செவ்வாய், 22 மார்ச், 2022

மங்கேத்தர் - கதை மாந்தர் - கதை எழுத வாங்க


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உங்கள் பலவீனம் தான் உங்களை அசுரத் தன்மை உள்ளவனாகவும் கோபக்காரனாகவும் மாற்றுகிறது. பலவீனம் அறிந்து அதைத் துரத்தி விடுவது தான் சரியான முடிவு. 

 

******

மங்கேத்தர்.



படம்: இணையத்திலிருந்து...
 

பகல் நேரத்தில் பரபரப்பாக இருக்கும் சிவாஜி ஸ்டேடியம் ஏர்போர்ட் மெட்ரோ ரயில் நிலையம், அந்த அதிகாலை வேளையில் மயான அமைதியில் இருந்தது. மேற்கூரையில் அமர்ந்திருக்கும் புறாக்களில் ஏதோ ஒன்று எழுப்பிய ஓசை நாராசமாக இருந்தது. 

 

புது தில்லி மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து விமான நிலையம் நோக்கிச் செல்லும் முதல் மெட்ரோ ரயில் வந்து சேர இன்னும் இருபது நிமடங்களுக்கு மேல் ஆகும் என அங்கிருந்த ஒளிரும் தகவல் பலகை ஓய்வு இல்லாமல் வரிகளை பச்சை வண்ணத்தில் ஓட்டியபடி இருந்தது. மற்ற இரயில் நிலையங்கள் போல மெட்ரோ ரயில் நிலையங்களில் பொதுவாக எந்த வித அறிவிப்பும் இருப்பதில்லை என்பதால் இந்த அமைதி சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்! பரபரப்பு இல்லாத இரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்றவை யாருக்குத் தான் பிடிக்கும்?

 

நடைமேடையின் ஒரு ஓரத்தில் இருந்த உழைப்பாளி இல்லாத தூசியை பெருக்கிக் கொண்டிருந்தார். "உன் கடமை உணர்வுக்கு எல்லையே இல்லையா?" என அவரிடம் கேட்கலாம்.  

 

அந்தத் தனிமையான சூழலில், "தனியே தன்னந்தனியே நான் காத்து காத்து நின்றேன்" என்ற பாடலை முணுமுணுத்துக் கொண்டே, நிற்காமல் நான் உட்கார்ந்திருந்தேன்.. நான் தீபக்…  தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இளைஞன்.  திருமணத்திற்கான கனவுகளுடன் காத்திருக்கும் இளைஞன்.

 

அங்கே நிலவிய அமைதியைக் குலைக்கும் விதமாக, படிக்கட்டில் தனது ஹை ஹீல்ஸ் செருப்பு "டக் டக் டக்" என சப்திக்கும்படி நடந்து வந்தாள் ஒரு ஜீன்ஸ் - டாப்ஸ் அணிந்த தேவதை. அந்த காலை நேரத்தில் இப்படி அதிகமான அலங்காரம் தேவையா இந்த அழகான தேவதைக்கு என யோசித்தபடியே பார்வைக்கணகளை அவள் மீது வீசியபடி இரயில் நிலைய இருக்கைகளில் அமர்ந்து இருந்தேன். மனதின் ஒரு ஓரத்தில், இந்த அமைதியான சூழலில், யாரும் இல்லாத நேரத்தில், இந்த தேவதை என்னருகே வந்து அமர்ந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையில் சிறகடித்துக் கொண்டிருந்தேன்.  என் கற்பனையில் உதித்தது அவளுக்கு எப்படிக் கேட்டதோ?  அவள் என் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.  அவளிடமிருந்து வந்த நறுமணம் என்னை ஏதோ செய்தது. 

 

பக்கத்தில் அமர்ந்த பிறகு திரும்பி அவளைப் பார்ப்பது அவ்வளவு சரியல்லவே.  காலை நேரத்தில் இருந்த தனிமையைப் போக்க அவளிடம் பேச்சுக் கொடுக்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தேன்.  ஆனால்.

 

ஆனால்,அந்த அமைதியான சூழலைக் குலைக்கும் விதமாக விசும்பல் ஒலி…  திரும்பினால் அந்த தேவதை அழுது கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் இரயிலைப் பிடிக்க யாரேனும் வந்தால், என்னையும் என் பக்கத்தில் அமர்ந்து அழுது கொண்டிருந்த தேவதையையும் பார்த்து என்ன நினைப்பார்களோ என்ற கவலை எனக்குள் வந்து குடி கொண்டது.  எதற்காக இந்த அழுகை என்று கேட்கலாமா, வேண்டாமா என்ற குழப்பமும் என்னுள் வந்து விட்டது.  சரி என்ன ஆனாலும் பரவாயில்லை, கேட்டுவிடுவோம் என முடிவு செய்து, அவளிடம்.

