புதன், 1 டிசம்பர், 2021

தமிழகப் பயணம் - திருக்கடையூர் - கல்யாண விசேஷங்கள் - வியாபாரம்அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


இன்பத்திலும் துன்பத்திலும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய ஒரு உண்மை - “இந்த நிமிடம் கூட நிரந்திரமில்லை”.


******


செப்டம்பர் மாதத்தில் தமிழகத்திற்கு வந்தது பற்றி இதுவரை வெளியிட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே. 


ஓசியில் வேர்க்கடலை தருகிறார்களோ


Gகுரு Bபாயின் தங்கச் சங்கிலி


சுஜாதாவின் லாண்டரிக் கணக்கு - ஜன் ஷதாப்தியில்


மீன் செத்தா கருவாடு


பொண்ணு மாப்பிள்ளை லேட் எண்ட்ரி


தரங்கம்பாடி எனும் Tranquebar


திருக்கடையூர் கோவில்


சென்ற பதிவில் மாலை நேரத்தில் திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் கோவிலில் எங்களுக்குக் கிடைத்த அனுபவம் பற்றியும், கோவில் பற்றிய தகவல்கள் பற்றியும் எழுதி இருந்தேன்.  இரண்டு நாட்கள் நடக்க வேண்டிய நிகழ்வுகள் ஒரே நாளில் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டதால், அடுத்த நாளில் காலையிலேயே நிகழ்வுகள் ஆரம்பிக்க இருந்தார்கள்.  இரவு வெகு நேரம் வரை (ஒன்றரை மணி வரை) பேசிக்கொண்டு இருந்தாலும் காலையில் சீக்கிரமாகவே (நான்கு மணிக்கு) எழுந்திருந்து வேலைகளை முடித்துக் கொண்டு தயாராகி விட்டேன். தங்குமிடத்தின் எதிரேயே ஒரு சிறு கடை - அங்கே சுடச் சுட தேநீர் அருந்தி வந்தேன். கடைக்காரர் முதல் நாளிலிருந்தே என்னிடம் ஊர் பற்றியும், கோவில் கூட்டம் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்.  


எப்படி இருந்த கோவில், இந்த தீநுண்மி நாட்களில் எப்படி ஆகிவிட்டது என்று வருத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.  அத்தனை மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து இங்கே வழிபாடு செய்வதோடு, தங்கள் அறுபது, எழுபது, எண்பது, நூறு வயதுகளில் செய்து கொள்ள வேண்டிய சிறப்பு திருமண நிகழ்வுகளைச் செய்து கொண்டார்கள்.  தீநுண்மி வந்தாலும் வந்தது, கோவிலே வெறிச்சோடிக் கிடக்கிறது.  பலருடைய வாழ்வாதாரம் பாதித்து விட்டது.  ஊரில் இருக்கும் பலரும் கோவிலையும், கோவிலுக்கு சிறப்பு திருமணங்களைச் செய்து கொள்ள வரும் மக்களையும் நம்பியே தங்களது தொழில்களை இங்கே நடத்தி வருகிறார்கள்.  பல வியாபாரங்கள்/வியாபாரிகள் - தங்குமிடம், உணவகம், சிறு கடைகள், கோவில் அர்ச்சகர்கள், பல்வேறு தொழில் செய்பவர்கள் (நிழற்படம்/காணொளி எடுப்பவர், நாயனக்காரர்கள், மேளம் வாசிப்பவர்கள், பூ வியாபாரி மற்றும் பலர்) என பலரும் இதில் அடக்கம் - தங்களது தொழில் முடங்க, முன்னர் சம்பாதித்துச் சேர்த்ததை வைத்தே வாழ்க்கையை ஓட்ட வேண்டிய நிலை. 


