திங்கள், 6 ஏப்ரல், 2026

ஸ்ரீரமண மகரிஷி - பாலகுமாரன் - வாசிப்பனுபவம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


வாசிப்பனுபவம் வரிசையில் நான் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளப் போவது பாலகுமாரன் அவர்களின் “ஸ்ரீரமண மகரிஷி” என்கிற நூல் வாசிப்பனுபவம் குறித்து தான்.  திருவண்ணாமலை என்றதும் என் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை ஆலயம் மட்டுமல்ல ரமண ஆஸ்ரமும் தான்.  இது வரை மூன்று நான்கு முறை திருவண்ணாமலை சென்றிருக்கிறேன்.  ஒவ்வொரு முறையும் ரமணாஸ்ரமும் செல்லாமல் வந்ததே இல்லை. அங்கே ஒரு வித அமைதி கிடைப்பது கண்கூடு. தலைநகர் தில்லியில் இருந்த போதும் அவ்வப்போது லோதி காலனி பகுதியில் இருக்கும் ரமண கேந்திரா சென்று வந்ததுண்டு.  ரமணர் என்று சொல்லும்போதே அவரின் எளிமை, அவர் வழங்கிய அருளுரைகள் என ஒவ்வொன்றாக நினைவுக்கு வரும்.  ஒரு காலத்தில் தினமும் கேட்கும் பாடல்களில் ஒன்றாக இளையராஜா வெளியிட்ட ரமண மாலை பாடல்களும் இருந்தன.  கேட்கும்போதே ஒரு வித அமைதி மனதுக்குள் வந்தமர்ந்து கொள்ளும்.  இந்தப் பதிவினை தட்டச்சு செய்யும் போதும் கூட ஒரு பக்கம் ராஜாவின் ரமண மாலையை ஓட விட்டுக் கொண்டே தான் தட்டச்சு செய்தேன். 



ரமணாஸ்ரமம் செல்லும் போதெல்லாம் அவரின் நூல்கள், அவரைப் பற்றிய நூல்கள் வாங்கிச் சென்று அவ்வப்போது படிப்பதுண்டு.  மனது ஒருவித அமைதியை அடைய அவரது நூல்கள் உதவியாக இருந்தன.  சமீபத்தில் கிண்டிலில் உலவிக் கொண்டிருந்தபோது பாலகுமாரன் அவர்கள் விகடனில் தொடராக எழுதிய ஸ்ரீரமண மகரிஷி நூல் கிடைப்பது தெரிய உடனே தரவிறக்கம் செய்து விட்டேன்.  மற்ற நூல்களை ஒரு மூச்சில் தொடர்ந்து படித்து விடலாம் என்றாலும் ரமணர் குறித்த நூல்களை அப்படி படித்துவிட இயலாது.  கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக அந்த நூலை கொஞ்சம் கொஞ்சமாக படித்துக் கொண்டிருந்தேன்.  சமீபத்தில் தான் முழு நூலையும் படித்து முடித்தேன்.  எத்தனை எத்தனை கருத்துக்கள், அவர் நாடி வந்த மக்களுக்கு சொன்ன அறிவுரைகள், விஷயங்கள் என எல்லாவற்றையும் படித்து, அதன் பின்னர் தன் வழியில் பாலகுமாரன் எழுதி இருக்கும் நூல் தான் ஸ்ரீரமண மகரிஷி.  நின்று நிதானித்து, உள்வாங்கி படிக்க ஏற்ற ஒரு நூல் இது.  


ரமண மகரிஷி தனது வீட்டிலிருந்து இரயிலில் புறப்பட்டதிலிருந்து அவர் முக்தி அடையும் வரை பல செய்திகளை உள்ளடக்கிய புத்தகம் இது.  நிறைய விஷயங்கள் நின்று நிதானித்து படிக்க வேண்டிய நூல் இது.  எத்தனை விஷயங்களை நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார் என்று எண்ணும் போதே மனதில் ஒரு வித அமைதியும், நிம்மதியும் வந்து விடுகிறது.  அதுவே அந்த நிகழ்வுகளையும், கேள்வி பதில்களையும், சொல்லிச் சென்ற தத்துவங்களையும் படிக்கும்போது நிச்சயம் நம் மனதில் நிறைய கேள்விகளும், அதற்கான ரமணரின் பதில்களும் என நிறைந்து விடும் என்பதில் சந்தேகமில்லை.  எத்தனை எத்தனை விஷயங்களை சர்வ சாதாரணமாக மக்களுக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார் என்று எண்ணும்போது “எப்பேர்ப்பட்ட மகான் அவர்” என்ற எண்ணம் நமக்கு வராமல் இருக்காது.  வாசித்ததில் பல வரிகளை Highlight செய்து கொண்டே வந்தேன்.  ஆனால் எந்த வரிகளையும் விடமுடியாது என்று தோன்ற ஒரு நிலையில் அப்படிச் செய்வதை விட்டுவிட்டேன்.  அப்படி Highlight செய்த சில வரிகள் இங்கே உங்கள் பார்வைக்கும்!


