திங்கள், 18 அக்டோபர், 2021

வாசிப்பனுபவம் - அபிமானி- ஜெயா சிங்காரவேலு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட ஹரித்வார் ரிஷிகேஷ் புகைப்பட உலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


நாமும் குடையும் ஒன்று தான்… பல நேரங்களில், நாம் தேவை என்றால் நம்மைத் தூக்கிப் பிடிப்பார்கள்; இல்லை என்றால் ஒரு ஓரமாக ஒதுக்கி வைப்பார்கள்.


******





சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக நான் படித்த ஒரு மின்னூல் ஜெயா சிங்காரவேலு அவர்கள் எழுதிய “அபிமானி” எனும் நாவல். அந்த மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 


வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: 91

விலை: ரூபாய் 140/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:


அபிமானி: #Pen to publish (Tamil Edition) eBook : சிங்காரவேலு, ஜெயா


******* 


சினிமா மீதும், சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் மீதும் நம் தமிழக மக்களில் பலருக்கு இருக்கும் மோகம் குறித்து படிக்கும்போதெல்லாம் நம் மக்கள் ஏன் இப்படி வெறி கொண்டு அலைகிறார்கள் என்று தோன்றுவதுண்டு!  ஒரு கலையை ரசிக்கலாம்! கலைஞர்களை ரசிக்கலாம்! ஆனால் கலையின் மீதோ, கலைஞர்கள் மீதோ வெறி கொண்டு அவர்கள் செய்வதெல்லாம் சரி என்று நினைத்து அவர்களுக்காக தங்கள் வாழ்க்கையைக் கூட இழக்கத் தயாராக இருக்கும் எத்தனையோ இளைஞர்கள் நம் தமிழகத்தில் இருப்பதை நினைத்தாலே மனதில் வேதனை தான்.  


அடுத்ததாக அரசியல்! எந்த ஒரு அரசியல் கட்சியும் தங்களது கொள்கைகளாகச் சொல்லும் எதையும் தொடர்ந்து தங்களிடையே வைத்துக் கொள்வதில்லை. இன்று ஒன்று பேசுவார்கள், நாளை அதையே மறுத்து வேறு ஒன்று பேசுவார்கள்!  வடிவேலு பாணியில் சொன்னால் “அது வேற வாய்! இது நாற வாய்!” என்பது போல தான் இவர்கள் கொள்கைகள்!  அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர எதிரியும் இல்லை!  இந்த மாதிரி அரசியலுக்காக, அந்த அரசியல் தலைவர்களுக்காக தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் மட மாந்தர்களை என்னவென்று சொல்லித் திருத்த!  இதில் நடிகர்கள் வேறு களம் இறங்கி விடுகிறார்கள் - இல்லை எனில் இறங்கி விடுவேன் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்! 


மூன்றாவது ஒரு விஷயம் வருத்தம் தருவது - குறிப்பாக தமிழகத்தில் இப்படி இவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டதே என்று வருந்துவது எதற்காக என்று கேட்டால் - குடிகாரர்கள் - இல்லை இல்லை மதுப்பிரியர்கள் என்று தான் சொல்ல வேண்டுமாம்!  - அவர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தினம் தினம் குடிக்காக நம் தமிழக மக்கள் செலவு செய்யும் தொகை என்று கணக்குப் பார்த்தால் நமக்கு மயக்கமே வந்து விடலாம்!  அரசு ஒரு பக்கம் - அது எந்த அரசாக இருந்தாலும் சரி - இலவசங்களை அள்ளி அள்ளி வழங்க, மறுபுறம் மதுக் கடைகளை நடத்தி, மக்களிடமிருந்தே பணத்தினை வசூலித்து மீண்டும் அடுத்த தேர்தலில் வேறு பல இலவசத் திட்டங்களை அள்ளித் தெளிக்க வசதியாக மது வழி பணம் சம்பாதித்து விடுகிறார்கள்.


இந்த மூன்று பிரச்சனைகளும் ஒன்றாக இணைந்து, தமிழகத்தையே குட்டிச் சுவராக மாற்றிக் கொண்டிருக்கிறது - பல வருடங்களாக இதே நிலை தான்.  இந்தச் சூழல்களை பின்னணியில் வைத்து, நல்லதொரு கதையை எழுதி இருக்கிறார் “அபிமானி” நூலாசிரியர் ஜெயா சிங்காரவேலு அவர்கள். இந்த பிரச்சனைகளுக்கு மாணவர் சமுதாயம் நல்ல தீர்வாக இருக்கும் என்ற எண்ணத்தினை, இந்தக் கதை மூலம் எடுத்துச் சொல்லி இருக்கிறார்.  கதையில் நல்ல முடிவாகவே சொல்லி இருந்தாலும், இப்படி எல்லாம் நிஜத்தில் நடந்து நாம் காண முடிவதில்லை!  இன்றைய மாணவ சமுதாயத்திலும் பல தேவையில்லாத விஷயங்கள் - மதுவிலிருந்து ஆரம்பித்து, போதைப் பொருட்கள் வரை புரையோடி இருக்கிறது!  நல்லது நடக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்குமே இருக்கிறது.  நல்லதே நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்!  வரும் காலத்திலாவது மது, அரசியல், சினிமா ஆகிய மும்முனை தாக்குதல்களிலிருந்து நம் தமிழகம் மீண்டு வரட்டும் - நூலாசிரியர் மட்டுமல்ல நாமும் ஆசைப்படும்படியே!


