அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
உடலில் காயம் என்றால் மருந்திடுங்கள். மனதில் காயம் என்றால் மறந்திடுங்கள்.
******
பழைய நினைப்புடா பேராண்டி: சம்பள நாள் சந்தை
2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - சம்பள நாள் சந்தை. அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
சுரங்கம், அனல்மின் நிலையம் போன்றவற்றில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதி தான் சம்பளம் கிடைக்கும் என்பதால் ஐந்தாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை இந்த சம்பள நாள் சந்தை நடக்கும். முதலாம் அனல்மின் நிலையம் செல்லும் நகர பேருந்துகள் எதிலும் இந்த சம்பள நாள் சந்தைக்குச் செல்ல முடியும். எங்களுடைய சிறிய வயதில் அதற்கான கட்டணமும் இப்போது செல்லாத 20 – 25 பைசாக்களில் தான். தொலைதூரத்தில் இருந்து வந்தால் கூட ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணம் தான்.
இந்த சம்பள நாள் சந்தையில் துணிவகைகள், அலங்காரப் பொருட்கள், வீட்டிற்குத் தேவையான மரச்சாமான்கள் என்று எல்லாவிதமான பொருட்களும் கிடைக்கும். எல்லா மாதமும் கடை போடுவார்கள் என்பதால் சில வியாபாரிகள் தவணை முறையில் கூட பொருட்களை நகர மக்களுக்கு விற்பனை செய்வது உண்டு.
தீபாவளி வரும் மாதத்தில் இன்னும் நிறைய பொருட்கள் இங்கே கிடைக்கும். அந்த மாதத்தில் வழக்கத்தை விட இன்னும் சில நாட்கள் அதிகமாக கடைகள் திறந்திருக்கும். நெய்வேலி நிறுவனம் அப்போதெல்லாம் ஊக்கத்தொகையினை தீபாவளி சமயத்தில் கொடுப்பார்கள் என்பதால் இங்கு விற்பனையும் அமோகமாக இருக்கும்.
முழு பதிவினையும் மேலே கொடுத்திருக்கும் சுட்டி வழி படித்து ரசிக்கலாம்!
******
இந்த வாரத்தின் எண்ணம் - நண்பர் குழாமின் சந்திப்புகள் :
குளிர் நாட்களில் மதிய நேரத்தில் பூங்காக்களில் அமர்ந்து வெய்யில் வாங்கும் நபர்கள் இங்கே அதிகமாக பார்க்க முடியும். சிறிது நேரமே இருக்கும் வெய்யிலை முடிந்தவரை தங்கள் உடம்பில் படும்படிச் செய்வது மிக நல்லது. பலருக்கும் விட்டமின் டி குறைபாடு இருக்க, இப்படி வெய்யிலில் அமர்ந்திருக்கச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கே இருக்கும் நண்பர்கள் தத்தமது குடும்பத்தினருடன் அருகில் இருக்கும் டால்கட்டோரா பூங்காவிற்கு மதியம் மூன்று அளவில் வந்து சேர, அங்கே அமர்ந்து கதை பேசி மகிழ்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். சில மணி நேரங்கள் அங்கே தான் dடேரா! பெண்கள் தனிக்குழுவாகவும், ஆண்கள் தனிக் குழுவாகவும் பூக்களைப் பார்த்தபடியே, பூங்காவைச் சுற்றி ஒரு நடை நடந்து வருவதும், நடந்தபடியே அரட்டை அடிப்பதும், சிலர் Badminton விளையாடுவதும், பிறகு ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு அளவளாவுவதும் என பொழுது போகும். கடைசியில் ஒருவர் வண்டியை எடுத்துக் கொண்டு சென்று அருகில் இருக்கும் கடையில் (பிகானேர் வாலா, அன்னக்கூட், கலேவா என ஏதோ ஒன்று) கொறிக்க எதையாவது வாங்கி வர அதனை உண்டு வீடு திரும்புவதும் என சென்று கொண்டிருக்கிறது கடந்த சில ஞாயிறுகள். இப்படியான சந்திப்புகள் மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பவை என்பதில் சந்தேகமில்லை!