பிரச்சனைகள் அதிகம் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சரியாகி வருகிறது என்று சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார் அந்தக் கடைக்காரர்.  காலை ஆறு மணிக்கே நிகழ்ச்சிகள் ஆரம்பிக்க இருந்ததால் கோவிலுக்குச் சென்று, மீண்டும் ஒரு முறை அபிராமி, அமிர்தகடேஸ்வரர் ஆகியோரின் திவ்ய தரிசனம் கண்டு மகிழ்ந்தோம்.  கோவிலிலேயே இருந்ததால் அன்றைக்கு இரண்டு முறைக்கும் மேல் தரிசனம்.  திருச்சியிலிருந்து வாங்கிக் கொண்டு வந்திருந்த பூக்களை மாலையாகத் தொடுத்து வைத்ததையும் நண்பர் வீட்டில் வாங்கி வந்திருந்த புடவை வேஷ்டி ஆகியவற்றையும் உரிய ரசீது கட்டி அவற்றையும் இறைவனுக்கு சமர்ப்பித்து மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அடைந்தோம்.  அப்போதும் திவ்யமான தரிசனம்.  நின்று நிதானித்து இறைவன்(வி) முன் நம் மனக்குமுறல்களை கொட்டி விடுவது நல்ல விஷயம். நமக்கு என்ன வேண்டும், என்ன தரவேண்டும் என்பதை அவனை விட சிறப்பாக யார் அறிவார். 


சஷ்டி அப்தபூர்தி நிகழ்வுகள் சிறப்பாக நடந்து கொண்டிருந்தன.  (G)கோ பூஜை, (G)கஜ பூஜையில் ஆரம்பித்து அனைத்து நிகழ்வுகளும் வரிசையாக நடந்து கொண்டிருக்க, தில்லி நண்பர்கள் அனைவருமாகச் சேர்ந்து திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.  திருக்கடையூரில் இந்த கல்யாண நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக நடத்தப்படுகின்றன என்றாலும் ஏதோ ஒரு வியாபாரம் நடப்பது போன்ற உணர்வும் வருவதாக எனக்குத் தோன்றியது.  வரிசையாக மண்டபங்கள், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தம்பதி, அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கான கல்யாண ஏற்பாடு செய்பவர்கள், வீடியோ/நிழற்படம் எடுப்பவர்கள், வாத்தியக்காரர்கள் என எங்கெங்கே பார்த்தாலும் தலைகள்! இருபதுக்கும் மேலான கல்யாண கோஷ்டிகள் இருந்தாலும், ஒரு சில வாத்தியக்காரர்கள்/நிழற்பட-காணொளி எடுப்பவர்கள்/அர்ச்சகர்கள் என ஒரு கோஷ்டிக்கு மட்டுமல்லாமல் இரண்டு மூன்று கோஷ்டிகளுக்குமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள். ஒரே சமயத்தில் இரண்டு மூன்று வருமானம்! ஏதோ நன்றாக இருந்தால் சரி! 


ஒரு விதத்தில் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக வருமானம் இல்லாமல் இருந்த நிலையில் இப்படியெல்லாம் செய்வது சரிதான் என்றாலும், இந்த மாதிரி நடப்பது இப்போது மட்டுமல்ல எப்போதுமே இப்படித்தான் என்கிறபோது, மனதில் இது தவறாயிற்றே என்று தோன்றியது. இருந்தாலும் இப்போதெல்லாம், நேர்மை, நியாயம் போன்றவற்றை யார் பார்க்கிறார்கள் என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை. சாதாரணமாக இப்போது எல்லா நிகழ்வுகளுமே வியாபாரமயமாகி விட்டது எனும்போது இந்த நிகழ்வுகள் மட்டும் என்ன விதிவிலக்கா? நடப்பதை எல்லாம் அன்னை அபிராமியும் அப்பன் அமிர்தகடேஸ்வரனும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்கள் என்கிற ஒரு எண்ணமும் மனதுக்குள் வந்து போனது.  எல்லாம் அவன் செயல்! நாம் நம் வேலையைக் கவனிப்போம். 