“அலையும் மனதை ஏதோ ஒரு வழியில் நிலைநிறுத்தி, தன்னைப் பார்க்கும் பக்குவம் வந்துவிட்டால், வந்த வழி பற்றிக் கவலையென்ன!”


“நன்றாகப் புரிந்து கொள்! சாத்வீகமான ஆகாரத்தை உண்டு, திடமான முயற்சியுடன், ‘தான்’ என்ற மமதையை, ‘நான்’ எனும் அகங்காரத்தை நீக்கிவிட்டால், எல்லோராலும் செய்ய முடிந்த காரியம் தான் அது. இயலாதது எதுவுமில்லை. திடமான முயற்சி முக்கியம்.”


“உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களும் உடல் உபாதையில்லாமல், எந்த துக்கமும் தாக்காமல், எல்லா நேரத்திலும் சுகமாக இருக்கவே விரும்புகிறார்கள்.  சகலருக்கும் தன் மீதே அளவில்லாத பிரியம் இருக்கிறது.  சுகமாக இருத்தலே இந்தப் பிரியத்துக்குக் காரணம்.  உறங்கும்போது எதுவும் செய்யாமல், அதே நேரம் மிகவும் சுகமாக இருக்கிறோமே… அப்படிப்பட்ட சுகம் வேறு எதில் என்று அலைய, துக்கமற்ற சுகம் எங்கேயும் கிடைப்பதில்லை என்று புரிகிறது.” 


“கரடியாக, குரங்காக, மானாக, முயலாக விதவிதமான சர்க்கரை மிட்டாய்களைத் திருவிழாவில் விற்கின்றனர்.  ஆளுக்கோர் உருவத்தை வாங்கிச் சாப்பிட்டாலும், கடைசியில் கரைந்து மீறுவது சர்க்கரைதான்; இனிப்பு தான். அதுபோல் மனித லட்சியம், ஆத்மானுபவம்!”


“‘தான்’ என்கிற அகந்தையைத் துறந்த பாலசுவாமிக்கு காவியும் தீக்ஷையும் எதற்கு? சத்தியத்துக்கு எந்த வேடமும் தேவையில்லை.”


“பூஜை என்பது இலைகளைக் கிள்ளியும், பூக்களைப் போட்டும், மாலைகளை அணிவித்தும், நைவேத்தியம் செய்தும் படைப்பதல்ல; உள்ளுக்குள்ளே தன்னை உற்றுக் கவனித்து, தன் எண்ணங்கள் எங்கு தோன்றுகின்றன, யார் உள்ளே இருப்பது என்று கவனிக்காதவரை இந்தச் செயல்கள் எல்லாம் வீண்”.


“தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்வது தான் மனிதர்களின் இயல்பு. தண்டித்தவரையே தண்டிப்பது தான் பழக்கம். இந்த ஞானி, உலகில் எல்லா உயிரினங்களோடும் ஒரேவிதமான பார்வையை, ஒரேவிதமான உறவைக் கொண்டிருக்கிறார். தேனீ அற்பமானது அல்ல; அவற்றின் வாழ்விடம் சாதாரணமானது அல்ல.  தெரியாமல் விளைவித்திருந்தாலும், அவற்றின் கோபத்தை ஏற்று, தண்டனையை வாங்கிக் கொள்வதே சரி!”


“சகலரும் சாகப் பயந்துதான் சாகிறார்கள். தன்னை அறிந்தவர் மட்டுமே மரணத்தைக் கண்டு அஞ்சாமல் வரவேற்கிறார். அவரால் மரணத்தைத் தள்ளி வைக்கவும் கூடும்.”


“படிப்பு கொடுத்த மேதமை, குழப்பத்தைத் தான் கொடுத்தது. கடவுள் என்ற விஷயம், முயற்சியால் அடைவது அன்று என்று புரியவே வெகு நாளாயிற்று. எங்கு முயற்சி, முற்றிலும் நின்று போகிறதோ, எங்கே எந்த முயற்சியும் இல்லையோ, அங்கே அமைதி பரிபூர்ணமாகக் குடியேறுகிறது.”