 

ஹாய், என்ன ஆயிற்று? ஏன் இந்த அழுகை? நான் ஏதேனும் உதவி செய்ய வேண்டுமா? என்றேன். 

 

தொடர்ந்து அழுது கொண்டே இருந்த அந்த தேவதையை, எதற்காக அழுகிறாள் என்று தெரியாமல் இருந்தாலும், ஏதாவது சொல்லித் தேற்ற வேண்டும் என்று தோன்றியது. அவள் எதுவும் சொல்லாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள். சிறிது நேரம் அழ விட்டு, மீண்டும் அவளிடம் கேட்டேன் - ஏதாவது உதவி வேண்டுமா?” 

 

இம்முறை, தனது அழுகைக்குக்கிடையே வாயைத் திறந்தாள் - உங்க ஃபோன் கிடைக்குமா?  என் ஃபோன் சார்ஜ் இல்லை. உடனடியாக எனது மங்கேத்தர்- (மங்கேத்தர் - திருமணம் செய்து கொள்ள நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை) அழைக்க வேண்டும் என்றாள். 

 

எனது ஃபோன்- அவளிடம் கொடுத்தபடி, உனக்கு பிரச்சனைன்னா உங்க அம்மா இல்லைன்னா அப்பாவை கூப்பிடணும்…  நீ எதுக்கு உன் மங்கேத்தர்- கூப்பிட நினைக்கிறாய் என்றேன்.  

 

அழுது கொண்டிருந்த அவள் என்னை முறைத்தபடி, உன் உதவியைக் கேட்டால் அதுக்குன்னு நீ என்ன வேணும்னாலும் சொல்லிடுவாயா? முடிஞ்சா உதவி செய் இல்லைன்னா சும்மா இரு! என்றாள் ஃபோனை திருப்பி நீட்டியபடி.

 

ஃபோன் பண்ணு என்று சொல்லியபடி அவள் பேசியதைக் கேட்க விருப்பமின்றி அங்கிருந்து சற்று தள்ளி நின்று கொண்டேன்.  இது உனக்குத் தேவையா? என்ற வடிவேலு வசனத்தை எனக்கு நானே சொல்லிக் கொண்டு! 

 

*****


ஒரு வேளை அந்த தேவதைக்குப் பிரச்சனையே அவளோட அப்பா, அம்மா தானோ? என்ன காரணமாக இருக்கும்?  என்று எனது கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டேன் - அது எந்தவித கட்டுக்களுமின்றி தறிகெட்டுப் பறந்தது!  நீங்களும் உங்கள் கற்பனையைச் சிறகடித்துப் பறக்க விடுங்கள்…  என்ன நடந்திருக்கும் என்ற உங்கள் கற்பனையை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! முடிந்தால் கதையாகக் கூட எழுதலாம்! 


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

20 கருத்துகள்:

  1. அன்புள்ள தீபக்...   கொஞ்சம் அப்படியே திரும்பிப் பாருங்கள்...  அந்த தேவதை இன்னமும் அங்குதான் இருக்கிறாளா, அல்லது உங்கள் ஃபோனுடன் பறந்து விட்டாளா என்று...!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஃபோனுடன் பறந்து விட்டாளா?// ஹாஹா..... நல்ல கற்பனை ஶ்ரீராம்.

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. நல்ல யோசனை இப்படியே கதையை தொடர வைக்கலாம்.

    மாப்பிள்ளைதான் பிரச்சனை போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் கதையைத் தொடரலாமே கில்லர்ஜி......

      தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. உங்க வீட்டுல எதிர்பார்க்கிற பவுன் போடமாட்டேங்கறாங்க, கார் வாங்கித்தர மாட்டாங்களாம்... என்றெல்லாம் கற்பனைக் குதிரையை ஓட்டலாம் என்றால், வட நாட்டில் இதெல்லாம் உண்டான்னு தெரியலையே. நம்ம ஊர்லதான் திருமணம் என்ற பெயரில் பெண்ணின் பெற்றோரை ஓட்டாண்டியாக்கும் வைபவம் நடக்கும்.

