சனி, 4 ஏப்ரல், 2026

காஃபி வித் கிட்டு - 233 - பிறந்த நாள் - அம்மாவின் அன்பு - மிதக்கும் தீவுகள் - பணமும் பாசமும் - கூட்டுக் குடும்பம் - மாங்காய் சீசன் - குமுட்டி அடுப்பில் அடை, உப்புமா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட 37 அடி ஆஞ்சனேயர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இன்றைய சிறப்பு  : பிறந்த நாள்…


பிறந்த நாள் என்றதும் உங்கள் நினைவுக்கு வரும் பாடல் எதுவாக இருக்கும்? “பிறந்த நாள் இன்று பிறந்த நாள் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்” எனும் பாடல் தான் பொதுவாகவே எல்லோரும் சொல்லும் பாடலாக இருக்கிறது.  அப்படி பிறந்த நாள் பாட்டென்றால் நீங்கள் எந்த பாடலைச் சொல்வீர்கள்?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!  நான் அப்படி ரசித்த ஒரு ஹிந்தி பிறந்த நாள் பாடல் - ஜானி வாக்கர் நடிப்பில். அர்த்தம் பொதிந்த பாடலும் கூட -  பாருங்களேன்.

 





சிலரின் பிறந்த நாளை மறக்கவே முடியாது இல்லையா…  அதுவும் மகளின் பிறந்த நாளை மறப்பது என்பது நடவாத விஷயம்…  இன்றைக்கு எங்கள் மகளின் பிறந்த நாள்.  இந்த நாளில் மட்டுமல்ல, வரும் எல்லா நாட்களிலும் அவளுக்குப் பிடித்த விதத்தில் வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைவனை நானும், எனது இல்லத்தரசியும் சேர்ந்து பிரார்த்திக்கிறோம்.  இன்றைக்கு பிறந்த நாள் காணும் மகளை நீங்களும் வாழ்த்துங்களேன்….


******


இந்த வாரத்தின் விளம்பரம் :  அம்மாவின் அன்பு


சில விளம்பரங்கள் எத்தனை நாட்கள், மாதங்கள் கழித்துப் பார்த்தாலும் கூட மனதைத் தொடும் விதமாக இருக்கும்.  அப்படி ஒரு விளம்பரம் - டெட்டால் விளம்பரம்.  நீங்களும் பார்த்து ரசிக்கலாமே!



******

 

பழைய நினைப்புடா பேராண்டி : மிதக்கும் தீவுகள்


2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - மிதக்கும் தீவுகள் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. 



ஏழு சகோதரி மாநிலங்கள் என்ற தலைப்பில் எனது வடகிழக்கு மாநிலங்களுக்கான பயணம் குறித்த தொடர் ஒன்றை எழுதியபோது இதே நாளில் எழுதிய பகிர்வு. அந்தப் பதிவு இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! 


காலை உணவு கொஞ்சமாக ப்ரெட் டோஸ்ட், பராட்டா என எதாவது கிடைக்குமா எனக் கேட்க, உணவகத்தில் ஒரு மணி நேரம் ஆகும் என்ரு சொன்னார்கள்.  மணிப்பூர் வாசிகள் இத்தனை காலையில் உணவகத்திற்கு வரமாட்டார்கள் போலும்.  சரி வழியில் பார்த்துக் கொள்ளலாம் என புறப்பட்டோம்.  வழியில் மக்கள் நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. குறிப்பாக சிறு சிறு கடைகள் – காய்கறி, பால் போன்ற பொருட்களை விற்பவர்களைத் தான் அதிகம் பார்க்க முடிந்தது.  பால் விற்பனை சற்றே வித்தியாசமாக!


தரையில் ஒரு பாலீதின் ஷீட் போட்டு அதில் பால் பாக்கெட்டுகளை குவித்து வைத்து விற்றுக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. இது வித்தியாசமாக இருக்கிறதே என யோசிக்கும்போதே பல பெண்கள் இப்படி பால் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  எங்கிருந்தோ பாலை வாங்கிக் கொண்டு வந்து இப்படி தரையில் போட்டு விற்பனை செய்வதை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை! பயணிகள் பயணிக்கவும், பொருட்களை எடுத்துச் செல்லவும் சிறிய வாகனங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள்.  ஆட்டோக்களில் கூட எங்கிருந்து எங்கே வரை செல்லலாம் என்பதை எழுதி வைத்திருக்கிறார்கள். 


