செவ்வாய், 29 மார்ச், 2022

ஷில்பி - கதை மாந்தர்களின் கதை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நீங்கள் யாரை நம்புகிறீர்கள் என்று கேட்டால், உடனே யார் யாரையோ யோசிப்போம் ஆனால் நம்மைப் பற்றி யோசிக்கவே மாட்டோம் அது தான் நம் முதல் தோல்வி!

 

******



 

தில்லி அரசாங்கம் நடத்தும் அந்த குழந்தைகள் காப்பகம் பரபரப்பாக இருந்தது.  மொத்தம் 60 குழந்தைகள் அன்றைய நாளில் அங்கே இருந்தார்கள் - ஆண்கள் பெண்கள் என 18 வயதுக்கும் குறைவான குழந்தைகள்.  சில சமயங்களில் அங்கே இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும், சில சமயங்களில் குறைவாகும்.  அந்தக் குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளின் வயது பதினெட்டுக்கு அதிகமானால் அங்கே இருக்க முடியாது!  அங்கிருந்து வெளியேற வேண்டியது தான்.  பெரும்பாலான குழந்தைகளுக்கு அங்கிருந்து வெளியேறும் முன் அவரவர் வாழ்க்கையை சரியான வழியில் செலுத்தத் தேவையான வழிமுறைகளை, ஏதேனும் ஒரு வித பயிற்சியை அளித்தே அனுப்புவார்கள்.  தவிரவும், சிறு குழந்தைகளாக இருக்கும்போதே விதிமுறைகளுக்குட்பட்டு குழந்தை இல்லாதவர்களுக்கு தத்து கொடுப்பதும் உண்டு.

 

குழந்தைகள் இருந்த இடத்தில் விளையாடுவதும், படிப்பதும், தையல், கைவினைப் பொருட்கள் செய்வது என ஏதோ ஒரு விஷயத்தினைக் கற்றுக் கொள்வது என்றும் இருந்த சூழலில் அங்கே வந்து சேர்ந்தான் நமச்சிவாயம்.  அவன் பின்னர் நான்கு குழந்தைகள்..   வந்திருந்த நான்கு குழந்தைகளில் சின்னச் சிறுமியாக இருந்த பெண் குழந்தையின் கண்களில் அப்படி ஒரு குறும்பு. அவளின் சிரிப்பு பார்க்கும் போதே பார்ப்பவர்களுக்கும் மனதில் பூரிப்பு தானாக அமர்ந்துகொள்ளும். நான்கு குழந்தைகளுடன் நமச்சிவாயம் வந்திருந்தாலும், பார்ப்பவர்கள் கவனம் முழுவதும் அந்தச் சிறுமியின் மீதே இருந்தது. அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருத்தி இந்தப் பதிவின் கதை மாந்தராகிய நீலவேணி! 

 

அரசாங்கம் நடத்தும் அந்த குழந்தைகள் காப்பகத்தில் மன நல ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார் நீலவேணி. பணியில் சேர்ந்த ஒரு வருடத்தில் இப்படி எத்தனையோ ஆதரவற்ற குழந்தைகள் அங்கே வந்து சேர்ந்து இருந்தாலும் இந்தச்  சுட்டிப் பெண் ஏனோ நீலவேணியை அதிகம் கவர்ந்து விட்டாள். குழந்தைகள்  வருவதும் போவதுமாக இருந்தாலும் சிலரிடம் மட்டுமே அதீதமாக அன்பும் பாசமும் வந்துவிடுகிறது நீலவேணிக்கு.

 

அச் சிறுமியை தூக்கி மடியில் அமர்த்திக் கொண்டாள் நீலவேணி. மேஜை மீது எப்போதும் வைத்திருக்கும் இனிப்பில் இருந்து ஒன்றை குழந்தைக்கு கொடுக்க எந்தவித தயக்கமும் இன்றி அவளிடமிருந்து இனிப்பை வாங்கி சுவைத்தாள் அந்தக் குட்டிச் செல்லம்.  மடியில் அமர்ந்ததில் இருந்தே, தன்னை "அம்மா, அம்மா" என அழைத்துக்கொண்டே இருந்த குழந்தையை வாஞ்சையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நீலவேணி. அவளுடன் வாஞ்சையுடன் பேசியதில் நீலவேணி தெரிந்து கொண்ட விஷயம் அக் குழந்தைக்கு மூன்று  வயது என்பது அவள் பெயர் ஷில்பி என்பதும்.  நீலவேணியை விட்டு, கொஞ்சம் நமசிவாயத்தினைக் கவனிப்போமா.