    சமீபத்தில் ஒரு பெண் (முஸ்லீம்) தன் போனில் சார்ஜ் இல்லை, என் போனைத் தரமுடியுமா ஒரு call பண்ணிக்கொள்கிறேன் என்றாள். நமக்கு எதுக்கு வம்பு என்று நான் போன் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். இதுக்கு என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட நாட்டிலும் வரதட்சணை கொடுப்பதும் வாகனங்கள் கொடுப்பதும் உண்டு. வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் தருவதும் வழக்கம்தான் நெல்லைத் தமிழன். யாரேனும் தெரியாதவர்கள் நம் அலைபேசியை கேட்டால் கொடுக்க தயக்கும் எல்லோருக்கும் வரும் ஒன்றுதான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  4. //அவள் பேசியதைக் கேட்க விருப்பமின்றி அங்கிருந்து சற்று தள்ளி நின்று கொண்டேன். “இது உனக்குத் தேவையா?” என்ற வடிவேலு வசனத்தை எனக்கு நானே சொல்லிக் கொண்டு//
    அவள் பேசியது காதில் விழுந்து இருந்தால் எதற்கு வருங்கால கணவரை அழைத்தாள் என்று தெரிந்து இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசியது காதில் விழுந்து இருந்தால்..... எதற்காக அந்த அழைப்பு என்று தெரிந்திருக்கும். உண்மைதான் கோமதிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. நான் நினைச்சதை ஸ்ரீராம் சொல்லிட்டாரே .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் அவர்கள் யோசித்ததே நீங்களும் யோசித்து இருக்கிறீர்கள். நல்லது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  6. ஹூம் நான் சொல்ல நினைத்து வந்தது ஸ்ரீராம் வேறு தினுசில் சொல்லிவிட்டார். ஹாஹாஹாஹா...கண்ணில் பட்டுவிட்டது...சரி நான் சொல்ல வந்தது இதுதான்....தீபக் பாவம். நாகரீகம் கருதி தள்ளி நின்றான். அந்தப் பொண்ணு ஃபோனோடு அப்பீட்டு!

    ஏன்னா பொண்ணு அழுகிறாள்...ஃபோன் சார்ஜ் இல்லை...தீபக் உதவி வேணுமான்னு கேட்கலைனா அவள் செய்திருப்பாள்?!! ஃபோன் கேட்டிருப்பாளோ தீபக்கிடம்? அந்தப் பொண்ணு ஏதோ கதை கட்டியிருக்கிறாள் பிரச்சனையில் மாட்டிக் கொண்டிருக்கிறாள். நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை. ஒரு வேளை அவளுக்குக் காதலன் இருக்கலாம். அவள் அம்மா அப்பா டெரர் ஆக இருக்கலாம். இப்போதைய நவீன ரொம்ப முற்போக்கு!!!!!!! யுவ யுவதிகளின் வாழ்க்கை முறையைவைத்துப் பார்க்கும் போது ஏகப்பட்ட கற்பனைகள் எழுகின்றன!!!!!! அதிகாலையில் மெட்ரோ ஸ்டேஷனில் அழுதுகொண்டு!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விதம்விதமாக கற்பனைகள் இந்த விஷயத்தில் செய்ய முடியும் தான். அலைபேசியை எடுத்துக்கொண்டு அப்பீட் ஆகியிருப்பார் என்பது சரியான சந்தேகம்தான். ஆனால் அப்படி ஆகவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  7. ஜி நீங்களே எழுதியிருக்கலாம் உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு! நீங்கள் ஆரம்பித்ததை வாசித்த போது ஆஹா செம ஸ்டார்ட்டிங்கா இருக்கே ஜி எப்படி முடிக்கப் போகிறார் என்று (தலைப்பில் "கதை எழுத வாங்க") என்று சொல்லியிருந்தது ஒரு புறம் தோன்றினாலும்,

    மௌனராகம் படம் நினைவுக்கு வந்தது. அந்த மங்கேத்தர் ஒரு வேளை மௌனராகம் கதையில் வரும் மோஹன் போல ஒரு கேரக்டராக இருப்பானா? என்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானே எழுதி இருக்கலாம் என்று சொன்ன உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி. என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  8. இன்றைய சிந்தனை - பொன்மொழி அழகு..

    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி வெளியிட்ட பொன்மொழி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  9. கதை போகும் போக்கு - காலம் போகும் போக்கு!..

    சிவனே என்று இருப்போம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் போகும் போக்கு... சிவனே என்று இருப்போம் என்று சொல்வது போல சிவனே என்று இருப்பது தான் நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  10. பர்ஃப்யும் வாசனை, ஜீன்ஸ், டக் டக் செருப்பு.
    மங்கேத்தர் பிரச்சினையா? பொண்ணு பிரச்சினையா:)

    பெண்ணென்றால் பேயும் இரங்கும். தீபக்
    எந்த மூலை.
    ஃபோனை வாங்கிக் கொள் பையா.:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பெண்ணென்றால் பேயும் இரங்கும். தீபக் எந்த மூலை?// ஹாஹா...... அதானே....

      தங்களது வருகைக்கும் ரசிக்க வைத்த கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி வல்லிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....