செவ்வாய், 19 அக்டோபர், 2021

தலைநகரிலிருந்து…. - முகநூல் பதிவுகள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


DO NOT SPOIL WHAT YOU HAVE BY DESIRING WHAT YOU HAVE NOT; REMEMBER THAT WHAT YOU NOW HAVE WAS ONCE AMONG THE THINGS YOU ONLY HOPED FOR - EPICURUS.


******


பழைய தில்லி - காணொளி


தலைநகர் தில்லி...  பெயரைக் கேட்டவுடனே பலருக்கும் தலைநகர் தில்லியில் இருக்கும் அழகான சாலைகள் நினைவுக்கு வரும். ராஜ்பாத் என அழைக்கப்படும் ராஜபாட்டை, அதன் அருகே அமைந்திருக்கும் அரசு அலுவலகங்கள், பாராளுமன்ற கட்டிடம், குடியரசுத் தலைவர் மாளிகை, பெரிய பெரிய கட்டிடங்கள் ஆகியவை மனதுக்குள் வந்து செல்லும். தலைநகர் தில்லி என்றாலே புதுதில்லி மட்டும் அல்ல பழைய தில்லியும் உண்டு. மிகப் பழமையான கட்டிடங்கள், குறுகலான சந்துகள், நூறு ஆண்டுகளை கடந்து நிற்கும் பல வியாபார தலங்கள் என அனைத்தும் பழைய தில்லியில் உண்டு. நெரிசலான சாலைகளில், நடந்து செல்வதே கடினம் எனும்போது, அங்கே ஒரு ஆட்டோவில் செல்வது எத்தனை கடினம்.. .. பாருங்களேன் ஒரு சிறு காணொளி.... பழைய தில்லியில் சதர் பஜார் பகுதியில் ஆட்டோவில் பயணித்த போது எடுத்த ஒரு காணொளி, எனது யூட்யூப் பக்கத்தில் (@Venkat's_Travelogue) இன்றைய காணொளியாக...   இணைப்பு கீழே....


Old Delhi Streets.. @Venkat's Travelogue - YouTube


******


கரோல் பாக் வடை கடை





கரோல் பாக் புது தில்லி.... 90களில் தலைநகர் வந்த பொழுது, மூன்று வருடங்களுக்கு மேலாக, கரோல்பாகில் தான் வசித்து வந்தேன். சரஸ்வதி மார்க் - சன்னா மார்க்கெட் உடன் சந்திக்கும் மூலையில் ஒரு கட்டிடத்தின் சுவற்றில் இரும்பு ரேக்குகள் வைத்து ஒரு மிகச் சிறிய கடை.  அதை கடை என்று சொல்வது கூட சரியல்ல. நடத்தியது ஒரு மலையாளி என்றாலும் தென்னிந்திய பொருட்கள் அனைத்தும் அங்கே கிடைக்கும். குறிப்பாக வார இதழ்கள் மாத இதழ்கள் மற்றும் சிற்றுண்டி வகைகள்.  நாள் முழுவதும் பருப்பு வடையும் உளுந்து வடையும் செய்து கொண்டே இருப்பார்கள். அந்த நாட்களில் பத்து ரூபாய்க்கு 4 வடை. இரண்டு பருப்பு வடைகளையும் 2 உளுந்து வடைகளையும் சட்னியுடன் ஒரு தொன்னையில் வைத்து தருவார். தென்னிந்தியர்கள் சாப்பிடுகிறார்களோ இல்லையோ வட இந்தியர்களின் கூட்டம் அம்மும். மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் சமயம் பல நாட்களில் எங்களுக்கான சிற்றுண்டி இந்த வடைகள் தான்... இன்று பல வருடங்கள் கழித்து கரோல் பாக் பகுதிக்குச் சென்றபோது, வடை கடை இன்னமும் இருப்பதை பார்த்தேன். அதே மலையாளி... இன்னமும் அதே அளவில் கடை.... பெரிதாக மாற்றம் இல்லை. பார்த்தவுடன், பல வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் "எந்தா சேட்டா, சுகந்தன்னே? கண்டு குறைய நாளாயல்லே" என்றார்.


அவரிடம் அளவளாவிய படியே நான்கு உளுந்து வடையும் நான்கு பருப்பு வடையும் வாங்கிக்கொண்டேன். இப்போது 15 ரூபாய்க்கு இரண்டு வடை.... விலை கொஞ்சம் அதிகரித்தாலும் சுவை அதே! அளவு மட்டும் மிகச் சுருங்கி விட்டது போலும் ஒரு உணர்வு.... அவருக்கும் கட்டுப்படி ஆக வேண்டுமே..... 


