சனி, 30 அக்டோபர், 2021

காஃபி வித் கிட்டு - 132 - ஜெய்சல்மேர் - அலட்சியம் - தன்னம்பிக்கை - சிறுகதை - உன் பேச்சு காய்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மதுரை பயணம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


TALK TO SOMEONE WHO MAKES YOU HAPPY… BUT, NEVER MISS TO TALK WITH SOMEONE WHO FEELS HAPPY TO TALK TO YOU... 


******


இந்த வாரத்தின் காணொளி - ஜெய்சல்மேர் பயணம் :



பயணம் எனக்குப் பிடித்தமானது என்பதை இந்த வலைப்பூ வாசிக்கும் அனைவரும் அறிவார்கள்.  சமீபமாக பயணம் செய்யும் சூழல் இல்லை.  சனி-ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டும் ஹரித்வார் சென்று வந்ததை பயணம் என்று ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது. பயணம் செய்ய முடியாவிட்டாலும், அவ்வப்போது பயணம் குறித்த தளங்களையும், காணொளிகளையும் கண்டு ரசிப்பது வழக்கம்.  அப்படி பார்த்த ஒரு காணொளி மிகவும் பிடித்திருந்தது - அதிலும் குறிப்பாக அப்பகுதியின் பாரம்பரிய இசைக்கலைஞர்களின் இசை.  மிகவும் தரமான தயாரிப்பாக இருந்தது.  ஜெய்செல்மேர் இரண்டு நாட்கள் பயணத்தில் என்ன என்ன பார்க்கலாம், எங்கே தங்கலாம் என்றெல்லாம் சொல்லி இருந்தார்.  20 நிமிடம் ஓடக் கூடிய காணொளி என்றாலும் அதன் தரத்திற்காக பார்க்கலாம்.  பார்க்க விருப்பம் இருந்தால் பாருங்களேன்.

மேலே உள்ள இணைப்பு வழி பார்க்க இயலவில்லை என்றால், இந்தச் சுட்டி வழி நேரடியாக யூட்யூப் தளத்தில் பார்க்கலாம்.  


******


பழைய நினைப்புடா பேராண்டி: அலட்சியம்….


2012-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - அலட்சியம்….


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்! 


தில்லிக் காரர்கள் அதுவும் வட இந்தியர்களுக்கு எதிலும் ஒரு அலட்சியம். எதையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டது – கடையில் ஏதாவது வாங்கிவிட்டு அதற்கான பணத்தினைக் கூட அலட்சியமாக மேஜை மீது தூக்கி தான் போடுவார்கள். கடைக்காரரும் மீதப் பணத்தினை மேஜை மேலே தூக்கிதான் போடுவார். சிறுவர்களிடம் கூட பணம் தாராளமாகப் புழங்கும் – நேற்று கூட மதர் டைரி பால் கடையில் ஆயிரம் ரூபாய் நோட்டினை அநாயாசமாக போட்டு, ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு போன ஒரு சிறுவனைக் காண முடிந்தது – மிஞ்சி மிஞ்சி போனால் எட்டு வயது இருக்கலாம்…..


காய்கறிக் கடையில், பலசரக்குக் கடையில் என எங்கே சென்றாலும், விற்பவரும், வாங்குபவரும் இப்படி பணத்தினை தூக்கி எறிவது பார்க்கும்போது சில சமயங்களில் தோன்றும் – “ஒருவேளை இந்த உலகத்திலிருந்து செல்லும்போது பணம் நம் கூட வரப்போவதில்லை”  என்ற எண்ணத்தினால் தான் இப்படி செய்கிறார்களோ என! ஆனாலும் பணத்தின் பின்னால் அலைந்து கொண்டே தானே இருக்கிறார்கள் என நினைக்கும்போது இதில் உண்மை இருக்காது – இதற்குக் காரணம் அலட்சியம் மட்டும் தான் என நினைத்துக் கொள்வேன்.


