சனி, 25 டிசம்பர், 2021

கதம்பம் - அப்பா - மார்கழி - கோலங்கள் - YOUTUBE SHORTS காணொளிகள்

 


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட அவரும் நானும் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

கஷ்டங்கள்தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த யோசனைகளை கொடுக்கும். கஷ்டங்கள் இல்லையென்றால் முன்னேற வேண்டுமென்ற எண்ணமே நமக்கு வராது.

 

******

 

அப்பா - 4 டிசம்பர் 2021: 

இன்று என்னவோ அப்பாவின் நினைவு! அப்பா இருந்திருந்தால்  இன்றுடன் 71 வயது பூர்த்தியாயிருப்பார். 

 

தற்சமயம் இரண்டு வயதானவர்களை என்னுடன் வைத்து பார்த்துக் கொண்டிருக்கின்றேன். மாமனார் மற்றும் பெரிய மாமியார். இருவருக்கும் வயது 84, 80..! அவர்களுக்கு இப்போது எல்லா விதத்திலும் உதவிக் கொண்டிருக்கிறேன். எதையும் தனித்து செய்ய அவர்களால் முடிவதில்லை. திடீரென்று மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

 

இவர்களைப் பார்க்கும் போது அப்பா இப்போது இருந்திருந்தால் தன் வேலைகளை தானே செய்யக்கூடிய நிலையில் இருப்பாரா! தன்னால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கும் செய்து கொடுத்திருப்பாரா! சுத்தத்தையும், செய்யும் வேலையில் நேர்த்தியும் தன் உயிர்மூச்சாக நினைத்தவர் இப்போதும் அப்படி இருக்க முடிந்திருக்குமா! என என்னுள்ளே பல கேள்விகள்.

 

கண்கள் குளமாகியது. அதைப் பார்த்து தேற்றக்கூடிய நிலையில் யாரும் இல்லாததால் என்னை நானே சமாதானம் செய்து கொண்டு அடுத்த வேலையை பார்க்கத் துவங்கி விட்டேன். இதுவே நிதர்சனம்.

 

வேலைப் பளு, நேரமின்மை போன்ற வார்த்தைகளை இப்போது அதிகம் உபயோகிக்கிறேன். இதன் நடுவே தான் எந்த திட்டமிடலும் இல்லாமல் அடுத்த தொடரை எழுதிக் கொண்டிருக்கிறேன். Sweet memories அசை போடும் போது மனது லேசாகிறது. இப்படியெல்லாம் இருந்திருக்கிறோம் என்று வியக்கிறேன்..🙂

 

இதுவும் கடந்து போகும்! நல்லதே நடக்கும்! நடப்பது எல்லாம் நன்மைக்கே!

 

******

 

மார்கழி - 16 டிசம்பர் 2021: 

மார்கழித் திங்கள் மடி நிறைய பொங்கல்! மார்கழி முதல் நாள் செய்த சர்க்கரை பொங்கல் - உங்கள் பார்வைக்கு!

 

******

 

மார்கழி - கோலங்கள் - முதல் ஐந்து:
 

மார்கழி மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் எங்கள் வீட்டில் மகள் போட்ட கோலங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு!  மகள் தான் கோலம் போடுகிறாள். வண்ணம் கொடுத்தது நான். தினசரி கோலம் அவளே போடுவதால் மார்கழிக் கோலமும் அவளையே போடச் சொல்லியிருக்கிறேன்..🙂

 

******

 

மார்கழி - கோலங்கள் - YOUTUBE SHORTS காணொளி:

 

மார்கழி மாதம் வீட்டில் வாசலில் போடும் கோலங்களின் சிறு காணொளிகள் (YOUTUBE SHORTS) மகளின் ROSHNIS CREATIVE CORNER பக்கத்தில் தினமும் வெளியிடுகிறாள். அந்தக் காணொளிகளை கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 

 

Roshni's Creative Corner - YouTube

 

******

 

பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

 

16 கருத்துகள்:

 1. அப்பாவின் நினைவுகள் என்றுமே போற்றத்தக்கவை.  கோலங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. ஏக்கமான நினைவுகள் மாற்றிக் கொண்டது அருமை...

  கோலங்கள் ஆகா...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. அப்பா எல்லோருக்கும் கடவுளாகிறார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பா எனும் கடவுள்... உண்மைதான் கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

   நீக்கு
 4. அப்பாவின் நினைவுகள் உங்களுக்குள் வந்தது புரிகிறது. தன் வேலையைத் தானே செய்துகொள்பவர்கள் ஓரளவு வயது வரும் வரை கஷ்டப்பட்டேனும் செய்து கொண்டுவிடுகிறார்கள் ஆனால் இயலாமை வரத்தான் செய்யும் வயது அதிகமாகும் போது. உங்கள் வேதனையை டக்கென்று அதிலிருந்து மீண்டு யதார்த்தத்திற்கு வந்தது நல்ல விஷ்யம்.

  உங்கள் வேலைகள் நேரமின்மை பற்றி புரிந்துகொள்ள முடிகிறது ஆதி.

  சேம் போட் இங்கும் அதனால் இடையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வலைப்பக்கம்...பதிவு எழுதக் கூட முடியவில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு குறித்த தங்களது எண்ணங்களையும் உணர்வுகளையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு உளங்கனிந்த நன்றி கீதா ஜி.

   நீக்கு
 5. கோலங்கள் அருமையாக இருக்கின்றன.

  சர்க்கரைப் பொங்கல் பார்க்கவே யும்மி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோலங்களும் சர்க்கரை பொங்கலும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

   நீக்கு
 6. பெண் குழந்தைகள் எப்பொழுதும் அப்பா செல்லம்தான். உங்கள் தந்தையை நினைவு கூர்ந்துள்ளீர்கள் அவருக்கு எங்கள் நமஸ்காரம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு வழி பகிர்ந்துகொண்ட விஷயங்கள் குறித்த தங்களது எண்ணங்களை படித்து மகிழ்ந்தேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி மாதேவி.

   நீக்கு
 7. ரோஷிணியின் கோலங்கள் அருமை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகள் இட்ட கோலங்கள் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 8. அன்பின் ஆதி,
  மார்கழிக் கோலங்கள் வண்ண மயமாக இருக்கின்றன.

  வடிவமும் அழகு.

  மார்கழி சர்க்கரைப் பொங்கல் பார்க்கவே அருமை.
  அன்பு வாழ்த்துகள் மா.
  அப்பாவின் நினைவு பெண்களுக்கு நிறையவே இருக்கும்.

  71 பெரிய வயதில்லையே. இருந்திருக்கலாம்.
  இறையருள் உங்களுடன் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மார்கழி கோலங்கள் மற்றும் பிற பகுதிகள் குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி வல்லிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....