அப்தபூர்த்தி நிகழ்வுகளில் பங்கு கொண்டு, அவர்களுக்கான பரிசுப் பொருட்களையும் கொடுத்து அங்கிருந்து தங்குமிடம் வந்து சேர்ந்தோம்.  இதற்கிடையே, ஒரு முறை தங்குமிடம் வந்து காலைச் சிற்றுண்டியையும் முடித்துக் கொண்டோம் என்பதையும் இங்கே பதிவு செய்து விடுகிறேன்  - கூடவே சிற்றுண்டியின் சுவையும் சிறப்பாக இருந்தது என்பதையும்!


தங்குமிடம் திரும்பிய பிறகு என்ன செய்தோம், அதன் பிறகு என்ன என்பதையெல்லாம் வரும் பகுதியில் எழுதுகிறேன். 


******


நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் உங்களுக்கும் பிடித்திருக்கலாம், பயனுள்ளதாகவும் இருக்கலாம்! பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாகச் சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…28 கருத்துகள்:

 1. எல்லா இடமுமே வியாபாரஸ்தலமாக ஆகிவிட்டன. வியாபார நோக்கு இல்லாத இடமே வெகு அபூர்வம்.

  திருமணங்களிலும் வைதீகம் குறைந்து ஆர்ப்பாட்டமும் பகட்டுமே அதிகமாகிவிட்ட காலம் இது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல இடங்கள் வியாபார ஸ்தலங்களாகவே இருக்கின்றன - உண்மை தான் நெல்லைத் தமிழன். திருவரங்கத்தில் நிறையவே பார்க்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. ஒரே சமயம் பலருக்கும் சஷ்டி அப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேஹம் என வரத்தானே செய்கிறது. அப்போது வீட்டில் செய்து கொள்ளாமல் இறைவன் சந்நிதியில் செய்து கொள்ளும்போது வருபவர்களைக் கவனிக்கத்தானே வேண்டி இருக்கு. ஆகவே சில குருக்கள்/மற்றவர்களுக்கு ஒரே சமயம், 2,3 குழுக்களைக் கவனிக்கும்படி ஆகிறது. முக்கியமான ஆள் என ஒருத்தரை எல்லாரும் வைத்திருப்பார்கள். அவர் தான் முனைப்பாகக் கவனிக்கிறார். சமையல், சாப்பாடு நன்றாகவே இருக்கும். நாங்கள் 2,3 விழாக்களில் கலந்து கொண்டிருக்கோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அததற்கான ஆட்கள் குறைபாடுதான் இதற்குக் காரணம்.

   இன்னும் கொஞ்சம் வருஷம் போனா, (இப்பவே இருக்குன்னு நினைக்கிறேன்) central kitchenல இருந்து பல திருமண மண்டபங்களுக்கு உணவு போக ஆரம்பித்துவிடும். இப்போ ஒரு திருமண/விசேஷ நிகழ்ச்சியில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும்போதே, இரவு, இன்னொரு விசேஷத்துக்கு இனிப்புகள்லாம் செய்யறாங்க (of course அவங்க சொந்தப் பொருட்களில்தான்... மளிகைச் சாமான்கள் வாங்கிக்கொடுத்து கேடரர்களைப் பண்ணச்சொல்வது வெகு அபூர்வமாக ஆகிவிட்டது)

   நீக்கு
  2. ஒரே சமயம் பலருக்கும் விசேஷங்கள் - அதுவும் சரிதான். ஆனாலும் தங்களால் சமாளிக்க முடியாத அளவு ஏற்றுக் கொள்கிறார்கள் என்றும் தோன்றுகிறது கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. அதற்கான ஆட்கள் குறைபாடு - இந்த விஷயமும் ஒப்புக்கொள்ளக் கூடியதே நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வாசகம் அருமை.
  // நின்று நிதானித்து இறைவன்(வி) முன் நம் மனக்குமுறல்களை கொட்டி விடுவது நல்ல விஷயம். நமக்கு என்ன வேண்டும், என்ன தரவேண்டும் என்பதை அவனை விட சிறப்பாக யார் அறிவார். //

  உண்மை.