கரோல் பாக் பகுதி நிறைய மாற்றங்களைக் கண்டு விட்டாலும் இந்த வடை கடை மட்டும் இன்னமும் அங்கே இருப்பது பழைய நினைவுகளை எனக்குள் தூண்டிவிட்டது..... வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் சென்று வடை வாங்கி சுவைக்கலாம்..... கரோல் பாகில் இருந்த பலருக்கும் இந்த கடை நினைவில் இருக்கலாம்...... அப்படி வாங்கி சுவைக்க முடியாதவர்களுக்காக ஒரு படம் இங்கே....


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


28 கருத்துகள்:

  1. வடை வித்தியாசமான ஷேப்பில் இருக்கிறது!  காணொளி ஏற்கெனவே பார்த்துவிட்டேன்!  பழைய டெல்லி பார்ப்பதற்கு சுவாரஸ்யமாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான ஷேப்பில் - :) படம் எடுக்கும்போது அப்படி இருந்திருக்கலாம். எப்போதும் போலவே வட்ட வடிவம் தான் ஸ்ரீராம். பழைய தில்லி ஸ்வாரஸ்யமான இடம் தான் - நிறைய உணவு வகைகளும் உண்டு - குறிப்பாக அசைவம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. கரோல் பாக் என்றதும் என்னுடைய நினைவுகள் 49 வருடம் பின் நோக்கி சென்றது. இந்தியன் ஏர்லைன்ஸ் இன்டெர்வியூவிற்காக 1972 இல் டில்லி வந்தேன். கரோல் பாகில் WEA வில் ராசன்ஸ் போர்டிங் அண்ட் லாட்ஜிங்கில் 3 நாட்கள் தங்கினேன். தினமும் ஓர் ஓர் கட்ட தேர்வுக்காக Parliament street செல்லவேண்டும்.கடைசி தேர்வான நேர்முகத்தில் தேர்வாகவில்லை. அஜ்மல் கான் ரோடு மற்றும் குர்த்துவாரா மார்க் இன்னமும் நினைவில் உள்ளது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி. முன்பு இருந்த பல தங்குமிடங்கள் இப்போது இல்லை. புதிது புதிதாக நிறைய வந்து கொண்டே இருக்கிறது ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மிக அருமையான தில்லிப் பதிவு. முக நூலிலும் பார்த்தேன்.

    அங்கிருந்து தில்லியை விட்டு வந்த உறவுகள் சிலருக்கு நகல் எடுத்து அனுப்பினேன்.
    வடை கடை வாழ்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவினை உங்கள் உறவினர்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி வல்லிம்மா. முகநூலிலும் இங்கேயும் படித்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. காணொளி பார்த்தேன். நம்ம ஊரை அச்சு அசலாக அப்படியே காட்டியது. கரோல்பாக் அனுபவம் படிக்கும்போது மிகவும் சுவாரஸ்யம். இப்படி பழைய விஷயங்களை தேடிப்போகும்போது பெரும்பாலும் அவை கிடைப்பதில்லை. உங்களுக்கு அந்த வடை கடை அபப்டியே கிடைத்தது மிகவும் ஆச்சரியமான விஷயம் தான்! மகனை முதன் முதலாக ஸ்விட்சர்லாந்துக்கு டெல்லியிலிருந்து தான் படிக்க அனுப்பினோம். அப்போது கரோல் பாக் பார்த்தோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா... உங்களது தில்லி பயணம் குறித்த நினைவுகளை இப்பதிவு மீட்டெடுக்க உதவியதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. பழைய தில்லி காணொளி நன்றாக உள்ளது. அவ்வளவு நெரிசலில் ஆட்டோவில் ஊர்வலமாக செல்வதும் ஒரு மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆட்டோ ஓட்டுனருக்குத்தான் கொஞ்சம் கஸ்டம்.

