திங்கள், 14 மார்ச், 2022

வாசிப்பனுபவம் - நீரில் பறக்கும் வானம் - ரா ராஜசேகர்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கேதார் தால் நிழற்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

உயிருள்ள உறவினர்களில் யார் முக்கியம் என்பதை. உயிரற்ற பணம் தான் முடிவு செய்கிறது!

 

******


 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, கடந்த ஜூன் மாதத்தில் நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் ரா ராஜசேகர் அவர்கள் எழுதிய நீரில் பறக்கும் வானம்எனும் குறுநாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: குறுநாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 77

விலை: ரூபாய் 50/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

நீரில் பறக்கும் வானம்: குறுநாவல் : அமானுஷ்யம் + அங்கதம் (Tamil Edition) eBook : ராஜசேகர், ரா.: Amazon.in: Kindle Store

 

******* 

 

சஹானா இணைய இதழ் நடத்தும் ஜூன் மாத வாசிப்புப் போட்டியில் இருக்கும் பதினைந்து நூல்களில் எனது நான்காவது வாசிப்பு - ரா. ராஜசேகர் அவர்கள் எழுதிய நீரில் பறக்கும் வானம் குறுநாவல் தான். அமானுஷ்யமான சில விஷயங்களை அங்கதம் (நகைச்சுவை) கலந்து எழுதி இருப்பதாக நூலாசிரியர் சொல்லி இருக்கிறார்.  சித்தர்கள், மேலுலகம், இறந்து போன மனிதர்கள் (தலைவர்கள்) என ஸ்வாரஸ்யமாக நகர்த்தி இருக்கிறார் இந்த குறுநாவலை. 

 

ஒரு சிறு குடும்பம்.  கணவன் - மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் - இருவருக்குமே அழகான தமிழ் பெயர்களைத் (நச்செள்ளை, நறுமுகை) தந்திருக்கும் நூலாசிரியர் - அதற்காகவே அவருக்கு ஒரு பூங்கொத்து!  குடும்பத் தலைவர், தாய் வழி, தந்தை வழி பாட்டனார் இருவரிடமுமே கதை கேட்டு வளர்ந்தவர் என்பதால் அவருக்கும் தனது குழந்தைகளுக்கு, கதைகளைச் சொல்வதில் ஆர்வம் அதிகம் - அவர் நல்லதொரு கதை சொல்லி! கதைகள் மூலம் தனக்குத் தெரிந்தவற்றையும், கற்பனையையும் கலந்து அவரது மகள்களுக்குச் சொல்லி வருகிறார். சென்னையில் வங்கிப் பணியில் இருக்கும் அவருக்கு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல ஆசை.  அதிலும் சித்தர்கள் வாழ்வதாகக் கூறப்படும் மலைப்பகுதியான கொல்லி மலைக்கு!  தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்க கொல்லிமலைக்கு குடும்பத்துடன் பயணிக்கிறார்கள்.  ஆஹா பயணம் நமக்கும் பிடித்த விஷயமாயிற்றே என கூடவே பயணிக்கிறேன் - நூலை படித்தவாறே! 

 

கொல்லிமலையில் மகள் நறுமுகையுடன் மலைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார் - நடந்து நடந்து காட்டுப் பகுதிக்குள் பிரவேசித்து விட, திரும்பலாம் என கதாநாயகன் (முருகமணி செல்வநாயகம்) நினைத்தாலும், மகள் நறுமுகை இன்னும் உள்ளே சென்று பார்க்கலாம் என்று சொல்ல, மகளின் சொல்லைத் தட்டமுடியாமல் உள்ளே செல்கிறான்.  அங்கே ஒரு சித்தரைச் சந்திக்க நேர்கிறது. அவராகவே கதாநாயகனின் பெயரையும், மகளின் பெயரையும் சொல்லி அவர்களை ஆச்சர்யப்படுத்துகிறார்.  கூடவே அரவம் காட்டும் வழி சென்றால் புதிய அனுபவங்களைப் பெறலாம் என்று சொல்கிறார்.  காட்டு வழி நடக்க, அவர்கள் கண்ணிற்கு ஒரு அரவம் (பாம்பு) தென்படுகிறது.  அது காட்டிய வழியில் பார்த்தால் கொஞ்சம் தண்ணீர் - அதில் மேகம் தென்படுகிறது.  அதன் அருகே செல்ல முருகமணியும், நறுமுகையும் மேலுலகத்திற்குச் சென்று விடுகிறார்கள்!  