“’நான் நான்’ என்பது எங்கிருந்து புறப்படுகிறதோ, அதை கவனித்தால், மனம் அங்கே ‘லீனமாகும்’ (கரையும்). அதுவே தபஸ்.” 


“குரு என்ற வார்த்தைக்கு இருளை விலக்குபவர் என்று அர்த்தம்.”


“நம்மால் விளைந்தது எதுவுமே நம்மால் விளைந்தது அல்ல என்ற ஒரு விடுதலையான உணர்வு வர, செய்ததைக் கொண்டாடிக் கொள்ளத் தோன்றாது.”


“அமைதியாக இல்லாத மனம், தன் குற்ற உணர்ச்சியை மறைக்க, ஆரவாரமாகப் பேச ஆரம்பிக்கும். ஆரவாரமாகப் பேசுவது மிக எளிதாக அடுத்தவருக்குப் புரிந்து போய், அது மிகப் பெரிய ஆபாசமாக காட்சியளிக்கும். தான் ஆபாசமாகக் காட்சியளிக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல், தொடர்ந்து அவர்கள் ஆரவாரமாக இருப்பார்கள்.”


“நான், நீ, பெண்டுகள், ஆண்கள், மூடர், குருடர், அவர், இவர் என்று பல்வேறு விஷயங்களாக, பல்வேறு பொருட்களாக நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், எல்லாம் என்ன? தேகம், பிராணன், இந்திரியம், புத்தி இவையெல்லாம் ஒடுங்குகிற பெருவழி என்பது புரிந்துவிட்டால், இந்த அத்தனை பொருட்களிலும் இவை தான் இருக்கின்றன என்பது தெரிந்துவிட்டால், பிரிவினை வருமா?”


“மண்ணாலான பல பானைகளில் உள்ள நீரில், பல பிரதி பிம்பங்களாக சூரியன் காணப்பட்டாலும், எல்லாம் ஒரே சூரியன் தான். அது போல, பல சரீரங்களில் பல ஜீவர்களாக பிரகாசித்தபோதிலும், அவை அனைத்தும் ஒரே விஷயம்தான்.”


“எது இருந்தால் நீங்கள், எது உங்களை இயக்குகிறது, எங்கே இருக்கிறது அது, எல்லாக் கர்வங்களையும் களைந்து, உள்ளுக்குள்ளேயே எது இருக்கிறது என்று பார்ப்பதற்கு, மிகப் பெரிய பிரயாசை வேண்டும். சலிப்புற்ற மனம் எளிதாக இதைப் பார்க்கும். தினசரி வாழ்வில், இந்த கர்வம் கொடுத்த அவஸ்தைகளை, அபத்தங்களை, அவலங்களைப் பார்க்கிறபோது, எதற்கு இதெல்லாம் என்று எவருக்கேனும் சலிப்பு ஏற்பட்டால், அவர் உண்மையில் ‘நான் யார்?’ என்ற கேள்விக்கு எளிதாக வருவார்.  


“ஆற்றில் போகிற சருகுகளில், நானும் ஒரு சருகு. இத்தனை காலம் அற்புதமாகத் தாண்டி வந்திருக்கிறேன். இனி, சொச்ச காலமும் தானாகத் தாண்டும் என்ற எண்ணம் ஏற்பட, உள்ளே அமைதி கெட்டிப்படும்.”


“சரணாகதி என்பது கர்வம் அழித்தல்; அகந்தை அகற்றுதல். அகந்தையைத் துறப்பதே துறவு. மற்றதெல்லாம் வெளிவேடங்கள்.”


“சத்தியத்தைத் தொட்டவர்க்கு மரணத்தைப் பற்றிய எந்த பயமும் இல்லை. மரணத்தைப் பற்றிய பயம் இல்லாதபோது, வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் நன்றாக அனுபவிக்க முடியும்.”


ஒரே நாளில் படிக்காமல் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக படித்து ரசித்த ஒரு நூல் இந்த நூல்.  கிண்டில் தளத்தில் கிடைக்கிறது என்பதோடு விகடன் பிரசுரமாகவும் கிடைக்கிறது.  முடிந்தால் வாசித்துப் பாருங்களேன்.  

*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

6 ஏப்ரல் 2026


2 கருத்துகள்:

  1. இளையராஜாவின் ரமணமாலை நான் கேட்டதில்லை.

    பதிலளிநீக்கு
  2. இந்த புத்தகம் இதுவரை படித்ததில்லை. நீங்கள் எடுத்துக் கொடுத்திருக்கும் வரிகள் எளிமையாக ஆனால் வலிமையாக, அழகாக இருக்கின்றன.

    தரவிறக்கி விட்டேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....