வழியில் பல காட்சிகளைப் பார்த்தபடியே பயணம் செய்து கொண்டிருந்தோம். ஓட்டுனர் ஷரத் வழக்கம் போல அந்தந்த ஊர்களைப் பற்றி அவருக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தார்.  சாலைகளில் அத்தனை மனித நடமாட்டம் இல்லை என்பதால் வாகனம் விரைவாகவே சென்று கொண்டிருந்தது. விரைவிலேயே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோக் டக் ஏரிக்குச் சென்று சேர்ந்தோம். இந்த ஏரி மணிப்பூர் மாநிலத்தின் மிக முக்கியமான ஏரி. மாநிலத்தின் பல பகுதிகளுக்கு இந்த ஏரியில் இருந்து தான் குடிநீர் விநியோகம்.


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் ஆட்டோ வாசகம் : பணமும் பாசமும்


சமீபத்தில் ஒரு ஆட்டோவில் பார்த்த வாசகம்….


பணம் பகையாக்கும்!

பாசம் பரதேசியாக்கும்!


முதலாம் வாக்கியத்தினைக் கூட கொஞ்சம் ஒத்துக்கொள்ளலாம்! பாசம் பரதேசியாக்கும் என்ற இரண்டாம் வாக்கியம் சரியாக இருப்பதாகத் தெரியவில்லை.  ஆனால் எழுதிய/எழுத வைத்த அந்த ஆட்டோ உரிமையாளருக்கு என்ன பிரச்சனையோ? யார் மீது பாசம் வைத்ததால் இப்படி எழுதத் தோன்றியதோ! பாசம் வைத்து அடிபட்டிருப்பார் போலும்! எதற்காக இந்த மாதிரி வரிகள் எழுதுகிறார்கள் - படிப்பவர்களுக்கு என்ன செய்தியைக் கடத்த விரும்புகிறார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை! நாட்டுக்கு ஒரு மெசேஜ் சொல்ல விரும்புகிறார் என்றாலும் அதனை யார் ஃபாலோ செய்யப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது!


******


இந்த வாரத்தின் சிறுகதை :  கூட்டுக் குடும்பம்


தினமலர் நாளிதழில் ஏதோ ஒரு நாள் தினமலர் வாரமலர் என்று ஒரு புத்தகம் வரும். முன்பு படித்திருக்கிறேன். அதில் வரும் சிறுகதை, கார்ட்டூன், சின்னச் சின்ன தகவல்கள் என ஏதேதோ இருக்கும் அனைத்தும் படிப்பதுண்டு.  கால ஓட்டத்தில் நாளிதழே வாங்குவதில்லை - படிப்பதுமில்லை.  சில மாதங்களாக அலுவலகத்தில் மூன்று நாளிதழ்கள் காலை ஒரு பார்வை பார்க்க வேண்டியிருக்கிறது - அலுவலகம் சம்பந்தமான செய்திகள் ஏதேனும் வந்திருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டிய வேலையும் எனது வேலைகளில் ஒன்று என்பதால்! அப்படி வாரமலரில் - இணையத்தில் படித்த ஒரு சிறுகதை தான் கூட்டுக் குடும்பம்! பானு சந்திரன் என்பவர் எழுதிய சிறுகதை. கீழே உள்ள சுட்டி வழி நீங்களும் படிக்கலாம்! படித்துப் பாருங்களேன். கூட்டுக் குடும்பமே இன்றைய யுவன் - யுவதிகளுக்கு பிடிப்பதில்லை என்பதையும் இங்கே சொல்லத்தான் வேண்டியிருக்கிறது. 


கூட்டுக் குடும்பம்!


******


இந்த வாரத்தின் தகவல்  - மாங்காய் சீசன் :



மோர் மிளகாய்க்கு......


மாங்காய் தொக்கு போட....