******
இந்த வாரத்தின் நிழற்படம் - செல்லம் :
சென்ற ஞாயிறில் பூங்காவிற்குச் சென்றபோது, அங்கே தரையோடு தரையாக இருந்த பூச்செடிகளுக்கு நடுவில் ஒரு செல்லம் சுருண்டு படுத்திருந்தது. அழகாக இருந்ததால் அதனை படம் எடுத்துக் கொள்ளலாம் என அருகே சென்றேன். “என்னடே, நிம்மதியா தூங்கக் கூட விடமாட்டீங்களா? என்ன ஃபோட்டோ வேண்டிக்கிடக்கு?” என்று கேட்பது போல அலட்சியமாக ஒற்றைக் கண்ணைத் திறந்து ஒரு பார்வை பார்த்தது! அது கூட அழகாகவே இருந்தது. பூக்களுக்கு நடுவில் இருந்த செல்லம் தான் மேலே! இப்படியான நிறைய செல்லங்கள் இந்தப் பூங்காவில் உண்டு! அவை நம்மை ஒன்றும் செய்வதில்லை - நாம் அவற்றை ஒன்றும் செய்யாதவரை!
******
இந்த வாரத்தின் விளம்பரம் - தலைச் சாயம் :
பொதுவாக தலைக்கு/நரை முடிக்காக சாயம் பூசிக் கொள்வது எனக்குப் பிடிப்பதில்லை. இது வரை பயன்படுத்தியதும் இல்லை! சில சமயங்களில் பூசிக் கொள்ளலாமே என சொல்ல வேண்டியவர்கள் சொன்னாலும் இது வரை பூசிக் கொண்டதில்லை! ஸால்ட் அண்ட் பெப்பர் தான்! அதுவும் தில்லி வந்த சில மாதங்களிலேயே இங்கே இருக்கும் சூழலும், தண்ணீரும் ஒத்துக் கொள்ளாமால் நரை எட்டிப் பார்க்கத் துவங்கிவிட்டது! இப்போது கருப்பை விட வெள்ளி முடிகள் தான் அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது - சில வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது “என்னடா இவ்வளவு நரைச்சுடுச்சே?” என்று சிலர் கேட்பதுண்டு! ஹாஹா… இப்படியே இருந்து விட வேண்டியது தான்! எதற்காக இந்த தலைச்சாயம் புராணம்? தலைச் சாயம் தயாரிப்புகளில் ஒன்றான Godrej Expert 2015-ஆம் ஆண்டில் தந்தையர் தினம் சமயத்தில் வெளியிட்ட விளம்பரம் ஒன்று உங்கள் பார்வைக்கு - நான் ரசித்ததை நீங்களும் ரசிக்கலாமே!
விளம்பரத்தினை மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் இந்தச் சுட்டி வழி பார்க்கலாம்!
******
இந்த வாரத்தின் ரசித்த செய்தி - ஓவியங்களில் சென்னை :
இந்த வாரம் தினமலர் தளத்தில் பார்க்கக் கிடைத்த செய்தி ரசிக்கும் விதத்தில் இருந்தது. அந்த செய்தியிலிருந்து சில வரிகள் இங்கே…
இது கேமிரா மற்றும் விமானம் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் நடந்த பதினெட்டாம் நுாற்றாண்டின் நிஜக்கதை. ஹென்றி வில்லிம் என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த வழக்கறிஞர், நீதிபதியாக பதவி உயர்வு பெற்று சென்னை வந்தார். இவர் வந்து இவர் செட்டிலான பிறகு இவரது மணைவி எலிசபெத் இங்கிலாந்தில் புறப்பட்டு சென்னை வந்தார் அவருடன் திருமணம் செய்து கொள்ளாத இவரது சகோதரி மேரி சைமண்டும் வந்தார்.
கிட்டத்தட்ட ஐந்து மாத கால கப்பல் பயணத்திற்கு பிறகு சென்னை வந்தவர்களுக்கு ஊர் மிகவும் பிடித்துப் போய்விட்டது.குழந்தை இல்லாத எலிசபெத் தனக்கான ஒய்வு நேரத்தை ஒவியம் வரைவதில் செலவிட்டார் இவருடன் இவரது சகோதரியும் சேர்ந்து கொண்டார். இருநுாறு வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து வரைந்து வைத்துள்ள ஒவியங்கள்தான் இப்போது பேசு பொருளாகியுள்ளது. மற்ற சீமாட்டிகள் போல வீட்டிற்குள் முடங்கிக்கிடக்காமல் மக்களை சந்திப்பதிலும் பறவைகளை பார்ப்பதிலும் இயற்கையை ரசிப்பதிலும் ஆர்வம் காட்டினர்.தங்களது ஆர்வத்தை ஒவியமாக்கியம் உள்ளனர்.
