செவ்வாய், 7 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி மூன்று


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிஇந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்

 

ADJUSTMENTS WITH RIGHT PEOPLE IS ALWAYS BETTER THAN ARGUMENT WITH WRONG PEOPLE… A MEANINGFUL SILENCE IS ALWAYS BETTER THAN MEANINGLESS WORDS.

 

******




அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு

சென்ற பகுதியில் திருச்சியில் நடைபெற்ற எங்கள் நிச்சயதார்த்தம் பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன் அல்லவா! அந்தப் மாடிப்படிகளில் நின்று கொண்டு 'அவரும் நானும்' பேசிக் கொண்டிருந்ததைப் பற்றி ஒருமுறை மகளிடம் சொன்னதிலிருந்து 'சரித்திரத்தில் இடம்பெற்ற இடம்' இது தானம்மா! என்று கலாய்ப்பாள்...:) இந்தப் பகுதியில் நிச்சயதார்த்தத்துக்கும் திருமணத்திற்கும் இடைப்பட்ட நாட்களில் நிகழ்ந்ததைப் பற்றி பார்க்கலாம்.

 

என் பிறந்தநாள் அன்று தான்  முதல்முறையாக தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அந்த கம்பீரமான குரல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எதிர் ப்ளாக் மாமி வீட்டில் அழைத்து பத்து நிமிடத்தில் கூப்பிடுகிறேன் என்று சொல்வார். அந்த மாமி டெல்லியில் இருந்து மாப்பிள்ளை கூப்பிடறார் புவனா! பத்து நிமிஷத்துல கால் பண்றேன்னு சொன்னார்! என்பார். சென்று காத்திருந்து பேசி வருவேன். ஃபோனை வைக்கும் முன் மாமிக்கு தேங்க்ஸ் சொன்னேன்னு சொல்லிடு! என்பார்.

 

அதன் பிறகு அவ்வப்போது கால் செய்து பேச ஆரம்பித்தார். இங்க போன வாரம் சரோஜினி நகர் மார்கெட் போயிருந்தேன். உனக்காக ஒரு சுடிதார் வாங்கியிருக்கேன். அடுத்த வாரம் என் ஃப்ரெண்ட் கேரளா எக்ஸ்பிரஸ்ல வருவான். முடிஞ்சா அவன்கிட்ட குடுத்து விடறேன். ஸ்டேஷனுக்கு போய் வாங்கிக்கணும் என்றார்சரி! என்றேன். ஆனால்! அந்த சுடிதார் அப்போது எனக்கு கிடைக்கலை..??? ஏன்??

 

கல்யாணத்துக்கு அப்புறம் எங்கே போகலாம் என்று யோசித்து சொல்லு! ஊட்டி! கொடைக்கானல்! ஏற்காடு! வால்பாறை! என்று அவரிடமிருந்து நிறைய கேள்விகளும், திட்டமிடல்களும்..:) எல்லாவற்றுக்கும் என் பதில் என்னவாக இருக்கும்?? ம்ம்ம்! உங்க இஷ்டம்!!..:) ஆனால்! அவர் சுற்றி சுற்றி பேசும் விஷயம் எதைப் பற்றி என்று  அப்போது எனக்கு புரியலை!!

 

நான் மூணு வார லீவுல தான் கல்யாணத்துக்கு வரப் போறேன். ஆஃபீஸ்ல நிறைய வேலை இருக்கு. ஆமா! கல்யாணத்துக்கு நான் என்னென்ன கலர்ல ட்ரெஸ் வாங்கிக்கட்டும்?? ஏன்னா! கோட்டெல்லாம் எனக்கு வேண்டாம். அதுக்கப்புறம் போடப் போறது இல்லை...! வெட்டியா கிடக்கிறதுக்கு எதுக்கு வீண் செலவு!! அதுக்குப் பதிலா Peter England நாலு செட் வேணா எடுத்துக்கறேன்னு சொன்னார்..:) 