ருமானி வடு....

கோடை ஆரம்பித்து விட்டது. கூடவே மாங்காய் சீசனும் தொடங்கி இருக்கிறது.  திருவரங்கத்தில் மூலைத் தோப்பு என்ற இடம் உண்டு - அங்கே இரண்டு மூன்று கடைகள் - அங்கே சீசனில் மாவடு (ருமானி வடு, நாட்டு வடு என வகைகள் உண்டு), தொக்கு மாங்காய் (கெத்தாமரி எனும் வகை), ஆவக்காய் போடுவதற்கான மாங்காய் என அனைத்தும் கிடைக்கும்.  சில நாட்களாகவே இவை எல்லாம் கிடைக்க ஆரம்பித்து விட்டது.  ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு நாள் இல்லத்தரசியுடன் சென்ற போது விசாரித்து வந்தாலும் ஏனோ வாங்கவில்லை.  சென்ற வாரத்தில் ஒரு நாள் மகளுடன் கடைத்தெருவிற்குச் சென்று திரும்பும்போது கடையைப் பார்த்ததும் நின்று அங்கே இருந்த பெண்மணியிடம் விசாரித்தேன்.


கெத்தாமரிக்காய் எனும் வகை கிலோ 80 ரூபாய்.  ஆவக்காய் மாங்காய் கூட கிலோ 80 ரூபாய் தான். மாவடு - ருமானி வடு 350 ரூபாய் கிலோ, நாட்டு வடு 300 ரூபாய் கிலோ என்றார்.  ருமானி வடு ஒரு கிலோ 300 ரூபாய்க்கு தந்தார்.  100 ரூபாய்க்கு இரண்டு கெத்தாமரிக்காயும் வாங்கினேன் - மாங்காய் தொக்குக்கு இந்த மாங்காய் மிகவும் நன்றாக இருக்கும். மாங்காய் தவிர அவரிடம் மோர் மிளகாய் போடும் சின்னச் சின்ன மிளகாய்களும் கிடைக்கின்றது.  அதன் விலை எவ்வளவு என்பது கேட்க விட்டுப்போனது. அடுத்த முறை அந்த வழியே வரும்போது கேட்க வேண்டும். 



******


இந்த வாரத்தின் உணவு - குமுட்டி அடுப்பில் அடை, உப்புமா :


பொதுவாக எங்கள் வீட்டில் வெங்கல உருளி அல்லது வெங்கலப் பானையில் தான் அரிசி உப்புமா செய்வது வழக்கம்.  சமீபத்தில் ஒரு நாள் Electric Cooker - இல் அரிசி உப்புமா செய்தார் இல்லத்தரசி - உதிர் உதிராக வந்தாலும், காந்தல் எல்லாம் இந்த Electric Cooker - இல் வர வாய்ப்பில்லை.  காந்தல் வேண்டுமெனில் வெங்கலப் பானை தான் தேவை.  காந்தலுக்கு ஒரு தனி ருசி தான் இல்லையா….  அடையும் அப்படித் தான் - கேஸ் அடுப்பில் செய்வதை விட குமுட்டி அடுப்பில் நின்று நிதானித்து வேகும் அடைக்கு ருசி அதிகம்.  பெரியம்மா அடை சாப்பிட்டு முடித்து சொல்லிக் கொண்டிருந்தார் - குமுட்டி அடுப்பில் அடை தட்டுவாரே அத்தைப் பாட்டி - நல்ல தடிமனா, மொறு மொறுன்னு… ஒரு அடை சாப்பிட்டாலே வயிறு ரொம்பிடும். தோசைக்கல்லில் அடை வார்த்த உடன் அதில் ஐந்து ஓட்டைகள் போட்டு, ஒவ்வொரு ஓட்டையிலும் நெய் விட்டு, மொறு மொறுன்னு வரும் வரை காத்திருந்து எடுப்பார் - பொறுமையாக இருந்து சாப்பிடுவோம் - எவ்வளவு சுவையா இருக்கும் என்றார்.   


