அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
சிலருக்கு வேண்டும்போது வேம்பும் இனிக்கும்; வேலை முடிந்து விட்டால் வெல்லமும் கசக்கும்.
******
கேதார் தால் மலையேற்றம் குறித்து, நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களது அனுபவங்களின் முதல் மற்றும் இரண்டாம் பகுதிகளை நீங்கள் படித்து ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதோ இந்த நாளில் தொடரின் மூன்றாம் பகுதி! அவரது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளித்த நண்பர் ப்ரேம் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி - ஓவர் டு ப்ரேம் ஜி!
******
எங்கள் பயணத்தின் மூன்றாம் நாள் அன்று காலை சுமார் 7.30 மணியளவில், நாங்கள் எங்கள் காலை உணவை முடித்துக் கொண்டு கேதார் தால் மலையேற்றத்திற்கான தொடக்கப் புள்ளியான கங்கோத்ரியிலிருந்து புறப்பட்டோம். மூன்றாம் நாள் பயணம், மலையேற்றம் எப்படி இருந்தது என்பதை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.
மூன்றாம் நாள் - கங்கோத்ரி - போஜ் கரக் (Bhoj Kharak) - 8 கிலோ மீட்டர் மலையேற்றம்
நாங்கள் பாகீரதி ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள பாலத்தைக் கடந்து முன்னே சென்றோம். அதன் பின்னர் சுமார் 8 கி.மீ. வரையான செங்குத்தான ஏறுமுகப் பயணத்தைத் தொடங்கினோம். பயணத்தில் நம் உடனே கேதார் கங்கா என்ற பெயர் கொண்ட ஆறும் தொடர்ந்து வருகிறது. கேதார் கங்கா கங்கோத்ரியில் கலந்து பின்னர் கீழே தொடர்ந்து செல்கிறது. , நாங்கள் மேலேறிச் சென்றபோது, கம்பீரமான தியோதார் காடுகள் வழியாக மலையேற்றம் செய்தோம். வழியில், பாகீரதி ஆற்றின் மறுபுறத்தில் உள்ள அழகான கோவில் பகுதியையும், வேறு சில காட்சிகளையும் படம் எடுத்துக் கொண்டோம்.
ஒரு மணி நேர தொடர்ச்சியான மலை ஏற்றத்தில் நாங்கள் ஃபிர் மற்றும் போஜ் (Bபிர்ச்) மரங்கள் அடர்ந்த மலைப்பகுதியைக் கடந்து சென்றோம். இந்த போஜ் மரங்களின் பெயரால் இப் பகுதி போஜ் கரக் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த மரத்தின் நீண்ட ஆயுள் மற்றும் அமைப்பு காரணமாக, பண்டைய நூல்கள் பெரும்பாலும் இந்த போஜ் மரத்தின் ஓலைகளில் எழுதப்பட்டன.
போஜ் கரக் நிலப்பரப்பு மிகவும் செங்குத்தானதாகவும் கடினமாகவும் இருந்ததால் எங்களுக்கு மலையேற்றம் மிகவும் சவாலாக இருந்தது. அவ்வப்போது, நாங்கள் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டதோடு, உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அவ்வப்போது ஒரு வாய் தண்ணீர் குடித்துக் கொண்டோம். வழியில் ஒரு சில இடங்களில் தண்ணீர் வரத்து இருக்க, அந்த இடங்களில் எங்கள் தண்ணீர் பாட்டில்களை நிரப்பி வைத்துக் கொண்டோம். அவ்வப்போது தண்ணீர் தாகத்தினை தீர்த்துக் கொள்ள இந்த தண்ணீர் அவசியமானதாகவும் இருந்தது. எங்கள் மலையேற்றம் மிகவும் கடினமாக இருந்தாலும், பனியால் சூழப்பட்ட மலைகள் மற்றும் அற்புதமான காட்சிகளைக் கண்டுகளிக்க அவ்வப்போது நின்று ரசிக்க, அந்த ஓய்வு எங்களுக்கு புதிய வீரியத்தை அளித்தது. இப்படியாக எங்கள் பயணத்தை நாங்கள் தொடர்ந்தோம்.
