசியாக ஒரு செங்குத்தான மலைமுகடைக் கடந்து, கம்பீரமான சிகரங்களுக்கு நடுவே எங்கள் கண்களுக்கு முன்னே கேதார் தால் எங்கள் கண் முன்னே காட்சியளிக்க, மலையேற்றத்தில் இருந்த அத்தனை கடினமான உணர்வையும் எங்களால் மறக்க முடிந்தது.   ஏரியின் கரையை அடைய சுமார் 100 மீட்டருக்கும் மேலாக கீழே இறங்க வேண்டியிருந்தது.  அந்த பாதை மட்டுமல்லாது, கேதார் தால் ஏரியும் பெரும்பாலும் உறைந்திருந்தது.  நாங்கள் அந்தச் சூழலில் சிறிது ஓய்வெடுத்ததோடு ஏரி மற்றும் சிகரங்களின் பின்னணியில் பல நிழற்படங்களை எடுத்தோம்.  மறக்க முடியாத பயணத்தின் நினைவுச் சின்னமாக அந்த நிழற்படங்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 


 

மனம் கவர்ந்த அந்தச் சூழலை விட்டு விலக எங்களுக்கு மனமே இல்லை என்றாலும், சுமார் 45 நிமிடங்கள் அங்கே செலவழித்த பிறகு, நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம். இது இறங்கு நோக்குப் பயணம் என்பதால் ஒப்பீட்டளவில் எளிதானதாக இருந்தது.  கூடுதலாக, எங்கே எல்லாம் முடிந்ததோ அங்கெல்லாம் பனிச்சரிவில் நாங்கள் சறுக்கியபடி இறங்க எங்களது முகாம் நோக்கிய பயணத்தில் அதிக விரைவாக இறங்க முடிந்தது.  கேதார் கரக் வரை பயணித்து அங்கே விட்டுச் சென்ற எங்கள் உடைமைகளையும் தங்கும் முகாமையும் கலைத்து பைகளில் வைத்துக் கொண்டு Bபோஜ் கரக் வரை பயணித்தோம்நாங்கள் திரும்பி வண்ட பாதையும் செங்குத்தான சேற்றுபாதையாக இருந்தாலும் அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக எச்சரிக்கையுடன் கடந்து வந்தோம். 

 

நாங்கள் எங்கள் அன்றைய முகாமிட தேர்ந்தெடுத்த Bபோஜ் கரக் அருகே வந்தபோது, மழை தொடங்கியது.  அன்றைய தினமே கேதார் கரக்கை விட்டு புறப்பட்டு இங்கே வந்து சேர வேண்டும் என்று எடுத்த முடிவு நல்ல முடிவாக இருந்தது.  ஏனெனில் மழை பெய்த பிறகு நாங்கள் வந்த பாதையைக் கடப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும்.   இறுதியாக, 15 கி.மீ மலையேற்றத்தை உள்ளடக்கிய பயணத்தை முடித்து, எங்கள் அன்றைய இலக்கான Bபோஜ் கரக் பகுதியை அடைந்த போது மாலை 03.30 மணி.  மழையின் காரணமாக பனி உருக, அந்த மதிய/மாலை நேரத்திலும் மிகவும் குளிராக இருந்தது.  அதனால் நாங்கள் கீழே விழுந்து கிடந்த Bபோஜ் மரத்தின் சில மரக்கட்டைகளைச் சேகரித்து, அதனை எரித்து எங்களைச் சூடாக வைத்திருக்க முயற்சித்தோம்.  கூடவே கொஞ்சம் சூடான காய்கறி சூப்களையும் அருந்தினோம்.   மாலை நேரம் இருட்டிவிட, நாங்கள் அரிசியும் பருப்பும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டோம். பிறகு எங்கள் கூடாரத்தில் உறங்கத் துவங்கினோம்.  அந்த நாளின் கடினமான மலையேற்றம் காரணமாக நன்கு உறங்க முடிந்தது.  அடுத்த நாள் என்ன செய்தோம், எங்கள் பயணம் எப்படியாக அமைந்தது போன்ற விஷயங்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். தொடர்ந்து மலையேற்றத்தில் எங்களுடன் வருவதற்கு வேண்டுகிறேன். 