அந்த அளவு பொறுமை - இல்லை இல்லை அவ்வளவு காத்திருக்க நேரமும் நம்மில் பலரிடம் இல்லை என்பதை நான் சொல்லிக் கொண்டிருந்தேன். அத்தைப் பாட்டி செய்து கொடுத்த அடை, உப்புமா, பொரிமாவு என பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம்.  அத்தைப் பாட்டிகள், பாட்டிகள், அம்மா, மனைவி என வரிசையாக ஒவ்வொருவரின் சமையலும் தனி வகை - ஒவொருவருடைய கைப்பக்குவமும் வேறு வேறு - ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ஸ்பெஷாலிட்டி தான்.  ஒருவர் சமைக்கும் சுவை அடுத்தவர் சமையலில் எதிர்பார்ப்பது சரியல்ல என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்.  எப்போது எது கிடைக்கிறதோ அதனை அனுபவித்து உண்பதே நல்லது. 


******



இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

4 ஏப்ரல் 2026


50 கருத்துகள்:

  1. பிறந்தநாள் - ஹம பீ அகர் பச்சே ஹோத்தே பாடலின் ஹேப்பி பர்த்டே டு யூ வரிகளை மட்டும் வெட்டி அவ்வப்போது முன்னர் நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து அனுப்புவேன்.

    அதே போல 'என்னோடு பாடுங்கள் நல் வாழ்த்துப் பாடல்கள்' பாடலின் இறுதிப் பகுதியை மட்டும் ரெகார்ட் செய்து அனுப்புவது உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. அன்பு மகள் ரோஷ்ணிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்.  சிறப்புகள் யாவும் பெற்று வாழ்வில் நலம்பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இந்த வார விளம்பரம் -  ஆச்சர்யம்.  இரண்டு மூன்று நாட்களுக்கு முன் இந்த விளம்பரம் எங்கோ பார்த்தேன்.  எங்கே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட... பரவாயில்லையே... சில சமயம் முகநூலில் கூட இந்த விளம்பரம் வருவதுண்டு ஸ்ரீராம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. மிதக்கும் தீவுகள் -   ஏரி... அதில் மிதக்கும் தீவுகள்.. அதில் தேசியப் பூங்கா... அதில் அரிய வகை விலங்குகள்.. ஆச்சர்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சர்யங்களுக்கு இப்பூவுலகில் குறைவில்லை.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. ஆட்டோ வாசகம் புன்னகைக்க வைத்தது. அவருடைய அனுபவம் என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைத்தது. அடித்துப் பிடுங்கும் மகள், மகன் மனைவி? வேறு என்னவாக இருக்கும் என்று சிந்தனை ஓடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடித்துப் பிடுங்குவது யாராக இருக்கும்? எனக்கும் அப்படியான யோசனை வந்தது ஸ்ரீராம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. தினமலர் ஏதோ ஒரு நாளில் வாரமலர் -----  ஞாயிற்றுக்கிழமைகளில். 

    சனிக்கிழமைகளில் ஆன்மீக மலர் வரும்.  வெள்ளிக்கிழமை சிறுவர் மலர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இப்படி ஒரு மலர் வந்து விடுகிறது. நல்ல விஷயம் தானே....

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. மாவடு, மாங்காய், தஞ்சாவூர் குடைமிளகாய் படங்கள் கவர்கின்றன.  இந்த வருடம் நான் அவற்றை வாங்கவில்லை!

    மாவடு சற்றே விலை கூட என்றாலும் தரமாக இருக்கும் என்பதால் வெளியே ஒரு பாட்டில் வாங்கி கொண்டேன்.  தஞ்சாவூர் குடை மிளகாய் சென்ற வருடம் போட்டதே இன்னும் இருக்கிறது.  இது நாங்கள் போட்டதும் சில உறவுகளுக்கும் கொஞ்சம், கொஞ்சம் கொடுப்போம்.  இவற்றுடன் மாகாளிக்கிழங்கும் போட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாகாளி எங்கள் வீட்டில் யாருக்கும் பிடிக்காது. இந்த வருடம், மாங்காய் தொக்கும், மாவடுவும் மட்டும் போட்டாயிற்று. மிளகாய் வாங்கவில்லை. மோர் மிளகாய் போடலாம் என்று சொல்லி இருக்கிறார் இல்லத்தரசி. வாங்க வேண்டும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. குமுட்டி அடுப்புக் காலங்கள் சுகமானவை, சுவாரஸ்யமானவை.  நானும் சமைத்திருக்கிறேன். 

