திங்கள், 20 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி பதிமூன்று 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

REFLECTION CANNOT BE SEEN IN BOILING WATER. SIMILARLY, SOLUTION CAN NOT BE SEEN WITH A DISTURBED MIND.  COOL DOWN AND YOU WILL FIND SOLUTION FOR YOUR PROBLEM.

 

******


 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு

பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று

பகுதி பன்னிரெண்டு

 

சென்ற பகுதியில் புகுந்த வீட்டில் சிறப்பாக நடைபெற்ற சீமந்தமும், அதன் பிறகு குழந்தை பிறந்தது பற்றியும் எழுதியிருந்தேன். ஒருவருடைய வலிகளையும், வேதனைகளையும் பற்றி மற்றவர் புரிந்து கொண்டாலே அங்கு அன்பு பிரவாகிக்கும். இந்தப் பகுதியில் குழந்தை வந்த பின்பு எங்களுக்கான நேரங்கள் எப்படி கழிந்தது என்பது பற்றிப் பார்க்கலாம்.

 

பிரசவம் ஆன பிறகு வலிகளையும், அசதியையும் மீறி என் மனதில் அவரின் அன்புக்கு நான் இரண்டாம் பட்சமாக போய் விடுவேனோ என்று தான் முதலில் தோன்றியது! அவர் என்னுடையவர் இல்லையா! இந்த அன்பு இப்போது எனக்கு மட்டும் அல்லவே! ஒரு குட்டி பிஞ்சு எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளப் போகிறது..🙂

 

பிரசவமான அன்று இரவு லேபர் வார்டிலிருந்து முதலில் குழந்தையை அனுப்பி விட, என் மாமியாரின் கையில் இருந்த குழந்தையை ஜன்னலுக்கு வெளியே நின்று அவர் பார்த்துக் கொண்டிருந்தார். வாயில் விரலை வைத்து சப்புக் கொட்டியபடி  இந்த குட்டி பிஞ்சு இருந்திருக்கிறாள்...🙂

 

ப்ளீடிங் நிற்காததால் அதன் பின்பு மூன்று மணிநேரம் கழித்தே என்னை அறைக்கு அனுப்பினார்கள். உடம்பில் அசதியும், தூக்கமும் ஒருபுறம்! மறுபுறம் வெற்றிக் களிப்பும், பரவசமுமாக அப்படியொரு உணர்வு! குழந்தையின் முகத்தை பார்த்ததும் அத்தனை வலிகளும் மறந்து போயிற்று. நான் என் பெண்மையை முழுமையாக உணர்ந்த தருணம் அது! என் 23வது வயதில் ஒரு பிஞ்சு குழந்தைக்கு அம்மாவாகி விட்டேன்.

 

காலையில் அவரை அறைக்குள் அனுமதிக்கப்பட்ட பிறகு என்னையும், குழந்தையையும் வந்து பார்த்தார். என் கேசத்தை வருடிக் கொடுத்து, கையை பிடித்துக் கொண்டார். அந்த ஸ்பரிசத்திற்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்லலாம்!  'நான் உன்னுடையவன் தான்! இனி! எனக்கு இரண்டு குழந்தைகள்! என்பதாக அப்போது தோன்றியது!'

 

மூன்றாம் நாள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினேன். ஒரு நாளின் முக்கால்வாசி நேரம் தூக்கத்திலேயே சென்றது! குழந்தை அழும் போது அதற்கு பாலூட்ட மட்டுமே எழுந்தேன். அப்போது எனக்கு குழந்தையை தூக்கி வைத்துக் கொள்ளவே தெரியாது..🙂 பத்து நாள் தீட்டு முடிந்ததும் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா எளிய முறையில் வீட்டிலேயே நடைபெற்றது.

 

திருமணமாகிய மறுவருடம் ஒரு ரயில் பயணத்தில் அப்போதிருந்த எதிர்பார்ப்பில் இருவரும் குழந்தையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது 'அவர்' தேர்ந்தெடுத்த பெயர்! வெளிச்சம், பிரகாசம் என்பதை உணர்த்தும் பெயர். அதை இருவருமே நினைவு வைத்திருந்து இரண்டு வருடம் கழித்து இப்போது குழந்தைக்கு சூட்டினோம்.

 

விடுமுறை முடிந்து விட்டதால் பெயர் சூட்டலுக்கு மறுநாள் அவரும் டெல்லிக்கு கிளம்பி விட்டார். இப்போது அவருக்காக இரண்டு உயிர்கள் காத்திருக்கின்றன! இப்படியே இரண்டு மாதங்கள் சென்றது. குழந்தை பிறந்த மூன்றாம் மாதமே டெல்லிக்கு வரச் சொல்லி டிக்கெட் எடுத்து அனுப்பி விட்டார்!

