சனி, 16 அக்டோபர், 2021

காஃபி வித் கிட்டு - 130 - கூட்டுக் குடும்பம் - நகோடி ஹல்வா - Language of Humanity - துக்கத்தில் முடிவு - வாழ்க்கை - சிவப்பு - காது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பொண்ணு மாப்பிள்ளை லேட் எண்ட்ரி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


GOOD BEHAVIOUR DOESN’T HAVE ANY MONETARY VALUE; BUT, IT HAS THE POWER TO PURCHASE MILLION HEARTS. 


******


பழைய நினைப்புடா பேராண்டி: கூட்டுக் குடும்பத்தை இழந்தோமா?


2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - கூட்டுக் குடும்பத்தை இழந்தோமா?


பதிவிலிருந்து சில வரிகள் இங்கே! முழு பதிவினையும் படிக்க, மேலே உள்ள சுட்டியைச் சொடுக்கலாம்! 


சரி என்னை யோசிக்க வைத்த அந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன்.  அலுவலகத்தில் இருக்கும் ஒரு சக ஊழியர், தனது உத்திரப் பிரதேச கிராமத்தினை விட்டு, மனைவி மற்றும் ஒன்றரை வயது சிறு மகனுடன் தில்லி வந்து வசித்துக் கொண்டிருக்கிறார்.  அவரது தாய்-தந்தை கிராமத்தில் இருக்கிறார்கள். 


சென்ற மாதத்தில் ஒரு ஞாயிறு அன்று மனைவி வழக்கம் போல் சில காலை வேலைகளை செய்து  விட்டு துவைத்த துணிகளை  காயப் போட்டு அதற்கு கிளிப் போடாமல் சமையல் வேலை செய்யப் போய் இருக்கிறார்.  ஹாலில் இப்போது தான் தவழ்ந்து போய்  எதையாவது பிடித்து எழுந்து நிற்கத் தொடங்கிய தன்னுடைய குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார் நண்பர். 


அப்போது மனைவி சமையலறையிலிருந்து “வெளியில் காற்று பலமாக அடிக்கிறது, கிளிப் வேறு போடவில்லை, நீங்கள் கொஞ்சம் போட்டு விடுங்கள்” என்று கணவரிடம் சொல்ல, அவரோ குழந்தை விளையாடிக்கொண்டு தானே இருக்கிறான் என்று  வெளியே சென்று கிளிப் போட்டுக்கொண்டிருக்க, சில வினாடிகளில் வீட்டினுள் இருந்து பலமான சத்தம்.  உள்ளே விரைந்து வந்து பார்த்தால்…


******


இந்த வாரத்தின் உணவு - நகோடி ஹல்வா - (B)பேட்மி பூரி :





சில நாட்களுக்கு முன்னர் பழைய தில்லியின் சாவ்டி பஜார் பகுதியில் அமைந்திருக்கும் ஷ்யாம் ஸ்வீட்ஸ் கடைக்குச் சென்றிருந்தேன்.  சனிக்கிழமை அன்று காலை மெதுவாக எழுந்திருந்ததால் சமைக்க பொறுமை இல்லை.  தில்லி மெட்ரோ இருக்க கவலை ஏன்? நேராக சாவ்டி பஜார் மெட்ரோ இரயில் நிலையத்தில் இறங்கி பொடி நடையாக ஷ்யாம் ஸ்வீட்ஸ் கடைக்குச் சென்று சேர்ந்தேன். மிகவும் பழமையான கடை - நூறு வருடங்களுக்கும் மேலாக அந்தப் பகுதியில் இருக்கும் கடை அது.  சிறு கடை தான். வெளியே நின்று கொண்டு சாப்பிட வசதி உண்டு என்றாலும் மிகவும் கூட்டமாக இருக்கும் இடம்.  கொஞ்சம் ஏமாந்தால் சாலையில் செல்லும் வாகனம் உங்கள் மீது மோதி விடக் கூடும்!  அதனால் காத்திருந்து இடம் பிடித்து, உங்களுக்குத் தேவையானதைச் சொன்னால் சிப்பந்தி கொண்டு வந்து தந்து விடுவார்.  அங்கே மிகவும் பிரபலமான உணவு என்றால் Bedmi Poori மற்றும் Nagori Halwa!  Lussi-உம் அங்கே பிரபலம்.  இன்னும் நிறைய உணவு வகைகள் உண்டு. 


