புதன், 15 ஏப்ரல், 2026

மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - அடுத்த இலக்கும் அழகான ஆபத்தும் - பகுதி ஒன்பது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட ஶ்ரீ அஷ்டாம்ஸவரத ஆஞ்சநேயர் கோயில் தரிசனம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


இந்தத் தொடரின் முந்தைய பகுதிகளை வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். வாசிக்கவில்லை எனில் வாசித்து விடுங்களேன்....


தலைநகர் தில்லியிலிருந்து புறப்பட்ட நாள் அன்று உத்திராகண்ட் மாநிலத்தின் சாரி எனும் கிராமம் வரை எங்கள் வாகனத்தில் வந்து தேவரியா தால் பகுதியில் இரவு தங்கி அடுத்த நாள் காலை புறப்பட்டது வரை கிடைத்த அனுபவங்களை முந்தைய ஏழு பகுதிகளில் எழுதி இருந்தேன்.  இந்தப் பகுதியிலிருந்து மற்ற அனுபவங்கள் தொடர்கிறது.  இரண்டாம் நாள் காலை தேவரியா தால் பகுதியிலிருந்து கீழே சாரி கிராமத்தினை நோக்கி நடைப் பயணம் முடிந்து சாரி கிராமத்திலிருந்து எங்கள் வாகனத்தில் எங்களது அடுத்த இலக்கு - அன்றைய நடைப்பயண தொடக்க இலக்கு வரை வாகனத்தில் பயணித்தோம்.  சாரி கிராமத்திலிருந்து எங்கள் அடுத்த இலக்கு வரை செல்வதற்கு முதலில் செல்ல வேண்டிய இடம் மண்டல் எனும் கிராமம்.  சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த இடத்தினை சுமார் ஒரு ஒன்றரை மணி நேரம் ஆகலாம்.  ஆனால் எங்களுக்கு கொஞ்சம் அதிக நேரம் எடுத்தது.  காரணம் வழியில் சோப்தா எனும் இடத்தில் அன்றைய இரவு தங்குவதற்கான அறையை முன்பதிவு செய்து விட்டு பின்னர் பயணத்தினைத் தொடர வேண்டியிருந்தது.  



இயற்கையின் பேரெழில்...

அப்படி முன்பதிவு செய்தது ஒரு விதத்தில் நல்லதாகப் போயிற்று என்பதை அன்றைய இரவு அங்கே திரும்பி வந்ததும் தெரிந்து கொள்ள முடிந்தது. தங்குமிடத்திற்கான கட்டணம் மாறுதலுக்கு உரியதாகவே இருக்கிறது என்பதை மாலை வரும்போது தெரிந்து கொண்டோம். வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைப்  பொறுத்து தங்குமிடத்திற்கான கட்டணம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாங்கள் நால்வர் என்பதால் ஒரே அறையில் நான்கு பேரும் தங்கும் வசதி இருக்கும் அறைக்கு முன்பதிவு செய்தோம்.  ஒரு நாளைக்கு, நாங்கள் தங்கப்போவது ஒரு இரவே ஆனாலும், 2000 ரூபாய் கட்டணம். பெரிதாக வசதிகள் இல்லை - என்ன குளிருக்கு இதமாக பெரிய கட்டில், நிறைய ரஜாய் (குளிருக்கான போர்வை என்று வைத்துக் கொள்ளுங்களேன்) இருக்க அது மட்டுமே இருந்தால் கூட போதும் என்று தோன்றியது.  பனிப் பொழிவு காரணமாக தண்ணீர் வரும் குழாய்கள் உறைந்து கிடக்க, Geyser வேலை செய்யாது.  


