அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
கடந்த இரண்டு திங்கள் கிழமைகளில் நான் வாசித்த நூல்கள் குறித்த எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். இந்த வாரம் வாசந்தி அவர்கள் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதை என்னுள் ஏற்படுத்திய தாக்கங்களைக் குறித்து இங்கே பகிர இருக்கிறேன். வாசந்தி அவர்கள் எழுதிய கதைகள் எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை. எனக்குத் தெரிந்து அவரின் எழுத்தை நான் முதன் முதலாக படிக்கிறேன் என்று தோன்றுகிறது. அப்படி படித்த அவர் எழுதிய முதல் சிறுகதையே என்னுள் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது. நான் படித்த அவரது சிறுகதையின் தலைப்பு “மௌனத்தின் குரல்”. ஆதரவற்ற பெண்களுக்கான, அதுவும் மன நிலை சரியில்லாத/Depression பிரச்சனை உள்ள பெண்களுக்கான ஒரு மனநல காப்பகம், அங்கே நடக்கும் அவலங்கள் என படிக்கப் படிக்க மனதுக்குள் வலி.
ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள், ஒரு பெண்ணுக்கு எதிராக நடக்கும் அவலங்களுக்கு, ஆண்கள் மட்டுமல்லாது பெண்களே துணை போகிறார்களே என்று நினைக்கும்போதே “என்னடா உலகம் இது… காசு கிடைக்கும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்து விட தயாராக இருக்கிறார்களே” என்று வேதனைப்பட்டது மனது. இது கதை என்று விட்டு விலகவும் முடியவில்லை. இப்படியான நிகழ்வுகள் குறித்து தினம் தினம் நாளிதழ்களில் செய்திகள் வந்து கொண்டுதானே இருக்கிறது. எத்தனை எத்தனை விதங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டே தானே இருக்கிறது. எத்தனை சட்டங்கள் தீட்டினாலும் குற்றங்கள் நடந்த வண்ணமே இருக்கின்றன. சரியான, எடுத்துக்காட்டான தண்டனைகள் இங்கே பெரும்பாலும் கிடைப்பதே இல்லை என்பதால் குற்றங்கள் புரிய எவருமே தயங்குவதில்லை என்பதே நிதர்சனமாக இருக்கிறது.
சிறுகதை இப்படித்தான் தொடங்குகிறது.
குத்திட்ட பார்வையுடன் சரஸ்வதி உட்கார்ந்திருந்தாள். அறையின் கம்பிக்கதவுக்கு அப்பால் டாக்டர் நின்றிருந்தார். அவருடன் வெள்ளைப் புடவையும் வெள்ளை ரவிக்கையுமாக ஓர் அம்மாள் நின்றிருந்தாள்.
அவர்கள் பார்வையிலிருந்து தப்பிக்க நினைத்தவள் போல் சரஸ்வதி முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அறையில் உட்கார்ந்திருந்த மற்ற இரண்டு பெண்களுக்கு டாக்டரின் பேச்சோ, இரண்டு பேர்கள் தங்களை ஆராய்கிறார்கள் என்கிற உணர்வோ, பிரக்ஞ்யைத் தாக்கியதாகவோ தெரியவில்லை.
அம்மா அப்பா இல்லாத சரஸ்வதிக்கு அண்ணன் திருமணம் செய்து வைத்து புருஷன் வீட்டில் கொண்டு விட்டுச் சென்றதற்குப் பிறகு நடக்கும் அவலங்கள். புருஷன் என்ற பெயரில் இருப்பவனும் அவனுடைய அம்மா என்பவளும் இவளை எந்த விதத்தில் பயன்படுத்த நினைக்கிறார்கள் என்று தெரிந்து வேதனை பிடுங்கித் திங்கிறது சரஸ்வதிக்கு… அங்கேயிருந்து இந்த இல்லத்திற்கு வந்தால் அங்கே நடக்கும் நிழல் வேலைகள் இன்னும் வேதனை கொள்ள வைக்கிறது. அந்த இடத்தில் இருக்கும் காவலாளி மற்றும் ஆயம்மா செய்யும் வேலைகள் படிக்கும் நம்மையே கலங்க வைக்கிறது என்றால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நம்மை வேதனை கொள்ளச் செய்கிறது. இல்லத்திற்கு வரும் பெண்களை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று படிக்கும்போது “ஏன் இந்த உலகம் இப்படி இருக்கிறது?” என்கிற வேதனையே மிஞ்சுகிறது.
இந்த வரிகளைப் படிக்கும்போதே அப்படி ஒரு வலி மனதில்…
அவள் கண்களை மூடிக்கொண்டாள். அலை ஓசையின் ஹுங்காரம் செவியைத் துளைத்தது. ராட்சஸ அலைகளின் ஆக்ரமிப்பில் அவள் துவண்டு போனாள். புரியாத வர்மத்துடன், வக்கிரத்துடன் விசுவரூபமாய், அசுரர்களாய் எழும்பிச் சாட்டையடி அடித்தார்கள்-எல்லாரும்-புருஷன், மாமியார், புது ஆள், முனுசாமி, கங்குபாய், டாக்டர் - எல்லாரும் - அவள் இருக்கும் இடத்தைப் பறித்தாற் போல் பாதத்துக்கடியில் மணல் வேகமாக நகர்ந்தது.
மிகச் சொற்பமான பக்கங்கள் கொண்ட சிறுகதை தான். ஆனாலும் அந்தக் கதை படிப்பவர்களின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் பெரியதாகவே இருக்கிறது. இதே தலைப்பில் ஒரு நாவலும் எழுதி இருக்கிறார் - அது That Long Silence என்கிற சஷி தேஷ்பாண்டே எழுதிய கதையின் மொழியாக்கம். அந்த நூலை நான் படித்ததில்லை. இந்தச் சிறுகதை படித்தபின்னர் சிறுகதை குறித்து தேடியபோது இணையத்தில் அறிமுகம் ஆனது தான் That Long Silence. அந்த நூலையும் - ஆங்கிலம், தமிழ் என இரண்டிலும் படிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். சிறுகதையை படிக்க நினைத்தால் இணையத்தில் இருக்கலாம். தேடிப் படியுங்களேன்.
அடுத்த திங்களன்று வேறு ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்களைச் சந்திக்கிறேன். இந்த சிறுகதை நீங்கள் படித்ததுண்டா? படித்திருப்பின் சிறுகதை உங்களுக்கு ஏற்படுத்திய தாக்கத்தினையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
15 டிசம்பர் 2025


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....