பானிபூரியை விட கொஞ்சம் பெரிதான பூரிக்குள் ஹல்வா வைத்து சாப்பிட வேண்டும்.  Bedmi Poori உடன் இரண்டு மூன்று வித தொட்டுக்கைகள் தருவார்கள் - அதில் ஒன்று மஞ்சள் பூசணி/பரங்கிக்காய் கொண்டு செய்யப்படும் தொட்டுக்கை - தித்திப்பாக இருக்கும்! வித்தியாசமான உணவுகளைச் சுவைப்பதில் ஆர்வம் இருப்பவர்கள் இந்த உணவு வகைகளைச் சுவைக்கலாம்.  எப்படிச் செய்வது, என்ன சேர்ப்பார்கள் என்றெல்லாம் தெரிந்து கொள்ள நினைத்தால், இணையத்தில் இதற்கான செய்முறைகள் கொட்டிக் கிடக்கின்றன.  பார்த்து தெரிந்து கொள்ளலாம்! இங்கே நான் சாப்பிடுவதற்கு முன்னர் உணவை படமாக எடுத்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன். சுவைக்க முடியாதவர்கள், பார்த்து ரசிக்கலாம்! பூரியுடன் ஹல்வா - என்ன Combination இது என சிலர் நினைக்கக் கூடும்! ஒரு மாதிரி குண்ட்சான சுவையாகவே இருக்கும்! :) 


******


இந்த வாரத்தின் காணொளி - Language of Humanity :


சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு காணொளி/விளம்பரம் Tata Harrier விளம்பரம்.  நன்றாகவே இருக்கும் விளம்பரம். பாருங்களேன்.



மேலே உள்ள காணொளியைப் பார்க்க இயலவில்லை எனில் கீழே உள்ள இணைப்பு வழியேயும் பார்க்கலாம். 


Harrier | Language of Humanity #AboveAll - YouTube


******


இந்த வாரத்தின் அறிவுரை - துக்கத்தில் முடிவு எடுக்காதீர்கள் :


"துக்கமான சூழலில் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அது மீண்டும் உங்களை துக்கத்தில் தான் கொண்டு போய் விடும் "


இதை உங்கள் வாழ்க்கையில் ஒரு அடிப்படையான பாடமாக வைத்து கொள்ளுங்கள்.


ஏனென்றால் மனநிலை சரியில்லாத துக்கமான நேரத்தில் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்காதீர்கள்.


அது போன்ற நேரங்களில் இறைவனை மனதில் நினைத்து கொண்டு அமைதியாக தியானம் செய்யுங்கள் அல்லது நன்றாக சாப்பிட்டு விட்டு உறங்கி விடுங்கள்.


மேலே உள்ள அறிவுரையைச் சொன்னது யார் என்று உங்களால் சொல்ல முடியுமா?  முடிந்தால் சொல்லுங்களேன்! 


******


இந்த வாரத்தின் வாட்ஸப் நிலைத்தகவல் - துக்கத்தில் முடிவு எடுக்காதீர்கள் :




******


இந்த வாரத்தின் நிழற்படம் - சிவப்பு :



சமீபத்தில் எடுத்த ஒரு நிழற்படம்...



******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை - காது :


சமீபத்தில் முகநூலில் படித்து ரசித்த ஒரு கவிதை, உங்கள் பார்வைக்கு - நீங்களும் ரசிக்க!  கவிதையை விட படம் இன்னும் அதிகம் ரசித்தேன்! 





அற்புதமான காது


அந்தக் குரங்கு

எங்கேயோ பார்த்தபடி 

ஒரு பாறை மீது அமர்ந்திருந்தது 

அது நோக்கிய தூரத்தில் 

தழை கடித்துக் கொண்டிருந்தது ஆடு

அந்த வேலி முழுக்க இலைகள் 

ஆட்டின் தாடைகள் அசைவதைக் கண்டு

குரங்கின் கண்கள் சிரித்தன

அதன் முகத்தில் புன்னகை நிரம்பியது

திருவிளக்கு ஒன்றிலிருந்து

நின்றெரியும் சுடரைப்போல் 

அதில் ஒளி கூடியது

நான் நெகிழ்ந்த கணங்கள் பலவுண்டு

அதில் இதுவும் ஒன்று 

அந்தக் குரங்குக்கு 

விரிந்த பூவரசம்பூவைப்போல் காது 

அந்தக் காதில் என் மனக்குரல் கேட்டிருக்கும் தானே.