நேற்று காலை சாலையில் சென்று கொண்டிருந்தபோது நாராசமாக ஒரு சத்தம் – தகரத்தினை மொறமொறப்பான பகுதியில் வைத்து தேய்ப்பது போல ஒரு சத்தம்.  ஒரு சில நொடிகள் வந்தால் பரவாயில்லை. சத்தம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கவே சுற்று முற்றும் பார்த்தேன். பார்த்த போது மனதில் அப்படி ஒரு கோபம்.


******


இந்த வாரத்தின் ரசித்த வாசகம் - தன்னம்பிக்கை :


நம்பிக்கைதான் வாழ்க்கை. கடைசி வரைக்கும் முயற்சித்துப் பார்த்துவிட்டேன் இனி வாய்ப்பில்லை என்று சொல்வதே கூட அவநம்பிக்கை தான். அதை உடைத்து நொறுக்கினால் போதும். அந்தச் சுவருக்கு அப்பால் காத்திருக்கும் வெற்றி நமக்குத்தான்.


******


இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை - கல்லூரி வாசல்:


மின்கைத்தடி குறித்து முன்னரும் இங்கே எழுதி இருக்கிறேன்.  காலச்சக்கரம் நரசிம்மா அவர்களின் பத்துமலை பந்தம் தொடர் இங்கே வாசித்து வருகிறேன். மிகவும் சிறப்பாக அந்தத் தொடர் சென்று கொண்டிருக்கிறது.  அதே தளத்தில் இன்னும் சில தொடர்கள், கவிதை, சிறுகதை என வந்து கொண்டிருக்கிறது.  அந்தத் தளத்தில் படித்த ஒரு சிறுகதையின் சுட்டி கீழே… முடிந்தால் படித்துப் பாருங்களேன். எதிர்பாராத முடிவு! 


கல்லூரி வாசல் சிறுகதை | கோகுல் , மின்கைத்தடி (minkaithadi.com)


******


ராஜா காது கழுதை காது - காய் விட்டு விட்டீர்களா? :


தில்லியிலிருந்து ஹரித்வார் நோக்கி ஷதாப்தி இரயில் பயணித்த போது, பயணச் சீட்டு பரிசோதகர் ஒரு பயணியிடம் பேசியது - தனது மனைவி பக்கத்தில் அமராமல் வேறு இடத்தில் அமர்ந்திருந்தார் அந்த மூத்த பயணி.


“மனைவியை அங்கே விட்டு விட்டு இங்கே தனியாக ஏன் அமர்ந்து இருக்கிறீர்கள்?  அவருடன் காய் விட்டு விட்டீர்களா? இந்த வயதில் இப்படிச் செய்யக் கூடாது.”


புரியாத அந்த மூத்த பயணி முழித்துக் கொண்டிருக்க, அவரது கிண்டல் புரிந்த நானும் நண்பர் பத்மநாபனும் சிரித்துக் கொண்டிருந்தோம்.  அந்த மூத்த பயணி, பயணம் முழுவதுமே இடம் மாற்றி மாற்றி அமர்ந்தாலும், மனைவி அருகே மட்டும் அமரவே இல்லை! 


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


24 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான கதம்பம். சஸ்பென்சாக நிறுத்தியதால் பழைய பதிவைச் சென்று பார்த்து வந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. காஃபி வித் கிட்டு பதிவும் அருமையாக உள்ளது.

    பயணக்கட்டுரை காணொளி பிறகு பார்க்கிறேன்.

    பணத்தை மக்கள் அலட்சியமாக பயன்படுத்தும் செய்கைகளை கண்டு வியந்தேன். தங்களது பழைய பதிவுக்கும் சென்று படித்து வந்தேன். மனிதர்கள் பலவிதம்..

    தன்னம்பிக்கை குறித்த ரசித்த வாசகம் நன்றாக உள்ளது.

    ரசித்த கதையும் சென்று படித்து வந்தேன். கதை முடிவு எதிர்பாராத வித்தியாசமான திருப்பந்தான். கதாசிரியருக்கு வாழ்த்துகள்.

    ராஜா காதுவில் அந்த டிக்கெட் பரிசோதகர் கேட்டது சிரிப்பை வரவழைத்தது. ஆனாலும் அவர் மனைவி அருகிலேயே அமராமல் தப்பித்ததும், அது உண்மையோ என எண்ண வைக்கிறது.

