புதன், 13 அக்டோபர், 2021

புது-பழைய- பஸ் ஸ்டாண்ட் குழப்பங்கள் - மீன் செத்தா கருவாடு - தமிழகப் பயணம் - பகுதி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட நைவேத்தியங்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


வாழ்வின் முதல் இன்பம், உடல் நோயற்று இருப்பது; இரண்டாவது இன்பம், மனம் கவலையற்று இருப்பது; மூன்றாவது இன்பம், பிறருக்கு உதவியாக வாழ்வது.


******


செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வந்தது பற்றி இதுவரை மூன்று பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன்.  அந்த பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே. 


ஓசியில் வேர்க்கடலை தருகிறார்களோ


Gகுரு Bபாயின் தங்கச் சங்கிலி


சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு - ஜன் ஷதாப்தியில்கோவையிலிருந்து புறப்பட்டு திருச்சி வழியாக மயிலாடுதுறை வந்தடையும் ஜன் ஷதாப்தி இரயிலில் பயணித்தபோது கிடைத்த அனுபவங்களை, இத்தொடரின் சென்ற பகுதியில் சொல்லி இருந்தேன்.  மயிலாடுதுறை இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தால், ஒன்றிரண்டு அரசு பேருந்துகளும், ஒரு தனியார் பேருந்தும் நின்று கொண்டிருந்தன. இரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்குச் செல்ல பேருந்தை நாடினேன். தனியார் பேருந்தில் ஏறிய பொதுமக்களை, அரசுப் பேருந்தின் கண்காளிப்பாளர் “அந்த பஸ் முதல்ல போகாது, எங்க பஸ் தான் முதல்ல போகும்” என்று சொல்லி, பேருந்தில் இடம் இல்லாவிடினும் மக்களை பொதி மூட்டை கணக்கில் ஏற்றிக் கொண்டிருந்தார்.  “நீ எப்படி எங்களுக்கு முன்னால போவே நான் பார்க்கிறேன்” என்று தனியார் வாகன நடத்துனரிடமும் சவால் விட்டுக் கொண்டிருந்தார். பேருந்தில் ஏறி அமர இடம் கிடைக்க, அமர்ந்து கொண்டேன்.  தொடர்ந்து மக்கள் கூட்டம்!  ”கொரானாவது ஒண்ணாவது, அதோட பாச்சாவெல்லாம் எங்க கிட்ட பலிக்காது!” என்று அடித்துப் பிடித்து, ஒருவரை ஒருவர் ஈஷிக் கொண்டு நின்றார்கள்.  பத்து நிமிட பயணத்தில் பேருந்து நிலையம் வந்து விட்டாலும் ஏதோ நீண்ட பயணம் போலத் தோன்றியது - மனதுக்குள் கொஞ்சம் தீநுண்மியின் பயமும்! 

பேருந்து நிலையம் அடைந்ததும் திருக்கடையூர் செல்ல பேருந்து எங்கே கிடைக்கும் என கடை ஒன்றில் கேட்க, “இந்த பஸ் ஸ்டாண்ட்ல கிடைக்காதுங்க! அந்த பஸ் ஸ்டாண்டுக்கு போகணும், கிட்டக்க தான், நடந்து போயிடலாம்” என்று சொல்ல, பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். அங்கே ஒரு போக்குவரத்து காவல் அதிகாரியிடம் கேட்க, சரியாக வழி சொன்னார்.  பொடி நடையாக அந்தப் பேருந்து நிலையம் சென்று சேர்ந்து பார்த்தால், திருக்கடையூர் செல்லும் பேருந்து ஒன்று கூட இல்லை!  ”கொஞ்சம் நேரத்துல வந்துடுங்க! நாங்க எல்லாமும் அந்த பஸ்ஸுக்குத் தான் காத்திருக்கிறோம்” என்று ஒரு பெரியவர் சொன்னார்.  கூட்டத்தோடு கூட்டமாக நானும் காத்திருந்தேன்.  அங்கே அலுமினிய கூடைகள் நிறைய இருந்தன.  அதன் உரிமையாளர்களைக் காணவில்லை - நிழலில் அமர்ந்து கொண்டிருப்பார்களாக இருக்கும் என்று நினைத்தபடி, ”எதற்காக இத்தனை அலுமினியக் கூடைகள்?” என்றும் என்னை நானே கேட்டுக் கொண்டேன்!  ஏதோ ஒரு வித ஒவ்வாத வாசம் வேறு காற்றுடன் கலந்து வந்து கொண்டிருந்தது! அந்த வாசம் தொடர்ந்து வரப் போகிறது என்பது அப்போது தெரியவில்லை எனக்கு!