சற்றேறக்குறைய ஐந்தரை மணி நேர கடுமையான மலையேற்றத்திற்குப் பிறகு பனியால் மூடப்பட்ட ஒரு குறுகிய இடைவெளியுள்ள கற்சுவரை நாங்கள் வந்தடைந்தோம். மலையேற்றம் செய்பவர்களால் SPIDER WALL என்று சொல்லப்படும் அந்தப் பகுதிக்கு நேர் கீழே சமவெளி. பனியால் மூடப்பட்டிருக்கும் அந்த மலைப் பகுதியைக் கடப்பது மிகவும் கடினமான விஷயம். கொஞ்சம் தவறினாலும் பல அடிகளுக்குக் கீழே உருண்டு வீழ்ந்து விட வாய்ப்பு இருக்கிறது என்பதால் மிகவும் கவனமாகவும், பொறுமையாகவும் கடக்க வேண்டிய பகுதி அது! நாம் எடுத்து வைக்கும் ஒரு தவறான அடி கூட நம்மை நூறு அடிக்கும் கீழே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து அடிபட்டுக் கொள்ளும் வாய்ப்புண்டு என்பதால் இந்தப் பகுதியைக் கடப்பது மிகவும் சவாலானது. எனினும், நாங்கள் அந்த வழுக்கும் பனிப்பாதை வழியைக் கடந்து நிம்மதி பெருமூச்சு விட்டோம். அதைக் கடந்த பிறகு, அப்பகுதியில் சிலர் முகாம் அமைத்து இருந்ததைப் பார்க்க முடிந்தது.
மேற்கு வங்கத்திலிருந்து வந்திருந்த ஒரு மலையேற்றக் குழு தங்கள் மலையேற்றத்தினை முடித்து கங்கோத்ரி நோக்கி இறங்கிக் கொண்டிருக்கும் பாதையில் கூடாரங்கள் அமைத்து அங்கே ஏற்கனவே தங்கி இருந்தார்கள். நாங்களும் அங்கே எங்கள் கூடாரங்களை அமைத்தோம். மிகவும் அத்தியாவசமான, நல்லதொரு ஓய்வும், அங்கே இருக்கும் சிறப்பான சுற்றுச் சூழலை முழுவதும் அனுபவிக்க அந்த மாலை நேரமும் ஓய்வும் எங்களுக்குத் தேவையாக இருந்தது. மாலையில், எங்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைத்துக் கொள்ள சூடான சூப் மற்றும் திரவங்களை எடுத்துக் கொண்டோம். பிறகு நாங்கள் உறங்கச் சென்றோம். அடுத்த நாள் மலையேற்றத்திற்கு தேவையான வலிமையை அந்த ஓய்வு எங்களுக்குத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
நான்காம் நாள் பயணம், மலையேற்றம் எப்படி இருந்தது என்பதை அடுத்த பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன். தொடர்ந்து மலையேற்றத்தில் எங்களுடன் வருவதற்கு வேண்டுகிறேன்.
ப்ரேம் Bபிஷ்ட்
******
நண்பர் ப்ரேம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம். பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
பனிபடர்ந்த பாதைகள்.. பயங்கர அனுபவமாய் இருந்திருக்கும். அழகிய படங்கள், சுவாரஸ்யமான விவரங்கள்.
பதிலளிநீக்குபதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். அனுபவம் த்ரில்லிங்கான ஒன்று என்றே என்னிடம் நண்பர் கூறினார்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
அழகான படங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறது ஜி.
பதிலளிநீக்குநானும் மலையேறி வருகிறேன்...
படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி. மலையேற்றத்தில் கூடவே வருவதற்கு நன்றி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பனிபடர்ந்த ஸ்பைடர் வால் பாறைகள்....கடின பாதை .....
பதிலளிநீக்குபனிபடர்ந்த ஸ்பைடர் வால் பாதைகள் கடினமான பாதை தான் அனுப்ரேம் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாசகம் யதார்த்தம்.
பதிலளிநீக்குபடங்கள் மனதை அப்படியே லயிக்க வைக்கிறது..
//இந்த மரத்தின் நீண்ட ஆயுள் மற்றும் அமைப்பு காரணமாக, பண்டைய நூல்கள் பெரும்பாலும் இந்த போஜ் மரத்தின் ஓலைகளில் எழுதப்பட்டன.//
தகவல் அறிந்து கொண்டென்.
