வெள்ளி, 29 அக்டோபர், 2021

மதுரைக்கு ஒரு பயணம் - ஆதி வெங்கட் - பகுதி 1


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தரங்கம்பாடி பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“நம்முடைய ஏணியானது சரியான சுவரின் மீது சாய்ந்திருக்கவில்லை என்றால், நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வோர் அடியும் நம்மைத் தவறான இடத்திற்கு வேகமாக அழைத்துச் செல்லக்கூடிய ஒன்றாக மட்டுமே இருக்கும்.”


******





வேலை, சந்தர்ப்ப சூழல், நேரமின்மை, உடல்நலம் என்று இது போன்ற  காரணங்களால் கலந்து கொள்ள முடியாத நிகழ்வுகள் எத்தனையோ உள்ளன. அதையெல்லாம் பெரிதுபடுத்தாமல் புரிந்து கொள்வோரும் உள்ளனர். அதையெல்லாம் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் நம்மை உதாசீனப்படுத்துவோரும் இருக்கத் தான்  செய்கிறார்கள்! விந்தையான மனிதர்கள்!!


மேலே குறிப்பிட்ட நிகழ்வுகளுக்குள் என் நெருங்கிய உறவுகளும் உண்டு. ஒவ்வொரு சமயத்திலும் ஏதோ சில  காரணங்களால் செல்ல முடியாமலேயே போய்விட்டது. அதற்காக யாரும் கோபித்துக் கொள்ளவில்லை..! மீண்டும் இப்போது ஒரு அழைப்பு. புவனா! வாட்ஸப்ல மெசேஜ் அனுப்பியிருக்கேன்ப்பா. 'நீ தான் வந்து முடிச்சு போடணும்'! என்று சொல்லி வைத்துவிட்டார் என் மாமா...:)


அவருக்கு தான் மதுரையில் அறுபதாம் கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது! மகளின் உடல்நலமின்மை, எனக்கும் சிறு சிறு உபாதைகள் இருக்கிறதே என்று ஒருபுறம் நினைத்தாலும், இந்த சந்தர்ப்பத்தில் தான் எல்லாரையும் ஒன்றாக பார்க்க முடியும். நல்லதொரு வாய்ப்பு. பார்த்து எவ்வளவு வருஷங்களாச்சு!!




என்னவரும் 'போயிட்டு வாயேன்' என்று இரு வழிக்கும் டிக்கெட்களை பதிவு செய்து தந்தார். வெள்ளிக்கிழமை சஷ்டியப்த பூர்த்தி என்றால் வியாழன் மாலை வைகை விரைவு ரயிலில் திருச்சியிலிருந்து புறப்பட்டோம். மாலை 6:35 க்கு ரயில். மகள் பள்ளியிலிருந்து வந்ததும் விரைவில் தயாராகி, நேரம்  குறைவாக இருந்ததால் ஓலா ஆட்டோவிலேயே திருச்சி ஜங்க்‌ஷனுக்கு பயணப்பட்டோம்.


ஜங்க்‌ஷனுக்கு சென்று சேரும் போது மணி 6:15 ஆகிவிட்டது. நேரே பிளாட்ஃபார்ம் நம்பர் 5க்கு சப்வே வழியாக ஏறி, இறங்கி சென்று சேர்ந்தோம். சென்னையிலிருந்து மதுரை வரை செல்லும் விரைவு ரயில். டிஸ்பிளே எதுவும் போடவில்லை. கோச் நம்பர்  சொல்லி அங்கே இருந்த கடைக்காரரிடம் கேட்ட போது, இன்னும் முன்னாடி போகணும்மா! அதோ தெரியுது பாரு பாலம்! அதத் தாண்டி நில்லு! என்றார். தேங்க்ஸ்ண்ணே! 





சிறிது தூரம் நடந்து அவர் சொன்ன குறிப்பிட்ட பாலம் தாண்டியதும் அருகே இருந்த கடையில் கேட்டதும் 'இங்க தாம்மா! இங்கேயே நில்லுங்க! என்றார். தேங்க்ஸ்ண்ணே! பத்து நிமிடக் காத்திருப்பில் சத்தமே இல்லாமல் வைகை விரைவு ரயிலும் நடைபாதைக்கு வந்து நின்றது.