- மௌனன் யாத்ரீகா (PC: Suresh Suriya)


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….



30 கருத்துகள்:

  1. இன்றைய கதம்பம் ரசித்தேன்.

    படத்தைப் பார்த்து (வலது ஓர) கேக் என நினைத்தேன்.

    குழந்தைக்கு என்ன ஆச்சு எனப் படிக்கத் தெம்பு இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      கேக் - ஹாஹா... பூரி தான்! ஒன்றின் மேல் ஒன்றாக வைத்திருக்கிறார்கள்.

      குழந்தை - சோகம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அனைத்தும் அருமை...
    துக்கத்தில் முடிவெடுக்காதீர்கள்...சரியான யோசனை..இதனை நான் கடைபிடித்து வருகிறேன். அவ்வாறான சூழலில் இறைவனை நினைத்துக்கொள்வேன். மனதை மடைமாற்றம் செய்வேன். பின்னர் முடிவெடுப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கூட்டுக்குடும்பம் என்றுமே நன்மையைத் தான் தரும் ஜி நிகழ்வை படித்து மனம் கனத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டுக் குடும்பம் நன்மையே தரும் - உண்மை கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பதிவின் அனைத்து பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. குண்ட்சான சுவையா? அப்படியென்றால்?
    பண்டமும் வித்தியாசம் சுவையும் வித்தியாசம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசமான சுவை - என்ன சுவை என்று சொல்ல முடியாததாக இருக்கலாம்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  6. காணொளி ,அறிவுரை, சுவையான உணவு என அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. காணொளி அருமை. குழந்தைக்கு என்ன ஆயிற்று என்ற படபடப்பு மனதில் நிற்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வெங்கட்ஜி பழைய பதிவை வாசித்தேன். கூட்டுக் குடும்பம் இல்லாமல் ஆனது ஒரு புறம் என்றாலும் வயிற்றுப் பிழைப்பிற்காகப் போய்த்தான் ஆக வேண்டியுள்ளது. கிராமங்கள் வேலை வாய்ப்புகள் முன்பு போல் இருந்தால் யாரும் வெளியூர் செல்வது குறைவாக இருக்கும் மற்றொன்று இப்போது குழந்தைகளும் நிறைய படிக்கிறார்கள். முந்தையக் காலகட்டத்திலும் கூட வெளிநாடு சென்று படித்தவர்கள் அங்கேயே செட்டில் ஆனவர்களும் இருக்கிறார்களே. பல காரணங்கள் சொல்லலாம். பொதுவில் நியூக்ளியர் குடும்பங்கள் தவிர்க்க முடியாததாகிவிட்டது. சூழல்கள்தான் முக்கியக் காரணம்.

    அந்தக் குழந்தை இறந்ததற்குக் காரணம் கூட்டுக் குடும்பம் இல்லாமை என்று சொல்வதற்கில்லை. அத்தந்தை அதன் அம்மாவை அருகில் வந்து பார்த்துக் கொள் என்று சொல்லியோ அல்லது குழந்தயைப் பாதுகாப்பான இடத்தில் இருத்தி வைத்து விட்டோ சென்றிருக்கலாம். குழந்தைகள் இருக்கும் இடத்தில் கவனம் மிக மிகத் தேவை. அதுவும் தனியாக இருக்கும் பட்சத்தில். எனக்கும் இதே போன்ற அனுபவம் உண்டு ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டுக் குடும்பம் குறித்த தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. இரு பக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. Bedmi பூரி சாப்பிட்டுருக்கிறேன் வீட்டில் செய்ததும் உண்டு. ஆக்ரா மதுரா சென்ற போது சுவைத்து அதன் பின் வீட்டில் செய்தது. கோதுமை மாவு, உளுந்து அரைத்து கலந்து என்று பூரி அங்கு தெரிந்து கொண்டடது. தொட்டுக் கொள்ள ஆலு ரசேதார்.