பேருந்து ஒன்று வர, பலரும் அதைக் குறி வைத்து ஓடினார்கள். பொறுமையாகக் காத்திருந்து நானும் ஏறிக் கொண்டேன்.  பின்புற இருக்கை தான் எனக்குக் கிடைத்தது.  திருக்கடையூர் செல்லும் பேருந்துகளில் பின்புறம் அமர்ந்து பயணிக்கவே கூடாது என்ற பாடம் அப்படி உட்கார்ந்த பிறகு தான் கிடைத்தது!  மனிதர்களோடு மனிதர்களாக அலுமினியக் கூடைகளும் உள்ளே வர, நடத்துனர் சத்தம் போட்டு இறக்கி விட்டு விட்டார். கூடைகளோடு இறங்கிய பெண்மணிகள் அவரை வம்புக்கிழுத்தபடி இறங்கிக் கொண்டார்கள். கூடைகளும், பெண்மணிகளும் இறங்கி விட்டாலும் கூடைகளோடு உள்ளே வந்த ஈக்கள் பேருந்திலிருந்து இறங்கவில்லை!  அவைகளும் மனிதர்களோடு பயணித்துக் கொண்டிருந்தன. ஆனால் வழியில் பல சிற்றூர்களில் கூடைகளுடன் ஏறிக்கொண்ட பெண்மணிகளை ஓட்டுனரோ நடத்துனரோ எதுவும் சொல்லவில்லை.  அதனால் இறங்கும் வரை ஈக்களுடனும் மீன்/கருவாடு வாசத்துடனும் தான் அந்தப் பயணம் அமைந்தது. 


பின் சீட்டில் இருந்த பெரியவர்களும் இந்த விஷயம் குறித்து தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.  பாட்டாகவே பாடியும் காட்டினார் ஒரு பெரியவர் - ”அதான் படத்துலயே சொல்லிட்டாங்களே, மீன் செத்தா கருவாடு, நீ செத்தா வெறுங்கூடு”ன்னு! பாடல்கள் எடுத்துக்காட்டுடன் பெரியவர் சொல்ல, பேருந்தில் இருந்த சக பயணிகளும் அவருடைய கருத்தினை ஒப்புக்கொண்டு தங்கள் கருத்துகளையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். கூடைகளுடன் வந்திருந்த பெண்மணிகளுக்குள் அப்படி ஒரு ஒற்றுமை.  அத்தனை கூடைகளும் ஒரே இடத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக வைத்துக் கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.  கூடைகளை எப்படி அடையாளம் கண்டு எடுத்துச் செல்வார்கள் என எனக்குள் சந்தேகம் எட்டிப் பார்த்தது.  ”இன்னிக்கும் இரண்டரை மணி மினி பஸ் வரலை! டைவர் (ட்ரைவர்) கக்கல! (கிடைக்கவில்லை என்பதை இப்படி சொல்கிறார்கள்)  அதான் இதுல கூட்டம்!” என்று அவர்களுக்குள் பேசிக் கொள்ள எனக்கும் கூட்டத்திற்கான காரணம் புரிந்தது.


வழி நெடுக சின்னஞ்சிறு ஊர்கள் - வித்தியாசமான பெயர்கள் - மண்ணம்பந்தல், செம்பனார் கோவில், ஆக்கூர் என்றெல்லாம் பெயர்கள். ஆறுபாதி என்று ஊர்!  எதனால் இப்படி ஒரு பெயரோ? மூன்று சாலைகள் சந்திக்கும் இடத்திற்குப் பெயர் முக்கூட்டு! இன்னுமொரு ஊரின் பெயர் குழமுக்கூட்டு! இப்படி வித்தியாசமான ஊர் பெயர்கள் பார்த்துக் கொண்டே, பேருந்தில் நடப்பவற்றையும் கேட்டுக் கொண்டே பயணித்துக் கொண்டிருந்தேன்.சுமார் 21 கிலோமீட்டர் தொலைவு தான் என்றாலும் சின்னச் சின்ன ஊர்களிலும் நின்று செல்லும் நகரப் பேருந்து என்பதால், பயணத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனது.  பேருந்து திருக்கடையூர் வரை மட்டுமே என்பதால் நின்று நிதானித்து பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டேன்.  பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போதே சஷ்டியப்தபூர்த்தி தம்பதிகளிடமிருந்து அலைபேசி அழைப்பு!  ”நாங்க வந்து சேர நேரம் ஆகுங்க! நீங்க நேரா தங்குமிடம் சென்று மதிய உணவு சாப்பிடுங்கள்” என்றும் சொல்ல, ஆஹா இன்னும் பொண்ணு - மாப்பிள்ளையே வரலையே, அதுக்குள்ள அங்கே போகணுமா என்று தோன்றியது!   பிறகு என்ன நடந்தது?  அடுத்த பகுதியில் சொல்கிறேனே! 