நல்லதொரு நூலை வாசித்து நீங்களும் உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாமே! நல்லதொரு நூலை எழுதிய ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்!


*******


இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களால் வெளியிடப்பட்ட நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  


சந்தித்ததும் சிந்தித்ததும்: எங்கள் மின்புத்தகங்கள்...


பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும், பின்னூட்டங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே! மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….




20 கருத்துகள்:

  1. வாசகம் புன்னகைக்க வைத்தது.  புத்தகப் பகிர்வு நல்லதொரு அறிமுகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி.

    அருமையான வாசகம். உண்மையில் நடப்பதும்.

    மது மட்டுமல்ல ஜி நீங்கள் சொல்லியிருக்கும் மூன்று விஷயங்களும் மூளையை மயக்கி மழுங்கடித்தி நாறடிப்பவை. மக்கள் இந்த மூன்றிலிருந்தும் எப்போது விடுபடுகிறார்களோ அப்போதுதான் இந்தச் சமுதாயம் உருப்படும்.

    உங்களின் அருமையான முன் விளக்கமே சொல்லிவிடுகிறது கதை இதன் அடிப்படையில் என்று

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி.

      வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. மாணவ சமுதாயம் நல்ல தீர்வுதான் ஆனால் நீங்கள் சொல்லியிருப்பதை டிட்டோ செய்கிறேன். அந்த மாணவர் சமுதாயம் நல்ல திசையில் பயணிக்கும் வகையில் நம் கல்வியும் சரி சமூக ஒழுக்கமும் சரி இல்லையே. நல்ல எண்ணங்கள் உடையவர்கள் அரசியலுக்கு வருவதில்லை ஏனென்றால் அவர்களால் நிலைத்து நிற்க முடியாது எந்த ஒரு நல்ல முடிவும் எடுக்க முடியாது அப்படியான சூழல்தான் நிலவுகிறது. அரசியலுக்கு வந்துதான் நல்லது செய்ய வேண்டும் என்றில்லை சத்தமில்லாமலும் செய்யலாம் என்று நினைக்கும் மக்களும் இருப்பதால்.

    ஆமாம் வருங்காலத்திலாவது நல்லது நடக்கட்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இப்படி வெளியில் தெரியாத பல எழுத்தாளர்களை அறிமுகம் செய்வதற்கும் வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்கும் சஹான இதழ் புவனா கோவிந்திற்கும் மற்றும் இங்கும் அறிமுகப்படுத்துவதற்கு உங்களுக்கும் மிக்க நன்றி பாராட்டுகளும், வாழ்த்துகளும். இப்படி வெளியில் அறியாத பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துவது மிக மிக நல்ல விஷயம். சஹானாவிற்கு மீண்டும் வாழ்த்துகள்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படித்ததை பகிர்ந்து கொள்வதிலும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது கீதாஜி. ஊக்கம் தரும் தங்கள் கருத்துரைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. ஆர்வத்தைத் தூண்டும் நூல் விமர்சனம் சார்.
    நூலை தறவிறக்கம் செய்துகொண்டேன்.
    விரைவில் வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஆஹா அபிமானிக்கு எனது அபிமானம் உண்டு போலயே... அவசியம் படிக்க வேண்டியவைதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தபோது படித்துப் பாருங்கள் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. நூல் அறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. நூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. நல்ல விமர்சனம்..வாசித்துவிடுகிறேன்..வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. //மாணவ சமுதாயத்திலும் பல தேவையில்லாத விஷயங்கள் - மதுவிலிருந்து ஆரம்பித்து, போதைப் பொருட்கள் வரை புரையோடி இருக்கிறது! நல்லது நடக்க வேண்டும் என்ற ஆசை நம் எல்லோருக்குமே இருக்கிறது. நல்லதே நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம்! வரும் காலத்திலாவது மது, அரசியல், சினிமா ஆகிய மும்முனை தாக்குதல்களிலிருந்து நம் தமிழகம் மீண்டு வரட்டும் - நூலாசிரியர் மட்டுமல்ல நாமும் ஆசைப்படும்படியே!//

    நன்றாக சொன்னீர்கள்.
    நூல் ஆசிரியர் தேச மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அபிமானி என்று தெரிகிறது.
    நீங்களும் நன்றாக விமர்சனம் செய்தீர்கள்.
    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமர்சனம் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....