இருநுாறு வருடத்திற்கு முன் சென்னை எப்படி இருந்தது என்பதற்கான ஆதாரமாக இப்போது இவரது ஒவியங்கள்தான் சாட்சியங்களாக இருக்கிறது. அப்போது உள்ள மனிதர்கள் மீனவர்கள் விவசாயிகள் திருமணங்கள் சாமி ஊர்வலங்கள் வழிபாடுகள் என்று பல துறைகளிலும் ஒவியங்களை வரைந்து வைத்துள்ளனர்.
இந்த ஓவியங்கள் தற்போது சென்னை தக்ஷின் சித்ரா வளாகத்தில் நிழற்படங்களாக எடுத்து கண்காட்சிக்கு வைத்திருக்கிறார்களாம். முழுச் செய்தியும் இங்கே படிக்கலாம்!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
வாசகம் மிகவும் அருமை ஜி.
பதிலளிநீக்குமுதல் படம் தொடங்கி காணொளி, ஓவியங்கள் அனைத்தும் அருமை.
வாசகம் மற்றும் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குநெய்வேலி சந்தை விவரங்கள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குதூங்கும் செல்லம் அழகு. அரைக் கண்விழித்துப் பார்க்கும்போது ஒரு க்ளிக்கியிருக்கக் கூடாதோ...
தினமலர்ச் செய்தி நானும் படித்தேன். தலைச் சாய விளம்பரம் பின்னர் பார்க்கவேண்டும்!
பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி. தூங்கும் செல்லம் கண் விழித்த போது படம் எடுத்திருக்கலாம்! எடுக்கவில்லை! :) விளம்பரம் முடிந்த போது பாருங்கள் ஸ்ரீராம்.
நீக்குஇன்றைய பகுதிகளை ரசித,தேன்.
பதிலளிநீக்குபிகானீர்வாலா போன்றவற்றையும் குறித்துக்கொண்டேன்.... மே 18-20 வாக்கில் சுவைக்க
பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன். மே 18-20 வாக்கில் தில்லி பயணம் - நல்லது! பயணம் சிறக்க வாழ்த்துகள்.
நீக்குஅனைத்தும் அருமை...
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குஅனைத்தும் அருமை. காணொளி அருமை.
பதிலளிநீக்குசிறு சிறு மலர்கள் மலர்ந்து இருக்கும் புல்வெளியில் செல்லம் படுத்து இருக்கும் காட்சி மிக அருமை.
ஓவியம் அழகு, அதை வரைந்தவர் வரலாறு சொன்னதற்கு நன்றி.
பதிவின் பகுதிகள் குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.
நீக்குவாசகம் அடிக்கடிச் சொல்லப்படுவது. நல்ல வாசகம்.
பதிலளிநீக்குநெய்வேலி - சம்பளநாள் சந்தை பற்றி நான் பாண்டிச்சேரியில் இருந்த போது பக்கத்துவீட்டில் இருந்த தோழி ஒருவர் சொல்லித் தெரியும். - நெய்வேலியில் பிறந்து வளர்ந்தவர் அவரது குடும்பத்தினர் இப்போதும் அங்குதான் இருக்கின்றனர். நான் 2007 லிருந்து 2012 வரை அங்குதான் இருந்தேன். மகனுக்காக, மகனோடு. அப்போது நெய்வேலி சென்றதுண்டு. தோழியோடு. மிகவும் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அங்கு சகாலனிக் குடியிருப்பில்தான் அவர்கள் இருந்தனர். காலனி மிகவும் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டு அழகாக இருந்தது. வீட்டின் பின்னால் பலா, மா எல்லாம் இருந்தது. பலாப்பழம் நிறைய.
உங்கள் பதிவு நல்ல சுவாரசியமான பதிவு.
எங்கள் ஊர் சந்தையையும், இப்போதைய சந்தையையும் நினைவுபடுத்தியது. இங்கும் சந்தையில் வீட்டிற்கானப் பொருட்கள் கிடைக்கின்றன.
