வியாழன், 30 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி இருபது 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

இறுக்கமான சூழலை எதிர்கொண்டு எல்லாம் உங்களுக்கு எதிராக இருந்தாலும் இன்னும் ஒரு நிமிடமும் நீடிக்க முடியாது என்று தோன்றினாலும் கூட கைவிட்டு விடாதீர்கள் தன்னம்பிக்கையை ஏனெனில் அந்த இடத்தில், அந்த நேரத்தில் தான் வாழ்வு திசை திரும்பும். 

****** 

அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று 

பகுதி நான்கு பகுதி ஐந்து பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு

பகுதி ஒன்பது பகுதி பத்து பகுதி பதினொன்று

பகுதி பன்னிரெண்டு பகுதி பதிமூன்று பகுதி பதினான்கு

பகுதி பதினைந்து பகுதி பதினாறு பகுதி பதினேழு பகுதி பதினெட்டு பகுதி பத்தொன்பது

 

சென்ற பகுதியில் எங்களுக்குள் அன்பை வெளிப்படுத்துவது குறித்து எழுதியிருந்தேன். ஒவ்வொருவரும்  ஒவ்வொரு விதம்! இருவரிடையே உள்ள பிரிவு கூட அன்பை உணர்வதற்கும், அதிகப்படுத்தவும் உதவும் என்பதை புரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.

 

எங்கள் இருவரின் இல்லற வாழ்வில் இது வெற்றிகரமான  20வது வருடம்! 'அவரும் நானும்' என்ற இந்தத் தொடர் எழுதத் துவங்கியும் இது  20வது பகுதியாகும். இருவரும் சேர்ந்து இருந்த 10 வருடக் கதைகளை உங்கள் எல்லோரிடமும் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டேன். யோசித்துப் பார்த்தால் அவருடன் இல்லாத மீதி பத்து வருடங்களைப் பற்றி பத்து வரிகளில் கூட எழுதி விடலாம் என்று தோன்றி விட்டது! ஆனால்!...

 

இந்தத் தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்தே பாஸிட்டிவாக தான் கொண்டு சென்றுள்ளேன். நிறை, குறைகள் எல்லோரிடமும் உண்டு தான். குடும்பம் என்றால் சந்தோஷம் மட்டும் அல்ல! சிக்கல்களும் இருக்கும்! குறைகளை விட்டுவிட்டு எனக்குப் பிடித்த நிறைகளை பற்றி மட்டும் தான் விஸ்தாரமாக சொல்லிச் சென்றுள்ளேன்...🙂 

 

இருவரின் குறைகளை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் வாழ்க்கைப் பாதை கரடுமுரடாக போய் விடும்நிறைகளை மேல்பூச்சாக பூசிக் கொண்டே வந்தால் பாதையும் மிருதுவாக போய்விடும். பயணமும் சுகமானதாக மாறி விடும்..🙂 அதனால் இந்த பத்து வருட வாழ்க்கையையும் அதே போல் பாஸிட்டிவான கோணத்தில் மட்டும் வைத்து எழுத முயற்சி செய்யலாம் என்று நினைத்துள்ளேன்! அது ஓரிரு பகுதிகளிலும் முடிந்து விடலாம் அல்லது தொடரவும் செய்யலாம்!

 

என் உடல்நிலையும், குடும்பச் சூழலும் டெல்லியிலிருந்து எங்களை இடமாற்றம் செய்ய வைத்தது. பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு மே மாதம் தான் திருவரங்கத்தில் குடியேறினோம். அதே மே மாத இறுதியில் வந்த எங்கள் பத்தாம் வருட திருமண நாளுக்கு திருச்சியில் உள்ள திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தோம். 

 

அதன் பின் அவர் எங்களிருவருக்கும் அறிவுரைகள் பல சொல்லி கிளம்பி விட்டார். இனி! ரங்கன் தான் எங்களை உடனிருந்து காத்து ரட்சிக்கணும் என்று பிரார்த்தித்துக் கொண்டு பால் காய்ச்சி புதுக் குடித்தனத்தை துவங்கினேன்.  

 

நிச்சயதார்த்தம் செய்த போது எந்த வீட்டில் நாங்கள் தங்க வைக்கப்பட்டோமோ, எந்த வீட்டில் அவர் கையால் பரிமாறிய உணவை சாப்பிட்டேனோ அதே வீட்டில் தான் குடி புகுந்தேன். அவ்வப்போது நினைத்துப் பார்த்து மகிழ்ந்து கொள்ள ஒரு காட்சி எனக்கு கிடைத்தது...🙂 

 

அவர் முகத்தைப் பார்த்துக் கொண்டு அவர் சொல்லும் கதைகளை கேட்கத் தான் எனக்கு பிடிக்கும். ஒவ்வொரு சம்பவத்தையும் சுவாரசியமாகச் சொல்வார். இனி! அலைபேசி வழியாக தான் கதை பேசணும்! கேட்கணும்! என்று நினைத்துக் கொண்டு திருவரங்க வாழ்வைத் துவக்கினேன்.

 

ஆளுக்கொரு புறமாக இருந்து கொண்டு அலைபேசி வழியே குடித்தனம் செய்ய  ஆரம்பித்தோம். என் மனம் முழுவதும் அவரிடம் தான் இருந்தது. நிச்சயமாக  அவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்! அதை  ஒத்துக் கொள்ள மாட்டார்..🙂 சில மாதங்களுக்குப் பிறகு விடுமுறை கிடைத்து அவர் வருகைக்காக காத்திருக்கத் துவங்கினேன்...🙂

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

16 கருத்துகள்:

 1. ஆம்.  விக்ரமன் எடுக்கும் சினிமா போல பாஸிட்டிவாகத்தான் கொண்டு சென்றுள்ளீர்கள்.   நல்ல முயற்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாவற்றிலும் நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வோம் என்று இருந்துவிட்டால் எப்போதும் ஆனந்தம் தான். பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. தொடர் வழி சொன்ன விஷயங்கள் ரசிக்கும்படி இருந்தது அறிந்து மகிழ்ச்சி தனபாலன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 3. நிறைகளை மட்டும் நினைவில் சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைகளை மட்டும் நினைவில் வைப்போம்..... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 4. அழகாகச் சொல்லி இருக்கின்றீர்கள்..

  நலமே வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவினை ரசித்ததோடு உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 5. குடும்பம் என்றால் குறைகளும் இருக்கத்தான் செய்யும். நிறைகளை மட்டுமே நீங்கள் சொல்லிச் செல்கின்றீர்கள். அதுதானே வாழ்க்கைக்கும் முக்கியம். குறைகளிலேயே இருந்துவிட்டால் மனம் சோம்பித்தான் போகும்.

  பாசிட்டிவ் எண்ணங்கள் வழிநடத்தும். நல்ல எண்ணமும் கூட.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறை குறைகள் நிறைந்ததே வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டால் என்னாளும் மகிழ்ச்சியே. பதிவினை படித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நெஞ்சார்ந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 6. குறைகள் இருந்தாலும் அதையும் நிறைகளாக மாற்றத் தெரிந்தாலே போதும். அதுதானே புரிதல்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியான புரிதல் மட்டும் இருந்துவிட்டால் எந்த பிரச்சனைகளையும் சமாளித்து விடலாம் இல்லையா கீதா ஜி. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 7. நல்ல பாயின்ட்! அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவில் சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு
 8. நிறைவுகாணும் மனம் இருந்தால் எல்லாம் வெற்றியே வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைவு மட்டுமே காணும் மனம் இருந்துவிட்டால் எல்லாம் வெற்றியே... சரியாகச் சொன்னீர்கள் மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....