புதன், 22 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி பதினைந்து



 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

வெற்றி என்பது பணத்தை சம்பாதிப்பது மட்டும் அல்ல மகிழ்ச்சியை தொலைக்காமல் இருப்பதும் தான்.

 

******


 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு

பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று

பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு

 

சென்ற பகுதியில் குழந்தை வளர்ப்பில் அடுத்தடுத்த நிலைக்கு நாங்கள் கடந்து வந்ததைப் பற்றி எழுதியிருந்தேன். விருப்பங்களும், ரசனைகளும் மாறுபட்ட இருவரை தான் ஒன்றாக முடிச்சுப் போடுகிறார் இறைவன்! இந்தப் பகுதியில் அவருக்கும் எனக்கும் உள்ள புரிதலைப் பற்றி சில விஷயங்களைப் பார்க்கலாம்.

 

குழந்தை வளர வளர எங்கள் இருவருக்குமிடையே உள்ள தனிப்பட்ட விஷயங்கள் குறைந்து போய் பொதுவான பேச்சுகள் தான் அன்றாட வாழ்வில் இடம்பெற்றன! மகளை பள்ளியில் சேர்த்ததிலிருந்து எங்கள் இருவரின் காலை நேரத்து வேலைகளும் மாறின.

 

மகளை எழுப்பி குளிப்பாட்டி தயார் செய்வது அவரது வேலையாகியது. இவர்கள் இருவருக்கும் லஞ்ச் பேக் செய்வது என்னுடைய வேலையாயிற்று. பரபரப்பான வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது அவர் அலுவலகத்திலிருந்து அழைத்து 'சாப்பிட்டியா! வேற என்ன விஷயம்!' என்று ஆரம்பித்து பேசிய அர்த்தமில்லாத பேச்சுகள் அன்றைய நாளில் அசை போட வைத்து  புன்னகைக்க வைக்கும்..🙂 இது ஒரு வித எனர்ஜி டானிக்!

 

அவருக்கு பயணத்தின் மீதுள்ள தீராத காதலால் அவ்வப்போது இரண்டு நாள் ஹரித்வார் போயிட்டு வரலாம்! சண்டிகர் போகலாம் என்று எங்கேயாவது அழைத்துக் கொண்டே இருப்பார். சிறுவயது முதலே பயணங்கள் எனக்கு ஒத்துக் கொள்ளாததால், அதைப் பற்றிய  சிந்தனையே என்னிடம் இருக்காது..🙂 என்னைப் பொறுத்தவரையில்... அடுப்பங்கரையே கைலாசம்! ஆம்படையானே குலதெய்வம்! ஆனால்! அவருக்கோ ..:!! இறைவன் இப்படித்தான் முடிச்சு போடுவார்..🙂

 

திருமணமான புதிதில் தவிர்க்க முடியாமல் ஒரு ட்ரெயினிங்கிற்காக உத்தராஞ்சலுக்கு ஐந்து நாள் பயணமாக  சென்றிருந்தார். தனியே ஒரு அறையிலேயே இருந்து பழக்கமில்லாத நான் அந்த ஐந்து நாட்களையும் மிகவும் கடினமாக தான் கடந்தேன்..🙂 அதனால் அதன் பின் என்னை தனியே விட்டுவிட்டு எங்கும் செல்லவில்லை!

 

பயணம் என்றதும் நினைவுக்கு வரும் விஷயம்! நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ஃபோனில் பேசும் போதெல்லாம் 'கல்யாணத்துக்கு அப்புறம் எங்கே போகலாம்னு யோசிச்சு சொல்லு!' என்று சொல்லியிருந்தார் என்று எழுதியிருந்தது நினைவிருக்கிறதா?? உண்மையில் திருமணத்திற்கு பிறகு ஹனிமூனெல்லாம் செல்லக்கூடிய சந்தர்ப்பங்களே எங்களுக்கு அமையவில்லை..🙂

 