 

ப்ரேம் Bபிஷ்ட்

 

******

 

நண்பர் ப்ரேம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம்.  பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

20 கருத்துகள்:

  1. ஏறுவதை விட இறங்குவது சிரமம் அலலது ஆபத்தாக இருக்கும் என்று எனக்கு தோன்றும்.  அது தவறு போல...

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கு இறங்குவதும் கடினம் தான் ஸ்ரீராம். அவரவர் உடல் நிலை பொறுத்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. அன்பின் வெங்கட்,
    உங்கள் நண்பரின் மலையேற்றமும் இறங்குவதும்

    மிகவும் கடினமாக இருந்திருக்கிறது.
    உடல் நல்ல நிலைமையில் இருந்தால்
    ஒழிய இந்த முயற்சிகளும்
    பலன் தந்திருக்காது. மனம் நிறை உறுதியும்
    பொறுமையும் கட்டுப்பாடும் மிக அவசியம்.

    திரு Bஷ்ட் அவர்களுக்கு மனம் நிறை வாழ்த்துகள். அதை
    எங்களுக்குப் பகிர்ந்து கொள்ளும் உங்களுக்கு நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலையேற்றம் குறித்த பதிவு பற்றிய தங்கள் கருத்துரைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வல்லிமமா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. கடினமான மலைப்பயணத்தை மனோ தைரியத்துடன் எதிர்கொண்டிருக்கின்றனர். மலையில் ஏறுவதும் கஷ்டம் தான்/இறங்குவது அதைவிடக் கஷ்டம் என்னைப் பொறுத்த அளவில். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலருக்கு மலையேற்றம்/இறக்கம் இரண்டுமே கடினம் தான் கீதாம்மா. இம்மாதிரியான பயணங்களுக்கு மனோ தைர்யம் நிச்சயம் தேவை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. //ஒரே நாளில் 15 கிலோ மீட்டர் மலைப்பயணம்//

    கஷ்டமான விசயம் சாதிக்க நினைப்பவர்களுக்கு எதுவும் சாத்தியமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதிக்க நினைப்பவர்களுக்கு எதுவும் சாத்தியமே - உண்மையான வார்த்தைகள் கில்லர்ஜி. மன உறுதியும் ஈடுபாடும் இருந்து விட்டால் எதையும் சாதிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. வாசகம் அருமை.
    கடினமான மலையேற்றம் , மழை வேறு மன உறுதியோடு பயணம் செய்து இருக்கிறார்கள்.
    தொடர்கிறேன்.
    படங்கள் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. நாங்கள் மேலேறிக்கொண்டே சென்றபோது, வலிமையான தலசாகரின் பின்னணியில், எங்களுக்கு ஸ்வாசிப்பதில் இருந்த கஷ்டமும் அதனால் ஏற்பட்ட தாக்கத்தினையும் உணர முடிந்தது.//

    ஆமாம் இது பலருக்கும் ஏற்படும் ஆக்சிஜன் கொஞ்சம் குறையும் இடங்க்ளில்...அதற்கு மலையேற்றத்தின் போது கையில் பச்சைக்கற்பூரத்தை வைத்திருப்பது நல்லது. ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு, மலையேறும் பொது சின்ன துணியில்/கைக்குட்டையில் கொஞ்சம் போட்டுக் கொண்டு சின்ன மூட்டையாகக் கட்டி வைத்துக் கொண்டுவிட்டால் நல்லது. அது இவாப்ரேட் ஆனதும் அடுத்த மூட்டை செய்து கொள்ளலாம்.

