புதன், 15 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி பத்து


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

எந்நிலையிலும் உங்களை விட்டுக்கொடுக்காத சிலரை சம்பாதியுங்கள், வாழ்க்கை அழகாக இருக்கும்.

 

******

 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு

பகுதி ஒன்பது


 

சென்ற பகுதியில் அவருக்கும் எனக்கும் உள்ள புரிதல்களைப் பற்றி எழுதியிருந்தேன். நிறை குறைகள் எல்லோரிடமும் உண்டு தான். அளவு கடந்த  அன்பிற்கு முன்னால் குறைகள்  பெரிதாக தெரிவதில்லை! இந்தப் பகுதியில் எங்கள் வாழ்வின் சில பக்கங்களைப் பார்க்கலாம்.

 

அவர் ஒருநாள் என்னை முதன்முதலாக 'இந்தியா கேட்'க்கு அழைத்துச் சென்றிருந்தார். வியந்து பார்த்த பின்  அப்போது திடீரென ஆரம்பித்த மழை சில நிமிடங்களில் வலுத்தது. அங்கு ஒதுங்கவும் இடமே இல்லை. தொப்பலாக நனைந்தோம். உண்மையில் இருவருக்குமே இது ஒரு இனிமையான தருணமாக அமைந்தது. அதன் பிறகு இந்தியா கேட்டுக்கு செல்ல நேர்ந்த போதெல்லாம் கண் ஜாடையில் அன்று போல மழை வராதா என்று கேட்டுக் கொண்டோம்..🙂

 

இப்படி இனிமையாகச் சென்ற மூன்று மாதங்களுக்கு பின் எங்களுக்குள் ஒரு சிறு பிரிவு உண்டாயிற்று. நான் ஊருக்கு செல்ல வேண்டிய சூழல். அம்மாவுக்கு உடல்நலம் சரியில்லாததால் உடனிருக்க வேண்டிய நிலை. அதுவரை என் நெருங்கிய தோழி தான் அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தார். நானும் உடனிருக்கும் அவசியம் ஏற்பட்டதால் அவர் என்னை கோவைக்கு கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றார். அதன் பிறகான ஒன்றரை மாதங்கள் அம்மாவுடன் தான் இருந்தேன்.

 

அதுவரை இருவரும் சேர்ந்து இருந்து விட்டு இப்போது ஆளுக்கொரு புறமாக இருப்பதால் இந்தப் பிரிவு எங்களிருவரையும் வாட்டியது. ஒன்றரை மாத பிரிவை முள் பாதையாகக் கடந்த நாங்கள், பின்னாளில் பத்து வருடங்களுக்குப் பின் பல வருடங்கள் ஆளுக்கொரு புறமாக இருந்து தவிக்கப் போகிறோம் என்பதை அப்போது இருவரும் அறிந்திருக்க மாட்டோம்!  

 

அந்த ஒன்றரை மாத பிரிவில் கடிதங்கள் மூலமாகவும், வாரம் ஒருமுறை ஃபோனில் பேசிக் கொண்டும் நாட்கள் சென்றன. திருமணத்திற்கு மறுநாள் புகுந்த வீட்டுக்கு செல்லும் போது பெற்றோரை பிரிந்து வந்ததால் கண்கள் குளமாகி கிளம்பிய நான் தான், இப்போது அம்மா வீட்டில் அவரை நினைத்து கலங்கி நின்றேன் என்பது என்னை ஆச்சரியப்படுத்தியது..🙂  

 

மீண்டும் அவர் தலை தீபாவளிக்காக கோவை வந்திருந்தார். கோவையின் கிராஸ்கட் ரோட்டுக்கு அழைத்துச் சென்று தீபாவளிக்காக Lavender நிறத்தில் அழகான புடவை ஒன்றை வாங்கித் தந்தார். தீபாவளியை சிறப்பாக முடித்து விட்டு டெல்லிக்குத் திரும்ப ஆயத்தமானோம்..