திருமணமாகி இரண்டு வருடங்களுக்கு பின் மூன்று நாள் பயணமாக திருநெல்வேலியில் உள்ள அவரின் நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தோம். அங்கிருந்து இருவரும் ஒருநாள் பயணமாக கன்னியாகுமரிக்குச் சென்று வந்தோம்..🙂 இது தான் எங்கள் இருவரை பொறுத்தவரை ஹனிமூன்..🙂

 

காலை முதல் மாலை வரை எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து கண்டுகளித்தோம். மாலை திருநெல்வேலிக்குத் திரும்பும் போது பேருந்தில் நாகர்கோவில் வரை ட்ரைவர், கண்டக்டரைத் தவிர நாங்கள் இருவர் மட்டும் தான்..🙂

 

அதன் பின் மகள்  குழந்தையாக இருந்த சமயம் இரண்டு நாள் பயணமாக ஜெய்ப்பூருக்கும், மூன்று நாள் பயணமாக விஜயவாடாவுக்கும் சென்று வந்தோம். செல்லும் இடங்களிலெல்லாம் இயற்கை காட்சிகளை புகைப்படங்கள் எடுப்பதும் அவருக்கு பிடித்தமான விஷயமாக இருந்தது! சில வருடங்களுக்குப்  பின்பு அவருக்கு இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்று வர வாய்ப்பும் கிடைத்தது! அந்த பயணங்களும், புகைப்படக்கலையும் அவரை தனித்துக் காண்பிக்கப் போவது தெரியாத நாட்கள் அப்போது! 

 

அப்புறம்! இந்த ஏற்காடு, கொடைக்கானல் எல்லாம் நாங்கள் சென்று வந்தது திருமணமான பிறகான பத்து வருடங்கள் கழித்து..🙂 ஹா..ஹா..ஹா..!

 

இப்படியாக பயணம் என்றால் ஒதுங்கி ஓடுபவளுக்கும், பயணத்தின் மீதான தீராக் காதல் கொண்டவருக்கும் ஏற்பட்ட பந்தத்தினால் அவரின் விருப்பங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை! புரிந்து கொண்டேன்.  இதற்காகவே தனியாக சேமித்து வைத்து செல்லுங்கள் என்று தான் சொல்லியிருக்கிறேன்!

 

இப்படியாக எங்கள் வாழ்வு சீராக சென்று கொண்டிருந்த நேரத்தில் காலத்தின் கட்டாயத்தால் எங்களுக்குள் பிரிவும் ஏற்பட்டது! எதனால்! அடுத்த பகுதியில்..

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

28 கருத்துகள்:

  1. பயணம் என்றால் ஓடுபவருக்கும், பயணத்தை விரும்புபவருக்கும்.... 

     ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர்! 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம். பயணங்கள் முடிவதில்லை.... பயணிக்க துணை இல்லையெனிலும் தொடரும் என்று சொல்லும் நண்பர் உண்டு.

      நீக்கு
    2. ஸ்ரீராம் சொல்வதும் சரிதா. நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  2. ஆதி சொல்ல நினைத்து, கேட்க நினைத்து விடுபட்ட ஒன்று. படங்கள் எல்லாம் அட்டகாசமாக இருக்கின்றன. வெங்கட்ஜியோ நீங்களோ எடுத்த படங்கள் என்று நினைக்கிறேன் சரியா?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் இணையத்திலிருந்து தான் கீதா ஜி. நாங்கள் எடுத்தவை அல்ல.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. காலை வணக்கம்..

    வாசகம் அருமையோ அருமை...உண்மை

    //பயணம் என்றதும் நினைவுக்கு வரும் விஷயம்! நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ஃபோனில் பேசும் போதெல்லாம் 'கல்யாணத்துக்கு அப்புறம் எங்கே போகலாம்னு யோசிச்சு சொல்லு!' என்று சொல்லியிருந்தார் என்று எழுதியிருந்தது நினைவிருக்கிறதா?? //

    நினைவிருக்கு எங்கு சென்றீர்கள் என்று கேட்கவும் நினைத்தேன். வெங்கட்ஜி கூட ஊட்டி போலாமா என்று கேட்டதாக எழுதியிருந்தீர்களே..