    நகோடி/ரி ஹல்வாவும் (ரவை ஹல்வா) பேட்மி பூரியும் தில்லியில் சுவைத்ததுண்டு. கூடவே ஆலூ சப்ஜியும் வெந்தயச் சுவையுடன். வித்தியாசமாகச் சுவைப்பதில் ஆர்வம் உண்டே எனக்கு. அப்போது நான் இனிமையானவள் என்று என் உடம்பு சொல்லலை ஹாஹாஹா....ஆனால் இப்போது ஹல்வாவுடன் சாப்பிடுவதில்லை ஆனால் பெட்மி பூரி செய்து ஆலூ சப்ஜி அல்லது ஆலூ பூஷணி சப்ஜி..!!!!

    இத்தனை நேரம் அடித்துக் கமென்ட் போகவே இல்லை இப்பவாச்சும் போகிறதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்துவிட்டது அப்போ இதுக்கு அப்புறம் அடித்ததும் வந்திருக்கும்!!!

      கீதா

      நீக்கு
    2. பதிவு குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. சில சமயங்களில் கருத்துரை வருவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. "துக்கமான சூழலில் நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் அது மீண்டும் உங்களை துக்கத்தில் தான் கொண்டு போய் விடும் "//

    நல்லதொரு அறிவுரை. யார் சொல்லியது என்று தெரியவில்லை ஜி. ஆனால் உளவியலில் பொதுவாக மைன்ட் சரியில்லாத போது எந்த முடிவும் எடுக்கக் கூடாது மனதை அமைதியாக்கிக் கொண்டு சில நாட்கள் ஒத்திப் போட்டு மனம் ஒரு நிலைக்கு வந்ததும் முடிவு எடுக்க வேண்டும், துக்கம் என்றில்லை எமோஷனல் முடிவுகள் எடுக்கக் கூடாது என்று சொல்வதுண்டு.

    சிவப்பு படமும், நிலைத்தகவலும் அருமை

    ஆகா நம்ம செல்லக் குட்டி!! செம க்யூட் மனதை மிகவும் கவர்ந்துவிட்டது!!!

    காணொளி பார்த்துவிட்டு வருகிறேன் ஜி

    வாசகம் யதார்த்தம்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. குழந்தை விவரம் படிக்க எனக்கும் மனமில்லை.  நகோடி ஹல்வா...  ஸ்வீட் அலுத்துப் போகிறது  .  காரமாய் என்ன இருக்கிறது?!  துக்கத்திலும் கோபத்திலும் முவுகள் எடுப்பது எப்போதுமே சரிவராது!  எல்லோருக்குமே பலமுறை அனுபவம் இருக்கும்.  சிவப்பு...  குங்குமமலை?  குங்குமங்குன்று!  காது கவிதை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குங்குமக் குன்று - :) அதே தான் ஸ்ரீராம். பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. நல்ல வாசகம் .

    கூட்டுக்குடும்பம் இப்போது சாத்தியம் இல்லா காலமாக இருக்கிறதே!
    ஓன்றாக வியாபாரம் செய்பவர்கள் (ஓரே குடும்பமாக தொழில் செய்பவர்கள்) ஒரே இடத்தில் கூட்டு குடும்பமாக இருக்கலாம். வேலை தேடி வெளியூரில் இருப்பவர்கள் எப்படி இருக்க முடியும்! நாள் கிழமைகளில் கூடுவதே பெரிய விஷ்யமாக இருக்கிறது இப்போது.

    //பெரிதான பூரிக்குள் ஹல்வா வைத்து சாப்பிட வேண்டும்.//
    நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
    காணொளி அருமை.

    துக்கத்தில் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்காதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கூட்டுக்குடும்பம் பதிவு படித்து மனது கனத்து போய் விட்டது.
      கவனக்குறைவு , விளைவு!

      நீக்கு
    2. வாசகமும் பதிவின் பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    3. கவனக் குறைவு விளைவு மோசம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  13. கூட்டு குடும்பம் காணல் நீராகிவிட்டதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கானல் நீராகிப் போன கூட்டுக் குடும்பம் - உண்மை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....