அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட வருத்தங்கள் போக்கும் வாரணபுரீஸ்வரர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
சென்ற பகுதியில் சொன்னது போல மண்டல் கிராமத்திலிருந்து காட்டுப் பாதைகள் வழி நடந்து நாங்கள் சென்று சேர்ந்த இடம் அத்ரி முனி தவம் செய்த குகையும் அதன் அருகிலேயே இருக்கும் அம்ருத் கங்கா அருவியும் அது விழுந்து ஓடும் காட்டாறும் இருக்கும் இடம் தான். அந்த இடத்தினை எப்படி வார்த்தைகளால் வர்ணிக்கப் போகிறேன் என்ற அச்சம் எனக்குள் இப்போது! அங்கே கிடைத்த அனுபவங்கள் வாழ்நாளில் மறக்கக்கூடியதா என்ன? சுற்றிலும் உயர்ந்த மலைகள், நடுவே ஒரு அருவி, கீழே அருவி வழி விழும் நீர் ஓடும் காட்டாறு, இடப்புற மலையின் ஒரு பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலி, அதன் அருகே ஒரு ஆபத்தான, குறுகிய மலைப்பாதை, அதனைக் கடந்தால் வரும் குகை - அத்ரி முனி தவம் செய்த குகை - என ஒவ்வொன்றாய் பார்க்கும்போது அந்த இடத்தில் ஆஸ்ரமம் அமைத்து தங்கியிருந்த அத்ரி முனி எவ்வளவு நிம்மதியாக தவம் செய்திருப்பார் என்று தோன்றியது. அந்த இடம் பார்த்ததும் அந்தச் சூழலை மனதுக்குள் கொண்டு வந்து நிரந்தரமாக பதித்து வைக்க சில நிமிடங்கள் ஆனது. இப்படியான ஒரு சூழல் நமக்கு மீண்டும் வாய்ப்பது கடினம் ஆயிற்றே… அதனால் மனதில் நிரந்தரமாக பதித்து வைக்கத் தோன்றியது.
இந்தப் பகுதிக்கு பலமுறை வந்திருக்கும் நண்பர் Bபிஷ்ட் சங்கிலியைப் பிடித்து மேலே ஏறிச் செல்வது எப்படி என்பதை எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு குறுகிய பாதை வழி அந்தச் சங்கிலி தொங்கும் இடம் வரை பக்கவாட்டில் மெதுவாக நடந்து சென்று விடலாம் என்றாலும் தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலியைப் பிடித்து மேலே இருக்கும் குறுகிய இடத்தினை அடைவதில் கொஞ்சம் இடறினாலும், கீழே கிட்டத்தட்ட 60/80 அடி விழுவோம் - அதுவும் பாறைகளின் மீது விழுவோம் என்பதால் சற்றே சாகசமான, சவாலான விஷயமாகவே இருந்தது. இப்பயணம் குறித்து நண்பர் சொல்லும்போதெல்லாம் சுலபமான விஷயமாகவே இருக்கும் என்று தோன்றியது என்றாலும் நேரடியாக பார்க்கும்போது தான் எத்தனை சவாலான விஷயம் என்று புரிந்தது. இதனை நண்பர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே எங்கள் நால்வர் குழுவில் முப்பதுகளில் இருந்த இளைஞரான சச்சின் கலக்கத்துடன் “நான் வரவில்லை, கீழே இருந்தே பார்க்கிறேன், நீங்க போயிட்டு வாங்க” என்று பின்வாங்கிவிட்டார். ஐம்பதைக் கடந்த நாங்கள் மூவரும் அந்தப் பாதையில் தைரியத்துடன் முன்னேறினோம்.
