அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட சர்க்கரை வள்ளிக்கிழங்கு - ஃப்ளெக்ஸ் பேனர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
அமுல்பேபி மேக்கப்பில் அனகோண்டா…..:
தலைநகரில் இருந்த வரை வார நாட்களில் காலை நேரங்கள் பரபரப்பானவை. காலை மற்றும் மதியத்திற்கான உணவு தயாரிப்பது, வீட்டைச் சுத்தப்படுத்துவது என தொடர்ந்து வேலைகள்…. அவற்றை முடித்து குளித்து, தயாராகி 08.30 மணிக்குள் அலுவலகத்திற்கு புறப்பட வேண்டும். திருச்சி வந்தபிறகு பரபரப்பில்லாத காலை நேரங்கள். சமையலில் மனைவிக்கு உதவுவது - காய்கறி நறுக்கித் தருவது, பாத்திரம் இருந்தால் துலக்குவது என சின்னச் சின்னதாய் வேலைகள் மட்டுமே. இன்றைக்கு காலை கேரட் துருவி, குடைமிளகாய் மற்றும் வெங்காயம் நறுக்கி வைத்தேன். இங்கே எப்போதும் பக்கத்தில் FM ஒலித்துக் கொண்டிருக்கும்.
இல்லத்தரசிக்கு பாடல் கேட்டபடி வேலை செய்வது தான் பழக்கம். எனக்கு இந்த ரேடியோ jockey தொண தொணவென்று பேசுவதைக் கேட்க பிடிப்பதில்லை. கூடவே விளம்பரங்கள் என்ற பெயரில் வரும் கூச்சல்கள் - மருத்துவமனைக்கு கூட விளம்பரங்கள் வர ஆரம்பித்து விட்டன 🙁 இன்றைக்கு விளம்பரங்களுக்கு நடுவே ஒலித்த பாடல்களில் ஒன்றின் வரிகள் காதில் கேட்ட உடன் “என்னடா பாட்டு இது?” என்று தோன்றியது. ஒரு பெண்ணை அனகோண்டா, பச்சோந்தி, காட்டேரி, புலி, மான், சதிகாரி, அடங்காப்பிடாரி என பலவாறு ஒப்பீடு செய்கிறார். பாடல் ஆசிரியருக்கு பெண் இனத்தின் மீது என்ன கோபமோ? எதற்காக இந்த பாடல் வரிகள், கதைக்கு தகுந்த மாதிரியானதா என்றெல்லாம் எனக்குத் தெரியாது…. ஆனாலும் ஏன் இப்படி எல்லாம் ஒப்பீடு செய்கிறார் என்று தோன்றியது….
வேலைகளை முடித்து விட்டு, பாடல் குறித்து இணையத்தில் தேடினேன்…. அதே கண்கள் என்ற பெயரில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் இருக்கும் பாடலாம்…… அதே கண்கள் என்ற பெயரில் பழைய படம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்தப் படம் பற்றி எனக்குத் தெரியவில்லை. என்னதான் படத்தின் திரைப்படத்திற்கு இப்படியான பாடல் தேவை என்றாலும் இப்படியெல்லாம் பாட்டு எழுத வேண்டுமா என்று தோன்றியது…. மேக்கப் போட்ட பெண்ணை வழியில் பார்த்தால் அனகோண்டா என்று தோன்றி, நான் சிரித்து வைத்தால் என்ன ஆகும்? எதற்கும் இன்றைக்கு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு யாரையும் நேருக்கு நேர் பார்க்காமல் இருந்தால் உடம்புக்கு நல்லது….. 😃
பாடல் கேட்க நினைத்தால் இணையத்தில் கேட்கலாம். என்னைக் கேட்டால் கேட்க வேண்டாம் என்று தான் சொல்வேன். பார்க்கும் பெண்ணெல்லாம் அனகோண்டாவாக உங்கள் கண்களுக்குத் தெரிந்தால் கம்பெனி பொறுப்பு ஏற்காது என்று இப்போதே சொல்லிவிடுகிறேன். 😀 சரி உங்க ஆசையைக் கெடுப்பானேன்! உங்களுக்காக, கீழேயே அந்தப் பாடல் வரிகளை இணையத்திலிருந்து எடுத்ததை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்! கீழே காணொளியும் இருக்கிறது!
அடியே நீ களவாணி குட்டி காட்டேரி
கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ
அடியே நீ களவாணி குட்டி காட்டேரி
அலட்டாமல் விளையாடும் கில்லாடி நீ
கருவண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டு பொய் தானே
அமுல் பேபி மேக்கப்பில்
அனகோண்டா நீ
தந்திரா... தந்திரா...
தந்திரா... தந்திரா... தந்திரா...
அழகான சதிகாரி அடங்காபிடாரி
சிதறாமல் பந்தாடும் சிறு மர்மம் நீ
அழகான சதிகாரி அடங்காபிடாரி
பார்பி டால் கெட்டபில் பச்சோந்தி நீ
பசு தோலில் புலி தானே
படியாத மான் தானே
வெளி வேசம் எல்லாமே
வெளிச்சம் ஆச்சே
தந்திரா... தந்திரா...
தந்திரா... தந்திரா... தந்திரா...
அழகான ஒரு ஆபத்தே இவள் தானே
விலகு விலகு வினையும் இவளே
அதிவேகம் பெண் மதிதானே புயல் தானே
கொடிய கொடிய அனலும் இவளே
தந்திரா... தந்திரா...
தந்திரா... தந்திரா... தந்திரா...
அடியே நீ களவாணி குட்டி காட்டேரி
கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ
கருவண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டு பொய் தானே
அமுல் பேபி மேக்கப்பில்
அனகோண்டா நீ
தந்திரா... தந்திரா...
தந்திரா... தந்திரா... தந்திரா...
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
5 டிசம்பர் 2025


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....