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….12 கருத்துகள்:

 1. கருவாடு வாசம் இங்கும் வந்து விட்டது ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... கருவாடு வாசம் அங்கே வரை வந்து விட்டதோ கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. எந்தப் பேருந்தாயினும் கடைசி இருக்கையில் மட்டும் அமரவே கூடாது.! கூரைக்கும் சீட்டுக்கும் எம்பி எம்பிக் குதிக்க வேண்டி இருக்கும்!​

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடைசி இருக்கை - பெரிதாக விரும்புவதில்லை என்றாலும் சில சமயங்களில் அமைந்து விடுவதுண்டு ஸ்ரீராம்.

   எம்பி எம்பிக் குதிக்க வேண்டியிருக்கும் - ஹாஹா... உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. தனியார் பேருந்துகள் செய்யும் தொந்தரவுகள் சொல்லி மாளாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனியார் பேருந்துகளின் தொந்தரவுகள் - அதீதம் தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. வாசகம் மிக அருமை.

  திருக்கடையூர் செல்லும் வழித்தடங்களில் உள்ள ஊர் பேர்களை சொன்னதும் என் மனம் மீண்டும் மயிலாடுதுறையை நோக்கி சென்றது. ஆக்கூர் முக்கூட்டில் பாடல்பெற்ற தலம் இருக்கிறது.

  கார் வாங்கும் முன்பு இப்படி பேருந்துகளில் பயணம் செய்த போது பட்ட கஷ்டங்கள் நீங்கள் சொன்னவை.

  கூட்டத்திற்கு ஏற்ற பேருந்துகள் இல்லை . எத்தனை பேருந்துகள் வந்தாலும் கூட்டம் அலை மோதும்.
  இரவு திரும்பி வர பேருந்து கிடைக்காது, சீர்காழி சென்று மீண்டும் மாயவரம் வருவோம் சில நேரம்.

  சில நேரம் டாக்ஸி, ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்து இருக்கிறோம்.
  மாயவரத்தில் திங்கள்கிழமை வாரச்சந்தை அதற்கு இந்த அலுமினிய கூடைகளில் , அதன் மேல் பனஓலையில் செய்த பை மடித்து வைத்து இருப்பார்கள். கருவாடு கொண்டு வருவார்கள் சந்தைக்கு. அலுமினிய கூடையில் பெயிண்டால் குறியீடு செய்து இருப்பார்கள் அடையாளம் தெரிய.

  திருவெண்காட்டிலிருந்து பூம்புகார் போகும் பேருந்துகளில் இப்படித்தான் இருக்கும்.

  உங்கள் பதிவு என் பழைய நினைவுகளை தந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   பதிவு உங்கள் மயிலாடுதுறை நினைவுகளை மீட்டெடுக்க உதவியிருப்பதில் மகிழ்ச்சி. பெயிண்ட் குறியீடு - எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை கீழ்பக்கம் இருந்திருக்கும்.

   இந்தப் பக்கங்களில் நிறைய கோவில்கள் - பார்க்க வேண்டும் என நினைத்திருக்கிறேன் மா. எப்போது அழைப்பு வருமோ! காத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. எங்கள் ஊருக்கு நாகப்பட்டினம் வழியாக போகும்போது இந்த வாசத்தை அனுபவித்தது உண்டு வெங்கட் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. சிங்கார வேலன் படக் காட்சிகள் ஞாபகம் வந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிங்கார வேலன் - எனக்கும் நினைவுக்கு வந்தது பயணிக்கும் போது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....