அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - அத்ரிமுனி குஃபா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
பிறந்திருக்கும் 'பராபவ' ஆண்டு தமிழ் ஆண்டுகள் சுழற்சியில் 40வது ஆண்டு என்று தெரிய வருகிறது! புத்தாண்டில் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து வளமுடனும் நலமுடனும் வாழ எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்துக் கொள்கிறேன்!
நல்லதே நடக்கட்டும்! நலமே சூழட்டும்!
பண்புடன் தமிழ் புத்தாண்டு மொழிபெயர்ப்பு சிறப்பிதழ்:
'பண்புடன் மின்னிதழ்' தமிழ் புத்தாண்டு மொழிபெயர்ப்பு சிறப்பிதழில் இம்முறை பிற மொழியில் உள்ள சிறந்த படைப்புகளை தமிழில் மொழியாக்கம் செய்து அனுப்பலாம் என்றவுடன் என் மனதில் சட்டென்று தோன்றிய நான் மிகவும் ரசித்த அமர காவியத்தை மொழியாக்கம் செய்து அன்றே அனுப்பி விட்டேன்!
சிறப்பிதழில் பிற படைப்புகளுடன் என்னுடைய படைப்பும் வெளியாகி உள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சி! இந்த அழகான வாய்ப்பை தந்த பண்புடன் மின்னிதழுக்கும், தோழி சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றிகள். மின்னிதழில் வெளியிட்ட எனது படைப்பு கீழே:
ரம்மியமான சாகுந்தலம்! – மகாகவி காளிதாசர்!
பண்புடன் மின்னிதழில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழாக மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வர இருப்பதாகவும் அதில் பிற மொழியில் உள்ள சிறப்பான படைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று வாசித்ததும் என் மனதில் சட்டென்று தோன்றியது ஒரு காவியம்! அது தான் மகாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட காலத்தால் அழியாத அமர காவியம் சாகுந்தலம்!
நம் மொழிகளிலே பழம்பெரும் மொழியான சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட நாடக காவியம் சாகுந்தலம்! இந்த சமஸ்கிருத மொழியின் வரலாறு என்பது சிவபெருமானின் உடுக்கை ஒலியிலிருந்து உருவான எழுத்துக்களின் கோர்வை எனவும் சொல்லப்படுகிறது! அப்படிப்பட்ட தொன்மையான மொழியில் உருவான அழகான காவியமான சாகுந்தலத்தை பற்றியும் அதில் நான் ரசித்த சில வரிகளைப் பற்றியும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்!
இளவரசன் துஷ்யந்தன் வனத்தில் வேட்டையாடச் செல்லும் சமயம் அங்கு சகுந்தலையைக் கண்டதும் காதல் கொண்டான்! இருவரும் பிரேமையில் காந்தர்வ மணம் புரிகின்றனர்! கூடிய விரைவில் வந்து விடுவேன் என்று சொல்லிச் சென்ற துஷ்யந்தனைக் காணாததால் சகுந்தலா மிகுந்த கவலை கொள்கிறாள்! துஷ்யந்தனின் நினைவில் தன்னிலை மறக்கிறாள்!
தன்னிலை மறந்ததால் துர்வாச முனிவரின் சாபத்தையும் பெறுகிறாள்! ‘யாரின் நினைவால் தன்னிலை மறந்தாயோ அவனும் உன்னை மறந்து போவான்’ என்று சாபமிடுகிறார் துர்வாச முனிவர்! தான் சாபம் ஒன்றை பெற்றிருக்கிறோம் என்பதைக் கூட அவள் அறியவில்லை என்பது தான் காலத்தின் கோலம்! நாட்களும் கடந்து சென்றன!
தன் தந்தையான கன்வ முனிவருடன் துஷ்யந்தனைக் காணச் செல்கிறாள் சகுந்தலா! நதியில் பயணிக்கும் சமயம் துஷ்யந்தன் வழங்கிச் சென்ற ராஜமுத்திரையை நதியில் தவற விட்டு விடுகிறாள்! தன்னைப் பற்றி அவள் என்ன தான் விளக்கம் சொன்னாலும், ராஜமுத்திரையும் இல்லாததால் அவனுக்கு அவளுடைய நினைவே இல்லை! கவலையுடன் மீண்டும் காட்டிற்குத் திரும்புகிறாள் சகுந்தலா!