கீதா
வாசகமும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதகவல் பகிர்ந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஸ்பைட வால் பாறைப் பகுதி ஹையோ கொஞ்சம் கடின பாதை என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஅவர்கள் டென்ட் போட்டுத் தங்கிய இடம் வாவ். (முந்தைய ஞாயிறு பட உலா பகுதி என்று நினைக்கிறேன் டென்ட் படம் இருந்ததை வைத்தும் அறிய முடிகிறது டென்ட் போட்டுத் தங்குதல்...எல்லாம் மிகவும் முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும் என்பதும் தெரிகிறது. இவை எல்லாம் வாடகைக்குக் கிடைக்குமோ? அந்த வழிகாட்டி மூலமாகவோ? அவரே கொண்டு வருவாரோ?
கீதா
ஸ்பைடர் வால் பகுதியைக் கடப்பது கடினம் தான். கொஞ்சம் தவறினாலும் ஆபத்து!
நீக்குடெண்ட் போட்டுத் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்து கொண்டே செல்ல வேண்டும். நண்பர் வருடா வருடம் செல்வதால் அவரிடமே தேவையான உபகரணங்கள், டெண்ட் என எல்லாம் உண்டு கீதா ஜி. நிறைய விஷயங்களை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். விதம் விதமான உபகரணங்கள் - உடைகள் தேவையாக இருக்கிறது. ஒரு பதிவில் விரிவாக எழுத எண்ணம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ரொம்ப ரசித்து வாசிக்கிறேன். பிடித்த விஷயமாச்சே. என்ன அருமையான சூழலில் தங்கியிருக்கிறார்கள். கடினமான பாறையைக் கஷ்டப்பட்டுக் கடபப்து படத்தில் தெரிகிறது.
பதிலளிநீக்குஜி அடுத்து வரும் ட்ரெக்கிங்க் பயணத்திற்கு உங்களையும் நண்பர்கள் அழைத்திருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். கண்டிப்பாகப் போய் வாருங்கள் வெங்கட்ஜி. போய் வந்து உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்.
கீதா
ஏப்ரல் மாதம் ஒரு பயணம் திட்டமிட்டு வருகிறார்கள். நானும் இணைந்து கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறார்கள் - பார்க்கலாம் அந்த நேரம் எப்படி இருக்கிறது சூழல் என. சென்று வந்தால் அனுபவங்களை நிச்சயம் பகிர்ந்து கொள்வேன் கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இமயமலையில் பயணம் என்பதே அதிசயமான அற்புதமான ஒன்று. அதைப் பற்றிக் கேட்பதும் வாசிப்பதும் புல்லரிக்க வைக்கும். அப்படித்தான் பயணக் குறிப்பை வாசிக்கிறேன். படங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன கங்கோத்ரி கோயிலும் நதியும் காணக் கிடைக்காத பாக்கியமாகப் பார்த்துக் கொள்கிறேன். மிக்க நன்றி வெங்கட்ஜி.
பதிலளிநீக்குதுளசிதரன்
இந்தப் பகுதிகளில் பயணம் செல்வது அற்புதமான அனுபவம் தான். உங்களுக்கும் கிடைக்கட்டும் துளசிதரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
கங்கோத்ரிபடம் அழகு. பனிமலை, குடியில் என மனதுக்கு இதம்.
பதிலளிநீக்குபடங்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்கள் மனதில் அப்படியே நிற்கின்றது. அரிய அனுபவங்கள்.
பதிலளிநீக்குபடங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
மலை யாத்திரை மலைப்பாக இருக்கிறது.
பதிலளிநீக்குபடங்கள் மிக மிக அற்புதம். அந்தக் குளிரை எப்படித்தான் தாங்கினார்களோ.
மலைச் சிகரங்கள் பனி மூடி அற்புதமாகக்
காட்சி கொடுக்கின்றன.
கடினமான பாதைகளில் பயணம் செய்தவர்களின்
வீர முயற்சி திகைக்க வைக்கிறது.
சிறப்பான படங்கள். மிக அருமை.
குளிரைத் தாங்குவதற்கு ஏற்ற ஏற்பாடுகளுடன் செல்வார்கள் வல்லிம்மா. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்களும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.