    வடை கடை விபரங்கள் நன்று. அவர் இன்றளவும் அவ்வளவாக விலையை கூட்டாமல் விற்பனை செய்வது அவரின் நல்ல மனதை காட்டுகிறது. இங்கு ஹோட்டல்களில் ஒரு வடை நாங்கள் வந்த புதிதில் பத்து ரூபாயிலிருந்து, இப்போது நாற்பது வரை ஏற்றி விட்டார்கள். ஆனாலும் மக்கள் வாங்கி சாப்பிடுகிறார்கள் அது வேறு விஷயம். பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த தங்களது கருத்துரை மகிழ்ச்சி அளித்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. மலையாளி எங்கும் உண்டு சுவாரஸ்ய நினைவலைகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலையாளி எங்கும் உண்டு - உண்மை தான். எங்கேயும் நிறைந்திருக்கிறார்கள். நினைவலைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. தில்லி சென்ற போதெல்லாம் கரோல்பாக் சென்றதுண்டு. ஆனால் இந்தக் கடையை என் உடன் வந்தவர்கள் (தில்லிவாசிகள்) சொல்லவே இல்லையே. இப்போது தெரிந்துகொண்டுவிட்டேன்.

    காணொளி வந்தது உடன் எனக்கு அறிவிப்பும் வந்துவிட்டது. இனிதான் பார்க்க வேண்டும் ஜி.

    பார்க்கிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... நீங்கள் இங்கே சென்றதில்லையா? அடுத்த முறை தில்லி வந்தால் சொல்லுங்கள், நான் அழைத்துச் செல்கிறேன் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. காணொளி பார்த்தேன் ஜி. சாந்த்னி சௌக் அங்கு சுற்றிய நினைவுகள் வந்தது. அங்கு ட்ரை ஃப்ரூட்ஸ், அப்புறம் மரத்தினாலான பாசிகள் கைவேலைப் பொருட்கள் அங்கிருந்த சிறிய சிறிய தெருக்களில் சிறு கடைகளில் வாங்கினேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாந்த்னி சௌக் இப்போது நிறைய மாற்றங்கள் கீதாஜி. சமீபத்தில் அங்கே நிறைய மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். முடிந்தால் ஒரு முறை அங்கே சென்று காணொளி பகிர வேண்டும் என நினைத்திருக்கிறேன் - பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பழைய தில்லி காணொளி பார்த்தேன். அந்த நெரிசலில் ஆட்டோ ஓட்ட ஆட்டோ ஓட்டுநர் மிகத் திறமையானவராகத்தான் இருப்பார். அனுபவம். இடையில் மாடுகள் வேறு.

    சிலர் தங்கள் கடையின் பழைய வடிவத்தை மாற்றுவதில்லை. ஒன்று அடையாளம் மற்றொன்று ராசி நம்பிக்கையாக இருக்கலாம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நெரிசலில் ஆட்டோ ஓட்டுவது சிரமம் தான். ஆட்டோ ஓட்டுனர் பல வருடங்களாக பழக்கம். இடத்தைச் சொன்னால் போதும், கொண்டு சேர்த்து விடுவார்.

      கடையின் பழைய வடிவத்தை மாற்றுவதில்லை - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. கரோல் பாக் வடை சாப்பிட்டு இருக்கிறேன்.
    அப்புறம் உத்திர சுவாமி மலையில் கார் நிறுத்தும் இடம் பக்கம் ஒருவர் வடை விறபார் அதுவும் வாங்கி சாப்பிட்டு இருக்கிறேன். சுவையாக இருக்கும்.
    காணொளி பார்த்தேன். நெரிசல் இன்னும் அப்படியே இருப்பதும், மேலும் அதிகரித்து இருப்பதும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரோல் பாக் வடை நீங்களும் சுவைத்து இருப்பதில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. நாங்கள் அமிர்தசரஸ் சென்றிருந்த பொழுது, உங்கள் காணொளியில் இருப்பது போன்ற ஒரு பெரிய ஆட்டோவில் பயணித்தோம்.  முதல் முறை டில்லி சென்ற பொழுது வித்தியாசமான அந்த ஊர் ரிக்ஷாவில் ஆசைப்பட்டு பயணித்தேன். 
    கரோல் பாக் ஒரே ஒரு முறை சென்றிருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வடை கடை பற்றி அப்போது அறியாததால் வடை போச்சே..!:(( 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் பயணித்த ஆட்டோ சாதாரணமான ஆட்டோ தான். அமிர்தசரஸ் நினைவுகளை இப்பதிவு உங்களுக்கு மீட்டிருக்கிறது பானும்மா. மகிழ்ச்சி.

      வடை போச்சே! :) அடுத்த பயணத்தில் சுவைக்கலாம் விடுங்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. வடை கோள வடிவில் இருக்கிறதே என்று நினைத்தேன்..மேலே நீங்கள் கொடுத்திருக்கும் பதிலில் வாசித்து அறிந்துகொண்டேன்..வட்ட வடை தான் என்று. காணொலியும் பார்த்தேன் அண்ணா..மதுரையிலும் இப்படித்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கிரேஸ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....