எங்களுக்கான இருக்கையிலும் பார்த்து  அமர்ந்தாச்சு.  திருச்சியிலிருந்து 6:40 க்கு கிளம்பும் இந்த ரயில் இரவு 9:15 க்கு மதுரைக்கு சென்று விடும். மாமாவுக்கும் அலைபேசியில் அழைத்து வண்டியில் ஏறி விட்டதாக சொன்னதும், என் இன்னொரு மாமாவை ஸ்டேஷனுக்கு அனுப்பி வைப்பதாக சொல்லி விட்டார்.


இந்த முறை செய்த ரயில் பயணம் மிகவும் ரம்மியமானதாக இருந்தது என்று சொல்லலாம். திருச்சியிலிருந்து துவங்கிய மழைச்சாரல் மதுரை வரை எங்களை வருடிக் கொடுத்தது..  பிறந்த வீட்டு சொந்தங்களை பார்க்கும் ஆவல்! சில்லென்ற சூழல்! மனதுக்குள்  அசை போட்ட மதுரையோடு தொடர்புடைய ராஜா சாரின் இதமான பாடல்கள்..:) 


மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ!அடுக்கு மல்லி எடுத்து வெச்சேன்!மதுர மரிக்கொழுந்து வாசம்!


இப்படியே நேரம் போனதே தெரியலை..:) இடையிடையே ரயிலில் பார்க்கக் கிடைத்த மனிதர்களும், காட்சிகளும் நேரத்தை கடத்தின..:) எங்களை அழைத்துச் செல்ல ஸ்டேஷனுக்கு வந்துவிட்டதாக வந்த தகவலும் கிடைக்கப் பெற்றது. சோழவந்தான் ஸ்டேஷனைக் கடந்ததுமே எல்லோரும் இறங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தனர். அதற்குள் மதுரை வந்துவிடுமா!! இன்னும் நேரமாகுமே! என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வைகையை கடந்ததும் தான் நம்பிக்கை வந்தது...:) எங்கள் லக்கேஜையும் எடுத்து வைத்தோம்.


ஒருவழியாக மதுரைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே வந்துவிட்டோம். எந்த பிளாட்ஃபார்ம்! எப்படி வெளியே வரணும்! என்று தெரியலை..:)  ரயிலை விட்டு இறங்கியதும் எல்லோரும் கும்பலாய் சென்ற வழியிலேயே சென்று வெளியே வந்தோம்.


ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும் எங்களை அழைத்துச் செல்ல மாமாவும், கடைசி மாமாவின் மகளும் வந்திருந்தார்கள். அவள் என்னைக் கண்டதும், புவனாக்கா! என்று ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்..:) அவள் என்னை அணைத்துக் கொண்ட இறுக்கத்தில் அவளின் ப்ரியம் வெளிப்பட்டது..:)


அங்கிருந்து காரில் பதினைந்து நிமிடங்கள் பயணம் செய்து பேசிக் கொண்டே விழா நடக்கும் மண்டபத்துக்கும் வந்துவிட்டோம். வாய் கொள்ளா புன்னகையுடன் எங்களை வரவேற்ற சொந்தங்களும், ஒருவருக்கொருவர் நலம் விசாரித்தலும் என நேரம் இனிமையாகக் கடந்தது. முதல்ல போய் சாப்பிட்டுட்டு வா என அனுப்பி வைத்தனர். அதன் பின் அரட்டை தான். மாமாக்கள், மாமிகள், அவர்களின் பிள்ளைகள் இன்னும் பிற சொந்தங்கள் என அனைத்து சொந்தங்களையும் ஒருங்கே பார்க்க முடிந்ததில். மிக்க மகிழ்ச்சி.


மாமா பிள்ளைகள் ஒருபுறம் கைகளில் தோன்றிய விதத்தில்  மெஹந்தி போடுவதும், ஒருவருக்கொருவர் கலாட்டா செய்து கொள்வதும் என ஒருபுறமென்றால், எவ்வளவு வருஷமாச்சு உன்ன பார்த்து! சின்னப் பொண்ணா பார்த்த புவனாவா இவ்வளவு மெச்சூர்டா இருக்கான்னு இருக்கு! நீ எழுதறது எல்லாம் பார்ப்பேன்! அழகா எழுதறடா கண்ணு! சூப்பர் சூப்பரா சமைக்கற! என மாமிகள் சொல்வதும் என 11:30 மணி வரை நேரம் சென்றதே தெரியலை.