சுடு நீர் வேண்டுமென்றால் கீழே சென்று பக்கெட்டில் எடுத்து வர வேண்டும்.  சாதாரண நீர் - உறைய வைக்கும் குளிரில் மேலே பெரிய சிண்டெக்ஸ் டாங்குகள் முழுக்க இருந்தது.  அதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.  இது போன்ற சில சிக்கல்கள் இருந்தாலும் குளிருக்கு இதமான ஒரு அறையாக இருந்ததால் அது மட்டுமே போதும் என்று தோன்றிவிடும். முன்பதிவு செய்த பிறகு அங்கிருந்து தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம். ஆஹா…. அந்த மலைப்பாதையில் நாங்கள் கண்ட காட்சிகளை என்னவென்று சொல்ல.  சோப்தாவிலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய மண்டல் கிராமம் வரையிலான பாதை மிகவும் குறுகிய பாதை தான். என்னதான் நல்ல சாலை இருக்கிறது என்றாலும் குறுகிய சாலை என்பதால் மிகவும் கவனமாகவே வாகனத்தினைச் செலுத்த வேண்டியிருந்தது. குறுகிய பாதையாக இருப்பதோடு கூடவே பனிப்பொழிவும், அந்தப் பனிப்பொழிவில் வாகனங்கள் செல்வதால் உண்டாகும் பிரச்சனைகளும் இருந்தாலும், அந்தக் காட்சிகள் கண்களுக்கு மிகவும் ரம்மியமானதாகவே இருந்தது.  அழகான ஆபத்து என்றாலும் அனுபவித்து ரசிக்கக்கூடிய ஆபத்து!





சோப்தா எனும் அந்த இடம் மிகவும் அழகான ஒரு சிற்றூர்.  பெரும்பாலும் தங்குமிடங்கள், உணவகங்கள் என இருக்கும் இடம்.  உள்ளூர் மக்கள் தான் அங்கே இந்த வசதிகளை சுற்றுலாவாசிகளுக்கு தருகிறார்கள் என்றாலும் அதிக அளவில் வசதிகள் இல்லை. குறைவான எண்ணிக்கையிலேயே தங்குமிடங்கள் இருப்பதால் முன்னரே பதிவு செய்து கொள்வது நல்லது என்பதை எங்களுக்கு நண்பர் Bபிஷ்ட் சொன்னாலும், இத்தனை இடங்கள் இருக்கிறதே, நிச்சயம் இடம் கிடைக்கும் என்கிற எண்ணமும் எனக்குத் தோன்றியது. ஆனாலும் நண்பர் அனுபவசாலி என்பதால் அவர் சொன்னபடியே நாங்கள் முன்பதிவு செய்து புறப்பட்டோம்.  செல்லும் வழியெங்கும் சாலையின் இரு மருங்கிலும் மரங்கள், மலைகள் மற்றும் முந்தைய நாள் இரவில் பெய்த பனிப்பொழிவின் மிச்சங்கள் என பார்க்கும்போதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  ஒவ்வொரு வளைவிலும் நின்று பார்க்கலாம் என்ற ஆசை இருந்தாலும், ஒரு வாகனம் எதிரே வந்தாலும் சரியான இடத்தில் தான் அந்த வாகனத்தினைக் கடக்க முடியும் என்பதால் எங்கேயும் நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டிருந்தோம். 




நடுவே ஒரு இடத்தில் சற்றே இடம் இருக்க, அந்த இடத்தில் வாகனத்தினை நிறுத்தி, வாகனத்திற்கு ஓய்வு கொடுத்ததோடு, வாகனத்தினைச் செலுத்தும் நண்பர் Bபிஷ்ட் அவர்களுக்கும் ஓய்வு கொடுத்தோம்.  எங்கே பார்த்தாலும் இயற்கையின் பேரெழில் கண்களுக்கு விருந்தாக இருக்கும் போது அங்கேயிருந்து நகரத்தான் மனசு வருமா என்ன! சின்னக் குழந்தைகளாக குதிப்பதும் நடப்பதும் என சில நிமிடங்கள் கடந்தது.  நண்பரின் அலைபேசி வழி சில Slo Mo காணொளிகளும் எடுத்தோம்.  அங்கிருந்து தொடர்ந்து பயணிக்கும்போது நண்பரின் வாகனத்தில் மேலே இருக்கும் Sliding Door-ஐத் திறந்து செல்லும் பாதையைக் காணொளிகளாகவும் எடுத்தோம். இந்தப் பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கும் அந்தக் காணொளிகள் வழி நீங்களும் நாங்கள் சென்ற பாதையையும் அந்த இயற்கையின் பேரழகையும் பார்த்து ரசிக்கலாம்.  எத்தனை அழகு இல்லையா இந்த பனிப்பொழிவினால் உண்டான வெண் சிகரங்களும் பனிபடர்ந்த சாலைகளும்!  ஆனால் சாலைகளில், சாலை ஓரங்களில் இருக்கும் பனி சற்றே ஆபத்தானது. நம் வாகனத்திற்கு சரியான Grip கிடைக்காது என்பதால் எங்கே வேண்டுமானாலும் வண்டி பாதை மாறிப் போக அதிக வாய்ப்பு உண்டு - அதிலும் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் இந்தப் பாதையில் செல்லும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். 