காலங்கள் அதிவேகமாக கடந்து செல்கின்றன! துஷ்யந்தன் சகுந்தலாவின் அன்பில் உருவான பரதன் ஒரு கட்டிளம் காளையாக வளர்ந்து நிற்கிறான்! சகுந்தலாவின் விதி மாறும் நாளும் வருகிறது! நதியில் தவற விட்ட ராஜமுத்திரை ஒரு மீனின் வயிற்றுக்குள் சென்று வெளிப்படும் தருணமும் வரவே அதை கண்டெடுத்த மீனவன் அதை துஷ்யந்தனிடம் கொண்டு சேர்த்ததும் சகுந்தலாவின் நினைவில் காட்டிற்குச் செல்கிறான்!
காட்டிலேயே வளர்ந்ததால் காட்டு மிருகங்களுடன் சகஜமாக விளையாடிக் கொண்டிருக்கும் பரதனை ஒரு இளைஞனாகக் கண்டதும் ஆச்சர்யம் கொண்ட துஷ்யந்தன் அவனிடம் சென்று அவனைப் பற்றி விசாரிக்க, தான் துஷ்யந்த மகாராஜாவின் புதல்வன் எனக் கம்பீரத்துடன் தன்னை அறிமுகம் செய்து கொள்கிறான் பரதன்! சகுந்தலாவும் துஷ்யந்தனும் மீண்டும் இணைவதும் பரதனோடு மூவரும் நாட்டிற்குத் திரும்புவதும் என இந்த அமர காவியம் இனிமையான வாழ்வை நோக்கிய பயணத்தை விவரித்துச் செல்கிறது!
சமஸ்கிருத உலகில் காளிதாசர் இயற்றியுள்ள இந்தக் காவியத்தில் உள்ள சுவையையும், அழகையும், வரலாறையும் உணர்த்தும் நான்கு பாடல்களை பற்றி மிகச்சிறப்பாக குறிப்பிட்டுச் சொல்கின்றனர்!
काव्येषु नाटकं रम्यं तत्र रम्या शकुन्तला!
तत्रापि च चतुर्थॉङ्कस्तत्र श्लोकचतुष्टयं!!
அதாவது காவியங்களில் ரம்மியமானது நாடகம்! அப்படிப்பட்ட நாடகங்களில் ரம்மியமானது சாகுந்தலம்! அதிலும் சுவையானது நான்காவது பாகத்தில் உள்ள நான்கு பாடல்கள்! என்று இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ளது!
கணவன் வீட்டுக்குச் செல்லும் சகுந்தலாவை பிரியப் போவதை எண்ணி வளர்ப்புத் தந்தையான கன்வ மகரிஷி சொல்வதாக இந்தப் நான்கு பாடல்களும் தரப்பட்டுள்ளது! இந்த சிறப்பைச் சொல்லும் நான்கு பாடல்களில் எனைக் கவர்ந்த இரண்டாவது பாடலை மட்டும் உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்!
ஏ! ஆசிரமத்து ஸ்னேகித மரங்களே! அனுமதி கொடுங்கள்! உங்கள் எல்லோருக்கும் நீர் ஊற்றாமல் அவள் நீர் கூட பருகியதில்லை! அவள் அலங்கார பூஷிதையாக இருந்தாலும் உங்களிடமிருந்து ஒரு இலையைக் கூட அவள் பறித்ததில்லை! நீங்கள் பூத்துக் குலுங்கும் பருவத்தில் அவள் உற்சவமாக கொண்டாடியிருக்கிறாள். அந்த சகுந்தலா இப்போது கணவன் வீட்டிற்குச் செல்கிறாள்! அனுமதி கொடுங்கள்!
என்று இந்தப் பாடலில் சகுந்தலா இயற்கையின் மீது கொண்ட பிரேமையை காளிதாசர் அழகாக சொல்லிச் செல்கிறார்!
மொழிகளில் எந்த பேதமும் இல்லை! கற்றுக் கொள்வதற்கும், வாசிப்பதற்கும் ரசிப்பதற்கும் எந்தத் தடையும் இல்லை! நான் வாசித்ததில் வியந்து ரசித்த அமர காவியமான சாகுந்தலத்தை பற்றி பகிர்ந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
23 ஏப்ரல் 2026


சிறப்பு. பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்கு