 

சரி! Alpine blue, dark green அப்புறம் இன்னொண்ணு உங்களுக்கு ஏதாவது பிடிச்ச கலர்ல வாங்கிக்கோங்கோ! என்றேன். தன் நண்பன் ஒருவரை அழைத்துச் சென்று உடைகளை தேர்வு செய்து வாங்கியிருக்கிறார். அவர் தனக்கு பிடித்ததாக செலக்ட் செய்தது காவி நிறத்தில் ஒரு ஷர்ட்..:)

 

அதேபோல் நான் புடவை வாங்கும் போது அவரிடம் என்ன கலர் வாங்கட்டும்?? என்றதும், பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம்னு இப்படித்தானே எல்லாரும் வாங்குவா! எதையாவது வாங்கிக்கோ! மஹா பெரியவாளே 'தெய்வத்தின் குரல்' சொல்லியிருக்கா! பட்டுப்பூச்சி எல்லாம் கொன்னு அதுல ஒரு புடவை கட்டிக்கணுமா! என்றார்...!!!

 

திருமணத்திற்குப் பிறகு என் மாமியார் என்னிடம் பெருமையாக சொல்லிக் கொண்டது என்னவென்றால், என் பிள்ளை நிச்சயத்துக்கு அப்புறம் எங்கிட்ட கேட்டான் 'அம்மா! அவள்ட்ட நான் பேசலாமா! என்று கேட்டதாகவும்.. நிச்சயம் தான் ஆயிடுத்தேடா! தாராளமா பேசலாம்! என்றும் சொன்னாராம்.

 

இப்படியாக திருமணம் வரை அவ்வப்போது தொலைபேசி உரையாடல்களும், திட்டமிடல்களும்கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டும் இரண்டு மாதங்கள்  உருண்டோடினதிருமண நாளும் வந்தது

 

மீதிக்கதைகள் அடுத்த பகுதியில் ..

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

28 கருத்துகள்:

  1. பொருத்தமான வாசகம். வாசகம் சூப்பர்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஊட்டி! கொடைக்கானல்! ஏற்காடு! வால்பாறை! என்று அவரிடமிருந்து நிறைய கேள்விகளும், திட்டமிடல்களும்..:) எல்லாவற்றுக்கும் என் பதில் என்னவாக இருக்கும்?? ம்ம்ம்! உங்க இஷ்டம்!!..:) ஆனால்! அவர் சுற்றி சுற்றி பேசும் விஷயம் எதைப் பற்றி என்று அப்போது எனக்கு புரியலை!!//

    பயணக்காதலன்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் காதலன் - முடிந்தவரை பயணிப்போம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. அவர் தனக்கு பிடித்ததாக செலக்ட் செய்தது காவி நிறத்தில் ஒரு ஷர்ட்..:)//

    ஹாஹாஹா....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காவி நிறம் - எனக்கு காவியாகத் தெரியவில்லை - சிவப்பாகத் தெரிந்தது! ஹாஹா... எனக்கும் “கலரு”க்கும் ஏழாம் பொருத்தம். வித்தியாசம் தெரியாது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. பச்சை, மஞ்சள், சிவப்பு, நீலம்னு இப்படித்தானே எல்லாரும் வாங்குவா! எதையாவது வாங்கிக்கோ! //

    சிரித்துவிட்டேன்!!!

