வியாழன், 17 மார்ச், 2022

கேதார் தால், உத்திராகண்ட் - மலையேற்றம் - பயணம் - ப்ரேம் Bபிஷ்ட் - பகுதி ஆறு (நிறைவுப் பகுதி)


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

TRY TO UNDERSTAND PEOPLE BEFORE TRUSTING THEM. BECAUSE WE ARE LIVING IN SUCH A WORLD, WHERE ARTIFICIAL LEMON FLAVOUR IS USED FOR WELCOME DRINK AND REAL LEMON IS USED IN FINGER BOWL.

 

******

 

கேதார் தால் மலையேற்றம் குறித்து, நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் அவர்களது அனுபவங்களின் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் பகுதிகளை நீங்கள் படித்து ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இதோ இந்த நாளில் தொடரின் கடைசி பகுதி! அவரது அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்ள ஒப்புதல் அளித்த நண்பர் ப்ரேம் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி - ஓவர் டு ப்ரேம் ஜி!

 

******

 

ஆறாம் நாள் - கேதார் கரக் - கங்கோத்ரி - கமண்ட் (170 கிலோ மீட்டர்) - மலையேற்றம் மற்றும் சாலைப் பயணம்



ஸ்பைடர் வால் பகுதியை சுமைதூக்கி கடந்த போது... 


அடுத்த நாள் - எங்கள் பயணத்தின் ஆறாம் நாள் - மாலைக்குள் ரிஷிகேஷ் வரை சென்று சேர்ந்து விடுவது என்ற எண்ணத்துடன் நாங்கள் அந்நாளில் காலை ஆறு மணிக்கு கங்கோத்ரி நோக்கிய மலைப்பயணத்தினை தொடங்கினோம்.  சுமார் ஐந்து கிலோமீட்டர் நடைப் பயணம் செய்தால் கங்கோத்ரி வரை சென்று அடைய முடியும். சில மீட்டர்கள் நடந்து சென்ற பிறகு முன்னர் இப்பதிவின் பகுதி ஒன்றில் சொன்ன ஸ்பைடர் வால் பகுதியை வந்து சேர்ந்திருந்தோம்.  செல்லும் போது அப்பகுதியைக் கடந்ததை விட, திரும்பும் வழியில் அந்தப் பகுதியை கடப்பது மிகவும் கடினமாக இருந்தது.  காலை நேரத்தில் பனி மிகவும் கடினமாக இருக்குமென்பதால், மிகவும் வழுவழுப்பாக இருந்தது.  கொஞ்சம் தவறினாலும் கீழே விழுந்து விட வாய்ப்பு அதிகமாக இருந்தது. பனியில் எங்கள் கால்களை உறுதியாக வைத்து ஒவ்வொரு காலடியாக எடுத்து வைத்து நடக்க வேண்டியிருந்தது - அது எங்கள் அனைவருக்குமே மிகவும் கடினமாக இருந்தது. 

 

எங்கள் குழுவில் ஒரு உறுப்பினர் தனது பிடியை இழக்க, அவர் சுமார் 30 மீட்டர் கீழே நழுவி, வழுக்கியபடிச் சென்றார்.  எங்களுக்கும் எங்களுடன் வந்திருந்த வழிகாட்டிக்கும் பதட்டம் அதிகமானது.  அவருக்கு என்ன ஆனதோ என நாங்கள் கவலைப்பட்டபோது, அந்தத் தருணத்தில் அவர் முற்றிலும் கவலைப்படாமல் இருந்தார். கூடவே இந்த அனுபவத்தினை மிகவும் தெளிவாகவும் கவலையில்லாமலும் கடந்து வந்தார். அந்தப் பயணத்தில் எங்கள் குழு கீழ்நோக்கிச் சென்ற போது மேலும் இரண்டு சிலந்தி சுவர்களை எதிர்கொண்டது.  அவற்றையும் கவனமாகக் கடந்ததோடு, எங்கள் கண்களுக்குக் கிடைத்த அழகான சுற்றுப் புறத்தையும் அனுபவித்துக் கொண்டே நடந்தோம்.  எங்கள் பயணம் சிறப்பாகவே சென்று கொண்டிருந்தது.   அடுத்து கிடைத்த அனுபவம் கொஞ்சம் மோசமானதாக அமைந்தது.