    அடை, தோசைக்கல்லில் என் அம்மா பாணியில் நானும் நடுவில், சமயங்களில் சுற்றிலும் ஓட்டைகள் போட்டு எண்ணெய் விடுவது உண்டு.  பாஸ் உறவுகளில் அது புதிதாக பார்க்கிறார்கள்.  எதற்கு துளை என்று இன்றும் கேட்பார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதற்கு துளை ? ஹாஹா... சில ஊர்களில் இப்படியான விஷயங்கள் இல்லை. கோவையிலும் இல்லை என்றே தோன்றுகிறது.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. ​பானு சந்திரன் கதை நன்றாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுகதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  10. பிறந்த நாள் என்றாலே இலங்கை வானொலி பிறந்தாநாள் பாடல் தன சட்டென்று நினைவுக்கு வரும்.

    ஜி காணொளி பார்த்தாலும் கேட்க இயலாத நிலை. காதின் பிரச்சனையால்

    ரோஷ்ணிக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் அவரது எண்ணங்கள் நிறைவேறி மகிழ்ச்சியோடு வாழ்ந்திட!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளுக்கு பிறந்த நாள் தெரிவித்தமைக்கு மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. காவைல அரிசி உப்புமா அடை போன்றவைகளைப் படித்து பசி வந்துவிட்டது. இரயிலில உணவுக்கு கொடுத்த உப்புமா வகையறாவைச் சாப்பிட்டு நொந்துவிட்டேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... இரயிலில் கொடுத்த உப்புமா - அதை சாப்பிடாமலேயே இருக்கலாம் எனும் அளவுக்குத் தான் இருக்கிறது. வேறு வழியில்லாமல் சாப்பிட்டதுண்டு. விமானத்தில் கொடுப்பதும் சுவையாக இருப்பதில்லையே நெல்லைத் தமிழன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  12. உறவினர்களிடம் பாசம் வைத்து பணம் செலவழித்து பரதேசியாக ஆயிருப்பாரோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. விளம்பரமும் பார்த்தேன் visuals மட்டும். !!! டெட்டால் விளம்பரம் நல்லாருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
  14. மிதக்கும் தீவுகள் என்றதும் நிழலாகப் பழைய பதிவு நினைவுக்கு வந்தது. ஏழு சகோதரி மாநிலங்கள் வரிசையில். மணிப்பூர் ஏரி? என்று யோசித்துக் கொண்டே பதிவை பார்த்ததும் நினைவுக்கு வந்துவிட்டது. அந்த தேசிய பூங்காவை நீங்க மிஸ் செய்துவிட்டீங்களே என்று தோன்றுகிறது. நான் குறித்து வைத்த நினைவும் வந்தது. ஆனால் இப்போதைக்கு வாய்ப்பு இல்லை.

    இங்கும் வீட்டருகில் இருக்கும் ஏரி மிக மோசமாக த்தான் இருக்கிறாது பதிவு எழுதியிருக்கிறேனேன் ஆனால் இன்னும் பல ஏரிப் படங்கள் இருக்கின்றன பகிர.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏரி படங்கள் - முடிந்த போது பகிர்ந்து கொள்ளுங்கள் கீதா ஜி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  15. ஆட்டோ வாசகம் சரிதான் ஜி.

    பாசம் வைத்தாலும் அளவோடு வைக்க வேண்டும் அல்லது எங்கு எல்லைக் கோடு வேண்டும் என்பதும் இல்லை, அந்தப் பாசம் எதிர்பார்ப்பில்லாத பாசமான பக்குவப்பட்டதாக இருக்க வேண்டும். சில சமயம் கண்மூடித்தனமான பாசம் வைத்துவிட்டு, அதற்காகச் செலவழித்தும் விட்டு கஷ்டப்படுபவர்கள் உண்டே. அம்மா அப்பா உட்பட!

