புதன், 8 டிசம்பர், 2021

அவரும் நானும் - தொடர் - பகுதி நான்கு


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிஇந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்

 

SMILE IS THE BEST CREDIT CARD BECAUSE IT IS ACCEPTED WORLD WIDE, AUTO RELOADED, UNLIMITED USAGE, NO PAYMENT AND IT KEEPS EVERYONE HAPPY - SO KEEP SMILING.

 

******

 அவரும் நானும் - பகுதி ஒன்று  பகுதி இரண்டு பகுதி மூன்று

 

சென்ற பகுதியில் நிச்சயதார்த்த நிகழ்வுக்கும் திருமணத்திற்கும் இடைப்பட்ட இரண்டு மாதங்கள் எப்படி சென்றது என்பது பற்றி எழுதியிருந்தேன். இந்தப் பகுதியில் இன்னும் சில விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.

 

இரு வீட்டார் அழைப்பு போக 'அவர்' தன் நண்பர்களுக்கு கொடுப்பதற்காக தானே வடிவமைத்து பிரிண்ட் செய்த அழைப்பிதழை  எனக்கு அனுப்பி வைத்தார்உடன் பொதுவான ஒரு கடிதம்! அதுவே அவர் எனக்கு எழுதிய முதல் கடிதம்! திருமணத்திற்குப் பின் நாங்கள் இருவருமே 'பர்சனல்' கடிதங்கள் நிறைய எழுதியிருக்கிறோம்...🙂 இன்றும் அவை பத்திரமாக உள்ளன!

 

சரி! கல்யாண வைபவங்களைப் பார்க்கலாம். நெருங்கிய உறவுகள் வந்திட வீடு திருமணக்கோலம் கொண்டு களைகட்டியது. வீட்டில் ஒரு சுப நிகழ்வு என்பதால் முன்னோர்களை நினைத்து சுமங்கலிப் பிரார்த்தனை, அத்தைகள் பொங்கியிடுவது என்று எல்லாம் வீட்டிலேயே முடித்து திருமணத்திற்கு முதல் நாள் காலை மண்டபத்திற்கும் சென்று விட்டோம்.

 

அங்கு கல்யாண பெண்ணுக்கான விரத பூஜைகள் நடந்து எனக்கு காப்பு கட்டியாச்சு. மதியம் அவர் வீட்டிலிருந்து எல்லோரும் வேன் வைத்துக் கொண்டு மண்டபத்திற்கு வந்துவிட்டார்கள். மாப்பிள்ளையை ஆரத்தியெடுத்து வரவேற்ற பின் சாப்பிட அழைத்துச் சென்றார்கள். செல்லும் வழியில் எதிரே பார்த்த என்னிடம் சில நிமிடங்கள் தான்  அவரால் பேச முடிந்தது!

 

கல்யாண மாப்பிள்ளை என்பதால் உள்ளங்கையில் மட்டும் மருதாணி வைத்திருந்தார்! மாலை மாப்பிள்ளை அழைப்பும், நிச்சயதார்த்தமும்! அதற்கு முன்பாக என் மாமியார் எங்கள் அறைக்கு வந்து 'என் பிள்ளைக்கு மேக்கப் எல்லாம் பிடிக்காது' என்று சொன்னார். என்னுடைய உறவினர்களும் 'இவளும் அப்படித்தான்! எதையும் போட்டுக்க மாட்டா! என்று சொன்னார்கள்..🙂 (ஜாடிக்கேத்த மூடி!!)

 

மாலை மாப்பிள்ளை அழைப்பு எளிமையான முறையில் நடந்தது. கோவையின் முக்கியமான இடமான ராஜ வீதியில் மண்டபம் என்பதால் காரில் மாப்பிள்ளை அழைப்பு எல்லாம் நடத்த இயலவில்லை. அவரை அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் சென்று வந்தவுடன் என்னையும் அருகில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டது

 

மாலை மாப்பிள்ளை அழைப்பிற்காக dark green சட்டை அணிந்திருந்தார். நான் என் அத்தையின் புடவை ஒன்றை உடுத்தியிருந்தேன்! தலையில் பூ ஜடை வைத்து பின்னியிருந்தார்கள். வெயிட்டாக இருந்ததுஅதன் பின் நிச்சயதார்த்தத்துக்கு copper sulphate கலரில் பட்டுப்புடவையும், அவர் Alphine blue கலரில் சட்டையும் அணிந்திருந்தார். அதன் பின் இரவு உணவு..