கீதா
நெய்வேலி மிகவும் அழகான, திட்டமிடப்பட்ட ஊர் தான். பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குநண்பர்களுடனான சந்திப்பும் கூடவே கொறித்தலும் அதுவும் பிகானெர்வாலா...ஆஹா...நல்ல விஷயம். இது போன்றவை நம்மனதை நல்ல மகிழ்வாகவும் சுறு சுறுப்பாகவும் வைத்துக் கொள்ளும்.
பதிலளிநீக்குசெல்லம் அழகு! ஹாஹாஹ் ஆமாம் பொதுவாகப்பொதுவெளியில் இருப்பவை ஒன்றும் செய்வதில்லை. அவற்றை யாரேனும் சீண்டியிருந்தால் அல்லது நம் மீது சந்தேகம் இருந்தால் அவை குரைக்கும்.
கீதா
செல்லம் அழகு தான். பொதுவாக பொதுவெளியில் இருப்பவை தொல்லை செய்வதில்லை தான் கீதா ஜி.
நீக்குநண்பர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமானதே!
பொதுவாக தலைக்கு/நரை முடிக்காக சாயம் பூசிக் கொள்வது எனக்குப் பிடிப்பதில்லை. இது வரை பயன்படுத்தியதும் இல்லை! சில சமயங்களில் பூசிக் கொள்ளலாமே என சொல்ல வேண்டியவர்கள் சொன்னாலும் இது வரை பூசிக் கொண்டதில்லை! ஸால்ட் அண்ட் பெப்பர் தான்! //
பதிலளிநீக்குஹைஃபைவ் ஜி! மீ டூ. அதேதான். எனக்கும் சீக்கிரமாகவே நரைத்துவிட்டது. ஊரு விட்டு ஊர் ஊராகப் போயி....ஆனால் டை அடிக்கும் ஆர்வம் இல்லை
போனா போகுது. எனக்கும் டை அடித்துக் கொள்ளச் சொன்னவர்கள் உண்டு. அதுவும் என் வயதே ஆனவர் அவருக்குக் கறுப்பாக இருக்கிறது என்று சொல்லி நான் அவருடைய பெரியம்மாவா என்று அவரது தோழி கேட்டார் என்று சொல்லி அதைப் பற்றி தன் நெருங்கிய உறவினரிடமும் என் முன்னேயே சொல்லி.....இது நல்லாவே இல்லை...ஏன் நீ டை அடிப்பதில்லை, ரொம்ப கிழவி மாதிரி இருக்கே என்றெல்லாம் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார்கள். நிறைய தடவை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் நான் அவரோடு போனால் எல்லாரும் கேட்கிறார்கள் என்றும் சொல்லி...பேசினார்கள். இருவரும் ஒரே வயது ஆனால் நீ ரொம்ப கிழவியாக இருக்கிறாய் என்றெல்லாம் ....அவர்களது மெச்சூரிட்டி அவ்வளவுதான் என்று அமைதியாகக் கடந்து போனேன்.
என்ன வேணா சொல்லிக்கட்டும் கீதா இப்படித்தான்.
விளம்பரத்தை மிக ரசித்தேன். பார்த்துக் கொண்டிருந்த போது பார்த்திருந்த நினைவு வந்தது. ரசித்தேன்
கீதா
தலைச் சாயம் எப்போதுமே பயன்படுத்தவில்லை கீதா ஜி. விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நீக்குஓவியம் மிக அழகு. விவரங்களும் சுவாரசியமாக இருக்கிறது. சென்னையில் இருந்த போதும் கூட தக்ஷினச் சித்ரா செல்ல வேண்டும் என்று நினைத்தும், செல்ல முடியாமல் போனது.
பதிலளிநீக்குகீதா
தக்ஷிண் சித்ரா முடிந்த போது சென்று வாருங்கள் கீதா ஜி. நல்ல இடம். பராமரிப்பு அத்தனை சரியில்லை என்பது தான் வேதனை.
நீக்குஎல்லா ஊர்ச் சந்தைகளும் கிட்டத்தட்ட இப்படித்தானோ? சென்னையின் பழைய ஓவியங்கள் நிறையவே பார்த்திருந்தாலும் அது வந்த விதம் இன்றே அறிந்தேன். தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குசென்னை ஓவியங்கள் குறித்து உங்களுக்கு சில தகவல்களைச் சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.
நீக்கு