    இன்றைய பதிவில் அனைத்து செய்தி தொகுப்பும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. இனிய காலை வணகம் வெங்கட்ஜி

    ஜெய்சல்மேர் காணொளி சமீபத்தில் பார்த்தேன் ஜி. மீண்டும் ரசித்தேன் இங்கு. அருமையா எடுத்திருக்காங்க. நானும் இப்படி ஊர்கள் பற்றி, சுற்றுலா பற்றி காணொளிகள், தகவல்கள் பார்ப்பதுண்டே!!!! அதுவும் ரொம்ப வெளியில் தெரியாத, பொதுவாக மக்கள் செல்லாத இடங்களாகவும் பார்ப்பதுண்டு.

    அடுத்த பகுதிகளுக்குப் பின்னர் வருகிறேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ஜி.

      ஜெய்சல்மேர் குறித்த நிறைய காணொளிகள் உண்டு. எனக்கும் இங்கே பயணம் இதுவரை வாய்க்கவில்லை. முடிந்த போது சென்று வர வேண்டும். செய்ய விரும்பும் பயணங்களின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது - ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ரசித்தேன்.

    மனைவி ஒருவேளை வள வள வனஜாவோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வள வள வனஜா - ஹாஹா... நல்ல பெயர்! வள் வள் வனஜாவாக இல்லாமல் இருந்தால் சரி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. ஹரித்வார் சென்றதை பயணம் என்று ஏற்க மனம் மறுக்கிறது...என்று கூறியுள்ளீர்கள். பல முறை பார்த்ததால் அப்படி இருக்குமோ? நாங்கள் ஹரித்வார் சென்றபோது அதிகம் ரசித்தேன். அங்கிருந்து திரும்ப மனம் வரவில்லை. கும்பகோணம், காஞ்சிபுரத்தைப் போல எங்கு பார்த்தாலும் கோயில்கள் இருப்பதாலோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹரித்வார் பல முறை சென்றுவிட்டேன். இந்த முறை சென்றது இடங்களைச் சுற்றிப் பார்க்க இல்லை என்பதால் அப்படிச் சொன்னேன். ஆனாலும் எனக்குப் பிடித்த இடங்களில் ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் ஆகிய இரண்டும் நிச்சயம் உண்டு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. கோயில்கள் இருப்பதால் அப்படிச் சொல்லவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. பதிவை ரசித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  8. ஜெய்செல்மேர் காணொளி அருமை.
    ரயில் பயண அனுபவம் நன்றாக இருக்கிறது.

    நீங்கள் விரும்பும் பயணம் விரைவில் வரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பயணம் வீடியோ பாதி பார்த்திருக்கிறேன்.

    ஹரித்வார் படங்கள் போட்டு இருக்கலாமே வெங்கட். எங்களால் தான் நகர முடியவில்லை.
    படங்களாவது பார்க்கிறோம்.

    பதிவின் வாசகம் உண்மை.

    ரயில் பயண தம்பதியரை ரசித்தேன்.
    இருவருமே பாவம். வயதான பிறகு வரும் மோதல்களை யார்
    தடுப்பது.:(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடியோ முடிந்த போது பாருங்கள் வல்லிம்மா.

      ஹரித்வார் படங்கள் இரண்டு ஞாயிறுகளில் பதிவாக வெளியிட்டு இருக்கிறேன் வல்லிம்மா.

      வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. தம்பதியர் இப்படியும் சிலர்.

    வீடியோ பாராத்தேன் அருமையான இடம். எனது துபாய் பயணத்தையும் நினைவூட்டியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் தம்பதியர் - உண்மை தான் மாதேவி.

      வீடியோ உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. அருமையான கதம்பம். பயணம் வீடியோ
    ஜெய்சல்மேர் சென்று வந்த அனுபவம் ஏற்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பயண அனுபவம் பழையது என்றாலும் அறியாத விஷயங்களை அறிய முடிந்தது !!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி நாஞ்சில் சிவா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....