    தனக்குப் பின் தான் தானம் எனும் பாட அனுபவமாக இருக்கும் அவருக்கு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //தனக்குப் பின் தானம்// - பல சமயங்களில் அப்படி இருக்க முடிவதில்லை ஜி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  16. பானு சந்திரன் பரிச்சயமான பெயர். கதையை வாசிக்கிறேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அவர்களது கதை வாசிப்பது இதுவே முதல் முறை என்று தோன்றுகிறது கீதா ஜி.

      நீக்கு
  17. கதை நல்லாருக்கு ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதை உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி கீதா ஜி.

      நீக்கு
  18. ஸ்ரீராங்கத்தில் மாவடு நன்றாகக் கிடைக்கும். படங்கள் கவர்கின்றன.

    இங்கும் ஜெயநகர்ப்பகுதில் ருமானி வடு, ஆவாக்காய்க்கான மாங்காய், எல்லாம் வரத் தொடங்கிவிட்டன. ஆனால் ஆவாக்காய் மாங்காய் சென்ற மாதம் கிலோ 160 என்றார். இப்ப 80க்கு வந்திருக்கும் இன்னும் போகப் போக 60க்குக் கிடைக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாவடு இங்கே நன்றாகவே கிடைக்கிறது. சென்னையிலும் மாம்பலத்தில் பார்த்தேன் - இரயிலடி வீதியில்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  19. குமுட்டி அடுப்பு ஆஹா....அந்த நாள் நெஞ்சிலே!!! நானும் பாட்டி விடிட்டில் இந்த அடுப்பில் சமைத்திருக்கிறேன்

    அதன் வாசனையும் ருசியும் தனிதான். அதே ஜி வெங்கலப் பானையில் அந்தக் காந்தல் அது தனி ருசி. இப்பவும் வெங்கல உருளியில்தான் அரிசு உப்புமா செய்வது. நம் வீட்டிலும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குமுட்டி அடுப்பு, வெங்கலப் பானை சமையலுக்கு ருசி நிச்சயம் அதிகம் தான் கீதா ஜி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  20. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோஷ்னிக்கு.கடவுள் எல்லா நலன்களையும் அவளுக்கு அருள வேண்டுகிறேன்.
    விஜி.

    பதிலளிநீக்கு
  21. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், ரோஷ்ணி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளை வாழ்த்தியமைக்கு நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  22. //தோசைக்கல்லில் அடை வார்த்த உடன் அதில் ஐந்து ஓட்டைகள் போட்டு, ஒவ்வொரு ஓட்டையிலும் நெய் விட்டு, மொறு மொறுன்னு//

    அட! அட! என்னமா ரசிச்சு அடை செஞ்சுருக்காங்க. அட! அட!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி ஒரு ரசனை மட்டுமல்ல, பாசமும் அந்த சமையலில் கூடவே தான் பத்மநாபன் அண்ணாச்சி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  23. அமுதும் தேனும் எதற்கு. மாவடுவும் பழைய சாதமும் இருக்கையிலே எனக்கு!

    மாங்காய் பறிக்க
    மரத்தில் ஏறி
    தடுமாறி கீழ் விழுந்தால்
    மா வடு கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.... ஹா.... உண்மை தான். சிறு வயதில் இப்படியான வடுக்கள் பெற்றதுண்டு அண்ணாச்சி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  24. வாசகம் அருமை.
    ரோஷ்ணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்
    பிறந்தநாள் பாடல் நல்ல பாடல் பல வருடம் ஆச்சு கேட்டு.
    அம்மாவின் அன்பு இந்த விளம்பரம் பிடித்த விளம்பரம் குழந்தையை மிகவும் பிடிக்கும் எனக்கு நல்ல நடிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      மகளை அவளது பிறந்த நாளில் வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  25. கூட்டுக்குடும்பம் கதை நன்றாக இருக்கிறது.
    குடைமிளகாய், மாவடு, மாங்காய் படங்கள் அருமை.

    குமுட்டி அடுப்பில் அடை, உப்புமா மலரும் நினைவுகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....