வியாழன், 23 டிசம்பர், 2021

தலைநகர் தில்லியும் மாசுத் தொல்லையும்....


 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.

 

******படம்; இணையத்திலிருந்து...


தலைநகரில் தற்போது இருக்கும் மாசுத் தொல்லை வருடா வருடம் இந்தச் சமயத்தில் நாங்களும் நகரமும் இணைந்து சந்திக்கும் ஒரு மிகப் பெரும் பிரச்சனை. இங்கே இருக்கும் மாசின் அளவு குறித்து தில்லி அரசாங்கமே ஒரு நாளைக்கு 20 சிகரெட் புகைத்தால் எந்த அளவிற்கு பாதிப்பு இருக்குமோ அந்த அளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சொல்லி இருக்கிறது. வரும் திங்கள் முதல் ஒரு  வாரத்திற்கு மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை - இணைய வழி பாடங்கள் நடத்தலாம் என்று சொல்லி இருக்கிறது. மாநில அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு, அலுவலர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் சொல்லி இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்களிடம் இப்படியான வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். கட்டுமானப் பணிகளை நான்கு நாட்களுக்கு நிறுத்த உத்தரவு போட்டு இருக்கிறார்கள். மத்திய அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் என்றே தெரிகிறது.

 

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தில்லியில் வாழ்ந்தாலும் இந்த மாசுத்தொல்லை ஏனோ சில வருடங்களாகவே அதிகம் என்று தோன்றுகிறது. முன்னரும் பட்டாசு வெடித்தார்கள், பஞ்சாப், ஹரியானா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் காய்ந்த சருகுகளை கொளுத்தினார்கள். என்னதான் CNG மூலம் பேருந்துகள், வாகனங்கள், ஆட்டோக்கள் ஆகியவை இயங்கினாலும், பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களில் இருந்து வரும் புகையும் அதிகம் தான். இங்கே வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். ஒரே வீட்டில், ஒரே பாதையில் செல்பவர்கள் தனித்தனி வாகனங்களில் தான் செல்வேன் என அடம் பிடிக்கிறார்கள்!

 

மொத்தத்தில் இப்போதைக்கு தில்லிக்கும், தலைநகர் வாசிகளுக்கும் இந்தப் பிரச்சினைகளிலிருந்து விடிவுகாலம் இல்லை என்பதே வருத்தம் தரும் உண்மை. புனிதமான நதியாகக் கொண்டாடப்படும் யமுனா நதியை தில்லியில் பார்த்தால் மனது பேதலித்துப் போகிறது. அவ்வளவு மாசு, கழிவுகள் என அனைத்தும் அதில் கலந்து சாக்கடை போன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் சில நாட்களாக, தண்ணீரில் அம்மோனியம் அளவு அதிகரித்து தண்ணீர் தெரியாமல் நுரை மிதந்து கொண்டிருக்கிறது. வேதனை தரும் அந்த காட்சியை படமாக பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இதில் சமீபத்தில் வந்த சட் (CHATT)  பூஜை சமயத்தில் முழங்கால் அளவு நதியில் நின்று பூஜைகள் செய்து சிலர் குளிக்கவும் செய்தார்கள் என்பதை படித்தபோது, அவர்கள் பூஜிக்கும் அந்த ஆண்டவன் அவர்களை காக்கட்டும் என வேண்டுதலையும் நானும் சேர்த்துக் கொண்டேன். 

 

இந்த தொல்லையால் தில்லியில் பலருக்கும் மூச்சு பிரச்சினைகள், கண் எரிச்சல், அலர்ஜி என எத்தனையோ உடல் உபாதைகள்..... எத்தனை நாளைக்கு இப்படியான நிலை என்ற வேதனை எப்போதும் மனதில்..... மாற்றங்கள் நிறையவே தேவை.... அரசின் செயல்பாடுகளில் மட்டுமல்ல, மனித மனங்களிலும் தான்...... 

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

பின் குறிப்பு: முகநூலில் 13 நவம்பர் 2021 அன்று எழுதியது - பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை என்ற வேதனையான உண்மையையும் இங்கே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது - கண் எரிச்சலுடன் :(

 

20 கருத்துகள்:

 1. மிகவும் சிரமமான காலங்கள் என்று தெரிகிறது. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு யாராலும் ஏற்படுத்த முடியவில்லை என்பது வருத்தம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருடா வருடம் தொல்லைதான். ஆனாலும் ஒருவரும் இதற்கான தீர்வை நோக்கி எந்த முடிவும் எடுப்பதில்லை என்பது வேதனையான சூழல். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. வேதனைதான் தனபாலன். இதற்கு முடிவு எப்போது என்பது பெரிய கேள்விக்குறி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. எதிர்கால சந்ததிகள் எப்படி வாழப்போகிறார்களோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களும் இதே சூழலில் தான் வாழ்வார்கள் என்று தோன்றுகிறது கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 4. மிகவும் வேதனையான விஷயம் ஒவ்வொரு வருடமும் இப்படி..ஏன் இதற்கு ஒரு தீர்வு கொடுக்கப்படவில்லை?

  நீங்கள் சொல்லியிருப்பது போல் ஒரே வீட்டில் ஆளுக்கொரு வண்டி. இதெல்லாம் டூ மச். கார் பூலிங்க் அல்லது பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் பயன்படுத்தல் என்று இருந்தால் நன்றாக இருக்கும். அரசு இதற்கெல்லாம் சட்டம் கொண்டு வர வேண்டும். சொன்னால் இது மக்கள் நாடு என்பார்கள்.

  உங்கள் கண்களை பார்த்துக் கொள்ளுங்கள் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருடா வருடம் வரும் பிரச்சனை என்றாலும் தீர்வினை நோக்கி யாருமே செல்வதில்லை என்பதுதான் வேதனையான உண்மை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு
 5. கடினம் தான் சார்.
  இப்போது ஒமைக்ரான் வேறு டில்லியில் தலைதூக்கியுள்ளது.
  கவனமாக இருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாட்கள் நல்ல படியே நகர்ந்து விட்டன. தங்கள் அன்பிற்கு நன்றி அரவிந்த்.

   நீக்கு
 6. தலைநகரை துக்ளகாபாதுக்கு மாற்றி விடுங்கள். மாசு பாதியாகக் குறையும் அதாவது 10 சிகரெட் அளவிற்கு.

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைநகரை மாற்றும் உங்கள் யோசனை சிறப்பு.... இப்படி செய்யவும் யாரேனும் அரசியல்வாதி வரலாம்.... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
 7. டெல்லியை நினைத்தாலே கவலையாக இருக்கிறது.
  கவனமாக பத்திரமாக இருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாட்கள் நல்ல படியே நகர்ந்து விட்டன. தங்கள் அன்பிற்கு நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 8. ஒவ்வொரு வருடமும் தலை தூக்கும் பிரச்சினை. நிரந்தர தீர்வைப் பற்றி யாரும் யோசிக்காததுதான் இன்னும் அதிக வருத்தம் தரும் விஷயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருடா வருடம் தலைதூக்கும் பிரச்சனை என்றாலும் நிரந்தர தீர்வினை நோக்கி எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது காலம் தள்ளுவது நிதர்சனம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி பானும்மா.

   நீக்கு
 9. மிகவும் வேதனையான செய்தி. இதன் தாக்கத்தைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு வருடமும் இதே வேதனைதான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 10. வருத்தம் தரும் செய்தி.

  தலைநகர் என்றாலே மாசு சிக்கல்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....