 

எங்களுடன் வந்த வழிகாட்டி/சுமைதூக்கி, துரதிருஷ்டவசமாக, காலை சுமார் 9.00 மணிக்கு, கங்கோத்ரி பகுதிக்கு அரை கிலோமீட்டர் முன்னதாக சிறிது ஓய்வெடுக்க பாதையில் அமர்ந்த போது அவர் வைத்திருந்த எங்கள் பையை பாதையின் விளிம்பில் வைத்திருக்க, ஒரு நொடியில் கேதார் கங்கா பாயும் ஆழமான பள்ளத்தாக்கை நோக்கி உருண்டு கீழே சென்றது.  அதைத் தேடி கீழே சென்ற அந்த சுமைதூக்கி, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் கடந்த பின்னர், மேலே வந்து தன்னால் அந்தப் பையை மீட்டெடுக்க முடியவில்லை என்று எங்களிடம் வந்து சொன்னார்.    அந்தப் பையில் தான் எங்கள் கூடாரங்கள், பாத்திரங்கள், அடுப்பு போன்றவை இருந்தன.  ஒரு நொடி நேரத்தில் அவை அனைத்தையும் நாங்கள் இழந்து விட்டோம்.  இந்த சாகசப் பயணத்தில் கிடைத்த மகிழ்ச்சியை நினைக்கும் போது பையை இழந்ததால் கிடைத்த கணநேர துக்கம் பெரிதாகத் தெரியவில்லை.  கங்கோத்ரியிலிருந்து எங்கள் வாகனத்தில் ரிஷிகேஷ் நோக்கி காலை 10.30 மணிக்கு புறப்பட்டோம். 



ஹர்சில் கிராமத்தில்...


கமண்ட் பகுதியில் சூரிய அஸ்தமனக் காட்சி...
 

திரும்பி வரும் வழியில் நாங்கள் செல்லும் போது முடிவு செய்தபடியே ஹர்சில் எனும் கிராமத்திலும் அப்பகுதியில் உள்ள இராணுவத்தின் கீழே இருக்கும் பகுதியிலும் வாகனத்தினை நிறுத்தி அங்கே இருக்கும் தியோதர் காடுகளையும், ஆப்பிள் மரத் தோட்டங்களையும் பார்த்து ரசித்தோம்.  வழியில் கங்க்னானி என்ற இடத்தில் இருக்கும் சூடான கந்தக நீர் வரத்து உள்ள பகுதியில் குளித்தோம். அந்தக் குளியல் எங்கள் சோர்வு முழுவதும் அகற்றி, புத்துணர்வைத் தந்தது.  உற்சாகம் தந்த குளியலுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு உத்திரகாசியைக் கடந்து மதியம் 3 மணி அளவில் மதிய உணவினை சாப்பிட்டோம்.  சுமார் 6 மணி அளவில் நாங்கள் கமண்ட் எனும் பகுதியை அடைந்து அங்கேயே இரவு தங்கலாம் என முடிவு செய்தோம். தொடர்ந்து வாகனம் செலுத்துவதும் கடினமான விஷயம் தானே. 



ஏழாம் நாள் - கமண்ட் - ரிஷிகேஷ் - நோய்டா (330 கிலோ மீட்டர்) - சாலைப் பயணம்

 

ஏழாம் நாள் அதிகாலை 04.45 மணியளவில் நாங்கள் கமண்ட் பகுதியிலிருந்து புறப்பட்டு 100 கிலோமீட்டர் பயணித்து காலை 08.30 மணி அளவில் ரிஷிகேஷ் வந்தடைந்தோம்.  ரிஷிகேஷ் - ஹரித்வார் பாதை எப்போதும் வாகன நெரிசல் மிகுந்ததாக இருக்கும் என்பதால், கங்கையின் கால்வாய் ஓரமாகவே சில்லா என்ற பகுதி வழியே நாங்கள் பயணிக்க முடிவு செய்தோம்.  அந்தப் பாதையில் பயணித்து நடுவில் வேறு எங்கும் நிறுத்தாமல் மாலை நான்கு மணி அளவில் நோய்டா பகுதிக்கு வந்து சேர்ந்து அவரவர் வீடு திரும்பினோம்.  இந்தப் பயணம் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு மலையேற்றப் பயணமாக அமைந்தது.  

 