பல இடங்களில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தி வைத்து இருந்ததும் அதன் பக்கத்தில் இருக்கும் காலி இடங்களில் தங்குமிடங்கள் - தற்காலிக டெண்ட் வசதிகள், மற்றும் உணவகங்கள் இருக்க அவற்றில் சில சுற்றுலா பயணிகள் தங்கி இருந்தார்கள்.  வாகன ஓட்டிகள் சாலையோரம் நின்று கொண்டிருக்க, நாம் அவர்களைக் கடக்கும்போது எங்கே அவர்கள் மீது மோதி விடுவோமோ என்ற எண்ணம் வரும் அளவு குறுகிய சாலைகள்.  பனிப்பொழிவு இல்லாத இடங்களில் சற்றே வேகமாகப் பயணிக்க முடிந்தாலும், சாலையின் ஓரத்தில் இருந்த மரங்களில் Bபுரான்ஸ் (बुरांस) பூக்கள் பல வண்ணங்களில் பூத்திருந்ததையும், தூரத்தே தெரியும் மலைச்சிகரங்கள் முழுக்க வெண்பனி போர்த்திருப்பதையும் பார்த்து ரசித்தபடியே பயணித்தோம்.  என்ன அழகு எத்தனை அழகு என்று சொல்ல வைக்கும் இயற்கையின் பேரெழிலைச் சொல்லும் பாடல் வரிகள் என நினைவில் வந்து போனது. 




நாங்கள் சென்ற போது எதிரே வந்த சில இரு சக்கர வாகனங்கள் மிக மிக மெதுவாகக் கடந்தன.  மேலும் ஒரு இடத்தில் பார்த்தபோது வாகனம் சறுக்கிக் கொண்டு சாலையோர தடுப்பு வரை சென்றதும், அந்த வாகனத்தினை ஓட்டுனரான இளைஞர் ஏதோ சமாளித்து நிறுத்திவிட்டாலும், அதனை மீண்டும் சாலையில் கொண்டு வர மற்ற சக வாகன ஓட்டிகள் உதவி செய்ய வேண்டியிருந்ததையும் பார்க்க முடிந்தது.  இரு சக்கர வாகனங்களில் இப்படி பயணிப்பது அலாதியான உணர்வினைத் தந்தாலும், இப்படியான ஆபத்துகளும் நிறைந்தது தான்.  ஆனாலும் கவனத்துடன் பயணித்தால் நிச்சயம் அதிக அளவில் அந்தப் பயணத்தினை அனுபவிக்கலாம் என்பதும் உண்மையே.  என்ன தான் இப்போது இப்படியான பயணங்கள் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகிறேன் என்றாலும் இளமைக் காலத்தில் நான் வாங்க நினைத்த YEZDI BIKE - இல் இப்படியான பயணங்கள் சென்றால் எப்படி இருந்திருக்கும் என்ற எண்ணங்கள் இப்போதும் உண்டு.


நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் என்ற பாடல் வரிகள் தான் மனதில் வந்து போகிறது. ஆனாலும் விருப்பப்படி இரு சக்கர வாகனத்தில் பயணிக்க முடியாவிட்டாலும், பலரால் முடியாத இது போன்ற பயணங்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறதே, அந்த வாய்ப்பினைக் கொடுத்த இறைவனுக்கும், இப்படியான பயணங்கள் செய்ய என்னை அனுமதிக்கும் இல்லத்தரசி மற்றும் மகளுக்கும் மனம் நிறைந்த நன்றியை இந்தப் பதிவு வழி சொல்லிக் கொள்கிறேன்.  இப்படியாக சிறப்பான காட்சிகளைக் கண்ட பின்னர் நாங்கள் மண்டல் கிராமத்தினைச் சென்றடைந்தோம். அங்கே எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன? தொடர்ந்து எங்கே சென்றோம் போன்ற தகவல்களை எல்லாம் வரும் பகுதிகளில் சொல்கிறேன். அது வரை பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

15 ஏப்ரல் 2026


7 கருத்துகள்:

  1. இப்போ இந்த issue வை NIA கையில் எடுத்திருக்கிறதாமே.... சர்வதேச நாசக்காரர்களின் கை இதிலும் involve ஆகி இருக்குமோ....

    // கட்டணம் மாறுதலுக்கு உரியதாகவே இருக்கிறது என்பதை மாலை வரும்போது தெரிந்து கொண்டோம். வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைப்  பொறுத்து தங்குமிடத்திற்கான கட்டணம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது //

    நல்லா சம்பாதிக்கறாங்க போங்க...   நியாயமா இது!

    பதிலளிநீக்கு
  2. காணொளியில் பார்க்கும்போது குறுகிய பாதைகள் பயமுறுத்துகின்றன.  பரமபதம் விளையாட்டு போல சாலை ஓரம் தடுக்கினால் கீழே உள்ள சாலைக்கு போய்விட வேண்டியதுதான்!!!!  மறுபடி ஏறி வரவேண்டும்!

    பதிலளிநீக்கு
  3. குறுகிய இடங்களைத் தாண்டும்போது பாதையிலிருந்து விலகி உங்கள் கேமிரா அருகில் உள்ள பள்ளங்களைக் காட்டும்போது நாமே அதற்குள் நழுவுவது போல முதுகுத்தண்டு சிலீர் என்கிறது!  உங்கள் நண்பர் பிஷ்ட் திறமையான ஓட்டுநரும் கூட என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  4. மலையின் இடதுபுறம் செல்லும்போது பயங்கரமாக இருக்கிறது.  எதிரே பெரிய மலை.  எத்தனை உயரத்திலிருக்கிறோம் (!) என்றும் தெரிகிறது.  அடுத்து தொடர்ந்து மலையின் வலதுபக்க காணொளியில் குறுகிய வளைவில் திரும்பும்போது பாக்பக்கென்று இருக்கிறது.  எதிரே வண்டிகள் வேறு..   சாகசப் பயணம்தான்.

    பதிலளிநீக்கு
  5. கீழிருந்து மூன்றாவது காணொளியும் நான்காவது காணொளியும் ஒன்றேதான். ரிப்பீட் ஆகி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. ஓட்டுவது பிஷ்ட்.  பயணிப்பது நீங்கள். காணொளியை பார்க்கும் எனக்கு ஏன் தலை சுற்றுகிறது!  முதுகு சில்லென்கிறது? கால்களில் ஒரு உஷ்ணம் பரவுகிறது? 

    பாவம் நண்பர் பிஷ்ட்..  நீங்கள் நின்று கண்களை செலுத்தி அந்த இடங்களை ரசித்த அளவு அவரால் ரசித்திருக்க முடியாது.  வண்டியை ஓட்டுவதிலேயே கவனம் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. கடைசி காணொளியில் உச்சியை அடைத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.  ஒரு டீக்கடை தவிர வேறொன்றையும் காணோம்! 

    வீட்டுக்கு எதிரே உள்ள டீக்கடைக்குப் போகலாம், தெரு முனையில் உள்ள டீக்கடைக்கு போகலாம்...  மலை உச்சியில் இருக்கும் டீக்கடைக்குதான் போவேன் என்று அடம்!! 

    அப்புறம் இறங்க ஆரம்பிக்கிறீர்கள் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....