முதலில் நண்பர் Bபிஷ்ட் எங்கள் இருவருக்கும் வழிகாட்டி போலச் செல்ல, அவரைப் பின்தொடர்ந்து நண்பர் இந்தர்ஜித், அவருக்குப் பின்னர் நான்! சங்கிலி தொங்கிக் கொண்டு இருக்கும் இடத்திற்கு வந்த போது மனது கீழே பார்க்காதே என்று சொன்னாலும், கண்கள் கீழே எத்தனை அடி பள்ளம் என்று பார்க்க, அந்த இடத்தின் ஆபத்தான அமைதி புரிந்தது. கொஞ்சம் பிசகினாலும், கால் தடுக்கினாலும் ஆ(வி)பத்தில் முடியக்கூடும் ஒரு செயலாக இருக்கும் என்று தோன்றியது. பல பேர் இந்த இடத்திற்கு வந்து சென்றாலும், இது வரை ஒரு விபத்து கூட நிகழ்ந்தது இல்லை என்று நண்பர் Bபிஷ்ட் எங்களுக்கு தைரியம் தந்தார். 100 கிலோ எடையுள்ள நண்பரே அந்தச் சங்கிலியைப் பிடித்து மேலே ஏறும்போது 80 கிலோ எடையுள்ள என்னால் ஏற முடியாதா என்ன என்ற நம்பிக்கை மனதில் வந்தது. நண்பர் சங்கிலியைப் பிடித்து மேலே ஏறி முன்னே செல்ல அதன் பின்னர் இரண்டாம் நண்பர் இந்தர்ஜித் அந்தச் சங்கிலியைப் பிடித்து மேலே ஏறினார். அடுத்தது என் முறை. அவர்கள் இருவரும் செல்லும்போது எப்படிச் சென்றார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டு இருந்ததில் கிடைத்த மனோ தைரியத்துடன் முன்னேறினேன்.
சிறு வயதில் கயிறைப் பிடித்து மரங்களில் ஏறி விளையாடி இருக்கிறேன் என்றாலும் இப்படியான ஒரு மலைப்பகுதியில் சங்கிலி பிடித்து மேலே ஏறுவது முதன் முறை தான். சங்கிலியைப் பிடித்து ‘தம்’ கட்டி மேலே ஏறினால் ஒரு குறுகிய பாதை - ஒற்றையடிப்பாதை என்று சொல்வது போல ஒன்று ஒன்றரை அடி இருக்கலாம். சங்கிலியைப் பிடித்து இரண்டு மூன்று முறை கைமாற்றி மேலே செல்ல அந்தப் பாதை வந்ததும் அமர்ந்து கொண்டேன் - என் உயரத்திற்கு நிற்க முடியும் என்று தோன்றவில்லை. ஒரு பக்கம் ஓங்கி உயர்ந்த மலைச்சிகரத்தின் பாறைகள் சுவராக இருக்க மறுபக்கம் கிடுகிடு பள்ளம். ஒரு சில நொடிகள் அமர்ந்து அந்தச் சூழலை தைரியமாகக் கடந்த என்னை நானே முதுகில் தட்டிக் கொண்டு எழுந்து நின்றேன் - சற்றே குனிந்த படி தான் நிற்க முடிந்தது. சில அடிகள் முன்னேற பாதையின் நடுவே பக்கவாட்டுப் பாறை, “நடந்து செல்லவா பார்க்கிறாய், ஊர்ந்து செல்” என்று சொல்வது போல தனது அமைப்பை மாற்றியிருந்தது. அப்படியே கீழே அமர்ந்து, நெடுஞ்சாண் கிடையாகப் படுத்துதான் முன்னேற வேண்டியிருந்தது. ஒரு சில இடங்களில் இப்படி ஊர்ந்து சென்றிருக்கிறேன் என்றாலும் அந்த இடங்கள் பாதுகாப்பானவை. இங்கே அப்படியல்ல. கொஞ்சம் இடறினாலும் அதளபாதாளமாக இருக்கும் பள்ளத்தில், பாறைகளில் விழுந்துவிடலாம்.
மேல் பக்கப் பாறை முதுகில் இடித்துவிடாமல், பக்கவாட்டுப் பள்ளத்தில் விழுந்து விடாமல் ஊர்ந்து செல்ல வேண்டியிருந்தது. ஊர்வன என்று சொல்லக்கூடிய ஒரு உயிரினம் போல நாமும் நம்மை மாற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். அப்படியான இடத்தில் நானும் மெதுவாக ஊர்ந்து சென்றேன். ஊர்ந்து செல்வதில் கவனம் இருந்தாலும், வாய் விட்டு சத்தமாக “ஓம் நம சிவாய” எனும் ஐந்தெழுத்து மந்திரத்தினை உச்சரித்தபடியே அந்த பதினைந்து அடி தூரத்தினைக் கடந்து கொண்டிருந்தேன். மனதில் வேறு எந்த சிந்தனையும் இல்லை - ஊர்ந்து செல்லும் போது இருக்கும் ஆபத்தோ, அந்த அனுபவமோ அப்போதைக்கு உறைக்கவே இல்லை. அந்தக் குறுகிய பாறைகளின் சந்தில் ஊர்ந்து சென்று பாதையைக் கடந்து முடித்ததும், ஏதோ ஒரு சாதனையைச் செய்துவிட்ட மகிழ்ச்சி உணர்வு மனதில். நான் இப்படிக் கடந்து வந்ததை நண்பர் Bபிஷ்ட் காணொளியாக பதிவு செய்து கொண்டிருந்தார். கூடவே அவரும் நண்பர் இந்த்ரஜித் அவர்களும் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தார்கள். ஊர்ந்து வந்த பிறகு அமர்ந்து எழுந்து நிற்கும் அளவிற்கு இடம் இருந்தது. அதனருகே தான் அத்ரி முனி குகை இருக்கிறது. அங்கே சென்றால் மிகச் சிறிய ஆலயம்.