  இடமே இல்லாமல் யானை கட்டி இருக்கும் இடத்தில் எல்லாம் கல்யாணம் நடக்கும். வீடுகள் எல்லாம் தங்கும் விடுதியாகி விட்டது. ஓட்டல்கள் நிறைய வந்து விட்டன. விழா நடத்துபவர்கள் கவலை இன்றி இங்கு நடத்தலாம், பொறுப்புகளை குருக்கள் பார்த்து கொள்வார். அவரிடம் சொல்லி விட்டால் தங்கும் இடம் சாப்பாடு எல்லாம் ஏற்பாடு செய்து விடுவார்.

  எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இங்குதான் சஷ்டி அப்த பூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம் எல்லாம் செய்து கொண்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   யானை கட்டும் இடத்தில் கூட கல்யாணம் - தீநுண்மி காலத்திற்கு முன்னர் இப்படி நிகழ்ந்திருக்கலாம். தற்போது அவ்வளவு கூட்டம் இல்லை என்றாலும் கூட அதிகம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. இந்த சமயத்திற்கு ஏற்ற அருமையான வாசகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. கோயில்களே வியாபாரமாகி விட்ட பிறகு இப்படியான விழாக்களில் நடப்பது பற்றி என்ன சொல்ல?

  திருமணங்கள் எல்லாமே வீடியோக்களுக்காக, நிழற்படங்கள் எடுப்பதற்காக நடத்தப்படுகின்றது போல ஆகிவிட்டது.

  எப்படியோ உங்களுக்கு அம்மை அப்பனின் நல்ல தரிசனம் கிடைத்ததே!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவில்களே வியாபாரமாகிவிட்ட பிறகு - உண்மை தான் - அதுவும் பிரபலமான கோவில்களில் இன்னும் அதிகம் தான் கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. வாசகம் அருமை.உண்மை

  இறைவன் முன் நம் மனதில் உள்ளதைக் கொட்டிவிடுவது...ஆமாம்..நம்பிக்கையில் மனதின் பாரம் குறையும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   பாரம் குறைவதற்காகத் தானே இப்படி எல்லாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. கருத்துகள் வந்தன என்று நினைக்கிறேன் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துரை வந்து விட்டது கீதாஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. இரண்டு மூன்று கோஷ்டிக்கு ஒரே ஆட்கள் வேலை செய்வது இப்போது புதிது அல்ல, எப்போதுமே உண்டு!  முன்னரும் பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரே ஆட்கள் - இரண்டு மூன்று கோஷ்டிக்கு - புதியதல்ல! இருக்கலாம் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. அதே போல கோவிலின் மதிலை  ஒட்டி வெளியே சுற்றி வரவே முடியாது.  மிகவும் அசிங்கப்படுத்தி இருப்பார்கள்.  அதைத் தட்டிக் கேட்கக் கூட ஆள் இருக்காது அங்கே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதால் சுற்றுப் புறத்தில் சென்று பார்க்கவில்லை ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் இப்படிப்பட்ட பரிகார தலங்களில் வியாபார நோக்கம்தான் அதிகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியான தலங்களில் வியாபார நோக்கம் தான் அதிகம் - உண்மை தான் பானும்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. தங்கள் குடும்ப நண்பரின் சஷ்டி அப்தபூர்தி நிகழ்வுகள் சிறப்பாக நடைப்பெற்றதற்கு மகிழ்ச்சி. உங்களுக்கும் கோவிலில் பல தடவைகள் ஈஸ்வரரையும், அம்பாளையும் திருப்தியாக தரிசனம் செய்ய முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி.

  எந்த இடங்களும் இப்போது வியாபார நோக்கங்களுடன் செயல்பட ஆரபித்து விட்டன. ஒன்றும் சொல்வதற்கில்லை. அடுத்து எங்கு சென்றீர்கள் என அறியும் ஆவலுடன் தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகமும் பதிவின் வழி சொன்ன விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 13. பதில்கள்
  1. வியாபாரம் தான் மாதேவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....