 

அங்கே இறந்து போன தனது உறவினர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர், நண்பர்கள், போலி சாமியார் என பலரையும் சந்திக்கிறார்கள்.  அவர்களுடன் உரையாடுகிறார்கள்.  சிறுமி நறுமுகைக்கு இது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கிறது.  பார்க்கும் நபர்களிடமெல்லாம் சந்தேகங்களைக் கேட்டு தெளிவடைகிறாள்.  எல்லாம் நல்லபடியாகச் சென்று கொண்டிருக்கிறது - ஆனால், ஒரு மேகக் கூட்டத்தின் வழி செல்லும் போது சிறுமி நறுமுகை காணாமல் போகிறாள்.  அவளைக் காணாமல் தந்தை முருகமணி தவிக்கிறார்.  குறிப்பிட்ட நேரத்திற்குள் பூமிக்குத் திரும்ப வேண்டும் என சித்தர் சொன்னது நினைவுக்கு வருகிறது முருகமணிக்கு.  சிறுமி நறுமுகை தனது தந்தையை மீண்டும் கண்டாளா, அவர்கள் பூமிக்குத் திரும்பினார்களா போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ள, மின்னூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாமே. 

 

சிறப்பான விஷயங்களைச் சொல்லி இருக்கிறார் நூலாசிரியர். ஆசிரியரின் பத்தாவது மின்னூல் இது!  நூலாசிரியரின் இந்த மின்னூலை தரவிறக்கம் செய்து வாசிக்கலாமே! வாசிக்கப் போகும் உங்களுக்கு வாழ்த்துகள்.  மின்னூலை வெளியிட்ட நூலாசிரியருக்குப் பாராட்டுகள். 

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

16 கருத்துகள்:

  1. இன்றைய வாசகம் - வேதனையான உண்மை.

    சுவாரஸ்யமான புத்தகம் என்று தெரிகிறது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்.

      ஸ்வாரஸ்யமான புத்தகம் தான். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. நல்ல விமர்சனம் ஜி இறுதியில் சஸ்பென்ஸ் வைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தக அறிமுகம் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வாசகம் உண்மை என்று உணர்ந்து வருகிறேன் இப்போது.

    புத்தக விமட்சனம் அருமை படிக்க ஆவலை தூண்டும் விமர்சனம்.
    வாழ்த்துக்கள் நூல் ஆசிரியருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் குறித்த தங்கள் கருத்துரை கண்டேன் - சில விஷயங்கள் உணர்ந்து தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

      புத்தக விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. அமானுஷ்யம் என்று சொல்லி விட்டாலே இஷ்டத்திற்கு எதையாவது கயிறு திரிக்கலாம் என்ற லைசன்ஸ் கிடைத்த மாதிரி ஆகி விடுகிறது.

    அதுவும் நகைச்சுவை கலந்த அமானுஷ்யமா?
    நீரும் நெருப்பும் மாதிரி. சிறுவர்களுக்காக எழுதிய குழந்தைக் கற்பனையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதை வேண்டுமானாலும் கயிறு திரிக்கலாம் - ஹாஹா...

      சிறுவர்களுக்காக எழுதியது அல்ல ஜீவி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. இன்றைய வாசகம் யாதர்த்தம். உண்மை.

    சுவாரசியமான புத்தகம். உங்கள் விமர்சன அற்முகமும் நன்று ஜி. நோட் செய்து வைத்திருக்கிறேன். எப்போது முடிகிறதோ அப்போது வாசிக்க வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. சுவாரசியமான புத்தகம் பற்றிய அழகான விமர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புத்தக அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. உண்மையைச் சொல்லும் வாசகம். நல்லதொரு விறுவிறுப்பான விமரிசனம். புத்தகம் படிக்கும் ஆவலைத் தூண்டினாலும் கின்டிலில் என்னால் புத்தகங்களைப் படிக்க முடிவதில்லை. தொடர்ந்து முயன்று கொண்டே இருக்கேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் நூல் அறிமுகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா. கிண்டில் நூல்கள் படிக்க முடியாத நிலை - என்ன பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. நேரில் வரும்போது தான் பார்க்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....