 

அப்போது குளிர்காலம் ஆரம்பித்த விட்டபடியால் ரயில் பயணத்தில் அணிந்து கொள்ள டெல்லியிலிருந்து Oswalல் கருமை நிறத்தில் ஒரு ஸ்வெட்டரும், Navy blue நிறத்தில் ஒரு சால்வையும் வாங்கி வந்திருந்தார். 'உங்க ஊர் திருச்சி மாதிரி இல்ல! எங்க ஊர்ல எப்பவுமே சில்லுனு தான் இருக்கும்வியர்வையே வராது தெரியுமா!' என்று நிறைய சொல்லி விட்டேன்..🙂 ஆனால் டெல்லிக் குளிருக்கு முன்னால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று அப்போது எனக்குத் தெரியாதது தான் கொடுமை..🙂

 

ரயில் பயணத்தில் Jhansiக்கு பிறகு கம்பளியை விட்டு நான் வெளியே வரலை..🙂 என்னை கலாட்டா செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைத்தது...🙂 முதல் குளிர்காலம் நடுக்கத்துடன் அவ்வப்போது ஃப்ளாஸ்க்கில் இருந்து வெந்நீரும், தேநீரும் பருகிக் கொண்டும், மூன்று வேளையும் சுடச்சுட சாப்பிட்ட சப்பாத்தியுடனும் இனிமையாகக் கடந்தது. அதன் பிறகான குளிர்காலங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது!

 

நண்பரின் குழந்தைக்கு வந்த பிறந்தநாளில் ஸ்டூடியோவுக்குச் சென்று அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டவுடன், தற்செயலாக நாங்களிருவரும் எடுத்துக் கொண்டோம். திருமணத்திற்குப் பின் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம் அது தான்! அவ்வளவு அழகாக வந்திருந்தது. அதைப் பார்த்து எங்கள் நண்பர்கள் குழுவில் நிறைய பேர் எடுத்துக் கொண்டார்கள்.

 

பிறந்த வீட்டை நினைத்து ஏங்குவதும், அங்கு சென்றால் இவரை நினைத்து ஏங்குவதும் என நானே ஒரு சிறு பிள்ளை போல இருந்ததால் இந்த  சமூகம் எங்களைக் கேள்வி கேட்கும் வரை குழந்தையைப் பற்றிய எந்தவொரு கவலையில்லாமல் இனிமையான இரண்டு வருட இல்லறத்தை கடந்து விட்டோம்..🙂 

 

இன்னும் சில கதைகள் என்னிடம் ஒளிந்து கொண்டிருப்பதால் அதை அடுத்த பகுதியில் தொடர்ந்து சொல்கிறேன்..

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

12 கருத்துகள்:

 1. மூன்று மாதங்களிலேயே முதல் பிரிவு என்பது கடபபதற்கு சிரமமான விஷயம்தான். சவ்ட்டர் முதலான உடைகளின் நிறங்களை நினைவு வைத்திருப்பதும் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில விஷயங்கள் நம் கையில் இல்லை என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு ஸ்ரீராம். இந்த விஷயமும் இப்படியே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. ஆதி! ரொம்பவே இனிமையான பக்கங்கள்! அழகான தென்றலாகச் செல்கிறது கதை போன்று!

  //பின்னாளில் பத்து வருடங்களுக்குப் பின் பல வருடங்கள் ஆளுக்கொரு புறமாக இருந்து தவிக்கப் போகிறோம் என்பதை அப்போது இருவரும் அறிந்திருக்க மாட்டோம்! //

  அதுதான் வாழ்க்கையின், காலத்தின் ரகசிய விளையாட்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க்கையின், காலத்தின் ரகசிய விளையாட்டு - உண்மை கீதா ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. நினைவாற்றல் - ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

   நீக்கு
 5. வாசகம் அருமை.
  உங்கள் நினைவுகள் பகிர்வு மிக அருமை ஆதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....