 

அவன் தொடர்ந்து அங்கே புலம்பிக் கொண்டிருந்தான். அவன் புலம்புவதில் பல வார்த்தைகளை நீலவேணி கவனிக்காமல் ஷில்பியிடம் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள் என்பதால் குழந்தை குறித்தும், ஏன் எங்கே வந்திருக்கிறாள் என்றும் தெரியவில்லை.  சரி என அவனை கவனித்தாள்.  குழந்தையின் அப்பா நமச்சிவாயம், "நாலு  குழந்தைகளையும் வெச்சுகிட்டு நான் எப்படி ரிக்ஷா வலிப்பேன். வேலைக்கு  எப்படி போவேன்,  அப்படி வேலைக்குப் போகவில்லை என்றால் குழந்தைகளை எப்படி காப்பாத்துவேன்,  சண்டாளச் சிறுக்கி எல்லாரையும் விட்டுட்டு ஓடிட்டா……"

 

இப்படி அழகாய் அம்மா அம்மா என்று ஒட்டிக்கொள்ளும் குழந்தையை எப்படித்தான் விட்டுப்போக அவளுக்கு மனம் வந்ததோ? தாய் இப்படி என்றால் தந்தையோ என்னால் பார்த்துக் கொள்ள முடியாது என்று காப்பகத்தில் நான்கு குழந்தைகளையும் விட்டு செல்வது எந்த விதத்தில் நியாயம்? பெற்றுக் கொள்ளும்போது தனது சூழலும் நிலையும் தெரியாமலா ஐந்து குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள்? இப்படியான எண்ணங்கள் வரிசையாய் மனதில் வந்து கொண்டே இருந்தது நீலவேணிக்கு.

 

தனக்கு திருமணம் நடந்த பிறகு ஷில்பி போன்ற ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதித்தது நீலவேணிக்கு. நினைத்ததெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? திருமணத்திற்குப் பிறகு தான் மட்டுமே இப்படியான ஒரு முடிவை எடுத்துவிடமுடியுமா?  இரண்டு பேர் சேர்ந்து முடிவெடுக்க வேண்டிய விஷயமல்லவா அது?

 

ஒரு வாரத்திலேயே இன்னொரு பெண்மணியை திருமணம் செய்துகொண்டு, குழந்தைகளை நான் அழைத்துச் செல்கிறேன் என்று வந்த நமசிவாயத்தை என்ன சொல்வது என்று யோசித்தபடியே இருந்தாள் நீலவேணி. தனது குழந்தைகளுக்காக இன்னும் ஒரு திருமணம் செய்து கொண்டேன் என்று நமச்சிவாயம் சொல்வதை ஏனோ நம்ப முடியவில்லை. ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில், "எப்படியோ ஷில்பிக்கு ஒரு நல்ல அம்மா கிடைத்தால் மகிழ்ச்சி என்ற எண்ணமும் ஓடியது. அம்மா இல்லாத குழந்தையின் நிலை, சிறு வயதிலேயே தாயை இழந்து இதைப் போன்ற ஒரு காப்பகத்தில் வளர்ந்த அவளுக்கு நன்கு தெரிந்ததுதானே

 

*******

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

12 கருத்துகள்:

  1. இந்த மாதிரி ஒரு வாழ்க்கை நிலையும் யாரும் அறியாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. நெகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சிலரது வாழ்க்கை - உண்மை தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  2. இது பரவலாக நிகழ்கிறது இந்த வகை குழந்தைகளுக்கு இறைவனே துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் மட்டுமே துணை என்பது உண்மை தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  3. வாசகம் அருமை. உண்மைதான். எனக்கு என் மகன் அடிக்கடி சொல்வது....

    மனம் கனத்தது வெங்கட்ஜி வாசித்ததும். ஷில்பியும் குழந்தைகளும் காப்பகத்தில் இருப்பதே நல்லது என்று மனதிற்குப் படுகிறது.

    எப்போது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவை என்று ஒரு சாக்கு போக்குக்கு மற்றொரு திருமணம் செய்து கொண்டானோ ...குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள அந்தப் பெண்ணிற்கு நல்ல மனதிருந்தால் நல்லவிஷயம். இல்லை என்றால் குழந்தைகள் சீரழிந்துவிடுவார்களோ என்று கூடவே பயமும் வருகிறது. அதற்கு அந்த நமச்சிவாயம், என்னால் பார்த்துக் கொள்ள முடியவில்லை, இவர்கள் இங்கு இருக்கட்டும் நான் சம்பாதிப்பதை இங்குக் கொடுக்கிறேன் என்றாவது சொல்லியிருக்கலாம்...

    என்ன உலகமோ..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      சாக்குப் போக்கு சொல்லும் நமச்சிவாயம் - இதே தான் எனக்கும் தோன்றியது. அந்த குழந்தைகள் நலன் என்ன ஆகுமோ என்ற கவலை எனக்குள்ளும்! என்ன உலகமோ?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. கதை மாந்தரின் கதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      நீக்கு
  5. இப்படியும் மனிதர்கள். இப்படிப் பல குழந்தைகள். இப்படியானவற்றை அறிய நேரும் போது மனம் வருத்தமடையும். அவர்களுக்கும் நல்ல வாழ்க்கையைக் கொடு என்று இறைவனிடம் பிரார்த்திப்பதுதான்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் பிரார்த்தித்துக் கொள்கிறேன் - அதைத் தவிர நம்மால் செய்ய முடிவது என்ன?

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  6. ஹூம், குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள இன்னொரு திருமணமா? கேலிக்கூத்துத்தான். இருந்த மனைவியையே குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு இருக்கும்படி பார்த்துக்க முடியலை. இன்னொருத்தி வந்து இன்னமும் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு மேலும் மேலும் வறுமையில் ஆழ்த்துவாள். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேலிக் கூத்து - சரியாகச் சொன்னீர்கள் கீதாம்மா. மேலும் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு மேலும் மேலும் வறுமையில் ஆழ்த்துவான்! அதே தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....