காலையில் முகூர்த்தத்துக்கு தயாராகணுமே என்று எங்களுக்கு தரப்பட்ட ரூமுக்கும் சென்று படுத்தாச்சு. ஆனால்!! உறக்கம் வந்ததா?


******


பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்



ஆதி வெங்கட்


22 கருத்துகள்:

  1. திருமணம் போன்ற விசேஷங்களில் உறவினர்கள் பலரை ஒருசேரப் பார்த்து, பேசி வருவதில் மகிழ்ச்சி பொங்கும். பெண்ணுக்கும் அவர்களை அறிமுகமும் செய்துவிடலாம்.

    இரயிலில் கூட்டம் இருந்ததா? மாஸ்க் எல்லோரும் போட்டுக்கொண்டிருந்தாங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான். எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்க முடிந்தது.மகளுக்கும் காண்பிக்க முடிந்தது.

      Reserved seats மட்டும் தான்.பெரும்பாலானோர் முகக்கவசம் அணிந்து வந்திருந்தார்கள்.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லை சார்.

      நீக்கு
  2. உறவுகளுடன் கலந்து மகிழ்வது என்றுமே சுகம்தான் - அதுவும் நீண்ட நாட்களுக்குப் பின்.  பேஸ்புக்கிலும் படித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார். கொண்டாட மனிதர்கள் இருக்கும் போது மகிழ்ச்சிக்கு குறைவேது.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  3. இவ்வாறான பயணங்களும், சுற்றங்களின் அன்பும் என்றும் மனதில் நிற்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் ஐயா. புத்துணர்வை உணர்ந்தேன்.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. அதையெல்லாம் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் நம்மை உதாசீனப்படுத்துவோரும் இருக்கத் தான் செய்கிறார்கள்! விந்தையான மனிதர்கள்!!//

    அதைக் கண்டுக்காம நம்மிடம் அன்பு கொண்டாடும் சொந்தங்கள், நட்புகள் எண்ணும் அளவு இருந்தால் கூடப் போதுமே...

    ஆமாம் ஆதி நீங்கள் சொல்வது போல் நம் வீட்டுச் சொந்தங்களைக் காண்பதில் நமக்கு அத்தனை சந்தோஷம் இருக்கும். பல நாட்களுக்குப் பின் சந்திக்கும் போது கேட்கவும் வேண்டுமோ!!

    இனிய நினைவுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நம்மை உசத்தியா பேசவும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதே தெம்பு தான்..:)

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  6. உறவுகள் அனைவரையும் ஓரிடத்தில் சந்திக்கும் மகிழ்வே அலாதிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா. ஒரு புத்துணர்வே கிடைத்தது என்று சொல்லலாம்.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. நீண்டகாலத்தின் பின் உறவுகளை சந்திப்பது அந் நேர உணர்வுகளை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.

    தொடர்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்ப்பா.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க மாதேவி.

      நீக்கு
  8. வாசகம் அருமை.

    முகநூலில் வாசித்து மகிழ்ந்தேன்.

    நீண்ட நாட்கள், வருடங்கள் கழித்து பார்க்கும் உறவுகள் சந்திப்பு அளவில்லா ஆனந்தம் தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. பலவித தொந்தரவுகளுக்கு நடுவில் நீங்கள் பயணம் மேற்கொண்டதே நல்ல அனுபவம் ஆதி. அதுவும் பிறந்தகம் செல்வது அத்தனை இனிமை. உங்கள் சந்தோஷத்தில் நாங்களும் பங்கு கொள்கிறோம்.
    ரோஷ்ணி உடல் நலம் சீராக இருக்க இறைவன்
    அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரோஷ்ணிக்கு இப்போது சற்றே பரவாயில்லை அம்மா.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது.
    தங்கள் உறவின் வீட்டு விஷேடத்திற்கு நீங்கள் மகளுடன் மதுரை பயணம் மேற்கொண்டது எங்களுக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. நீண்ட நாட்கள் கழித்து உறவினர்களை ஒரு விஷேடத்தில் சந்திப்பது பெரும் மகிழ்ச்சியை தரும். அத்தகைய மகிழ்ச்சி தங்களுக்கு கிடைத்திருப்பதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். பயணம் குறித்து ஆரம்பித்த தொடரை நானும் மகிழ்ச்சியுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கமலா ஜி.

      நீக்கு
  11. நமது ஊரில் ரயில் பயணம் ரம்மியமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. உறவினர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பது மகிழ்ச்சியே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றிங்க ராமசாமி சார்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....