    இல்லை என்றால் மெதுவாக நிறைய உள்ளே இழுத்து, மெதுவாக மூச்சை வெளியே விட வேண்டும். அதாவது நேராக உட்கார்ந்து கொண்டு டயஃப்ரமாட்டிக் ப்ரீதிங்க் செய்ய வேண்டும். இந்த டயஃப்ரமாட்டிக் ப்ரீதிங்க் மூச்சுப் பயிற்சியை நாம் சாதாரண நாட்களிலும் தொடர்ந்து செய்து வந்தால் இப்படியான சமயங்களில் கை கொடுப்பதோடு, மலை ஏறத் தொடங்கியதுமே ஏறும் போதே இடையிடையே இந்த மூச்சுப் பயிற்சியை செய்துகொண்டே செல்வது நல்லது. தினமுமே நடைப்பயிற்சியின் போதும் கூட....அது போல வேலை செய்யும் போதும் கூட கான்ஷியஸ் ப்ரீதிங்காக இதைப் பயிற்ச்சி செய்யலாம். செய்யும் போது நம் டயஃப்ரம் நன்றாக உப்பி, அதன் பின் மூச்சு வெளியே விடும் போது அது நன்றாக உள்ளிழுத்து வயிறு உள்ளடங்குவது வரை ...

    மூக்கின் வழி மூச்சை உள்ளிழுத்து வெளியே விடும் போது வாய் வழியே இப்படியும் இதை 5, 6 முறை ஒவ்வொரு 10, 15 நிமிடங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.

    மலையேற்றம் என்றில்லை எப்போதுமே இது நமக்கு நல்லதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உபயோகமான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி. மலையேற்றம், நீண்ட நடைப்பயணம் போன்ற சமயங்களில் இந்த மாதிரி மூச்சுப் பயிற்சி நிச்சயம் உதவும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. 15 கிமீ ப்யணம்!!!!! பயணத்தின் கடுமை தெரிகிறது. மழை, வழுக்கும் பனி உருகி தண்ணீர் வரும் எத்தனை தடங்கல்கள் இடையில்! எல்லாம் நல்லபடியாக முடிந்து போஜ் கரக் பகுதிக்கு வந்து ஓய்வு.

    //பொறுமையாகவே மலையேற்றத்தில் தொடர்ந்து ஈடுபாடுடன் சென்று கொண்டிருந்தோம். //

    இதுதான் மிக மிக முக்கியம்.

    படங்கள் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை. கேதார் தால் படம் வாவ்!! மிக மிக ரசித்தேன்.

    செங்குத்தான பகுதி என்றது எனக்கு நாங்கள் சென்ற பர்வதமலை ஏற்றம் நினைவுக்கு வந்தது. அதுவும் ஒரு பகுதி செங்குத்தான ஏற்றம். நான் மிகவும் ரசித்த பயணம்.

    அடுத்த அனுபவங்களையும் அறிய ஆவல்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பு. ஈடுபாடு இருந்தால் எல்லா விஷயங்களும் சாத்தியமே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. வாசகம் அருமை. சிந்திக்கவும் வைக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வெங்கட்ஜி உங்கள் பழைய பதிவான அய்யர் மலை இரு பகுதியும் வாசித்து விட்டேன். வாசிக்கக் குறித்து வைத்து இன்று வாசித்துவிட்டேன். நல்ல பயணம் அதுவும் தனியாக, நம்ம மூதாதையர்கள்தான் கூட வந்திருக்கிறார்கள் போல. அதுவும் குடும்பம் செம படங்கள் எல்லாம் ரசித்தேன் ஜி. எபியில் கௌ அண்ணா காத்தாடிக்காய் பத்தி நீங்களும் சொல்லியிருக்கீங்க என்று சொல்லியதும் குறித்து வைத்திருந்தேன் இன்று வாசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது பக்கத்தில் முன்பு வெளியிட்ட அய்யர் மலை பதிவுகளையும் வாசித்தது அறிந்து மகிழ்ச்சி கீதா ஜி. நல்லதொரு அனுபவம் அந்தப் பயணம் - நினைவில் என்றும் நிலைத்திருக்கும் அனுபவமும் கூட.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. படம் அனைத்தும் சூப்பர் பனிமலை பார்த்தாலே குளிரும் போல் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....