 

திருமணத்தன்று அதிகாலையில் எல்லோரும் குளித்து தயாராக, ஒருபுறம் அவருக்கான விரத பூஜையும் காப்பு கட்டுதலும்அதன் பின் அவர் பஞ்சகச்சமும், கைத்தடியுமாக காசி யாத்திரைக்கு கிளம்பி விட, என் அப்பா காசிக்கெல்லாம் போக வேண்டாம் மாப்பிள்ளை 'என் பொண்ணையே உங்களுக்கு தாரை வார்த்து தரேன்' என்று சொல்லி அழைத்து வந்தார்..🙂 அவரது நண்பர் 'டேய்! இது தாண்டா கடைசி சான்ஸ்! தப்பிச்சு ஓடிடு!' என்று சொன்னாராம்..🙂

 

தாய்மாமாக்கள் தூக்கிட அவரும் நானும் மாற்றி மாற்றி எங்கள் மாலைகளை மாற்றிக் கொண்டோம். மாலை மாற்று வைபவம் சிறப்பாக நடைபெற்றது. அடுத்து ஊஞ்சலில் 'அவரும் நானும்' அமரவைக்கப்பட்டு உறவினர்களின் பாட்டுடன் பாலும், பழமும் கொடுக்க பச்சைப்பிடி சுற்றப்பட்டு உள்ளே அழைத்துச் செல்லப்பட்டோம்

 

ஊஞ்சல் வைபவத்துக்காக மாம்பழக்கலரில் பச்சை நிற பார்டர் போட்ட பட்டுப்புடவை கட்டியிருந்தேன். பூ ஜடை எல்லாம் பிடிக்கலை என்பதால் நானே வாரி பின்னிக் கொண்டேன். அதில் பூ சுற்றி விட்டிருந்தார்கள். நெத்திச்சுட்டி இல்லாம கல்யாண பொண்ணா! எனக் கேட்டு என் மாமா ஒருவர் தன் மகளுடைய கழுத்திலிருந்த செயினை கழட்டி என் தலையில் வைத்து பின் செய்து விட்டார்..🙂 இதுவே என் ஒப்பனை..🙂

 

அடுத்து தாரை வார்த்துக் கொடுத்தலும், திருமாங்கல்ய தாரண நிகழ்வு மற்றும் மீதிக்கதைகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

8 கருத்துகள்:

 1. அன்று அணிந்த ட்ரெஸ் கலர்லாம் ஞாபகம் வச்சிருக்கீங்க...   என் பாஸ் கூட பல்லாண்டுகளுக்கு முன் என்ன நிகழ்ந்தது என்பதை இன்ச் இன்ச்சாக விவரிப்பார்.  ட்ரெஸ் கலர், எங்கே யார் வாங்கியது என்ற விவரங்களும் சரியாகக் கொடுப்பார்.  எனக்கு ஒன்.....றும் நினைவிருக்காது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் ஹைஃபைவ்! நானும் உங்க கட்சி! சுத்தம். இப்ப ஆதி எழுதுவதை வாசிக்கும் போது எனக்கு வியப்பு! எப்படி ஒரு மெமரி என்று. பாராட்டு மழை பொழியலாம்!

   வெங்கட்ஜிய கேட்கணும் அவருக்கு நினைவிருக்கிறதா என்று.

   பொதுவா பெண்களுக்கு இதெல்லாம் நல்ல நினைவிருக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் நான்.....அ.வ!

   கீதா   நீக்கு
 2. 'என் பிள்ளைக்கு மேக்கப் எல்லாம் பிடிக்காது' என்று சொன்னார். என்னுடைய உறவினர்களும் 'இவளும் அப்படித்தான்! எதையும் போட்டுக்க மாட்டா! என்று சொன்னார்கள்..🙂 (ஜாடிக்கேத்த மூடி!!)//

  ஹாஹாஹாஹா அதானே! நீங்களும் பதிவில் சொல்லியிருக்கீங்களே.

  காசியாத்திரை - நண்பரின் டயலாக் காலம் காலமாக வருவது. யாரப்ப அங்கே இனியாச்சும் டயலாக்க மாத்துங்கப்பா!!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. அவர் Alphine blue கலரில் சட்டையும் அணிந்திருந்தார். //

  நீங்க சொன்ன கலர்!!!

  பூ ஜடை எல்லாம் பிடிக்கலை என்பதால் நானே வாரி பின்னிக் கொண்டேன். //

  !!!! மீ டூ.

  கீதா

  பதிலளிநீக்கு
 4. என்றும் புன்னகையோடு இருப்போம். வாசகம் அருமை.
  நினைவுகள் அருமை.
  வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....