சாதாரணமாகச் செல்வதற்கே இப்படி ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கும் போது அந்த இடத்திற்கு, ஆலயம் அமைக்க வேண்டிய கல்லும், மண்ணும், சிமெண்ட்டும் எப்படிக் கொண்டு வந்திருப்பார்கள், எத்தனை உழைப்பு இருந்திருக்கும், பக்தி இருந்திருக்கும் என்ற எண்ணமும் இந்த அனுபவங்களை தட்டச்சு செய்யும் வேளையில் வருகிறது. தேவையான பொருட்கள் குறைவே என்றாலும் அதனை கிராமத்திலிருந்து மலைப்பாதை வழி சுமந்து வந்து, கம்பி வழி சுமையைத் தூக்கியபடி மேலே ஏறி, ஊர்ந்து சென்று அவற்றைப் பயன்படுத்தி, அந்த ஆலய அமைப்பினை முதன் முதலாக கட்டி முடித்த அந்த மனிதர்களின் நம்பிக்கையை வியக்காமல் இருக்க முடியுமா என்ன? அத்தனைக்கும் காரணம் பக்தியும் நம்பிக்கையும் எனும்போது சிலிர்ப்பு தான் வருகிறது. சில விஷயங்கள் சொல்லிப் புரிவதை விட உணர்வில் தான் புரிந்து கொள்ள முடியும் இல்லையா? அப்படிப் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. அவர்கள் அமைத்த, நாங்கள் சென்ற போது தரிசித்த அந்த ஆலயத்திற்குள் அத்ரி முனியின் சிலையும், சிவலிங்கமும் இருந்தது.
நாங்கள் முன்னேற்பாடாகக் கொண்டு சென்றிருந்த ஊதுவத்தியை ஏற்றி பூஜை செய்து சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்தோம். சுற்றிலும் பேச்சொலி கிடையாது. இயற்கை மட்டுமே குரல் கொடுத்துக் கொண்டிருக்க, மனது ஒருமுகப்பட்டு பிரார்த்தனை செய்து கொண்டிருக்க, ஒரு வித பேரானந்தம் - சொல்ல முடியாத உணர்வு அந்த இடத்தில், அந்தத் தருணத்தில் கிடைத்தது. இந்த மாதிரி உணர்வு கிடைப்பதற்காகவே இத்தனை கடினமான பாதையில் வந்தாலும் அப்படி வந்ததன் பலன் கிடைத்தது போன்ற உணர்வு. உடலில் ஒரு சிலிர்ப்பு. அதே இடத்தில் அமர்ந்து விடலாம் என்று தோன்றினாலும் கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதோடு, இருட்டில் அங்கே இருப்பது சரியல்ல என்பதாலும் தொடர்ந்து முன்னேறினோம். குகை வரை சென்று பிரார்த்தனை சென்றதோடு முடியவில்லை இந்த ஆனந்த அனுபவம். மேலும் கிடைத்த அனுபவங்கள் என்ன, என்ன செய்தோம் என்பதையெல்லாம் தொடர்ந்து வரும் பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே…
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
22 ஏப்ரல் 2026


பிரமிக்க வைக்கும் பயணம். உண்மையிலேயே பிடித்த மேலே ஏறும் பகுதியையும், குறுகிய பாதையில் ஊர்ந்து செல்வதையும் படித்த போது நானே மூச்சை பிடித்துக் கொண்டேன்.
பதிலளிநீக்கு