அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
வாசிப்பனுபவம் வரிசையில் நான் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளப் போவது பாக்கியம் ராமசாமி அவர்களின் “கமான்! அப்புசாமி! கமான்!” என்கிற நூல் வாசிப்பனுபவம் குறித்து தான். சென்ற வாரம் வாசிப்பனுபவமாக பகிர்ந்து கொண்ட ஸ்ரீரமண மகரிஷி நூலிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, ஒரு நகைச்சுவை வாசித்து இந்த வாரம் அந்த அனுபவத்தினை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். ஒரு சில புத்தகங்கள் வாசிப்பதற்கு நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கும். நின்று நிதானித்து வாசிக்க வேண்டியிருக்கும். அதே சமயம் சில நூல்கள் போகிற போக்கில் மிகவும் ரசித்து வாசிக்க முடியும். Light feel தரக்கூடிய நூல்கள் எப்போதுமே ரசிக்க முடிந்தவை தான். முன்பு நிறைய தேடித் தேடி ஜ.ரா.சு. எனும் ஜ.ரா.சுந்தரேசன் எனும் இயற்பெயர் கொண்ட பாக்கியம் ராமசாமி அவர்களின் ஆக்கத்தில் உருவான கதாபாத்திரங்களான சீதாப்பாட்டி - அப்புசாமி கதைகளை நிறைய படித்து உள்ளேன்.
அப்பா அவரது அலுவலக Book Club-லிருந்து குமுதம், கல்கி, ஆனந்த விகடன், ராணி, இதயம் பேசுகிறது, குங்குமம், அமுதசுரபி என்று பல வாராந்திரிகளையும் மாத இதழ்களையும் வீட்டுக்கு எடுத்து வருவார். குமுதத்தில் அப்புசாமி கதைகள் தொடராக வரும்போது அதற்காகவே குமுதம் படித்ததுண்டு. தில்லி சென்ற பிறகும் அவரது நூல்களையும் வாசித்ததோடு, பிற்காலத்தில் இணையத்தில் அவர் தொடங்கிய http://www.appusami.com தளத்திலும் அவரது எழுத்தினை ரசித்து வாசித்து இருக்கிறேன். சமீபத்தில் அப்படி ரசித்து வாசித்த ஒரு மின்னூல் தான் கமான்! அப்புசாமி! கமான்! என்கிற மின்னூல். புஸ்தகா வெளியீடு. அவர்கள் தளத்திலும் அமேசான் தளத்திலும் மின்னூலாகக் கிடைக்கிறது. நான் அமேசான் கிண்டில் தளத்தில் படித்தேன். நீங்கள் படிக்க விரும்பினால் இந்தச் சுட்டியில் சென்று படிக்கலாம்.
புத்தகத்தின் தலைப்பாக வைத்திருக்கும் கதை தான் முதல் கதை. அப்புசாமி குதிரைப் பந்தயத்திற்குச் சென்று வரும் கதை தான் முதல் கதை. மொத்தம் 13 கதைகள் இந்த மின்னூலில் இருக்கின்றன. ஒவ்வொன்றும் படித்து ரசிக்கக் கூடிய விதத்தில் தான் இருக்கின்றன. அப்புசாமி, சீதாப்பாட்டியைப் போலவே அவர் உருவாக்கிய பீமாராவ் மற்றும் ரசகுண்டு கதாபாத்திரங்களும் ரசிக்கத் தக்கவை தான். பீமாராவ் கடன் வாங்கிக் கொண்டு திருப்பித் தராமல், மீண்டும் கேட்கும் போது ஒரு வித நகைச்சுவையுடன் இப்படி எழுதி இருப்பார் - “ஏற்கனவே நீ எனக்கு நாமம் போட்டது இன்னும் உலரக் கூட இல்லை.” வழமை போலவே இந்த மின்னூலில் உள்ள கதைகளிலும் ஆங்காங்கே பீமாராவ் பேசும் கன்னடமும், சீதாப்பாட்டியின் ஆங்கிலப் புலமையும், அப்புசாமியின் சென்னைத் தமிழும் படித்து ரசிக்க முடியும்.
ஒரு கதையில் தனது எண்பத்தி மூன்றாம் பிறந்த நாள் கொண்டாடுவதற்கு சீதாப்பாட்டியிடம் காசுக்கு மல்லாடுவது பற்றிச் சொன்னால், இன்னொரு கதையில் பீமாராவ் வளர்க்கும் பூனையை அவர் சில நாட்கள் பார்த்துக் கொண்டபோது நடக்கும் ஸ்வாரஸ்யங்களை ஒரு கதையில் சொல்கிறார் எழுத்தாளர். பீமாராவ் பேசும் பாஷையை சீதாப்பாட்டி “சீக்கிரம் ஆளை ‘டிஸ்போஸ்’ செய்யுங்கள். இவனுடைய கன்னடோ - இங்க்லீஷை என்னால் பொறுக்க முடியாது” என்று சொல்வாள். அவரிடம் பீமாராவ் கொடுத்த பூனையை என்ன பாடு படுத்தினார் என்பதைப் படிக்கும்போது நிச்சயம் சிரிக்காமல் இருக்க முடியாது. கடைசியில் அவர் செயல்களால் மாட்டிக்கொண்டு முழிக்கும் போது நமக்கும் கஷ்டமாக இருக்கும். பல சமயங்களில் நாம் கூட அப்புசாமி மாதிரி தான் மாட்டிக் கொள்கிறோமோ என்ற எண்ணம் கூட எனக்கு வருவது உண்டு! ஹாஹா….
அப்புசாமி - சீதாப்பாட்டி கதைகளை உருவாக்கிய ஜ.ரா.சு. அவர்கள் நம்மிடையே இப்போது இல்லை என்றாலும், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும், கதைகளும் நிச்சயம் என்றைக்கும் நம்மிடையே இருக்கும். படிப்பவர்களை இன்புறச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை. முடிந்தால் இந்த நூலை புஸ்தகா தளத்திலோ, அமேசான் தளத்திலோ சென்று வாசித்துப் பாருங்களேன் - உங்களுக்கு விருப்பமிருந்தால்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
16 ஏப்ரல் 2026


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....