அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
திருவரங்கமே விழாக்கோலம் பூண்டிருப்பது போல பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. எங்கே பார்த்தாலும் வாகன நெரிசல்….. மனிதர்களின் நடமாட்டம்…. கடைகளும் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பித்துவிட்டது. 19-ஆம் தேதி திருநெடுந்தாண்டகம் முடிந்து பகல் பத்து நடந்து கொண்டிருக்கிறது. 30-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி. அதன் பிறகு இராப்பத்து…..
சனி ஞாயிறு இரண்டு நாட்களிலும் உத்திர வீதி, சித்திர வீதிகளில் தான் மாலை நேர நடை. கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் இருந்தும் பக்த கோடிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஏழாம் பிரகாரமான அடையவளைந்தான் வீதிக்கு முன்னரே தடுப்புகள் ஏற்படுத்தி இருப்பதால் நான்கு சக்கர வாகனங்கள் கிடைத்த இடத்தில் எல்லாம் நிறுத்திச் செல்கிறார்கள். நடக்கும் போது பல இடங்களில் வாகன ஓட்டிகள், வீட்டு உரிமையாளர்கள் என இருபக்கத்தினருக்கும் வாக்குவாதம் நடப்பதை பார்க்க முடிந்தது.
சித்திர, உத்திர வீதிகளில் இருப்பவர்கள் காலை, மாலை நேரங்களில் வெளியே வந்து திண்ணைகளில் அமர்ந்து கொண்டால் நல்ல பொழுதுபோகும். அதுவும் திருவரங்கத்தில் எப்போதும் ஏதோ ஒரு உற்சவம் நடந்தபடியே தான் இருக்கிறது. பக்தர்களின் வருகைக்கும் குறைவே இல்லை. ஒவ்வொரு நாளும் பலதரபட்ட மனிதர்களை பார்க்க முடிவது ஒரு வித மகிழ்ச்சி தானே.
இந்த நாட்களில் பலரும் பக்தர்களுக்கு உணவு அளிப்பதையும் பார்க்க முடிகிறது. பார்க்கும்போது நமக்கும் மனதில் மகிழ்ச்சி. உணவை வாங்கிக் கொள்பவர்கள் தேவையில்லாமல் வாங்கி வீணடிக்காமல் இருந்தால் இன்னும் சிறப்பு. நாளிதழில் பார்த்த செய்தி ஒன்று - வைகுண்ட ஏகாதசி சிறப்பு தரிசனத்திற்காக கட்டணம் ஒருவருக்கு 4000 ரூபாய்….. பார்த்தவுடன் பக்கென்று இருந்தது எனக்கு. அடுத்த விதமான கட்டணம் ஒருவருக்கு 700 ரூபாய்!
ஆனால் எனக்கு இப்படி காசு கொடுத்து இறை தரிசனம் காண்பதில் விருப்பம் இல்லை. மாறாக அந்தப் பணத்தினை வேறு விதத்தில் பயன்படுத்தவே தோன்றும். உதாரணத்திற்கு 4000 ரூபாய் இருந்தால் சுமார் 100 பேருக்கு நவ்வாலு இட்லி வாங்கித் தரலாம் காலை உணவாக….. 4000 கொடுத்து தரிசனம் பெற்றால் பெறுபவர் வேண்டுமானால் சந்தோஷம் அடையலாம். அதற்கு பதில் அந்தப் பணத்தில் இப்படி 100 பேருக்கு உணவளித்தால் 100 வயிறு நம்மை வாழ்த்தும். தொடர்ந்து பத்து நாட்கள் சொர்க்கவாசல் திறந்தே இருக்கும் என்பதால், கூட்டம் குறைந்த பிறகு நிம்மதியாகச் சென்று இறைவனை தரிசித்து வரலாம். நான்காயிரம் கொடுத்து தான் இறைவன் தரிசனம் பெறவேண்டும் என்பதில்லை.
ரங்கா ரங்கா கோபுரம் என அழைக்கப்படும் தெற்கு வாசல் கோபுரத்தின் முன்னே அழகாக அலங்காரம் செய்து வைத்திருக்கிறார்கள். கூந்தல் பனை, வாழைத்தார் என பச்சைப்பசேலென அலங்காரம். பலரும் அந்த வாயில் அருகே செல்ஃபி பிள்ளைகளாக மாறிக் கொண்டிருந்தார்கள். செல்ஃபி மீதான மோகம் குறையப்போவதே இல்லை என்று தோன்றுகிறது. பொதுவாக வேறு ஒரு விஷயம் புதிதாக தோன்றினால் பழைய விஷயங்கள் மீது மோகம் குறைந்து விடும். ஆனால் இன்னும் இந்த செல்ஃபி மீதான மோகம் குறையவில்லை.
வீதியில் சுற்றி வந்து கொண்டிருந்தபோது சித்திரை வீதியில் நான்கு ஐந்து பேர் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வேடிக்கை பார்த்துக்கொண்டே வம்பும் பேசுகிறார்கள். ஆண்கள், பெண்கள் வித்தியாசமில்லாமல் வம்பு பேசுவதைக் கேட்க முடிந்தது. அப்படிக் கேட்ட ஒரு வம்பு…… “என் மருமகள் பெரிசா நகை ஒண்ணும் போட்டுட்டு வரல….. 1965-ல எனக்கு கல்யாணம். அப்பவே, வைரக்கல் பேசரி, வைரத்தோடு தவிர 80 பவுன் போட்டார் எங்கப்பா…. நாலு பவுன்ல தோடு, வைரக்கல் பதிச்சது 1350/- அப்பவே……!” இப்ப என்ன நகை போடறாங்க…… என்று அங்கலாய்த்தார். ஏன் அம்மணி, அப்பா தங்கம் என்ன விலை, இன்னிக்கு என்ன விலை? இப்படியெல்லாம் நகை போடணும்னா எங்கயாவது கொள்ளை தான் அடிக்கணும் என்று நினைத்தபடியே நடந்தேன். இன்னும் சில நாட்களுக்கு நடப்பதற்குக் கூட முடியாது என்று தோன்றுகிறது.
காலையில் அலுவலகம் சென்று மாலையில் வீடு திரும்புவதற்கே சரியாக இருக்கிறது. மாலையிலாவது நடையைத் தொடர வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்க்கலாம் நடக்க முடியுமா என்று. அப்படிச் சென்றால் இன்னும் நிறைய விஷயங்களை இங்கே பகிர்ந்து கொள்ள முடியும். இந்தப் பதிவில் இரு நாட்களில் நடைப் பயணத்தின் போது எடுத்த படங்களை மேலே உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை…
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
25 டிசம்பர் 2025






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....