    //மஹா பெரியவாளே 'தெய்வத்தின் குரல்'ல சொல்லியிருக்கா! பட்டுப்பூச்சி எல்லாம் கொன்னு அதுல ஒரு புடவை கட்டிக்கணுமா!//

    மீ டூ. பட்டுகட்டுவதில்லை. கல்யாணத்தின் போது எனக்குச் சொல்லும் தைரியம் இல்லை. எனவே வேறு வழியில்லாமல் கட்டிக் கொண்டேன். எனக்குப் பிடித்தது காட்டன் காட்டன் மட்டுமே என்று மாமியாரிடம் சொல்ல தைரியம் இல்லாமல் பட்டு வேண்டாம் என்பதை மெதுவாக மாமியாரிடம் சொல்லி என் விருப்பத்தைச் சொல்லி பட்டு இல்லாத அவர்கள் விரும்பியபடி ஜரி போட்டதை மற்ற நிகழ்வுகளுக்கு வாங்கச் சொன்னேன். பள பள என்று உடுத்துவதும் எனக்கு விருப்பம் இல்லை. சிந்தெட்டிக் உடைகளும் உடுத்துவதில்லை. அதன் பின் மெதுவாக மெதுவாக சொல்லி அனுமதி வாங்கி காட்டன் உடைகள் உடுத்தத் தொடங்கிவிட்டேன். இப்போது நான் புடவை உடுத்துவதே வெகு வெகு வெகு அபூர்வமாகிவிட்டது!!! டைட்டாக உடை அணியமுடிவதில்லை என்பதால்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டு - இப்போதெல்லாம் நிறைய செயற்கை பட்டு வந்து விட்டது என்றாலும் ஏனோ எனக்கு பிடிப்பதில்லை. பலருக்கு இதே தொழில் என்பதால் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. திருமணத்திற்குப் பிறகு என் மாமியார் என்னிடம் பெருமையாக சொல்லிக் கொண்டது என்னவென்றால், என் பிள்ளை நிச்சயத்துக்கு அப்புறம் எங்கிட்ட கேட்டான் 'அம்மா! அவள்ட்ட நான் பேசலாமா! என்று கேட்டதாகவும்.. நிச்சயம் தான் ஆயிடுத்தேடா! தாராளமா பேசலாம்! என்றும் சொன்னாராம்.//

    ரசித்தேன். பொதுவாக அப்போதைய காலத்தில் பிள்ளைகள் அம்மாவிடம் இப்படி வெளிப்படையாகக் கேட்கக் கூச்சப்படுவார்கள். அம்மாவின் பதிலும் சூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் அம்மாவிடம் நிறைய விஷயங்களை பேசுவதுண்டு கீதா ஜி. இப்போதும் கூட!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. ஆதி ரொம்ப அழகா எழுதறீங்க. பாராட்டுகள். எனக்கெல்லாம் இவ்வளவு அழகாக எழுத வரவே வராது!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுத்தினை பாராட்டியதற்கு நன்றி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. லைவில் பார்த்த மேட்சை அப்புறம் ரீபிளேயில் பார்ப்பது போல ஒரு உணர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் சொன்ன விஷயங்கள் குறித்த தங்கள் மேலான கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    பதிவை சுவாரஸ்யமாக எழுதி வருகிறீர்கள். ரசிக்கிறேன். எப்போதும் ஃபோன் உரிமையாளருக்கு நன்றி சொல்லும்படி கூறும் சகோதரரின் நல்ல உள்ளத்திற்கு பாராட்டுக்கள்.

    அழகான அவசியமான திட்டமிடல்கள். பட்டு புடவைகளே வீண் செலவுதான். ஆனால், இந்த கல்யாணத்திற்குப் அதற்கும் ஒரு சம்பந்தத்தை ஏனோ அந்த காலத்திலிருந்தே உண்டாக்கி விட்டார்கள். மேலும் தொடர காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றிகள் சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அர்த்தமுள்ள மெளனத்தை சொல்லும் வாசகம் அருமை.

    மிக அருமையாக நினைவுகளை சொல்லி வருகிறீர்கள் ஆதி.
    வாழ்த்துக்கள். நிகழ்ந்தவைகளை சொன்னதை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. பதில்கள்
    1. பட்டு கட்டுவதில்லை - நல்ல விஷயம் தான் கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. மிக நன்றாக, சுவாரசியமாக உங்கள் நினைவுகளை எழுதி வருகின்றீர்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....