இந்தப் பயணம் குறித்து சொல்வதென்றால் மறக்க முடியாத பயணமாக இருந்ததோடு, இயற்கை எழிலை ரசிக்கவும் முடிந்தது. சவால்கள் நிறைந்த இந்தப் பயணம் எப்போதும் எங்கள் நினைவில் நிற்கக் கூடியதாக அமைந்ததுஇந்தத் தொடரில் உங்களுடன் எங்கள் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி.  இந்தத் தொடர் வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.  ஒரு விஷயம் மட்டும் இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.  பயணம் மீது ஆர்வம் கொண்ட அனைவரும் இங்கே பயணிக்க ஆசைப்படுவார்கள் என்றாலும், முதல் முறையாக மலையேற்றம் செய்யப் போகும் நபர்கள் என்றால், தனியாக இங்கே செல்வது சரியல்ல என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.  இந்தப் பாதையும், இலக்கும் அதிக நபர்கள் பயணிக்காத இடம் என்பதால் சரியான பாதையில் உங்களை அழைத்துச் செல்ல ஒரு வழிகாட்டியை அமர்த்திக் கொள்வது நல்லது.   இந்த மலையேற்றம் மற்றும் பயணத்தில் எங்களுடன் வந்த நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.  தொடர் வழி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டபோது நீங்கள் தந்த ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி.  முடிந்த போது மீண்டும் ஒரு பயண அனுபவத்துடன் உங்களைச் சந்திக்கிறேன். 

 

ப்ரேம் Bபிஷ்ட்

 

******

 

நண்பர் ப்ரேம் அவர்களின் அனுபவங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம்.  பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் குறித்த தங்களது கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமேவிரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

10 கருத்துகள்:

  1. சிலந்திச்சுவர் என்றால் என்ன?  பையை இழந்த வருத்தம் தெரியவில்லை என்று சொல்லி இருப்பது பயணம் செய்த இடத்தின் மேன்மையைச் சொல்கிறது.  ஆனாலும் கஷ்டம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பனிபடர்ந்த மலைப் பகுதியை இப்படி ஸ்பைடர் வால் (சிலந்திச் சுவர்) என அழைக்கிறார்கள். அந்தப் பகுதியைக் கடப்பது மிகவும் கடினமனது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மிக அருமையான தொடர். நிறைய விஷயங்கள் சுவைபடச் சொல்லியிருக்கிறார். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வாசகம் செம.

    பயணம் முடிந்துவிட்டதே என்று ஒரு புறம் தோன்றுகிறது ஜி. என்னவோ நானே பயணித்தது போன்று. என்ன அருமையான பயணம். அவர் சொல்லியிருப்பது போல் வழிகாட்டி இல்லாமல் செல்ல முடியாதுதான்.

    பை போனது பற்றியது கூட லைட்டாக எடுத்துக் கொண்டது அவர்களுக்கு இப்படியான அழகான இமயம மலையேற்ற பயணத்தின் மீதான காதல்...க்ரேட். பையில் வேறு முக்கியமானது இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.

    அதனால்தான் அவர்கள் மாலைக்குள் ரிஷிகேஷ் வந்து அடையமுடியவில்லை போலும். என்றாலும் பயணம் சிறப்பான பயணம் பயணத்தில் இப்படி சில நேர்வதுண்டுதான்.

    மிக்க நன்றி வெங்கட்ஜி உங்களுக்கும் உங்கள் நண்பருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பயணம் முடிந்தாலும் வேறு பயணங்கள் விரைவில் தொடரும்.

      பை போனதில் வருத்தம் என்றாலும் ஒன்றும் செய்வதற்கில்லையே ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பதிவு முழுவதும் நிறைய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

    மலை ஏற்றம் பயணம் சிலருக்கே ஈடுபாடு இருக்கும். காரணம் சிரமங்கள் பல இருக்கும் அவைகளை உடைத் தெரிந்து செல்வதே சவால்.

    தங்களது நண்பர்களுக்கு வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட தகவல்கள் பலனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி கில்லர்ஜி. விருப்பம் இருப்பவர்களுக்கு நிச்சயம் பலன் அளிக்கும் என்றே நினைக்கிறேன். நண்பர்களை வாழ்த்தியமைக்கு நன்றி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. //அவர் வைத்திருந்த எங்கள் பையை பாதையின் விளிம்பில் வைத்திருக்க, ஒரு நொடியில் கேதார் கங்கா பாயும் ஆழமான பள்ளத்தாக்கை நோக்கி உருண்டு கீழே சென்றது.//

    மனதுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் பொருள் மட்டும் போனது பரவாயில்லை.
    மலை ஏற்றம் மிகவும் சிரமம்தான். கங்கோத்திரிக்கு நாங்கள் டோலியில் போய் வந்த போது மட்ட சிரமங்கல் பதிவில் எழுதி இருக்கிறேன். மன உறுதியோடு மலையேற்றம் செய்து இருக்கிறார்கள். மலைபயண அனுபவங்கள், படங்கள் எல்லாம் பகிர்ந்து கொண்டது மற்றவர்களுக்கு உதவும்.
    தங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். அவர்களோடு உங்கள் பயணம் விரைவில் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பை கீழே விழுந்தது வருத்தம் தான் என்றாலும் பயணம் இனிதாகவே முடிந்தது கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....