 

நாங்களும் டெல்லிக்கு சென்று விட்டோம். குழந்தையை பார்த்தவுடன் அவளுடன் இருக்க அவருக்கான பதினைந்து நாள் paternity leaveம் எடுத்துக் கொண்டு உடனிருந்தார். இரண்டு கைகளின் விரல்களையும் வாயில் போட்டு சப்புக் கொட்டிக் கொண்டிருந்த குழந்தையை அதன் அருகிலேயே படுத்துக் கொண்டு வாயிலிருந்து விரல்களை அவ்வப்போது  எடுத்து விட்டு அந்தப் பழக்கத்தை மாற்றினார்..🙂

 

பதினைந்து நாள் லீவும் முடிந்தது. அவர் ஆஃபீஸுக்கு போகணும்! தனியே குழந்தையை எப்படி சமாளித்தேன்!! அந்தக் கதைகளையெல்லாம் அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

12 கருத்துகள்:

 1. நினைவலைகள் சுவாரஸ்யமாக செல்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைவலைகள் ஸ்வாரஸ்யமாக செல்வது அறிந்து மகிழ்ச்சி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. சில நாட்களாக தொடர்ச்சியாக வலைத்தளம் வர முடியவில்லை. இன்றைக்கு ' அவரும் நானும்' முதல் பகுதியிலிருந்து இப்போது வரை படித்து முடித்து விட்டு இங்கே வந்திருக்கிறேன். மிக அருமையாக எழுதி வருகிறீர்கள் ஆதி! மனசின் உணர்வுகளை எளிமையாக அழகான நடையில் கொன்டு வந்திருக்கிறீர்கள்!
  பரஸ்பரம் புரிதலும் விட்டுக்கொடுத்தலும் ஆழமான அன்பும் அக்கறையும் இருந்தால் மட்டுமே இல்வாழ்க்கை ஆல் போல் தழைத்து வளரும்! இன்னொரு அம்மா போல கணவர் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! வெங்கட்டிற்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! நீங்கள் இருவரும் என்றும் இது போல அன்பும் பாசமுமாய் வாழ்ந்து வாழ்க்கையில் பல உயரங்களைத்தொட மறுபடியும் இனிய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடரின் பகுதிகளை மொத்தமாக படித்து உங்கள் மேலான எண்ணங்களையும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி மனோம்மா. வாழ்த்தியமைக்கும் நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. ஒவ்வொரு வரியும் உங்களின் உள்ளார்ந்த உணர்வுகளைச் சொல்கிறது ஆதி. ரொம்ப அனுபவித்து எழுதும் வரிகள்.

  ஒருவருடைய வலிகளையும், வேதனைகளையும் பற்றி மற்றவர் புரிந்து கொண்டாலே அங்கு அன்பு பிரவாகிக்கும். //

  டிட்டோ.

  //பிரசவம் ஆன பிறகு வலிகளையும், அசதியையும் மீறி என் மனதில் அவரின் அன்புக்கு நான் இரண்டாம் பட்சமாக போய் விடுவேனோ என்று தான் முதலில் தோன்றியது! //

  !!!!! ரொம்பவே அன்யோன்ய உணர்வை நீங்க உணர்வு பூர்வமா எழுதியிருக்கீங்க ஆதி.

  வெங்கட்ஜி சூப்பர் ஜி!!!

  நானும் 18 நாட்களிலேயே தனியாகச் சமாளிக்க வேண்டிய சூழல். சிசேரியன் வேறு. குழந்தையின் துணிகளை அலசுவதிலிருந்து எல்லாமே சமையல் மட்டும் பாட்டி. அம்மாவுக்கு சுகர் லோவாகி திடீரென்று எதுவும் செய்யத் தெரியாமல் கொஞ்ச நாள் நார்மலாகு ம் வரை. 45 வது நாள் ஊருக்குத் திரும்பிவிட்டேன். அதன் பின் முழுவதும் நான் தான் செய்ய வேண்டிய சூழல். வீட்டு வேலை குழந்தை கவனிப்பு, எல்லாமே. ஆனால் நல்ல அனுபவம் கிடைத்தது. அனுபவப் பாடமும்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 5. //ஒருவருடைய வலிகளையும், வேதனைகளையும் பற்றி மற்றவர் புரிந்து கொண்டாலே அங்கு அன்பு பிரவாகிக்கும்.//
  உணமை.
  மிக அருமையான நினைவுகளின் பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. இருவர் மூவராகி மகிழ்சியான தருணங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....