    கன்னியாகுமரி சென்று வந்தது மகிழ்வான விஷயம். உங்களுக்குப் பயணத்தில் வாந்தி எடுக்க வரும் என்பதால் அலர்ஜியாகிற்றோ? அப்பயணத்திலும் அடுத்து ஜெய்ப்பூர், விஜயவாடா, பயணங்களிலும் சமாளித்தீர்களோ?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொஞ்சம் கடினமான விஷயம்தான் இந்த பிரச்சனை. என்னதான் ஏற்பாடுகள் செய்து கொண்டாலும் மாத்திரை போட்டுக் கொண்டாலும் கஷ்டம். சோர்ந்து போய்விடுவதால் பயணம் இன்னும் சிரமம்.

      பயணம் குறித்து இந்தப் பதிவில் உங்களது விரிவான கருத்துரை கண்டு மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. செல்லும் இடங்களிலெல்லாம் இயற்கை காட்சிகளை புகைப்படங்கள் எடுப்பதும் அவருக்கு பிடித்தமான விஷயமாக இருந்தது! //

    அது நன்றாகத் தெரியும் அவரது பதிவுகளில் நாங்களும் பட்ங்களை ரசித்துப் பார்ப்பது வழக்கமாயிற்றே!! அழகான படங்கள்.


    //சில வருடங்களுக்குப் பின்பு அவருக்கு இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்று வர வாய்ப்பும் கிடைத்தது! அந்த பயணங்களும், புகைப்படக்கலையும் அவரை தனித்துக் காண்பிக்கப் போவது தெரியாத நாட்கள் அப்போது!//

    !!!!!!!!!

    கண்டிப்பாக வெங்கட்ஜி தனித்து நிற்கிறார்! நாங்கள் எல்லாரும் அவரது பயணப் பதிவுகளை ரசித்து வாசிக்கவும் கிடைத்ததே! அதற்கு நன்றி சொல்ல வேண்டும். தான் சென்றதோடு அதை அழகாக எழுதிப் பகிர்வதும் எவ்வளவுநல்ல விஷயம் எல்லோருக்கும் சுற்றுப் பயணத்திற்கான தகவல்கள் கிடைக்கிறதே

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் மனதுக்கு மகிழ்ச்சி தரும் கருத்துரைக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  5. அப்புறம்! இந்த ஏற்காடு, கொடைக்கானல் எல்லாம் நாங்கள் சென்று வந்தது திருமணமான பிறகான பத்து வருடங்கள் கழித்து.//

    அதனாலென்ன பயணம் எப்போது அமைந்தாலும் மகிழ்ச்சிதான். அன்பு இருந்தால் எப்போதும் ஹனிமூன் தான்!!

    //இப்படியாக பயணம் என்றால் ஒதுங்கி ஓடுபவளுக்கும், பயணத்தின் மீதான தீராக் காதல் கொண்டவருக்கும் ஏற்பட்ட பந்தத்தினால் அவரின் விருப்பங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை! புரிந்து கொண்டேன். இதற்காகவே தனியாக சேமித்து வைத்து செல்லுங்கள் என்று தான் சொல்லியிருக்கிறேன்!//

    நல்ல புரிதல் ஆதி!! நல்ல விஷயமும் கூட!!!

    ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் புரிதலும், மற்றவரின் விருப்பத்தை மதிப்பதும், ஈகோ இல்லாமல் விட்டுக்கொடுத்தலும் இருந்தாலே அந்தக் குடும்பம் மிக மிக மகிழ்வான குடும்பம். பல்கலைக்கழகம் எனலாம். வாழ்த்துகள் ஆதி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  6. இரு மாறுபட்ட மன நிலைகளை இணைப்பதே இறைவனின் சித்தம். இவ்வாறாகப் பயணிக்கும்போது பல புதிய அனுபவங்களைப் பெற முடியும். தமிழ்நாட்டில் நான் சென்ற முக்கியமான இடங்களுக்கு என் மனைவியையும், மகன்களையும் அழைத்துச்சென்றுள்ளேன். அவ்விடங்களின் பெருமைகளைப் பற்றிக் கூறும்போது இயல்பாகவே அவர்களுக்குப் புதிய இடங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துவிடுகிறது என்பது என் அனுபவத்தில் கண்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறைவன் சித்தம்..... உண்மைதான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது மூத்தோர் வாக்கு. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. இரு வேறுபட்ட மனிதர்களின் திருமணம் பற்றி பேசும்போது திரு பாம்பே கண்ணன் அவர்களின் இந்த மேற்கோள் நினைவுக்கு வருகிறது.
    "உப்பு
    புளி காரம் மூணும் சேர்ந்தாதான் குடும்பம் என்கிற சாம்பார் மணக்கும்.
    வெல்லமும் சக்கரையும் தித்திப்புதான். ரெண்டும் சேர்த்து பாயாசம் வச்சா
    திகட்டிரும்".

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் சிறப்பான மேற்கோள் எடுத்துக்காட்டிற்கும் மனம் நிறைந்த நன்றி அரவிந்த்.

      நீக்கு
  8. இவ்வளவையும் நினைவில் வைத்திருப்பதே பெரிய விஷயம்தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இவ்வளவு நினைவு இருக்காது! பல விஷயங்கள் மறந்து விடுவது வழக்கம் கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது மனதில் நினைத்தவற்றை தயக்கமில்லாமல் பாங்குடன் சொல்லி வருகிறீர்கள். கணவன், மனைவி இருவரையும் ஒரே ரசனையுடன் இறைவன் அமைத்து விட மாட்டான் என்பது உண்மையை..இப்படி மாறுபட்ட ரசனைகளால் வாழ்வின் இரு வேறு சுவைகளை இருவருமே தெரிந்து கொள்ளலாம். அதற்கு புரிதலும், விட்டுத் தரும் மனப்பான்மைகளும், இரு தூண்களாக நிற்க வேண்டும். இவ்விரண்டும் உங்களிருவரின் வாழ்வில் ஒருசேர பரிபூரணமாக அமையப் பெற்றதற்கு இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

    /செல்லும் இடங்களிலெல்லாம் இயற்கை காட்சிகளை புகைப்படங்கள் எடுப்பதும் அவருக்கு பிடித்தமான விஷயமாக இருந்தது! சில வருடங்களுக்குப் பின்பு அவருக்கு இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்று வர வாய்ப்பும் கிடைத்தது! அந்த பயணங்களும், புகைப்படக்கலையும் அவரை தனித்துக் காண்பிக்கப் போவது தெரியாத நாட்கள் அப்போது! /

    வெங்கட் சகோதரரின் விபரமான பயணக் கட்டுரைகளை நானும் விரும்பி படித்துள்ளேன். இதுவரை செல்லாத ஊர்களுக்கு, பார்த்தறியாத இடங்களுக்கு என,அழகாக கூடவே அழைத்துச் செல்வது அவரது எழுத்துக்களும், புகைப் படங்களுந்தான். அவருக்கும் என் அன்பான நன்றிகளை இந்தப் பதிவு மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் பகிர்வினுக்கும் அன்பான நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு குறித்த தங்களது மேலான எண்ணங்களை விரிவாக எடுத்துரைத்த தங்களுக்கு மனம் கனிந்த நன்றி.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. அருமையான நினைவு தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  12. மிக அருமையாக நினைவுகளை சொல்லி வந்து கொண்டு இருக்கிறீர்கள்.

    இறைவன் ஒத்த கருத்துள்ளவர்களை இணைக்கவில்லை என்றாலும், புரிதலும், விட்டுக் கொடுத்தலும், அன்பும் இருவருக்கும் ஒன்று போல இருக்கே!

    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  13. புரிதல் இருந்தாலே வாழ்க்கையில் வெற்றிதான். வாழ்க இனிதாக.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....